ஜல்லிக்கட்டு…

jalli1
“ஜல்லிக்கட்டா..? அது வெறும் ஓரிரு மாவட்டங்களுக்கு மட்டும்தான்…”
என்றார்கள் ஏளனமாய்.
.
இறங்கின எண்ணற்ற மாவட்டங்கள்.
.
“தமிழகத்தின் தென் பகுதியில் மட்டும்தான்
இதுக்கு ஆதரவு…” என்றார்கள்.
.
வடக்கு… தெற்கு… கிழக்கு… மேற்கு… என
சகல திசைகளில் இருந்தும் ஆர்ப்பரித்தனர் மக்கள்.
.
“தமிழகம் தாண்டாது
இந்த வெத்து விளையாட்டு…” என்றார்கள்.
.
கேரளத்தில் இருந்தும் ஆதரவாக ஒலித்தது குரல்.
.
“ஓரிரு சாதியைத் தாண்டி
யார் விளையாடுகிறார்கள் இதை….?” என்கிற
முணுமுணுப்புக்கு….
.
கிரிக்கெட்டும் அப்படித்தான்….
ஆனால் அதற்காக அப்படியே விட்டுவிட்டோமா அதை…?
என்றனர் இளைஞர்கள்.
.
“காளையை அடக்குவதா உன் பாரம்பரியம்…?
முடிந்தால் சிங்கத்தோடு போராடிப் பாரேன்…”
என்று கேட்ட மெத்தப்படித்த மேதாவிகளிடம்…
.
அனைத்து சாதியினரும் வேதங்களைக் கரைத்துக் குடித்தாலும்….
” இந்த சாதியினர் மட்டும்தான்
பாரம்பரியத்தின் பிரகாரம் அர்ச்சகர் ஆக வேண்டும்…”
என்று வக்காலத்து வாங்கிய நீயா
எங்களைப் பார்த்து இப்படிக் கேட்பது…? என்று
பதிலடி கொடுத்தது அந்த இளைஞர் கூட்டம்.
.
“பெண்களுக்கு ஏது இடம் இதில்….?” என்றார்கள்.
.
முதலில் தடையை உடைப்போம்.
பிற்பாடு பாருங்கள் பெண்கள் மட்டுமல்ல
திருநங்கையரும் கரம் கோர்த்து
களம் காணும் காட்சியைக் காண்பீர்கள்…. என்று
நியாயக் குரல் கொடுத்தார்கள் கூடி இருந்தவர்கள்.
.
“வழிபாட்டுரிமைச் சட்டப்படி
விலக்கு கோரினால் எளிதாக
வென்றுவிடலாமே வழக்கை…”
என்ற மூடர்களைப் பார்த்து…
.
மதங்களுக்கு அப்பாற்பட்டது எங்கள் பொங்கல்….
பின்பற்றுகிற மார்க்கம் எதுவாக இருந்தாலும்
மொழியால் இணைந்த
இந்து இஸ்லாமிய கிருத்துவ மக்கள்
அனைவருக்குமானது எங்கள் பொங்கல்…
நீ கொஞ்சம் ஒதுங்கி நில்… என்று
நெத்தியடி கொடுத்தனர் மக்கள்.
.
“இந்தியாவைத் தாண்டி
எங்கே கேட்கப் போகிறது இந்தக் குரல்…?” என்றார்கள்.
.
jalli3
இனப்படுகொலையிலேயே
எண்ணற்ற ஜீவன்களை இழந்திருந்தாலும்…
“நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக…” என்றனர்
நம் ஈழத்து மக்கள்.
.
“இம்புட்டுதான்…..
இதுக்கு மேல யாரு?” என்று
முனகிய மூடர்களைப் பார்த்து
.
இலண்டனிலும்…
ஃப்ரான்சிலும்…
சிட்னியிலும் எழுந்த போராட்டங்கள்
ஏளனமாய்ச் சிரித்தன.
.
இந்த எழுச்சி…..
இதற்கான போராட்டம் மட்டுமல்ல.
.
மனித குல விடுதலைக்கான தொடக்கம்.
jalli2

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்…

aarumuga_navalar
குமுதம் ஐம்பத்தி அஞ்சு வருசம் முன்னாடியே
ஒரு உருப்படியான விஷயத்தைச் செஞ்சிருக்குன்னு
தெரிஞ்சதும் புல்லரிச்சுப் போச்சு.
.
வள்ளலார் எழுதிய அருட்பாவிற்கு எதிராக
மருட்பா என்று எழுதி வம்புக்கு இழுத்த
ஈழத்தின் ஆறுமுக நாவலர் தொடுத்த வழக்கு
பற்றிய சமாச்சாரம்தான் அது.
.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து
புலவர்களுக்குள்ளே இருந்துவரும் புலமைக் காழ்ப்பு உணர்வும்….
குல ஏற்றதாழ்வுகளும்தான்
இந்த வழக்குக்குக் காரணம் என்கிறார்
எழுத்தாளர் செ.திவான்.
.
அவரது “இராமலிங்க வள்ளலாரும்
செய்குத்தம்பிப் பாவலரும்” என்கிற நூல்
போகிற போக்கில் அநேக விஷயங்களைச்
சொல்லிச் செல்கிறது.
.
வள்ளலாரிடம் ஏற்கெனவே வாதத்தில் மண்ணைக்கவ்விய கடுப்பும்…..
நாவலர் என்றால்
பொய்யன்… வித்தையில்லாதவன்… என்று
பத்து அர்த்தம் சொன்ன வள்ளலார் மீது
ஏற்பட்ட எரிச்சலும் ஒன்று சேர
அது மான நஷ்ட வழக்காய் வந்து நின்றது.
.
மிகச் சரியாக 147 ஆண்டுகள் முன்பு நடந்த வழக்கு அது.
.
எல்லாம் சரி….
அறிவு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் குமுதம்
எப்படி வந்து தொலைத்தது என்று
முடியைப் பிய்த்துக் கொள்கிறீர்களா.
எனக்கும் முதலில் அந்தச் சந்தேகம் வரத்தான் செய்தது.
.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய
வள்ளலார் மீதே மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்தார் ஆறுமுக நாவலர்.
.
சிதம்பரத்தில் நடந்த குடுமிபிடியை
அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்ட அந்த வழக்கு
துல்லியமாக எந்தத் தேதியில் பதிவாயிற்று…?
.
சாட்சி சொல்ல வந்த ஒன்பது பேர் யார் யார்…?
என்கிற விவரங்கள் இன்னும்கூட
துல்லியமாகக் கிடைக்காத நிலையில்
31.8.1961 இல் குமுதத்தில் அந்த செய்தி பதிவாகியிருக்கிறது.
.
அதுவும் 55 ஆண்டுகள் முன்பு.
.
துமிலன் என்பவர் “புகழ்பெற்ற விவாதங்கள்” என்கிற
தலைப்பில் இந்த வழக்கு குறித்து எழுதியிருக்கிறார்.
.
அதைவிடவும் இதிலுள்ள சுவாரசியமான விஷயம்
வேறொன்று இருக்கிறது.
அதுதான் வழக்கு நடந்த விதம்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட
நாளன்று நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடியிருக்க
வருகிறார் வள்ளலார்.
.
இடுப்பில் முழங்காலுக்கு மேலே வெள்ளாடை தரித்து
மேலேயும் அதே ஆடை போர்த்திக் கொண்டிருந்த உருவம்
நீதிமன்றத்தை நோக்கி வர மக்களிடையே பரபரப்பு.

ஒல்லியான உடலும்….
பொறி பறக்கும் கண்களுமாய்
கண்களில் கவலையைத் தேக்கியபடி வந்த
வள்ளலாரைக் கண்டு நீதிமன்றமே எழுந்து நிற்கிறது.
.
மற்றவர்கள் நின்றால் பரவாயில்லை.
ஆனால் வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலரே எழுந்து நின்றால்….?
.
இதைக் கவனிக்கிறார் நீதிபதி.

நீதிபதி : வாதியாகிய நீர் பிரதிவாதி
=======
நுழைந்தபோது ஏன் எழுந்து நின்றீர்கள்?
.
”எல்லோரும் எழுந்து நின்றார்கள். நானும் எழுந்து நின்றேன்.”
.
நீதிபதி : எல்லோரும் ஏன் எழுந்து நின்றார்கள்?
=======
.
”பெரியவர் வருகிறாரே என்று எழுந்து நின்றார்கள்”
.
நீதிபதி : நீங்கள் எதற்காக எழுந்து நின்றீர்கள்?
=======
.
“நானும் அதற்காகத்தான்.”
.
கேஸ் குடுத்த நீங்களே எந்திருச்சு நிக்கறீங்கன்னா…
அப்ப நிச்சயம் நீங்க குடுத்த கேஸ்
டுபாக்கூராத்தான் இருக்க முடியும்….
தள்ளுபடி பண்ணுறேன்… கெளம்புங்க வீட்டுக்கு… ன்னாராம் நீதிபதி.
.
.
vallalar1
( ”டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் வார இதழ் )

மம்மி ரிட்டர்ன்ஸ்…

mummy-two

வீட்டில் திருவிழா என்று சொன்னால்
அது உறியடித் திருவிழாவோ….
அல்லது உடுக்கையடித் திருவிழாவோ
எல்லாம் அல்ல.
அது எலியடித் திருவிழாதான்.
.
வீட்டுக்குள் ஒரு ஒத்தை எலி தென்பட்டுவிட்டால் போதும் .
அம்மா ஊரைக் கூட்டிவிடும்.
ஏதோ மலைப்பாம்பு வீட்டுக்குள் புகுந்துவிட்ட
ஃப்பீலிங் அதற்கு.
.
எலியை வீட்டுக்குள் வைத்து
வெளியில் தாள் போட்டுவிட்டு
வாசலில் வந்து நின்றுவிடும் அம்மா.
நானோ அப்பாவோ வரும்வரைக்கும்
வாசலில்தான் தவம்.
.
கூண்டு வைத்துப் பிடிக்கலாம் என்று
பிளான் பண்ணி….
கூண்டுக்குள் உள்ள கொக்கியில்
சின்ன தேங்காய்த் துண்டை மாட்டி வைத்து
மேதகு எலியார் வரும்வரை காத்திருப்போம்.
ஏதோ ஒரு அதி அற்புதப் பொழுதில்
“டப்” என்று சத்தம் கேட்கும்.
.
அவ்வளவுதான்.
அது அர்த்த ராத்திரியாய் இருந்தாலும் அலறும்….
“டேய் எலி மாட்டீடுச்சு….
எடுத்துப் போடுங்கடா” என்று.
இந்த “டா” அப்பாவுக்கும் சேர்த்துத்தான் போலும்.
.
ஏதோ சிறுத்தையைப் பிடித்த தெனாவெட்டில்
எலிக்கூண்டை எடுத்துக் கையில் கொடுப்பார் அப்பா.
தூக்கக் கலக்கத்தில் எழுந்து வாங்கிக் கொண்டு போய்
வெளியில் கூண்டைத் திறந்து எலியைத் துறத்திய
கையோடு மூச்சா போய்விட்டு உள்ளே திரும்புகையில்
எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கும் அதே எலி.
.
”இந்தப் படுபாவிய பெத்துத் தொலைச்சதுக்கு…”ன்னு
அதையொட்டித் தொடங்கும் அம்மாவின் ”கச்சேரி”.
அது அடுத்த நாள் மாலை வரைகூட நீள்வதுண்டு.
.
சில வேளைகளில் அம்மாவை வேறொரு அறையில் தள்ளி
கதவைச் சாத்திவிட்டு அப்பாவும் நானும்
ஆளுக்கொரு விளக்குமாற்றை எடுத்து
கட்டலுக்கடியில்…. பீரோ சந்தில் என
எலிவேட்டையில் இறங்குவதும் உண்டு.
.
எலி உலவும் இடம் தவிர
பிற இடங்களில் எல்லாம் ”சொத்” “சொத்”தென்று
விளக்குமாற்றால் வெளுப்போம்.

வெற்றிவீர்ர்களாக வெளியில் வருவோம்
என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் அம்மாவுக்கு
கடைசியில் இருந்த இரண்டு விளக்குமாறும்
அக்கக்காய்ப் பிய்ந்து போன கதை தெரியும்போது….
.
“நான் பெத்ததும் செரியில்ல….
நான் கட்டுனதும் செரியில்ல….
நான் வாங்கீட்டு வந்த வரம் அப்படி…”ன்னு
அடுத்த தலைப்பில் ஆரம்பமாகும்
”சங்கீத சாம்ராட்”டின் அடுத்த ”ஆலாபனை”.
.
இப்போது அப்பாவுக்குப் பிறகு
”முழுப் பொறுப்பும்” என் வசம் வந்துவிட்டது.
.
இப்படித்தான் போனவாரம் “புதிய விருந்தினர்”
ஒருவர் திடீர் வருகை தர….
அம்மாவிடம் இருந்து அழைப்பு….
.
”டேய் நம்மூட்ல எலி பூந்துடுச்சுடா…” என்று.
அலறியடித்துக் கொண்டு போனேன்
அஞ்சாறு நாள் கழித்து.
.
போன மறுகணமே “எங்க அது…? எங்க சுத்துது அது?” என்றேன்.
.
”இதோ…. அந்த பீரோ மேல ஏறுது…
டீ.வீ.மேல குதிக்குது….
அந்தத் துணி காயப் போடற கம்பி மேல உக்காந்துகிட்டு
என்னையவே பாத்துகிட்டு இருக்குது…”
என்கிற ரன்னிங் கமெண்ட்ரி வேறு.
.
ஏதாவது சாப்புட்டுதா என்றேன்…
.
“நான் சாப்புட்டனா இல்லையான்னு கேக்காதே….
அது சாப்புட்டுதா இல்லையான்னு கேளு….
உன்னப் பெத்ததுக்கு….”ன்னு மீண்டும் கச்சேரியைத் தொடங்க….
.
அய்யோ மறுபடியும் ஆரம்பிச்சறாதே….
இரு….. இப்ப கூண்டு வாங்கீட்டு வரட்டா…..?

”அத வாங்கீட்டு வந்து
நீ புடிக்கற லட்சணம் தெரியும் எனக்கு.
வேற ஏதாவது வழியிருக்கா பாரு…..”ன்னது.
.
நண்பர்களிடம் போனைப் போட்டு விசாரித்தேன்.
ஆளுக்கு ஒரு வழியைச் சொன்னார்கள்.
.
”கேக் மாதிரி ஒன்னு விக்குது.
அத வாங்கீட்டு வந்து வெச்சுட்டாப் போதும்….
விஷம் கலந்த அதைச் சாப்பிட்டுட்டு
எலி எங்கியோ போய்ச் செத்துப் போயிரும்”
என்றான் நண்பன்.
.
“அந்தச் சனியன் சாப்புட்டு முடிச்ச கையோட
பீரோவுக்குப் பின்னாடியோ….
உங்கப்பாவோட பழைய பொட்டிகளுக்கு நடுவயோ
போயி செத்துப் போச்சுன்னா….
அந்த நாத்தத்துல நான் போயிருவேன்….
அத எப்புடிக் கண்டுபுடுச்சு தூக்கிப் போடறது?” என்று
எடுத்ததுமே Reject செய்துவிட்டது தாயெனும் ”தெய்வம்”.
.
அதுவும் சரிதான்…..
இப்ப என்ன செய்ய….?
மறுபடியும் ஒரு ஸ்பெசலிஸ்ட்டுக்குப் போனைப் போட….
.
“தலைவா… அம்மா சொல்றது கரெக்ட்டுதான்.
ஆனா இப்ப புதுசா ஒன்னு வந்திருக்கு….
சின்ன கேரம்போர்டு மாதிரி இருக்கும்….
அதுல விஷம் கலந்த உணவு இருக்கும்….
எலி வந்து சாப்பிட்டாச்சுன்னா….
காலுல பசை ஒட்டிக்கும்…
விஷம் வேல செய்யும்….
காலைத் தூக்க முடியாது….
அப்புடியே செத்து நிக்கும்…..
ஆப்பரேஷனும் சக்சஸ்….
பேஷண்ட்டும் அவுட்…. எப்புடீ?”ன்னான்.
.
எனக்குக் குழப்பமாக இருந்தது.
.
அம்மா சொன்ன எலியோட
சாமுத்ரிகா லட்சணங்களைக் கேட்டா….

அதை எலின்னும் சொல்ல முடியாது….
பெருக்கான்னும் கூப்பிட முடியாது.
இரண்டுக்கும் நடுப்பட்ட ரகம்.

ஒருவேளை அது கொஞ்சம் வலுவா இருக்குறதால…..
விஷத்தச் சாப்பிட்ட கையோட….
அடச்சீ… காலோட அம்மா மேல பாஞ்சுடுச்சுன்னா…?
அய்யோ….. நினைக்கவே கிலியாக இருந்தது.
.
யோசித்து யோசித்துப் பார்த்தேன்.
அது சாப்பிட்டு….
உணவில் கலந்த விஷம் உள்ளே போய்….
அது அப்புறம் வேலை செய்ய ஆரம்பித்து….
மயக்கம் வந்து…..
காலுக்குக் கீழ் உள்ள பசை கவ்விப்பிடித்து….
ச்சே…. இதெல்லாம் வீண் ரிஸ்க்.
நடைமுறைக்கு ஒத்தே வராது.
.
.
எலி அதைச் சாப்பிட்ட நொடியே
சொர்க்கலோகம் போயரனும்…..

அந்த மாதிரி ஹெவி டோசேஜ் என்ன இருக்கு…. ?
.
யோசித்தேன்.
.
வேறுவழியே இல்லை.
.
கொடுத்துற வேண்டீதுதான்.
ஜீரணித்துக் கொள்ள கொஞ்சம்
கஷ்டமாகத்தான் இருந்தது….
ஆனால் வேறு வழியேயில்லை.
.
.
.
சாப்பிட்டவுடனேயே பட்டுன்னு உசுரு போகனும்ன்னா….
.
ஒரே வழிதான் :
.
.
அம்மா செஞ்சு வெச்ச சோத்தை
அப்புடியே எதையுமே கலக்காம வெச்சிற வேண்டீதுதான்.
.
.
சக்ஸஸ்.

mummy-returns1a