தமிழகம் இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல.
நாம்தான் மற்ற மாநிலங்களுக்கே முன்னோடி
என்பது மத்திய பிரதேச முதல்வரின்
பேச்சைக் கேட்டால் புரிந்து போகும்.
.
மகளிர் கூட்டமொன்றில் பேசிய
சிவ்ராஜ் சிங் செளகான்
“இனி யாரும் கணவனை இழந்த கைம்பெண்களை
“விதவைகள்” என்றழைக்கக் கூடாது.
அவர்களை இனி “கல்யாணி” என்றுதான்
அழைக்க வேண்டும்” என்று அறிவித்திருக்கிறார்.
.
இக்கைம்பெண்களது நிலை குறித்து
2017 இல் மத்தியப் பிரதேசம்
(அதுவும் பெயர் மாற்றம் குறித்து மட்டும்) சிந்தித்தால்….
தமிழகம் இவர்களது மறுவாழ்வு குறித்து
சிந்தித்து செயலாற்றத் தொடங்கி
நாற்பதாண்டுகளுக்கும் மேலாகிறது
என்பதுதான் இதன் ஹை லைட்.
பெயர் மாற்றத்தையும் தாண்டி
அவர்களது மறுமணம் குறித்தும் சிந்தித்ததில்
நிச்சயம் தமிழகத்திற்குத்தான் முதலிடம்.
.
“டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு
விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின்படி”
பட்டப்படிப்பு இல்லாத கைம்பெண்கள்
மறுமணம் செய்து கொண்டால்
25000 ரூபாய் நிதியுதவியோடு 4 கிராம் தங்க நாணயமும்,
பட்டதாரிகளெனில் 50000 ரூபாயோடு
4 கிராம் தங்க நாணயத்தையும் அளித்து
அவர்களது மறுவாழ்வைப் பற்றிச் சிந்திக்கிறது தமிழகம்.
.
“மனைவியை இழந்த ஆண்
மறுமணம் செய்து கொள்ளலாமா?
வேண்டாமா? என்பதைப் பற்றி
எந்தப் பெண்ணாவது அபிப்பிராயம்
சொல்ல வருகிறார்களா?
அப்படியிருக்க,
கணவனை இழந்தவள்
மறுமணம் செய்து கொள்ளலாமா?
வேண்டாமா? என்பதைப் பற்றி
அபிப்பிராயம் சொல்ல
ஆண்களுக்கு என்ன உரிமையிருக்கிறது?”
.
என்று பொட்டில் அடித்த மாதிரி
நெத்தியடியாய்க் கேட்டார் தந்தை பெரியார்.
.
என்றைக்குத் தெரியுமா?
.
இன்று நேற்றல்ல. 89 ஆண்டுகள் முன்பாகவே.
.
அதுவாகப்பட்டது 1929 இல்.
.
இதுதானுங்கோ தமிழ்நாடு.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் வார இதழ் )