அவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…

இருந்தாலும் அவன் என்னைப் பார்த்து
அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது.
.
இப்போது நினைத்தாலும் எரிச்சல் எரிச்சலாக வருகிறது.
.
நான் ஓரளவுக்கு மறை கழண்டவன்தான் என்றாலும்
அவன் நினைத்திருந்த அளவுக்கு நானில்லை என்பதுதான்
என் ஆதங்கம்… அங்கலாய்ப்பு… ஆத்திரம் எல்லாம்….
.
அதுவும் என்னைப் பார்த்து மட்டும் ஏன் அப்படிச் சொன்னான்?
அன்று இரவு முழுக்க இதே நினைப்பு.
.
தஞ்சை கருத்தரங்கம் நிறைவு பெற்றவுடன்
நண்பர் சரவணன் விருந்துக்கு அழைத்தாரே என்று
போனதுதான் நான் செய்த ஒரே தப்பு.
.
நான் ஏதோ பழைய மாயாபஜார் படத்தில் வரும்
ரங்காராவைப் போல சாப்பாட்டில் வெளுத்து வாங்குவேன்
என்கிற எண்ணத்தில் அவரது தங்கை சுமதி வேறு ஏகப்பட்ட
உணவு வகைகளைச் செய்து வைத்திருந்தார்.
.
ஆனால் கூட வந்த அந்த இனியன் ஜென்மம்தான்
அரைமூட்டை அரிசியை அப்படியே திங்கும்.
நானெல்லாம் சுத்த வேஸ்ட்.
.
உரையாடி உண்டு களைப்பாறிய பிறகு
“மூச்சா” போறதுக்கு பாத்ரூம் எங்கிருக்கு?
எனக் கேட்டேன் எதிரே இருந்த கவுதமனிடம்.
.
”அதோ அப்படிப் போயி ரைட்ல திரும்புங்க” என்றார்.
.
போனால் எதிரெ இளித்தபடி இனியன்.
ஒற்றை விரலை நீட்டிக் காண்பித்தேன்.
.
“அதோ உள்ளதான்…
ஆனா லெப்ட்ல இருக்குற சின்னத் தொட்டில ஊத்து…
ரைட்ல இருக்குற பெரிய தொட்டில ஊத்தீராதே…”என்றான்.
.
ஒருவேளை பெரிய பெரிய வணிக வளாகங்களிலும்
சினிமா தியேட்டர்களிலும் இருப்பதைப் போல
சிறுவர்களுக்கு உயரம் குறைவான சின்ன பேசினும்
பெரியவர்களுக்கு உயரமான பெரிய பேசினும்
ஆக இரண்டு வைத்திருப்பார்கள் போலிருக்கிறது
என்று உள்ளே நுழைந்தால்….
.
அதைப்பார்த்ததும் எனக்கு வந்த எரிச்சலுக்கு
அளவே இல்லை.
அந்த மூதேவி சொன்னது போல இரண்டு தொட்டிதான்.
ஆனால் இரண்டும் வேறு வேறு உபயோகத்திற்கு.
.
நான் இதுகூட தெரியாத ஆஃப்பாயிலா?
.
என்னைப் பார்த்து இப்படிச் சொல்லிவிட்டானே
என ஆத்திரம் மேலும் பீறிட்டது.
அதுவரை அடக்கி வைத்திருந்ததை வெளியேற்றிவிட்டு
அமைதியாக வெளியில் வந்தேன்.
.
ஏன்யா….
எனக்கு இந்த ரெண்டு தொட்டிக்குமான வித்தியாசம்கூட தெரியாதா?
.
ச்சே….
எனக்கு ஏனோ இந்த வேளையில் முன்னரே நான் எழுதிய
ஜார்ஜ் புஷ் கதைதான் நினைவுக்கு வந்தது.
.
அது :
.
”பழைய ஜனாதிபதி பில் கிளிண்டன் எப்படி இருக்கிறார்
என்று பார்த்து வரலாம் வா” என்று தனது மனைவியை
அழைத்துக் கொண்டு புறப்பட்டார் புஷ்.
.
”வாராது வந்த மாமணி”யைப் பார்த்ததும்
அதிர்ச்சியைச் சமாளித்தபடியே
.
“அடடே…….. வாங்க புஷ்…….. வாங்க……..” என்றனர்
பில் கிளிண்டனும் அவரது மனைவியும்.
.
வீட்டையெல்லாம் சுற்றிப்பார்த்த பின்னர்
உணவு சாப்பிட அமர்ந்தனர் நால்வரும்.
அந்த நேரம் பார்த்து புஷ்ஷுக்கு ஒன் பாத்ரூம் வர……..
.
ஒற்றை விரலைக் காட்டினார் புஷ்.
.
”அதோ…….. அந்தப் பக்கம் கடைசி ரூம்.”
என்று கை காட்டினார் கிளிண்டன்.
.
தேடிப் போய் தன் “சுமையை” இறக்கி விட்டு வந்த புஷ்
“அப்பாடா”என்று அமர்ந்தபடியே தன் மனைவியின் காதில் ஏதோ கிசுகிசுக்க……..

பதிலுக்கு புஷ்ஷின் மனைவி கிளிண்டனின் மனைவி ஹிலாரியிடம் காதைக் கடிக்க……..

ஏதும் புரியாமல் முழித்தபடி சாப்பிட ஆரம்பித்தார் பில் கிளிண்டன்.
.
ஒருவழியாய் வந்த விருந்தாளிகளை வழியனுப்பி வைத்துவிட்டு
வந்து படுக்கையில் சாயும் முன்……..
.
”ஆமாம்……..புஷ்ஷின் மனைவி உன் காதில்
ஏதோ கிசுகிசுத்தாரே…..அது என்ன?” என்று
ஆர்வத்துடன் கேட்டார் கிளிண்டன்.
.
”அது வேறொன்றுமில்லை……..
நமது பங்களாவிலேயே புஷ்ஷுக்குப் பிடித்தது
கழிப்பறைதானாம்.

அதிலும்….. உங்க தங்க முலாம் பூசிய
சிறுநீர் கழிக்கும் தொட்டி அவருக்கு
ரொம்ப ரொம்பப் பிடித்து விட்டதாம்.” என்றார் ஹிலாரி.
.
”என்னது…….. தங்க முலாம் பூசிய சிறுநீர் கழிக்கும் தொட்டியா……..?

நான் அப்பவே நெனைச்சேன்……..
அது எதுவோன்னு நெனைச்சு……..
ஏதோ பண்ணித் தொலைக்கும்னு” என்று
தலையில் அடித்துக்கொண்டார் பில் கிளிண்டன்.
.
”ஏங்க…….. என்னங்க ஆச்சு……..?”
என்று ஹிலாரி படபடப்புடன் வினவ……..
.
”அட…….. அது சிறுநீர்த் தொட்டின்னு நெனச்சு……..
நான் தினமும் வாசிக்கிற சாக்சாபோன்ல
ஊத்தீட்டுப் போயிருக்கு அந்த சனியன்.” என்றார் பில்.
.
ஏம்ப்பா….
நான் தெரியாமத்தான் கேக்குறேன்….
நானென்ன அந்த புஷ் அளவுக்குக் கூறு கெட்டவனா?
.
அந்த ரெண்டு தொட்டிக்குமா வித்தியாசம் தெரியாது?
.
இருந்தாலும்…
அவன்…. என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது.
.
(சகலரது சந்தேகமும் தீர அவ்விரு ”தொட்டி”களின் படங்களும் கீழே
கொடுக்கப்பட்டுள்ளுன.

எஜமான்….நீங்களே பார்த்து தீர்ப்பு சொல்லுங்கள்.)
.
.

படித்ததும் கிழித்ததும் பார்ட் II

நன்றி : http://www.andhimazhai.com

”திருக்குறளை எழுதியது திப்புசுல்தான்”


அமேசான் காடுகளின் அணையா நெருப்பால்
உலகத்தின் நுரையீரலே பத்தி எரியுதுன்னு
அங்க அவனவன் அலறிகிட்டுக் கிடந்தா….
.
இங்க உள்ளவன் என்னடான்னா
அமேசான்ல சென் பாலனுக்கோ… ஜென்பாலனுக்கோ
விருது குடுத்தது சரியா? தப்பா?ன்னு
மயிர் பொளக்கும் வாதம் பண்ணிகிட்டு இருக்கான்.
.
அதிலும் ஆகமவிதிப்படி அரியவகை இலக்கியம்
Produce பண்ணுற மாவுமோகன் வேற
இது இலக்கியமே இல்லை….
வெறும் குப்பைன்னு சொன்னதும் சொன்னார்…
அவர் மீது பாய்ந்து விட்டார்கள் நம்மவர்கள்.
.
இப்ப அவர் என்ன தப்பா சொல்லீட்டார்ன்னு
இந்தக் குதி குதிக்கிறார்களோ தெரியவில்லை.

ஒரு இலக்கிய குருமகா சன்னிதானமாக வீற்றிருப்பவர்
இந்த அருள்வாக்கைக்கூட அருளவில்லை என்றால் எப்படி?
.
நம்ம சு.சாமி மாதிரி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
.
”திருக்குறளை எழுதியது திப்புசுல்தான்”…
.
“வள்ளலாரின் வளர்ப்புமகன் தான் ஷங்கர்”…
.
என அள்ளிவிடுவது அவரது Routine ஆன ஒன்றுதானே?
.
இதற்குப் போய் கோபித்துக் கொள்வானேன்?
கொந்தளிப்பானேன்?
.
ஒருவேளை சன்னிதானமே
எந்திரன் 2 விலோ…
சந்திரன் 3 யிலோ…
பிசியாக இருந்துவிட்டாலும்…

“என்ன மாமு…!
இந்த மாச ஆன்மீகத் தேடலின் கண்டுபிடிப்பை
இன்னும் அவுத்துவிடாம இருக்கீங்க?”ன்னு
மனசுவிட்டுக் கேட்க வேண்டீதுதானே?

இந்தப் பெருந்தன்மைகூட உங்களைப் போன்ற இலக்கியவாதிகளுக்கு
இல்லாவிட்டால் ஆசான் தான் என்ன செய்வார் பாவம்…?
.
.
அவர் ஆன்மீகக் கடலை கடையும் வேலையைப் பார்ப்பாரா?
.

குற்றுயிரும் குலையுயிருமாய்த் தவிக்கும்
திரைத்துறையை தூக்கி நிறுத்துவாரா?
.

தத்துவ தரிசனமே இல்லாமல்
தறுதலைகளாய்க் கேள்வி கேட்பவர்களுக்கு
பதில் கடிதம் போடுவாரா?
.

குப்பைக் கிடங்காய்ப் போய்விட்ட
தமிழ் இலக்கிய உலகை clean செய்யும் வேலையைத்தான் பார்ப்பாரா?
.

ச்சே… கொஞ்சம்கூட இரக்கமே இல்லாத ஜனங்களப்பா நீங்கள்.
.
அப்படி அவர் என்னதான் சொல்லிவிட்டார் என்று இந்தக் குதி குதிக்கிறீர்கள்?
.
ஒருமுறைக்குப் பலமுறை அவரது அமேசான் விருது குறித்த
தத்துவக் கீற்றுகளை படித்துப் பாருங்கள்.
அப்போதாவது உங்கள் மரமண்டையில் ஏறுகிறதா பார்ப்போம்.
.
அவர் என்ன எழுத வேண்டாம் என்றா சொன்னார்?
.
“எழுதுபவர்கள் அந்த பரிசுத்தொகைக்கு
அதற்கு கதைகள் அனுப்புவதாக இருந்தால்கூட
அவர்கள் வழக்கமாக எழுதும் பெயரில்
அனுப்பாமலிருப்பது நன்று.” ன்னுதானே சொல்றார்.
.

எழுதுங்க சொந்தப்பேரில் எழுதாம
ஏதாவது பூனை பெயரில் எழுதுங்க.
ஒரிஜினல் பேர்ல எழுதுனா உங்களோட மத்த நூல்களுக்கும்
நல்ல வாசகர்கள் அமைய மாட்டார்கள்…ன்னு
ஒரு அறிவுரை சொல்றார் இதுக்குப் போயி….
முறையோ குய்யோன்னு கூப்பாடு போடறதா?
.
ஏன் நம்ம ஆசானோட ”இரவு” நாவல்ல வரும்
ஆஸ்தான கேரக்டரே அதுதானே?
.

பேஸ்புக்குல ஒரிஜினல் ஐடி..ல போயி கமெண்ட் போடறது…

அதையவே டூப்ளிகேட் ஐடி..ல போயி காரித் துப்பறது.

இதப் பார்த்து வேற யாராவது தொன்மையான
தத்துவ தரிசனத்தோடு வந்து திருப்பித் துப்புனா….
.
அவனை வண்டை வண்டையா போட்டுப் பொளக்குறது….
.
இதுதான அந்த நாவலோட கதாநாயகனின் பொழுதுபோக்கு?
.

பின்ன எளக்கியம்ன்னா சும்மாவா?
.
அதப் புரிஞ்சுக்குங்க மொதல்ல.

எழுது… சொந்தப் பேர்ல எழுதாதேங்கிறதுக்கெல்லாம் ஒரு கண்டனமாய்யா?
.

கடல்…
காவியத்தலைவன்…
பாதியில் பாய்காட் பண்ணிய சிந்துசமவெளி போன்ற
“காவியங்களின்” எழுத்தோவியருக்கு இந்த உரிமை கூட கிடையாதா என்ன?
.
இப்பவும் சொல்றேன்….
.
நம்ம இலக்கியத்தின் தர நிர்ணய துலாக்கோலை
தூக்கிப் புடிச்சிருக்கிற நம்ம கஜக்கோல் பாண்டியன்
ஃபேஸ்புக்ல இல்லன்னு நெனச்சுகிட்டு கன்னாபின்னான்னு எழுதாதீங்க.
.
அவுரு இந்த நாலாந்தர ஃபேஸ்புக்குல
மூன்றாம்தரமா மூணு டூப்ளிகேட் ஐ.டி. வெச்சிருப்பாரு…
.
நம்ம “இரவு” நாயகன அண்டர் எஸ்டிமேட் பண்ணாதீங்க.
.
தப்பித் தவறி பண்ணுனீங்க
அப்புறம் அமேசான் காட்டுத் தீ மாதிரி
ஒங்க இலக்கிய ஒலகமே கந்தல்தான்.
.
Be careful.

==============================
.
படித்ததும் கிழித்ததும் பார்ட் II
.
நன்றி :http://andhimazhai.com/news/view/pamaran-2-series-5-.html?

லாலு பிரசாத் – நாம் பார்க்காத மறுபக்கம்…


புத்தகம்ன்னா புத்தகம்…
அப்படி ஒரு புத்தகம்.
படிக்கக் கையில் எடுத்ததில் இருந்து
முடிக்கும் வரை அவ்வளவு சுவாரசியம்.
.
எல்லாம் நம்ம தலைவர் லாலு பிரசாத்தின் சுயசரிதைதான்.
.
லாலு பிரசாத் என்றாலே ஒரு இளக்காரப்பார்வை
எண்ணற்றவர்களிடம் உண்டு.
அதுவும் அவரை நம்மூர் பசுநேசர் ராமராஜனோடு
ஒப்பிட்டுச் செய்த பகடிகள் ஏராளம்.
.
ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி
அவர் யார்?
எப்படிப்பட்டவர்?
எவ்விதம் இவ்வளவு உயரத்துக்கு வந்தார்?
என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த நூலில் இருக்கிறது.
.
அதிலும் தான் எந்த இடத்தில் தடுமாறினேன்….
தவறிழைத்தேன் என்கிற மனம் திறந்த
ஒப்புதல் வாக்குமூலங்களும் உண்டு இதில்.
.
அவருக்கே உரித்தான நக்கல் நையாண்டி
ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கிறது.
தமிழிலேயே தடுமாறும் நான்
இந்த இங்கிலீஷ் புத்தகத்தை வாசித்துவிட்டேன் என்றால்
உங்களால் முடியாதா என்ன? (GOPALGANJ TO RAISINA)
.
புறாக்களும் அணில்களும் எலிகளும் துள்ளி விளையாடும்
அந்த மண் குடிசையின் இடுக்குகளில் சில வேளைகளில்
தேள்களும் பாம்புகளும் கூட எட்டிப்பார்க்கும்.
.
பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுல்ள
ஒரு குக்கிராமமான புல்வாரியாவில்
ஆறு சகோதரர்களோடும் ஒரு சகோதரியோடும் லல்லு பிறந்தார்.
.
1948 ஜூன் பதினொன்று என்று சான்றிதழ்கள் சொன்னாலும்
கல்வி பெறாத தன் தாய் சொல்லும்
பிறந்த தேதியில் சந்தேகம் இருக்கிறது என்கிறார்.
.
ராமநவமியும் மொகரமும் பாகுபாடற்றுக் கொண்டாடப்படும்
அக்கிராமத்தில் மரமேறி
மாங்காய் பறிப்பது…
.
குட்டையில் குதித்து நீந்துவது…
.
எருமை மாடுகளின் மீது சவாரி செல்வது…
.
பிடுங்கிய கரும்பை சுவைத்தபடி
வீடு வந்து சேருவது
இதுதான் லல்லுவின் அலப்பரையான ஆரம்பப் பள்ளிக் காலங்கள்.
.
அலப்பரையின் உச்சமாக ஊருக்கு வந்த
பெருங்காய வியாபாரி மூட்டையை கிணற்று மேட்டில் வைத்துவிட்டு
துண்டை உதறுவதற்குள் கிணற்றுக்குள் குப்புறப் பாய்கிறது மூட்டை.
.
உபயம் : லல்லூ பிரசாத்.
.
வியாபாரியின் அலறல் கேட்டு மொத்த கிராமுமே திரண்டு வர..

”அட…. உதவிக்கு இவ்வளவு பேரா…?” என
அந்த வியாபாரி வியக்கும்முன்னே
கையில் வைத்திருக்கும் குடங்களோடு
கிணற்றை நோக்கிப் பாய்கிறது மொத்த கூட்டமும்.
.
பின்னே….
நேற்றுவரை சாதாரணக் கிணறாக இருந்த அந்தக் கிணறு….
பெருங்காயக் கிணறாக பரிணாமம் பெற்றால்
சும்மா இருப்பார்களா மக்கள்?
.
அப்புறமென்ன அந்தக் கிராமம் முழுக்கவே
பெருங்காய சமையலும் பெருங்காய மணமும்தான்.
.
இனி இவனை இங்கு வைத்துக் கொண்டிருந்தால்
உருப்பட மாட்டான் என்று முடிவெடுத்த லல்லுவின் தாய்
பாட்னா கால்நடைக் கல்லூரியில் தினக்கூலியாகப் பணியாற்றும்
தனது மற்றொரு மகன் முகுந்த் ராயிடம்
அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார்.
.
அக்கிராமத்துக் குட்டைகளையும்…
குளங்களையும்…
பறவைகளையும்…
நண்பர்களையும் பிரிய முடியாத லல்லுவின் கதறல்
தாயின் செவிகளில் ஏறுவதேயில்லை.
.
முடிவு ?
.
பாட்னாவிலுள்ள பள்ளியை நோக்கிய பயணம்.
66 பைசா தினக்கூலி வாங்கும் அண்ணனால்
இரண்டு சட்டையும் ஒரு டிராயரும் மட்டுமே
வாங்கித்தர இயலுகிறது.
.
தனது கிராமத்துக் கதைகள், மிமிக்ரி என வெளுத்துக்கட்டும் லாலு
அரசு நடுநிலைப் பள்ளியின் கிளாஸ் லீடர்.
அண்ணனுக்கு உதவியாக சமைத்துத் தருதல்
பாத்திரங்கள் கழுவுதல் என நகரும் நாட்கள்
கல்லூரிக் காலத்தைத் தொடுகிறது.
.
பாட்னா பல்கலைக் கழகத்தின்
B.N கல்லூரியில் காலெடுத்து வைக்கிறார் லாலு.
கல்லூரியில் சேர்ந்தாலும் இரண்டு வேளை உணவோ…
நாகரீக உடையோ அண்ணன்களால் வாங்கித்தர இயலுவதில்லை.
.
வசதிபடைத்த உயர்ஜாதியினர் மோட்டார் சைக்கிள்களில்
கல்லூரிக்கு வர
10 கிலோமீட்டர் நடைதான் லாலுவைப் போன்ற ஏழை ஜாதிகளுக்கு.
.
அங்குதான் ஆரம்பிக்கிறது லாலுவின் முதல் சமூகப்பணி.
.
ஒருநாள் சட்டென்று கல்லூரியின்
பிரதான வாசலின் முன்பாக நடுவில் நின்றபடி
உரத்த குரலில் பேசத் தொடங்குகிறார்:
.
“நாங்கள் ஏழைகள்தான்…
ஆனால் படிக்க ஆசைப்படுபவர்கள்.
பசியும் களைப்பும் மேலிட 10 கிலோமீட்டர்
நடந்தே வந்தால் எங்களுக்குள் எப்படிப் படிப்பு ஏறும்?

காலையில் கல்லூரியில் கால் வைத்ததில் இருந்து மாலைவரை
பசிக்கு ஏதேனும் சிறுதீனி தின்னலாம் என்றால்
அதற்கு பாக்கெட்மணி கொடுத்து அனுப்ப
எங்கள் வீடுகளில் வசதியும் கிடையாது.

கல்லூரி முடிந்தாலோ மீண்டும் வீடு நோக்கி
அதே 10 கிலோமீட்டர் நடை.
உடனடியாக கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு
பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும்…” என்று முழங்க…
.
துணைக்கு மாணவர்களும் கூட்டம் கூட்டமாக வந்துசேர்கிறார்கள்.
.
லாலுவின் பேச்சையும் பேச்சின் வீச்சையும்
கண்ட பல்கலைக் கழக நிர்வாகம்
தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு
பேருந்துவிடச் சம்மதிக்கிறது.
.
போதாக்குறைக்கு கல்லூரிப் பெண்களை கேலி செய்பவர்கள்…
விடாமல் துரத்துபவர்கள்…
ரோட்டோர ரோமியோக்கள்…
என எல்லோருக்கும் லாலு என்றால் சிம்ம சொப்பனம்தான்.
.
பெண்கள் தேடிவந்து புகார் செய்வார்கள் லாலுவிடம்.
அதற்காக கேலி செய்யும் மாணவர்களை
போலீசிடம் பிடித்துத் தருவது
கல்லூரி நிர்வாகத்திடம் போட்டுத் தருவது
என்றெல்லாம் போக மாட்டார் லாலு.
.
அவருக்கே ”உரித்தான” பாணியில் பாடம் எடுத்து
மாற்றிக்காட்டுவார். பெண்கள் மத்தியில் லாலுதான் ஹீரோ.
.
B.N. கல்லூரியில் மட்டுமில்லை
அதைத்தாண்டி பாட்னா பெண்கள் கல்லூரிக்கும்
சார்தான் அத்தாரிட்டி.
அக்கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்த ஒரே ஆண் லாலுதான்.
.

இந்த வேளையில்தான் ராம் மனோகர் லோகியாவின்
கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார் லாலு.
.
நிலப்பிரபுக்களின் மையமான பீகாரில்
பெரும்பாலான நிலமும் கல்வியும் அரசியலும் அதிகாரமும்
உயர்ஜாதியினர் கைகளில் மட்டுமே சுற்றிச் சுற்றி வந்தது.
.
தனது சோசலிச தத்துவத்தை சோதித்துப் பார்க்கும்
சோதனைக் களமாக லோகியா பீகாரில் களமிறங்க
லாலுவின் கவனமும் அவரது சோசலிஸ்ட் கட்சியை
நோக்கித் திரும்புகிறது.
.
பிற்பாடு பாட்னா பல்கலைக் கழகத்தின்
மாணவர் தலைவரானதோ…
.
கல்லூரி தேர்தலில் அமைச்சரின் மகனையே
மண்ணைக் கவ்வ வைத்ததோ…
.
வழக்கம்போல மாணவிகளின் நூறு சதவீத ஓட்டும்
லாலுவிற்கே விழுந்ததோ…
.
பீகாரின் தலைநகரே வியந்த விஷயங்கள்.
.
.
லோகியாவிற்குப் பிற்பாடு ஜெ.பி என்றழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண்
அவர்களது ”முழுப்புரட்சி” அறைகூவலை ஏற்று
மாணவர் போராட்டத்திற்கான அமைப்பாளர் ஆகிறார்.
.
இதில் முக்கியமானது 18.3.1974 இல் நடந்த
பீகார் சட்டசபை முற்றுகைப் போராட்டம்தான்.
.
ஜெ.பி.யின் ஆணைப்படி தொடங்கிய இப்போராட்டத்தை
கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு என
சகல வழிகளிலும் ஒடுக்கப் பார்க்கிறது போலீஸ்.
துப்பாக்கிச்சூட்டில் லாலு கொல்லப்பட்டுவிட்டார்
என்கிற புரளி கிளம்ப கொந்தளிக்கிறது பீகாரே.
.
பிற்பாடு இந்திராகாந்தி கொண்டு வந்த ”மிசா” சட்டத்தில்
லாலு கைது செய்யப்படுவதும்…
.
1974 ஜுன் 25 ஆம் நாள் நாட்டையே இருளில் தள்ளிய
எமர்ஜென்ஸி அறிவிக்கப்படுவதும்…
.
நாடு முழுவதும் அரசியல்தலைவர்கள்
சிறையில் அடைக்கப்படுவதும்…
.
கருத்தடை என்கிற பெயரில் இந்திராவின் உத்தமபுத்திரன் சஞ்சய்காந்தி
திருமணமே ஆகாத இளைஞர்களை
கொத்துக் கொத்தாக தூக்கிப்போய்
கட்டாயக் கருத்தடை செய்து அனுப்பப்படுவதும்….
.
என நடந்தேறியவை அனைத்தும்
இப்பன்றித் தொழுவ ஜனநாயகம் பல்லிளித்த காலங்கள்.
.
இந்திரா அறிவித்த அவசரநிலை பிரகடனம் வாபஸ் வாங்கப்பட்டதும்…
.
நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்…
.
சிறைக்குள்ளிருந்தபடியே லாலு வக்கீலுக்கான LLB படிப்பில் பாஸானதும்…
.
சிறைக்குள் இருந்தபடியே எம்.பி. தேர்தலில் போட்டிபோட்டதும்…
.
சிறைக்குள் இருந்தபடியே 3.75 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும்
வரலாற்றில் கண்ட செய்திகள்தான்.
.
ஆனால் இவையனைத்தும் நிறைவேறும்போது
லாலுவுக்கு வயது வெறும் 29.
.
ஆம்…
.
இந்தியாவிலேயே அன்று இந்த வயதில்
பாராளுமன்ற உறுப்பினரானது லாலு பிரசாத் மட்டும்தான்.
.
இதுதான் வரலாறு காணாத செய்தி.
.
ஆனால் இதில் கல்லூரிக் காலம் தொடங்கி
ஜெ.பி.யுடன் இருந்த காலம் வரை
லாலுவுக்கு எதிராக கோள் மூட்டுவதிலும்,
ஏழரையைக் கூட்டுவதிலும் கவனமாக இருந்தது
ஆர்.எஸ்.எஸும் அதனது மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும் தான்.
.
அது இன்று வரையிலும் தொடர்கிறது என்பது வேறு விஷயம்.
.
காரணம் : ஆர்.எஸ்.எஸுக்கும் பி.ஜெ.பி.க்கும் பேரைக்கேட்டால்
தூக்கத்தில்கூட மூச்சா போய்விடக் கூடிய அளவுக்கு
கிலி கொடுக்கும் புலியாக இருந்தவர்தான் லாலு பிரசாத்.
.
அதற்கு உதாரணமாக ஒன்றே ஒன்றைச் சொல்லி
விடைபெறுவது உத்தமமானது என்று நினைக்கிறேன்.
.
அதுதான் : எல்.கே.அத்வானியின் கைது.
.
வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்காக வந்த
மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த உத்தரவிட்டதும்
அதைத் தாங்க முடியாமல் பி.ஜெ.பி ரத்த யாத்திரையைத் அறிவித்ததும்
அதற்கு அத்வானி தலைமை வகித்து நகரம் நகரமாய் வந்து
ரணகளப்படுத்தியதும் ஊர் அறிந்த செய்திகள்.
.
பாட்னா பொதுக்கூட்டம் ஒன்றில் லாலு அறிவிக்கிறார் :
.
”நேற்று இரவு என் கனவில் ராமர் வந்தார்.
என்னிடம்….

’லாலு… என் பேரைச் சொல்லிக் கொண்டு
ஒரு டுபாக்கூர் ரதயாத்திரை வருகிறது…
அதைப் போய் தடுத்து நிறுத்தி
ஆளைத் தூக்கி உள்ளே போடு…’ என்றார்.

பீகார் எல்லைக்குள் கால் வைத்தால்
நிச்சயம் கைதுதான்” என்கிறார் லாலு பிரசாத்.
.
ரதயாத்திரை வரும்போது மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம்
பயத்தில் மெளனம் காக்கிறார்கள்.
வழியெங்கும் கலவரம்.
.
பீகாரை நெருங்குகிறது ரதயாத்திரை.
.
மத்திய அமைச்சர் முப்தி முகமது சையத்
முதலமைச்சர் லாலுபிரசாத்தின் போன் லைனுக்கு வருகிறார்.
“ரத யாத்திரையைத் தடுக்க வேண்டாம்.
அப்படியே போக விட்டுவிடுங்கள்” என்கிறார்.
.
”நீங்கள் அதிகாரத்தில் மயங்கிவிட்டீர்கள்” என்றபடி
போனை வைக்கிறார் லாலு.
.
ரதம் நெருங்குகிறது.
.
முதலில் சசராம் என்கிற இடத்தில் தடுத்து நிறுத்தி
கைது செய்வதாகத் திட்டம்.
.
தன் படுக்கை அறையில் அரசின் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை.
கைதானால் கொண்டு வர ஹெலிகாப்டர் எல்லாம் ரெடி.

ஆனால்…

ரகசியமாகப் பேசப்பட்ட விஷயம் வெளியில் கசிகிறது.
.
ரூட்டை மாற்றுகிறார் அத்வானி
.
அடுத்ததாக தன்பாத் என்கிற இடத்தில்
தடுத்து நிறுத்த முடிவெடுக்கிறார்கள்.
.
இந்தத் திட்டமும் லீக்காகிறது.
.
மீண்டும் ரூட்டை மாற்றுகிறார் அத்வானி.
.
.
லாலு பிரசாத்தின் அதற்கடுத்த திட்டம்தான் Plan B.
.
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.கே.சிங்கை வரச்சொல்லி
ஆணைபிறப்பிக்கிறார் லாலு.

அடுத்து டி.ஐ.ஜி ராமேஷ்வருக்கு அழைப்பு.

இவர்களோடு ரகசிய ஆலோசனையை முடித்துவிட்டு
தலைமைச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளை
அழைத்து சமஸ்டிபூரில் அத்வானியைக் கைது செய்யும்
திட்டத்தை விவரிக்கிறார்.
.
இந்தமுறை ரகசியம் கசியாமல் இருக்க
தனது இல்லத்தில் உள்ள எல்லா தொலைபேசி இணைப்புகளையும்
துண்டிக்கச் சொல்லிவிட்டு
வந்தவர்களை வெளியேவிடாமல் மூலையில் போய்
குத்த வெச்சு உட்காரச் சொல்லுகிறார் லாலு.
.
அதன்பிறகு CRPF க்கு தகவல் சொல்வதோ…
.
ஹெலிகாப்டர் பைலட் அவினாஷிடம் அந்த திட்டத்தை
நிறைவேற்றும் பொறுப்பை ஒப்படைப்பதோ…
.
தன்னை சந்திக்க வந்த பி.ஜெ.பி. தலைவர்களிடம்
“அத்வானி ஜி… யை கைது செய்ய
நானென்ன பைத்தியக்காரனா?” என்று திசைமாற்றி விடுவதோ…
.
இதை நம்பி கட்சிக்காரர்களும் மீடியாக்காரர்களும்
குப்புறப்படுத்து குறட்டை விட்டதோ….
.
தனியாகத் தூங்கிய அத்வானிக்கு
தேநீர் கொடுக்கச் சொல்லி சத்தமின்றித் தூக்கியதோ…
.
எல்லாம் இந்நூலில் வரும் பரபரப்பின் உச்சங்கள்.

.
இவை எல்லாவற்றைவிடவும்
முதலமைச்சராக இருந்த காலங்களில்…

”வழக்கமாக” ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்
தலித்துகளுக்கு வீடுகட்டித் தருவதற்கு மாற்றாக
நகரின் மத்தியில் அடுக்குமாடி வீடு கட்டித் தந்தது…
.
அரசு நிலத்தில் அமைந்திருந்த
கோடீஸ்வரர்களுக்கான 200 ஏக்கர்
பாட்னா கோல்ப் மைதானத்தை கைப்பற்றி
மிருகங்கள் சுதந்திரமாக உலவட்டும் என
அருகில் இருந்த பாட்னா மிருகக்காட்சி சாலையோடு இணைத்தது….
.
பணக்காரர்கள் குடிக்கவும் கும்மாளமிடவுமாய் இருந்த
பாட்னா ஜிம்கானா கிளப்பில் 60 சதவீதம் கையகப்படுத்தி…
அதில் இனி ஏழை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள்
தங்கள் வீட்டு திருமண நிகழ்வுகள் உட்பட
சகலத்தையும் வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கிறார்.
.
அத்தோடு நிற்கவில்லை லாலு.
.
ஒரு புறத்தில் பணக்காரர்கள்
விலை உயர்ந்த மதுபானங்கள் குடித்துக் கொண்டிருக்கும்போது
ஏழைகள் என்ன செய்வார்களென யோசித்து
.
“இனி நீங்களே உங்களுக்கான
உள்ளூர் கள்ளையும் கறியையும் கையோடு கொண்டு வாருங்கள்.

இங்கேயே உங்களுக்கு விருப்பமான
ஆடு கோழி பன்றி என சமைத்துச் சாப்பிடுங்கள்.

இது வசதி உள்ளவனுக்கு
மட்டுமேயான இடமல்ல.

இது உங்களுக்கானதும்தான்
என அறிவிக்கிறார் லாலு பிரசாத்.
.
ஆளும் வர்க்கங்களும்…
உயர் சாதிகளும்…
உயர் அதிகாரிகளும் காண்டாவதற்கு இவைகள் போதாதா….?
.
இப்போது புரிகிறதா பிரதர்
அவர் ஏன் உள்ளே இருக்கிறார் என்று….?
.
.
.

படித்ததும் கிழித்ததும் பார்ட் II

.
நன்றி : http://www.andhimazhai.com