ஏன் என்ற கேள்வி….

Thaali4
அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான்.
ஆயினும் வேறு வழியிருக்கவில்லை.

நொடிகள்…மணிகள்…நாட்களென நேரங்கள் நழுவினாலும்… அத்தகையொரு கேள்வி தவிர்க்க முடியாது போயிற்று எனக்கு. வலிகளின்றி வழிகளில்லையே எங்கும்.

“ஒவ்வொரு சமூக மாற்றத்திற்குப் பின்னாலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் சிந்தப்பட்டே வந்திருக்கிறது” என வேதம் புதிது திரைப்படத்தில் ஒலித்த பாரதிராஜாவின் குரலைப் போல உள்ளத்திற்குள் ஒரு குரல் ஒயாது ஒலித்துக் கொண்டே இருந்தது.

அத்தகைய கேள்வியால் எழும் வலி அதிகமானதுதான். ஆனால் அது அவசியமானது. அப்படிக் கேட்டிருக்கக் கூடாது தான். ஆயினும் வேறு வழியிருக்கவில்லை. அதுவும் அம்மாவிடம்.

அப்படியொன்றும் அவள் அசடுமில்லை. எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே பால்மார்க்கெட் பக்கமிருக்கும் நூலகத்திற்குக் கூட்டிப்போய்…அன்றைக்கு உருப்படியாக இருந்த ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதானி’லிருந்து ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ வரைக்கும் எண்ணற்ற நூல்களை எனக்குப் பரிச்சயப்படுத்தியவள்தான்.

என்றைக்குமே ‘சீராக்குகிறோம்’ எனும் போர்வையில் எனது சிறகுகளுக்கு சிரச்சேதம் நடத்தியதில்லை எனது பெற்றோர்கள். மகனாயிருந்தாலும் மாற்றுக் கருத்துக்களுக்கு மகத்தான மதிப்பளிக்க மறுத்ததேயில்லை அவர்கள். ஆனாலும்கூட அது தவிர்க்க முடியாது போயிற்று. அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான்.

அப்போதைய சிக்கலுக்கு மூலகாரணம் ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணுவதில் வந்த சிக்கலல்ல அது. ஆயிரம் உண்மைகளைச் சொல்லி ஒரு இல்லற வாழ்க்கையைத் துவக்குவதில் வந்த தடங்கல் அது.

எனக்கு துணைவியாகப் போகிறவர் வேறு “மதம்” (?)…….
தடுக்கவில்லை அம்மா.

முதலில் கருத்தரங்கு பிறகுதான் திருமணம்…
தடுக்கவில்லை அம்மா.

சாதியில் ”உயர்ந்ததாக” நம்பிக்கொண்டிருக்கும் ஒருவரை அழைத்து வந்து அபத்தச் சடங்குகள் நடத்த அனுமதியில்லை……
தடுக்கவில்லை அம்மா.

பெண்ணை இழிவுபடுத்தும் ‘தாலி’யையும் கட்டப்போவதில்லை..
ஆனால்….தடுக்காமல் இருக்கவில்லை அம்மா.

எண்ணற்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டவர்தான் எனினும் இதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேயில்லை.

“ஒரு பெண் திருமணமானவள் என்பதற்கான அடையாளம்தான் என்ன?” என்றாள்.

அப்படியானால் அதே அடையாளங்கள் ஆணுக்கு மட்டும் அவசியமில்லையா? என்றேன்.

“வேலையற்றதுகளின் விபரீத எண்ணங்களுக்கு வேலிதானே இந்தத் தாலி?” என்றார்.

காலித்தனம் செய்பவர்கள் கழுத்தையும், காலையும் கவனித்த பிறகே காலித்தனம் செய்கிறார்கள் என்பது கடந்த நூற்றாண்டுச் சிந்தனை. புரியாதவர்கள் வேண்டுமானால் போலீஸ் நிலையப் பதிவேடுகளை புரட்டிப் பார்த்துவிட்டு சொல்லட்டும் என்றேன்.

“பெண்மையை உயர்வுபடுத்தும் இந்த உன்னத பாக்கியத்தை உதாசீனப்படுத்தலாமா நீ?”

இச்சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியாக இருப்பது தாலி கழுத்தில் ஏறுவது. அதே பெண்ணுக்கு Thaali7உச்சகட்ட துக்கமாக இருப்பது தாலி கழுத்தில் இருந்து இறங்குவது. எனக்குத் துணைவியாகிறவருக்கு இத்தகைய உச்சகட்ட ‘மகிழ்ச்சி’யும் தேவையில்லை. அதைவிட அதி உச்சகட்ட ‘துயரமும்’ தேவையில்லை.

அது என்னை இழிவுபடுத்துவதாக நினைத்து ஏற்றுக்கொள்ள மறுக்கவில்லை.
அது பெண்ணை இழிவுபடுத்துவதால்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்.

இவர் இன்னொருவருடைய மனைவி என்பது பிறரது பார்வைக்கு பிரதான விஷயமெனில்..அதைப்போன்றே ஒவ்வொரு ஆணும் இன்னொருவருடைய கணவன் என்பதும் பிரதான விஷயம்தான். தாலி கட்டுவதென்றால் இருவரும் கட்டியாக வேண்டும். நிராகரிப்பதென்றால் இருவரும் நிராகரித்தாக வேண்டும். இறுதிவரைக்கும் ஒப்புக்கொள்ளவேயில்லை அம்மா.

‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ தொடங்கி ‘தாலி பாக்கியம்; வரைக்கும் தமிழ் சினிமாக்காரர்களால் ஓவ்வொரு பெண்ணின் நாடி, நரம்புகளிலும் ஏற்றப்பட்ட நஞ்சல்லவா அது. (இதில் ”கடவுள்” போன்ற Thaali2திரைப்படங்கள் மாபெரும் விதிவிலக்கு.)

உறங்கும் வேளை தவிர மிஞ்சிய பொழுதெல்லாம் இது குறித்தே விவாதங்கள்…வாக்குவாதங்கள்…

வேறு வழியேயில்லை… சிலவற்றிற்கு இங்கே அறுவை சிகிச்சைதான் அரிய மருந்து. காயம் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நோயாளி குணமடைவது குதிரைக் கொம்பாகி விடக்கூடும்.

இப்பெண்ணிழிவிற்கு எதிராக வலுவான வார்த்தைகளை வீசியாக வேண்டிய வேளை வந்துவிட்டதாகவே உணர்ந்தேன்.

வேறு வழியேயில்லை..தைரியத்தைத் துணைக்கழைத்துக் கொண்டு துவங்கினேன். சரி..தாலி கட்டுகிறேன்..ஆனால் அதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி….. கேட்கலாமா?

“கேள்”

அப்பாவைத் தூக்கிக்கொண்டு போகும் போது உனது கழுத்தில் கிடந்த தாலியை அறுத்தார்களே…… எப்படியிருந்தது
உனக்கு? அந்த நிலை இன்னொரு பெண்ணுக்கு வரவேண்டும் என இன்னமும் எண்ணுகிறாயென்றால்..ஒன்றல்ல… இன்னொரு தாலிகூட கட்டத்தயார். யோசித்து உன் முடிவைச் சொல்….எதுவாயினும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினேன்.

மனம் பதைபதைத்தது. அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். ஆயினும் வேறு வழியிருக்கவில்லை.

எங்கள் இருவருக்கும் இடையில் மெளனம் மதர்ப்பாக இருக்கை போட்டுக் கொண்டது.

ஓரிரு நாட்கள் நகர்ந்திருக்கும்.
ஒரு நாள் காலை….”நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்” என்ற அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன்…

”இனி நானும் உன் கட்சி” என்றாள் சிரித்தபடி.

இல்லையில்லை..விடுதலை விரும்பிகளின் கட்சி என்று சொல் என மறுத்தபடி சிரித்தேன்.

எனக்குத் தெரிந்த தோழி ஒருவரிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது… ‘தாலி புனிதம், தாலி ஒரு அடையாளம் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அந்த அடையாளத்தையே எங்கள் பெண்களில் எத்தனை பேர் வெளியில் தெரியும்படி பேட்டு கொள்கிறார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

முடிந்தவரைக்கும் அதனை எந்த அளவிற்கு மூடி மறைக்க முடியுமோ அந்த அளவிற்கு மறைக்கவே விரும்புகிறார்கள். பிற நகைகளின் வடிவங்களையும், வண்ணங்களையும் வெளியில் தெரியும்படி மாட்டிக் கொள்கிறார்களே தவிர தாலியை பளிச்சென்று தெரியும்படி தொங்கவிட்டுக் கொள்வதெல்லாம் தமிழ் சினிமாவில் மட்டும்தான். இன்னும் தெளிவாகச் சொன்னால் பெரும்பாலான பெண்கள் இந்தத் தாலியை விரும்புவதேயில்லை என்பதுதான் உண்மை. Thaali5இதை வெளிப்படையாகச் சொன்னால் எங்கே தங்களை இந்த “சமூகம்” ‘தவறாக’க் கருதிவிடுமோ எனும் அச்சத்தை அச்சாரமாகக் கொண்டே இந்தத் தாலி விளையாட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என்றார் எனது தோழி.

ஆக… பத்து வயதுச் சிறுமிகூட பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகும் இக்காலத்தில் தாலி பாதுகாப்பானது என்பது எப்படி சாத்தியம்?

‘தவறிழைக்கும் நேரத்தில் தாலி உறுத்தும்’ என உளறுவது அந்த இனத்தையே கொச்சைப்படுத்தும் ஒரு விஷயமல்லவா?

மணமானவர் என்பதற்கான அடையாளம் அதுதான் என்றால் அந்த அடையாளம் பெண் இனத்தின் மீது மட்டுமே திணிக்கப்பட்டிருப்பது ஏன்? மணமானவன் என்பதற்கான அடையாளம் ஆணுக்கு எதுவும் இல்லையே ஏன்?

இப்படி…
ஏன்… ஏன்… ஏன்… என எழும் கேள்விகளுக்கு விடிந்தாலும் கிடைக்காது விடைகள் ஆணாதிக்க வெறியர்களிடமிருந்து.

வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருப்பது :

தாலி போன்ற சின்னங்களில் அல்ல.

தகுதியான எண்ணங்களில். Widows

(எனது இக்கட்டுரையைப் பிரசுரித்த “பெண்மணி” மாத இதழுக்கு நன்றி – 1998)

செருப்பால அடிச்சா புடிக்குமா? இல்ல வெளக்குமாத்தால அடிச்சா புடிக்குமா….?

(முந்தைய பதிவினை காண….)

irumbu2

ந்திரிச்சுப் பாத்தா…… பக்கத்து பெட்டுல நம்ம மார்த்தாண்டன் முக்கீட்டு மொணகீட்டு படுத்துகிட்டு இருக்கான்.

“தேவயானி ஸ்டைல்ல செவுரெட்டிக் குதிக்கிறேன்”ன்னு சொல்லி டிச்சுக்குள்ள குதிச்சுருக்கான் மகராசன். நாறிக் கெடந்தவனக் குளிப்பாட்டிக் கொண்டுவந்து இங்க போட்டுட்டுப் போயிருக்குது சனம்.

’என்ன மனித உரிமை…! நம்ம கதி இப்படி ஆகிப்போச்சு……?’ன்னேன்.

எதக் கேட்டாலும் எல்லாத்துக்கும் பதிலா நாக்கத் தொட்டுத் தொட்டுக் காட்டறான். ராத்திரில மட்டும் திடீர் திடீர்ன்னு……

”கலைஞர் வாழ்க…

புரட்சித் தலைவி வாழ்க…

தோப்பனார் வாழ்க…

போர்வாள் வாழ்க…

போர்க் கப்பல் வாழ்க…”ன்னெல்லாம் சத்தம் போடறான்..… ஊசி போட்டுத்தான் படுக்க வெக்க வேண்டியிருக்கு…..

ஊசி போட்டதும்….. ”மதவாதமா..…?” ”ஊழலா….?”ன்னு மொணகிகிட்டே தூங்கீர்றான்.

எங்களப் பாக்கறதுக்கு ஆசுப்பத்திரிக்கு வந்த ஒரே ஜீவன் நம்ம ஜ.நா.கா.ஜம்புதான். வந்ததும் வராததுமா…… ”எப்படியோ எலக்சனுக்குள்ள நீங்க செரியாயிட்டீங்கன்னா கூட்டிட்டுப் போயி ஓட்டப் போட்டுட்டு வந்தர்லாம்…..”ன்னான்.

‘இப்ப நாங்க இருக்குற நெலமைல நாக்குலதான் மை வெக்கோணும். இதுக்கு தேர்தல் கமிசன் அனுமதிக்குமான்னு Nigeria-Electionகேட்டுட்டு வந்துரு……ன்னேன்.

“எவ்வளவு ‘வாங்கினாலும்’ இந்த லொள்ளுக்கு மட்டும் கொறச்சலில்ல….”ன்னான் ஜ.நா.கா.

“சரி இவுங்கதான் இப்படி… மத்தவங்கள்ல யாரும் சரியில்லையா….?”ன்னான்.

“ஜ.நா.கா…! நீ இப்ப இந்தக் காட்சியத்தான பாக்குற…. தேர்தல் முடிவு வந்தப்பறம் பாரு… அந்தக் கண்கொள்ளாக் காட்சிகள.…

தி.மு.க கூட்டணி தோத்துதுன்னா… ‘தி.மு.க.வோட இந்து விரோதப் போக்குதான் எங்க தோல்விக்குக் காரணம்’ன்னு அறிக்கை உடும் பா.ஜ.க……

அ.திமு.க கூட்டணி தோத்துதுன்னா…… ‘கலைஞரையும் என்னையும் பிரிச்சது ஜெயலலிதா செஞ்ச சதி…… என்னையும் வாழப்பாடியையும் சேர்த்தது விதி செஞ்ச சதீ…’ன்னு அறிக்கை உடும் பா.ம.க.

தேர்தல்ல தோத்ததுக்கு என்ன அறிக்கை உடலாம்ன்னு த.மா.க முடிவு பண்றதுக்குள்ள அடுத்த தேர்தலே வந்துரும்……ன்னேன்.

“அதுசரி புண்ணாக்கு…..! இப்ப சாதிக் கட்சிக நெறையா வந்துருச்சுன்னும்……

அது சாதிக் கட்சிக அல்ல….. சாதிக்கின்ற கட்சிகதான்னும்  பேச்சு அடிபடுதே..… இதுல எது சரி…?”ன்னான்.

’சாதி ரீதியா ஒடுக்கப்பட்டவங்க தங்கள தற்காத்துக்கறதுக்கு ஒரு அமைப்பு வேணும்கறதுல தப்பே இல்ல. ஆனா ஊழல் குற்றச்சாட்டுல இருந்து தங்கள தற்காத்துக்கறதுக்காக சாதியக் கேடயமாக்கறதுதான் தப்பு. இப்ப மொளச்சிருக்கிற பல சாதிக் கட்சிக உண்மையிலேயே சாதிய ஒடுக்குமுறைக்கும் ஏற்ற தாழ்வுகளுக்கும் எதிரா குரல் கொடுக்கணும்கிற நோக்கம் இருந்திருந்தா குறைந்த பட்சம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகணும்கிறத ஒரு கோரிக்கையாகவாவது வெச்சிருக்கணும்…. ஆனா அதையெல்லாம் உட்டுட்டு ‘பத்து சீட்டு குடு’, ‘பதினைஞ்சு சீட்டு குடு’ன்னு நிக்கறதப் பாக்கறப்ப இவங்க உண்மையிலேயே சமூக இழிவப் போக்க வந்திருக்காங்களா? இல்ல….. சமூக அழிவக் குடுக்க வந்திருக்காங்களான்னு சந்தேகமா இருக்கு….ன்னேன்.

“சரி இதெல்லாம் கெடக்கட்டும் புண்ணாக்கு……

உண்மையச் சொல்லு…..

இந்த நாட்டுக்கு ரொம்ப ஆபத்து…

‘மதவாதமா…?’

இல்ல ’ஊழலா..?’ அதச் சொல்லு மொதல்ல…”ன்னான்.

அதுவரைக்கும் தூங்கிக்கிட்டு இருந்த மார்த்தாண்டன் திடீர்ன்னு எந்திரிச்சு… “ஜ.நா.க..! உன்ன செருப்பால அடிச்சா புடிக்குமா? இல்ல வெளக்குமாத்தால அடிச்சா புடிக்குமான்….?”னான்.

பயந்து நடுங்கீட்டான் ஜ.நா.கா.

“பயப்படாத அந்த மாதிரிதான் ரெண்டுமே. இவ்வளவு சோகத்துக்கு இடையிலேயும் நம்ம நாட்டுல தமாசுக்கு மட்டும் பஞ்சமேயில்ல….. அராஜகத்தப் பத்தி புரட்சி தலைவி பேசறாங்க…

ஊழலப் பத்தி கலைஞர் பேசறாரு…..

மத சார்பின்மையைப் பத்தி வாஜ்பாய் பேசறாரு……Booth3

சுயமரியாதையைப் பத்தி வீரமணி பேசறாரு…..

போபர்ஸ்ல அடிச்சவன்…… தெகல்காவத் திட்டறான்.

தெகல்காவுல அடிச்சவன்…. போபர்ஸத் திட்டறான்..… மொத்தத்துல நல்ல கூத்துதான் போ…”ங்கறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

ஆஸ்பத்திரிங்கறதையே மறந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டோம். நர்சு வந்து “சத்தம் போடாதீங்க”ன்னு திட்டீட்டுப் போனப்பறம்தான் கொஞ்சம் அமைதியானோம்.

“ஏம்ப்பா இதுதான் பிரச்சனைன்னா…… இவுங்களையெல்லாம் மாத்தீட்டு வேற நல்லவங்க அந்த எடத்துல உக்காந்தா செரியாயிடாதா பிரச்சனை…”ன்னான் ஜ.நா.கா. ஜம்பு.

“யப்பா… ஜம்பு! நம்மள அதிகம் பேச வைக்காதே…. இதெல்லாம் மேலோட்டமான பிரச்சனை…… இப்ப பேசிக்கறாங்களே… ‘ஜெயலலிதா முதல்வர் ஆக முடியுமா… முடியாதா…? கலைஞர் ஆவாரா மாட்டாரா…’ன்னு ஆனா யார் ஜெயிச்சாலும் உண்மையான முதல்வர் யாரு தெரியுமா?”ன்னான் மார்த்தாண்டன்.

”இதென்னய்யா புதுக் கரடி? யாரு ஜெயிக்கிறாங்களோ அவுங்கதானே முதல்வர்…?” ன்னான் ஜனநாயகக் காவலன் ஜம்பு.

“அதுதான் இல்ல… உண்மையான முதலமைச்சர் பெரிய பெரிய பன்னாட்டுக் கம்பெனிகளும்… உலக வங்கியும்தான். இதத் தெரிஞ்சுக்க மொதல்ல.

இருக்கற அரசோட நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துட்டு இருக்குதுக அரசாங்கங்க…”ங்கிறான் ”மனித உரிமை” மார்த்தாண்டன்.

“ஒழுங்கா வேலை செய்யலைன்னா…… தனியார்கிட்ட உடாம வேற என்ன செய்யச் சொல்ற மார்த்தாண்டா…?”ன்னான் ஜ.நா.கா.

“அப்படிப் போடு அருவாள. இந்த அரசாங்கத்தோட வங்கிகளை எல்லாம் நம்பாம வட்டிக்குப் பேராசைப்பட்டு பெனிபிட் கம்பெனிகள்ல போட்டு உட்டாங்களே 1500 கோடி…… அப்பவுமா தெரியல தனியார் நிறுவனங்களோட லட்சணம்…”ன்னான், ‘மனித உரிமை’.

அதைக் கேட்டதும்தான் எரிச்சலாயிட்டுது எனக்கு.

இங்க பாரு மார்த்தாண்டா….! யாரை வேண்ணாலும் குத்தம் சொல்லு கேட்டுக்கறேன்… ஆனா நம்ம பெனிபிட் கம்பெனிக்காரனுகளோட ‘நேர்மைய’ மட்டும்  சந்தேகிக்காதே. அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வந்துரும்…….ன்னேன்.

“அடப்பாவி புண்ணாக்கு! நீ இந்த பெனிபிட் கம்பெனிக் காரனுங்களையா நேர்மைன்னு சொல்றே”ன்னு கேக்குறான் ‘மனித உரிமை’.

’பின்ன என்ன…? அவனுக வசூல் பன்றதுக்கு முன்னாடியே ’நேர்மையா’ எழுதி மாட்டீட்டுத்தானே வசூல் பண்ணுனானுங்க…… நீயே கொண்டு போயி குடுத்துட்டு அவனுகளக் குத்தம் சொல்றியே நியாயமா……?ன்னேன்.

“என்னது……. எழுதி மாட்டீருந்தானுகளா? என்னன்னு?” பதறிப்போயி கேக்கறானுக நம்ம மார்த்தாண்டனும் ஜ.நா.கா.வும்.

ஆமா… பெருசா எழுதி… லேமினேட்டும் வேற பண்ணி வெச்சிருந்தானுகளே……

‘எதைக் கொண்டு வந்தாய்…

நீ அதைக் கொண்டு செல்ல…?

நேற்று உன்னிடம் இருந்தது….

இன்று என்னிடம் இருக்கிறது’ன்னு. அதையும் படிச்சுட்டுப் போயி ஏமாந்தா அதுக்கு அவுங்களா பொறுப்பு…?ன்னேன்.

விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டானுக மறுபடியும்.

 

“சரி கடைசியா என்னதான் சொல்ல வர்றே? அதையாவது சொல்லு…..”ன்னான் ஜ.நா.கா.

இங்க பாரு… நாட்டோட பொருளாதார நெலமையே நாசமாயிட்டு இருக்குது… நாம நல்ல டீத்தூளை ஏத்தி அனுப்பீட்டு டஸ்ட் டீயைக் குடிச்சிகிட்டிருக்கோம்……

அரிசிய ஏற்றுமதி பண்ணீட்டு ஹாலந்துல இருந்து மாட்டுச் சாணிய எறக்குமதி பண்ணிகிட்டிருக்கோம்…..

எளனி குடிக்குறத உட்டுட்டு பெப்சிக்குத் தாவீட்டோம்…..

போடற அண்டர்வேருகூட வெளி நாட்டுதுதான் வேணும்ன்னு ஆயிடுச்சு…
Booth1ஊருல தொழில் செய்யறவனெல்லாம் ஓட்டாண்டி ஆயிட்டான். கொஞ்ச நேரம் முதுகக் காட்டீட்டு உக்காந்தாக்கூட…. ”இந்தப் பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்…..”ன்னு அதுக்குக் கீழ எழுதீட்டுப் போயிடறான்…

இந்த நெலமையே நீடிச்சுதுன்னா… வெறும் கொடியேத்தறதுக்குத்தான் மொதலமைச்சர்-பிரதமர்ங்கிறதும்கூட  மாறி……

”இந்த ஆண்டு சுதந்திர தினத்தை உங்களுக்கு வழங்குபவர்கள்…..”ன்னு கொக்கோக் கோலோக்காரனோ….. பெப்புசிக்காரனோ…… கொடியேத்தீட்டுப் போகப் போறானுக……

இது வெளங்காம… மேலோட்டமா கண்டத எல்லாம் பேசீட்டு சுத்துதுக பலது… புருஞ்சுதான்……?ன்னேன்.

“புண்ணாக்கு, இதுல இவ்வளவு இருக்கா…?”ன்னு வாயப் பொளந்துட்டான் நம்ம ஜ.நா.கா.

ஆனாலும் அவன் ‘அரிப்பு’ விடுமா…..?

“சரி….. எங்கிட்ட மட்டும் சொல்லு… இப்ப உள்ளவங்கள்ல நல்லவங்க யாருமே இல்லையா? அப்படீன்னா….. நீ ஓட்டே போடப்போறதில்லையா?”ன்னான் நைசா காதுக்குள்ள.

’ஒரே ஒரு நல்ல ஆளு இருக்குது. அந்த ஆளக் கூட்டீட்டு வந்தா வேண்ணா ஓட்டுப் போடறேன்…..’ன்னேன்.

“யாரு…… யாரது…… சீக்கிரம் சொல்லு”ன்னு பறக்கறான் ’ஜன நாயகக் காவலன்’.

’நீ முத்து காமிக்ஸ் படிச்சிருக்கியா…?’ன்னேன்.

“ஓ… சின்ன வயசுல பலதடவை படிச்சிருக்கேன்”ன்னான்.

அதுல வருவாரில்ல…… ‘இரும்புக் கை மாயாவீ’ன்னு ஒருத்தர், அவரு வந்தா வேண்ணா பாக்கலாம்…ன்னேன்.

“இந்த வெளையாட்டெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதே…… யோவ்! சுத்தி வளைக்காம சுருக்கமாச் சொல்லு நேரமாகுது……”ன்னான் ஜ.நா.கா.ஜம்பு.

“கோவப்படாத ஜ.நா.கா…! பெரியார் ஒரு தடவ சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது.”

“என்ன?”ன்னான் எரிச்சலோட.

“முட்டாளுக ஓட்டுப் போட்டு அயோக்கியனுக ஆட்சிக்கு வர்றதுதான் தேர்தல்…”ன்னாரு.

“அப்போ…..?”

’நான் மறுபடியும் முட்டாளாக விரும்பல…:ன்னேன்.

”அப்படீன்னா…?”

யாரும் என்னால அயோக்கியனாகறதையும்  நான் விரும்பல……. போதுமா…?

 

Periyar03

 

(நன்றி : குமுதம் 17.05.2001)

சட்டத்தின் முன் அனைவரும் சமமில்லை….


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ

அதுவும் நன்றாகவே நடக்கும்.

                                                                                                                                                                                                – பகவத்கீதை.

முதலில்……

எந்தக் கஞ்சத்தனமும் இல்லாமல் மனதார….. வாயாரப் பாராட்டிவிடுவதே மிகவும் நேர்மையான செயலாக இருக்க முடியும். அதுவும் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை. ஏழு கடல் தாண்டியும். ஏழு மலை தாண்டியும் தனது அதிகாரத்தின் நாவுகளை நீட்டிக் கொண்டிருக்கிற ஒரு பீடத்தின் ஆணி வேரையே அசைத்துக் காட்டியிருக்கிற முதல்வருக்கு வந்தனம் சொல்லி நம்ம கச்சேரியை ஆரம்பிப்பதே முறையானது.

எல்லாம்  முடிந்துவிட்டது. நவம்பர் 12 அதிகாலை சங்கரமடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியாரின் கைது செய்தியைச் சுமந்தவாறேதான் விடிந்தது.

எந்தக் கற்பனைகளுக்கும் எல்லைகளுண்டு. ஈராக் மீதான போரில் அமெரிக்கா தோற்கும் என எண்ணியிருக்கலாம்….

டுவின் டவர்ஸ் தாக்குதலைப் போல வெள்ளை மாளிகையும் தரைமட்டமாவதைப் போல் கற்பனை செய்திருக்கலாம்….

ஆனால் முந்தைய இரவில் நடந்து முடிந்திருந்ததோ நமது கற்பனைக்கும் எட்டாத நிகழ்வு.

யார் நினைத்திருக்க முடியும்?

குடியரசுத் தலைவர்கள்…

பிரதமர்கள்….

தேர்தல் கமிஷ்னர்கள்….

பல உச்சநீதிமன்ற நீதிபதிகள்…sankaran_One

பல உயர் நீதிமன்ற நீதிபதிகள்….

மாநில முதல்வர்கள்….

என அனைவரும் வந்து “அருள்வாக்கு” பெற்றுச் செல்லும் மடத்திற்கு அப்படியொரு “ஆப்பு” வைப்பார் முதல்வர் என்று.

யார்தான் நினைத்திருக்க முடியும்?

அதைவிட ஆச்சர்யம் கலைஞர் முதன்முறையாக எந்த ஒரு….”இருந்தாலும்….” போடாமல் நேரடியாக  பாராட்டி இருப்பது.

(அப்படி எல்லாம் நாம் எழுதிவிட முடியுமா என்ன? இந்த இதழ் அச்சுக்குப் போகிற வேளையில் கலைஞர் பேட்டி அளித்திருக்கிறார்… “சுருதி மாற்றம்” தெரிகிறது அதில்.)

சங்கராச்சாரியாரை ஏற்றி வந்த வாகனம் காஞ்சி மண்ணைத் தொட்டவுடன் காவல்துறையைப் பாராட்டி அதிர்வேட்டுகளும், தாரை தப்பட்டைகளும் ஒலிக்க ஆரம்பிக்க….. நடப்பது கனவா நனவா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டது பொதுசனம்.

ஏன் கைது?

எப்படிக் கைது?

எந்த நிலையில் கைது? என்பது குறித்தெல்லாம் அலசிக் கொண்டிருக்கின்றன “புலனாய்வு” வார இதழ்கள். தமிழகத்தின் ஆளும் கட்சி…. எதிர் கட்சிகள் என சகலரும் ஒரே அணியில் திரண்டு நின்ற காட்சி இதன் முன்னர் யுத்த காலத்தில் கூட கண்டிராத காட்சி.

அ.தி.மு.க.,   தி.மு.க.,   ம.தி.மு.க.,   பா.ம.க.,   காங்கிரஸ்.,   வலது கம்யூனிஸ்ட்., விடுதலைச் சிறுத்தைகள்., மார்க்சீய லெனினிய அமைப்புகள் என சகலரும் சங்கராச்சாரி கைது நடவடிக்கையை வரவேற்றுக் கொண்டிருந்த வேளையில் சில வட இந்தியத் தலைவர்கள் மட்டும் “ஒரு இந்து மதத் தலைவரை இப்படிக் கைது செய்வதா?” என முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

இங்குள்ள பத்திரிகைகளோ சங்கராச்சாரியாரை இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாகவே பிரதிபலிக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தன. சங்கராச்சாரியார்தான் இந்துக்களின் தலைவர் என்றால்… பங்காரு அடிகளார் என்ன இஸ்லாமியர்களின் தலைவரா? மற்ற மடாதிபதிகள் என்ன பெளத்தர்களது தலைவர்களா? உண்மையை ஒளிக்காது சொன்னால்….

காஞ்சி சங்கராச்சாரியார் இந்து மதத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும்தான் தலைவர்.

இதுதான் யதார்த்தமான உண்மை.

அதிலும் ஜீயர்களோ…. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களுக்குள் காஞ்சி சங்கர மடம் கிடையவே கிடையாது என அடித்துச் சத்தியம் செய்து வருகிறார்கள் இன்றைக்கும்.

“மேற்கே    –    துவாரகா

கிழக்கே    –    பூரி ஜெகந்நாதம்

வடக்கே    –      பத்ரிநாத்

தெற்கே     –   சிருங்கேரி

இவை நான்கைத்தான் ஆதிசங்கரர் நிறுவினார். இதில் காஞ்சி மடம் சேரவே சேராது” என்று இன்றும் குரல் கொடுத்துக் கொண்டிருக்க்கிறார்கள். இதனைத் திராவிடர் கழகமோ…. பெரியார் திராவிடர் கழகமோ சொன்னால் “நாஸ்திகர்கள் நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார்கள்” என்று ஒதுக்கித் தள்ளலாம். ஆனால் சொல்பவர்கள் “அனைத்திந்திய பகவத்பாத சிஷ்யர்கள் சபை”. அவர்கள் அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ள நூலின் பெயர்தான் : “தக்ஷ்ணாம்நாய பீடம் சிருங்கேரியா? காஞ்சியா?” என்பது.

சரி… எந்த மடம் ஒரிஜினல்….? அல்லது டூப்ளீகேட் என்பதெல்லாம் நமது பிரச்சனைகளன்று. ஆனால்…. ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டது அறிந்தவுடன் தமிழக மக்கள் ஏன் பொங்கி எழவில்லை?  சாலை மறியல்களிலும், கடையடைப்புகளிலும் தன்னிச்சையாகக் களத்தில் குதிக்கவில்லை?  அறித்த “பாரத் பந்த்”துக்கு தமிழகத்தின் ஒரு குக் கிராமம் கூட செவி சாய்க்கவில்லையே ஏன்?

ஏதேனும் அரசியல் கட்சித்தலைவர் கைது செய்யப்பட்டால்கூட பல்வேறு விதங்களில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற மக்கள்திரள் மெளனமாக இருந்ததற்கு என்ன அர்த்தம்?

ஆனால் மக்களது மெளனத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

அது : மடம் மக்களை எப்படிப் பார்த்ததோ மக்களும் அப்படியே மடத்தைப் பார்த்தனர் என்பதுதான்.

காஞ்சி சங்கராச்சாரி அரசியலில் மட்டும் மூக்கை நுழைத்து எரிச்சலைக் கொட்டிக் கொள்ளவில்லை….. தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆன்மீகத்திலும் மூக்கை நுழைத்து பக்தர்களது எரிச்சலுக்கு ஆளானார் என்பதுதான் உண்மை.

பழனியில் மூலவரின் சிலையை மறைத்தபடி பஞ்சலோக விக்ரகத்தை வைத்தது பக்தர்களது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியதோடு பல்வேறு போராட்டங்களுக்கும்  இட்டுச் சென்றது. திருப்பதி கோயிலின் உள்விவகாரங்களில் Kanchi-shankaracharyaமூக்கை நுழைத்தது வைணவர்களது கோபத்திற்கும் கண்டனத்திற்கும் கொண்டு சென்றது…… கரூர் போன்ற ஊர்களில் தமிழ் குடமுழுக்குக்கு முட்டுக்கட்டைகள் போட்டது….. தமிழ் பேசும் மக்களில் ஒரு பிரிவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

போதாக்குறைக்கு…. “சுத்தமே இல்லாம….. கூட்டம் கூட்டமா கோயிலுக்குள்ளே வர்றா…..” என்று ‘அருள்வாக்கை’  ‘அருளியது’ உழைக்கின்ற எண்ணற்ற பிற்படுத்தப்பட்டோரையும், தலித்துகளையும் கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு  சென்றது.   வேலைக்குப்   போகும்    பெண்கள்    குறித்த        இந்த (ஆ) சாமியின் ”கண்டுபிடிப்பும்”…..  விதவைகள் குறித்த “திருவாசகங்களும்”…… பெண்களைக் காறிஉமிழ வைத்தன.

இன்றைக்கு என்னடாவென்றால்….. நமது அம்பேத்கருக்குப் போட்டியாக இந்த மனிதரைக்(?) கொண்டுவந்து விடுவார்கள் போலிருக்கிறது.

“தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டார்….”

“சாதி ஒழிப்புக்குச் சண்டை போட்டார்….”

என்றெல்லாம் ஒருசிலர் உளறுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

“இம்மாமனிதரை” 1987 இல் தலைக்காவிரியில் “கண்டுபிடித்து” மீட்டு வந்த போதும் இதே கதையைத்தான் அளந்தன ஒரு சில பத்திரிகைகள் என்பதுதான் நாம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அவர்களது கட்டுக்கதைகளின்படி பார்த்தால்….. “தீண்டாமை ஒழிப்புப் பணி”யில் அன்றைக்கு ஜெயேந்திரர் ஈடுபட்டது பெரியவர் சந்திரசேகரேந்திரருக்கு எதிராக.

இவை எல்லாவற்றையும் தாண்டி இன்று அனைவர் முன்பும் எழுந்திருக்கின்ற ஒரே கேள்வி :

சட்டத்தின் முன் அனைவரும் சமமா?  சமமில்லையா? என்பதுதான்.

சட்டத்தின்  முன் அனைவரும் சமம்தான் என்று நீங்களும் நானும் கரடியாய்க் கத்தி என்ன பயன்? ஜேயேந்திரரின் குருநாதர் சந்திரசேகரேந்திரர் அப்படிச் சொல்ல வேண்டுமே….?

ராஜாவுக்கு பிராம்மணனைத் தண்டிக்க மட்டும் அதிக ஜூரிக்ஸ்டிக்ஸன் கொடுக்கப்படவில்லை…. பிராம்மணனுக்கு  தரும் தண்டனை கடுமை குறைவாகவே இருக்கும்.  இதைப் பார்க்கிறபோது  Equlity before Law           சட்டத்திற்கு முன் சமத்துவம் இல்லாமல்….. சலுகையே தரக்கூடாத ஒரு வியத்தில் சலுகை தந்து அநியாயம் செய்திருப்பதாகத் தோன்றலாம்.

ஆனாலும் இதன் காரணத்தைப் புரிந்து கொண்டால் இதிலே அநியாய பக்க்ஷாதாபமில்லை என்று Sankaran_perusuதெரியும்.

குற்றவாளிக்கு ராஜதண்டனையே பிராயச்சித்தகர்மா என்றேன். பிராமணன் வேத மந்திர ரக்ஷணையையே வாழ்க்கையாகக் கொண்டவன். ஒரு நாள் கூட அவனை விட்டு இந்த வாழ்க்கை ஆச்சாரம் போகப்பிடாது. அப்படிப் போனால் அது தேச ஷேமத்துக்குக் கெடுதல். ஜெயிலில் போட்டால் அவன் எப்படி தன் ஆச்சாரங்களுக்குப் பங்கமில்லாமல் மந்திர ரக்க்ஷணை பண்ண முடியும்? அல்லது கண்ணை வாங்கி…. காலை வாங்கி அவனை தண்டித்தால் அப்போதும் அவனால் ஆகிற வேதரக்ஷ்ணம் அல்லவா கெட்டுப் போகும்? வேத தர்மம் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் ராஜாங்கம் இருப்பதே…..” என்கிறார் “மகா பெரியவர்” தனது ‘தெய்வத்தின் குரல்’ நூலின் மூன்றாம் பகுதியில்.

ஆக…. மற்றவர்கள் தவறு செய்தால் இ.பி.கோ. படி  “உள்ளே” போக வேண்டியது.

ப்ப்ப்ப்ப்ப்ராமணன் தவறு செய்தால் மனு தர்மத்தின் 379 சுலோகப்படி தலை மயிரில் கொஞ்சம் சிரைத்து விட்டுவிட்டால் (முண்டனம்) போதுமானது.

மொத்தத்தில் ஒரு தரப்புக்கு சிகைச்சேதம்.

இன்னொரு தரப்புக்கோ சிரச்சேதம்.

இத்தகைய சமூக இழிவுகளுக்கெல்லாம் எதிராகக் கிளர்ந்து எழுந்தவர்கள்தாம் சித்தர்கள்…… ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என மனித குலத்துக்காக தங்களை உருக்கிக் கொண்ட வள்ளலார்கள்.

மனு தர்மமா?  மனித தர்மமா? என்கிற கேள்வி மேலெழும் வேளையிலெல்லாம் தமிழ் மக்கள் மனித தர்மத்தையே உயர்த்திப் பிடிப்பார்கள் என்பதற்கு கண்முன்னே கண்ட சாட்சிதான் ஜெயேந்திரர் கைதுக்கு அவர்கள் காட்டிய மெளனம்.

தமிழக முதல்வரது கைது நடவடிக்கையின் மூலம் விழுந்திருக்கும் அடி மனுதர்ம எண்ணத்தின் மேல் விழுந்த அடி.

சிறையில் முதல் வகுப்புக் கொடுங்கோ….”

 

பூஜை புனஸ்காரங்களுக்குப் புஷ்பங்கள் கொடுங்கோ

 

ராகுகாலம் முடிந்து தீர்ப்புக் கொடுங்கோ…..”

என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் கோரிக்கை மேல் கோரிக்கையாக வைத்துக் கொண்டே போவதைப் பார்க்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது….

எங்கே நாளைக்கு குற்றப்பத்திரிக்கையையும் “சமஸ்கிருதத்தில் கொடுங்கோ….” என்று சொல்லிவிடுவாரோ என்று.

வாழ்க  “ஜனநாயகம்”.

(நன்றி : புதிய பார்வை 1-12-2004)

“சோ”பா சக்தி….

போப் ஆக நினைப்பவன் புரட்சி செய்ய மாட்டான்
புரட்சி செய்ய நினைப்பவன் போப் ஆக மாட்டான்

நண்பன் மகேஷ் பரிசாகக் கொடுத்திருந்த அந்த நூலை மீண்டும் ஒரு முறை எடுத்து வாசித்தேன். எத்தனை முறை வாசித்தாலும் சலிப்புத் தட்டாத சுவாரசியமான நடையும் விறுவிறுப்பான ஓட்டமும், வரிகளுக்கும் ஊடாக ஓடுகிற மானுட நேயமும் அனிதா பிரதாப்புக்கே சொந்தமானவை. அப்படி அநேகமுறை படித்த புத்தகம்தான் ‘Island of Blood’.

தனது மகன் சுபின் பிறப்பிலிருந்து தொடங்கும் நூல் மெள்ள வளர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணித்து ஈழத்தின் கானகங்களில் விரிவடைகிறது. எண்பதுகளின் பிற்பகுதியில் அவரது ஈழம் நோக்கிய பயணமும் அதில் அவர் சந்தித்த அபாயகரமான சிக்கல்களும், பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புகளும் நம்மை ஆச்சர்யங்களின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கின்றன.

ஈழத்தில் “அமைதி”ப்படையின் வருகைக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த அவரது பயணங்கள், போராளிகளது பண்பும் கண்ணியமும் மிக்க நடவடிக்கைகள் என அவர் விவரித்துக் கொண்டே போகும்போது நாமும் அவருடனேயே பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது. தமிழே தகிடுதத்தமான என்னைப் போன்ற ஜென்மங்களுக்குக்கூட எளிதில் புரியக்கூடிய ஆங்கில நடை. அவரது ஆப்கானிஸ்தான் பயணமும்…… பதற்றம் பற்றிக் கொண்ட நாட்களில் பாபர் மசூதியைச் சுற்றிய செய்திகளும்…… அவரது சுறுசுறுப்பைக் கண்டு வியக்க வைக்கிறது.

பொதுவாக ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் பாவங்கள் எல்லாம் செய்து முடித்த பிறகுதான் புண்ணியத்தலங்களை நோக்கிப் பயணப்படுவார்கள். ஆனால் நம்மைப் போன்றவர்கள் எதிலும் தலைகீழ்தானே. அப்படித்தான் ‘கொரில்லா’ விஷயத்திலும் நடந்தது. அனிதாபிரதாபுடைய நூலைப் படித்த பிறகுதான் ஷோபா சக்தியுடையதைப் படிக்க நேர்ந்தது. இலக்கிய இதழ்களில் இருந்து வணிக இதழ்கள் வரைக்கும் அதற்குக் கொடுத்த சிலாகிப்புகள் என்ன……? விமர்சன விழாக்கள் என்ன……? போதாக்குறைக்கு எந்தப் புண்ணியவானோ நம்ம ரஜினி ‘சாரு’க்கு வேறு அதைப் பரிசாகக் கொடுத்த செய்தியையும் படிக்க நேரிட்டது. (காவிரி நீர்ப்பங்கீடு குறித்து அவர் விடுத்த ‘தெளிவான’ அறிக்கைக்கும் இந்த நூல் வாசிப்பிற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது என நம்புவோமாக…)

26.12.1967ல் பிறக்கும் கதையின் நாயகன் ரொக்கிராஜ் என்கிற யாகோப்பு அந்தோணிதாசன் ஆற அமர யோசித்து வீட்டில் உட்கார்ந்து விருந்துண்டுவிட்டு வெற்றிலைப்பாக்குப் போட்ட பிறகு பதினெட்டாவது வயதில் இயக்கத்தில் சேருகிறார். போகும்போது போதாக்குறைக்கு “எங்களுக்குக் கெதியான தமிழீழம் கிடைக்க அந்தோணியாரே உதவி செய்யும்” என அந்தோணியாருக்கு ஒரு அப்ளிகேசன் போட்டுவிட்டுப் போகிறார்.

உலகையே குலுக்கிய äலைப் படுகொலை ரொக்கிராஜை உலுக்குவதில்லை. வயது வந்தோர் வாக்குரிமைப்படி ஆயுதப் போராட்டத்தில் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் ரொக்கிராஜுக்குப் போன இடத்திலும் கேட்டது கிடைப்பதில்லை. இயக்கப் பெயராக இவர் ஒன்றுக்கு ஆசைப்பட வேறு பெயர் வைக்கப்படுகிறது. இயக்கப் பணிகளுக்காக ஷோபசக்தி… மன்னிக்க… ரொக்கிராஜ் வெவ்வேறு ஊர்களை யோசிக்க… இயக்கம் அவரது சொந்த ஊரான குஞ்சன்வயலுக்கே அவரை அனுப்பி வைக்கிறது. ரொக்கிராஜ், சஞ்சய் ஆகப் பெயர் மாற்றம் பெற்ற பிறகு பாதுகாப்புப் பணிக்காகக் குஞ்சன்வயல் அனுப்பப்பட… சஞ்சயின் அப்பா அநேக சிரமங்களைக் கொடுக்கிறார். குமுதினி என்கிற படகில் பயணப்படும் அப்பாவி மக்கள் ஐம்பது பேரைத் துண்டுதுண்டாக வெட்டிப் போடுகிறது சிங்களப் கடற்படை. இயக்கம் பதிலடி தர கடற்படைக்குப் பலத்த சேதம்.

guerilla1.jpg

‘எத்தினி நேவி முடிஞ்சிருப்பாங்கள் என ரொக்கிராஜ் (எ) சஞ்சய் கேட்க… ‘கிட்டத் தட்ட கணக்குச் சரியா வந்திருக்கும்’  எனக் ‘குரூரமாக’ச் சொல்கிறார் பொறுப்பாளர் ஒஷீலா. கணக்குக் கேட்டவரே இது கணக்குப் பார்க்கிற காரியமில்லை எனக் கதைக்கிறார். ஒரு பொழுதில் கடற்கரையில் மணல் அள்ளும் டிராக்டரை மக்கள் மடக்கிப் பிடிக்க அந்தப் பகுதிப்பொறுப்பில் இருந்த ரொக்கிராஜும் மற்றொருவரும் மணல் திருடர்களோடு மோத… இயக்கத் தலைமைக்கும் மணல் திருடர்களுக்குமே தொடர்பு இருப்பதாகத் தெரிய வர… அதுவும் அத்திருடர்கள் “இயக்கத்துக்கு லட்ச லட்சமாகக் குடுக்கிற ஆக்கள்”  என்பது தெரியாமல் கைவைத்து விட்ட ரொக்கிராஜுக்குப் பிடிக்கிறது ‘சனி’. பிடித்துக் கொண்டுபோய் சித்ரவதை செய்கிறார்கள். இதற்கிடையில் புதைத்து வைத்த சிலிண்டர் ஒன்றை ரொக்கிராஜின் அப்பனே லவட்டிக் கொண்டு போக திருட்டுப் பழி வேறு.

‘மீசைகூட சரிவர அரும்பாத பொடியன்களும்’……,
‘பால்குடிகளும்’……,
‘புதுப்பொடியளும்’…… இந்த விருமாண்டி மீசை வைத்த ரொக்கிராஜைப் பாடாய்படுத்துகிறார்கள். ஒருவழியாக விடுவிக்கப்படும் ரொக்கிராஜ் சிறீலங்கா ராணுவம், …… ‘அமைதிப்படை’…… எனப் பலராலும் பந்தாடப்பட்டு பிரான்சுக்குப் பறக்கிறார். அங்கு வதியிட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்திலிருந்து தொடங்குவதுதான் மேலே சொன்ன விடயங்கள். தான் பட்ட இத்தனை துயரங்களையும்…… இயக்கத்தின் உள்ளே உள்ள சனநாயகம் அற்ற தன்மைகளையும்…… மணல் திருடர்களோடு கைகோர்த்து வலம் வரும் பொறுப்பாளர்களும்…… பற்றி விரிவாகக் கடிதம் ஒன்று எழுதி………
‘மணிக்கணக்கா, நாள் கணக்கா, இப்ப வருசக்கணக்கா தன்ர சேர்ட் பொக்கற்றுக்குள்ள ஒரு கடிதம் கொண்டு திரியிறான். முதலில் தெரிஞ்ச அறிஞ்ச ஆக்களுக்கு மட்டும்தான் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி வைச்சிருக்கிறதாய்ச் சொல்லிக்கொண்டு திரிஞ்சவன், இப்பப் பார்க்கிற ஆக்கள் எல்லோருக்கும் அதைச் சொல்லித் திரியறான்’  இப்படி தன் ‘தலைவருக்கு’ (?) கடிதம் எழுதி சட்டைப் பைக்குள் வைத்திருக்கும் ரொக்கிராஜ் தன் தலைவரின் அஞ்சல் முகவரியோ, ஈமெயில் முகவரியோ எதுவும் கிடைக்காமல் தேடிச் சலித்து, பரிதவித்துப் போய் வேறு ஏதும் வழி கிடைக்காமல் பிரான்சிலிருந்து பறந்து வந்து தமிழகத்தில் இறங்கி புத்தாநத்தத்தில் உள்ள கருப்âர் சாலைக்குப் போய் ‘அடையாளம்’ சாதிக்கின் கதவைத் தட்ட அவர், “இந்தக் கடுதாசி பாணியெல்லாம் வேண்டாம் புத்தகமாகவே போட்டுரலாம். அப்பத்தான் தலைவர் பார்வைக்குப்போகும்”  என சொன்னதன் விளைவே இந்த ‘கொரில்லா’.

ஈழத்து ‘கொரில்லா’ குறித்து தமிழகத்துக் ‘கழுதையின்’ சில சந்தேகங்கள்:

1. ‘பிணத்தில் கூட கணக்குப் பார்க்கிறவர்கள்’……,
‘மணல் திருடர்களோடு தொடர்புள்ளவர்கள்’……,
‘உட்கட்சி சனநாயகத்திற்கே அர்த்தம் தெரியாதவர்கள்’…… என ஷோபாசக்தி சரமாரியாகப் ‘புகழ்ந்து’ தள்ளும் அந்த இயக்கமோ அல்லது அவர்களை ஆதரிப்பவர்களோ நெத்தியடியாய் பதில் சொல்லும் சனநாயகச் சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா?

2. இயக்கம் கொள்கை ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சரியான திசையில்தான் செல்கிறது என்று பதில் அளித்தால் அவர்கள் தமிழகத்தின் எந்த மாவட்ட சிறையில் ‘வதியிடம்’  கோரி விண்ணப்பிக்க வேண்டி வரும்?

3. இந்த நூலை வரைவேற்றவர்கள், அச்சிட்டவர்கள், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய ஒரு சில வணிகப் பத்திரிக்கை ஆகியோரில் ஓரிருவரைத் தவிர ஏனையோருக்கு ஈழப் போராட்டத்தில் எத்தனை பங்களிப்பு இருக்கிறது?

4. நூற்றுக்கு நூறு சதவீதம் அக்மார்க் முத்திரையோடு சிறுபிழை கூட இன்றி ‘தேசிய இன விடுதலைப் போராட்டம்’ உலகில் எந்த மூலையில் சாத்தியப்பட்டிருக்கிறது?

5. ரொக்கிராஜின் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்கிற அதேவேளையில் அவர் விமர்சிக்கும் இயக்கத்தைச் சரியானதுதான் எனச் சொல்பவரது மனித உரிமைக்கு யார் பொறுப்பு?

6. சிறீலங்கா அரசும்…… ‘சோ’க்களும்…… இந்த நூலை எந்தவிதத்தில் எதிர் கொள்வார்கள்?

7. 1970களிலேயே மலையகத்தின் சிவனு லட்சுமணன் தொடங்கி இன்றைய கணம் வரை முப்படைத் தாக்குதல்களிலும் இன்ன பிற ஆக்கிரமிப்புகளிலும் தங்கள் இன்னுயிரை மண்ணுக்கு உரமாக்கி விட்டுப் போன பல்லாயிரக்கணக்கான போராளிகளிலும் மக்களிலும் எத்தனைப் பேருக்கு இப்படி தமது வலிகளைப் புத்தகமாக்கும் பாக்கியம் வாய்த்திருக்கிறது?

இப்படிப் பல பாழாய்ப்போன கேள்விகள் மண்டைக்குள் குடைந்தபடி இருந்தாலும் ரொக்கிராஜின் தடுமாற்றங்களை மீண்டும் ஒரு முறை அசை போட்டுப் பார்க்கிறேன்.

சங்கிலியன் என்று பெயர் வைப்பதா…?
அல்லது அராபத் என்று பெயர் வைப்பதா…?
அல்லது நேதாஜி என்று பெயர் வைப்பதா…?

Pலொட் இயக்கத்தின் ‘வங்கம் தந்த பாடம்’ படித்த பிறகு ‘முஜிபுர்’ என்று பெயர் வைப்பதா…?
தனிநாயகம் என்று பெயர் வைப்பதா…?

என இயக்கத்தில் நுழையும்போதும் – நுழைந்த பின்னரும் அவருக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்.

சரி… எல்லாம் கிடக்கட்டும்.

ஆனால்…
தப்பித்தவறி அவர் தமிழகத்தின் அரசியலில் நுழைந்திருந்தால் என்ன பெயர் வைத்திருப்பார் என யோசித்துப் பார்த்தேன்…

வாழப்பாடி ராமமூர்த்தி…?

நன்றி : புதிய பார்வை (1.9.2004)

மதமென்னும் பேய்…

‘Religion is regarded by the Common People as True,
by Wise as False and by Rulers as Useful’
                                                      – Seneca

பிறப்பால் நான் ஒரு கிருஸ்துவன்’ என்றார்
எதிரிலிருந்த நண்பர்.

அவரது அறியாமையை நினைத்துப் பரிதாபமாக
இருந்தது எனக்கு.

குழந்தை குழந்தையாகத்தான் பிறக்கிறது.
இங்கு எவரும் பிறக்கும்போதே ‘இந்து’வாகவும்,
‘இசுலாமிய’ராகவும்,
‘கிருஸ்தவ’ராகவும் பிறப்பதில்லை.

நான் பிறக்கும்போது என்னுடைய அப்பா
‘காந்தி காமராஜ் தேசியக் காங்கிரசில்’
(குமரி அனந்தனின் பழைய கட்சி) இருந்தார்
என்பதற்காக நான் பிறக்கும்போதே
கா.கா.தே.கா.வாகத்தான் பிறந்தேன் என்பது
எவ்வளவுக்கெவ்வளவு அபத்தமோ
அவ்வளவுக்கவ்வளவு அபத்தம்
நான் பிறப்பால் இந்துவென்பதும்,
முஸ்லிம் என்பதும்
இன்னபிற இத்யாதிகளென்பதும்.

தமிழக அரசின் கட்டாய
மதமாற்றத் தடைச் சட்டப்படி
உண்மையில் ‘கம்பி எண்ண’
வைக்கப்பட வேண்டியவர்கள்
உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள்தான்.

எந்தவித தத்துவப் பின்னணிகளும்
அரசியல் சித்தாந்தங்களும்
மத எண்ணங்களும இன்றிதான்
ஒரு உயிர் உதிக்கிறது இந்த மண்ணின் மடியில்.

உண்மையான கட்டாய மதத் திணிப்பு
மழலைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது.
அதுவும் பெற்றோர்களால்.

மதம் தானாய் மாறுவது –
மாற்றப்படுவது –
மாறாமலே இருப்பது என்கின்ற
விஷயங்களையும் தாண்டி
நாம் கவனிக்க வேண்டியவை சிலதும் இருக்கின்றன.

அதுதான்:
மதத்தைத் தேர்வு செய்யும் உரிமை (Right to Choose)

எப்படி இந்த நாட்டின் ‘இறையாண்மையையே’
காப்பாற்றுவதற்கு
ஒருவருக்கு வயது வரம்பு
நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ…
அப்படி மதத்தைத் தேர்வு செய்வதற்கும்
வயது வரம்பு தேவை
என்பது எனது கருத்து.

இந்த நாட்டில் இல்லாத ‘ஜனநாயகத்தையே’
தூக்கி நிறுத்துவதற்கு
எப்படி 18 வயது நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ
அதைப் போன்றே…
இல்லாத மதங்களை தீர்மானிப்பதற்கும்
வயது தேவை என்பதுதான் சரியானது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
அரசியல் கட்சிகளது தேர்தல் அறிக்கைகளையோ
எந்தக் கர்மத்தையோ ‘அலசிப்பார்த்து’
ஓட்டுப் போடுவதைப் போல

சகல மதங்களின் யோக்யதைகளையும்
உரசிப் பார்த்து தீர்மானிப்பதே
உத்தமமான விஷயம்.

இதில் கட்சிகளும் மதங்களும்
நம்மை முடிந்தளவிற்கு மடையர்களாக்குகின்றன.

இந்தத் ‘தேர்ந்தெடுக்கும்’ விளையாட்டில் சலிப்புற்று
‘தேர்தல் பாதை திருடர் பாதை’
என்று நிராகரிப்பதைப் போல
‘எம்மதமும் சம்மதமில்லை’
எனத் தீர்மானிக்கும் உரிமையும் இதில் உள்ளடக்கம்.

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்…

‘மதம் மக்களுக்கு அபின்’ என்ற மார்க்சும்…

‘மதம் மக்களுக்கு விஷம்’ என்ற ஈ.வே.ராமசாமியும்…

‘நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே…’
என்ற வள்ளலாரும்…

இன்று இருந்திருந்தால்…

‘பாகிஸ்தானின் கைக்கூலி’யாகவோ…
‘மதத்துரோகியாகவோ சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.

அல்லது ‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு’
ஊறு விளைவித்ததாகக் கூறி
தடாவிலோ… பொடாவிலோ
உள்ளே தள்ளப்பட்டிருப்பார்கள்.

மொத்தத்தில் எல்லா மதங்களுமே
அம்பலப்பட்டு நிற்பது
பெண்கள் விஷயத்தில்தான்.

என்னதான் மதங்கள்
சமத்துவம் – சகோதரத்துவம் – அன்பு
என ஓலமிட்டாலும் பெண்களைப் பொறுத்தவரை
இவர்கள் எண்ணம் –
செயல் எல்லாம் ஒன்றுதான்.

இவைகள் அனைத்தும் ஒரே குரலில்
ஆணாதிக்கத்தையே பறைசாற்றுகின்றன
என்பதுதான் உண்மை.

என்னதான் பைபிளைக் கரைத்துக் குடித்தாலும்
ஒரு பெண் போப்பாக முடியாது.

என்னதான் நான்கு வேதமோ
நாற்பத்தேழு மந்திரமோ
நுனி நாக்கில் வைத்திருந்தாலும்
ஒரு பெண் மடாதிபதியாகவோ,
சங்கராச்சாரியாகவோ முடியாது.

என்னதான்
குர்ரானைத் தலைகீழாக ஒப்பித்தாலும்
ஒரு பெண் கலீபாவாக ஆக முடியாது.

ஏனெனில்,
மனித குல விடுதலைக்கான நெடிய போராட்டத்தில்
இம்மதங்கள் என்றுமே
பெண்களுக்கு எதிராகவே அணிவகுத்திருக்கின்றன.
மதங்களைச் சுற்றி என்னதான்
‘தத்துவப்’ புணுகு பூசினாலும்
நெற்றி அடியாய் என்னைச் சுற்றிச்சுற்றி
வருபவை இரண்டே இரண்டு வரிகள் தான்.

‘மதத்தை மிதி.
மனிதனை மதி’

என்பதே அது.

மதவாதிகள் மனிதனைக் கொன்றுவிட்டு
கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுளோ மதக் கலவரங்களில்
தான் கொல்லப்படாமலிருப்பதற்காக
நாத்திகர்களது கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.

பாவம் கடவுள்.

நன்றி: தீராநதி 2002

‘உ’ போடு…..


‘Suspect Everybody’ – சேகுவேரா

‘அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரே
நீங்க தடுக்கவில்லையா?’ என்றேன் நண்பரிடம்.

‘அது அவருடைய நம்பிக்கை.
நான் மற்றவர்களுடைய நம்பிக்கைகளில்
குறுக்கிடுவதில்லை’ என்றார் வெகு அமைதியாக.

அடப்பாவிகளா…
எது நம்பிக்கை?
எது மூட நம்பிக்கை?
எது தன்னம்பிக்கை? என்று யோசிக்க ஆரம்பித்தால் தலை சுற்றுகிறது.

முதலில் ‘தன்னம்பிக்கை’ப் பிரியர்களைப் பார்ப்போம்.
இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.

‘மேலதிகாரியைத் திருப்திபடுத்துவது எப்படி?’,
‘நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்?’,
‘கொழுந்தியாளைக் கோணாமல் பார்த்துக் கொள்வது எவ்வாறு?
என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள்.

‘பல் விளக்குவது எப்படி?’ என்பதைக் கூட புத்தகத்திலோ,
விளம்பரத்திலோ பார்த்து ஒப்புக்கொள்ளும் மத்தியதர வர்க்கம்தான், இவர்கள் இலக்கு.

மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும்
‘வாழும் கலை’யைச் சொல்லித் தருவதற்குக் கூட
புத்தகம்தான் வேண்டி இருக்கிறது இந்த வர்க்கத்திற்கு.

இந்தத் தன்னம்பிக்கைப் பிரியர்களது
மகா ‘கண்டுபிடிப்பு’தான் ‘செய்யும் தொழிலே தெய்வம்’.

புதை சாக்கடைக்குள் இறங்கி
மலத்துக்கு நடுவே ‘முத்துக்குளித்து’ அடைப்பு நீக்கி
வெளியில் வருபவருக்கும்…
மின் விசிறிக்குக் கீழே கோப்புகளோடு
குறட்டை விட்டுக் கொண்டிருப்பவருக்கும் ஒரே தெய்வம்.
முன்னவர்களுக்கு மட்டும் துர்நாற்றம் வீசும் தெய்வம்.
பின்னவர்களுக்கு ‘சுகந்தம்’ வீசும் தெய்வம்.
ஏனிப்படி…? என்றெல்லாம் கேட்டுத் தொலைக்காதீர்கள்.
அப்புறம் நீங்களெல்லாம் ‘தன்னம்பிக்கை’க்கு எதிரிகள் ஆகி விடுவீர்கள்.

இந்த தன்னம்பிக்கைப் பிரியர்களது ஒரே தாரக மந்திரம்: ‘உ’போடு.
அதென்ன ‘ஓ’வுக்குப் பதிலாக ‘உ’?.

அதுதான்: உண்மை – உழைப்பு – உயர்வு.
இந்த மூன்று ‘உ’வையும் தூக்கிக் கொண்டு
உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.

மக்கள் எவரும் போராட்டம், புரட்சி, போர் என்று போய்விடாமல்
பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற
மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள்,
தமது ‘வெற்றிக்கான படிக்கட்டுகளை’. 
‘நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன்’ என்கிற
ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கியானங்கள்.

இது போதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு
அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து
மறுபடியும் மூன்று ‘உ’க்களோடு ஒரு தலைப்பைப் போட்டு
அச்சடிக்க வேண்டியது தான்.
உழைப்பால் உயர்ந்த உத்தமர்.

சரி இதுகள் இருக்கட்டும் ஒருபுறம்.

இன்று நாம் எதை மூடநம்பிக்கை என்று சொன்னாலும்
முண்டியடித்துக் கொண்டு சண்டைக்கு வருவதற்கென்றே
ஒரு கூட்டம் இருக்கிறது.
இது வேறு வகை.

‘ஆண்கள் பொட்டு வைப்பது மூடநம்பிக்கை’ என்று கலைஞர் ஒருமுறை எடுத்துவிட….

மதத்தின் மனசு நோகாமல் பார்த்துக் கொள்ளும் காவலர்கள் குமுறி எழ…
‘நான் நாத்திகர்களிலேயே நல்ல நாத்திகன்’ என இவர் சொல்ல…

‘நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று எப்படிச் சொல்லலாம்?’ என்று
மீண்டும் எகிறிக் குதிக்க…
அந்த நேரம் பார்த்துத்தானா தேர்தல் வந்து தொலைக்க வேண்டும்?

தான் ‘சீறிய’  ஆசாமிக்கே மூடநம்பிக்கைக் கோட்டாவில் எம்.பி.சீட்டை ஒதுக்கித்தர…
‘கோட்டா’வுக்கு எதிரானவர்கள் அந்த நல்ல நாத்திகரோடு
கூட்டணி வைத்துக் கொண்டு வலம் வர…
மொத்தத்தில் அந்த விளையாட்டு அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.

இரண்டு தரப்பையும் ரசித்தவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்தது:

‘இவர்களது நாத்திகமும் பொய்.
அவர்களது ஆத்திகமும் பொய்
என்பதே மெய்’ என்று.

மதவாதியோ, பகுத்தறிவுவாதியோ
இரு தரப்பும் வசதியாக மறந்துபோன ஒன்று உண்டு.
அதுதான்: கருத்துச் சுதந்திரம்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும்
துணிவற்ற அசடுகளின் கருத்துப் படி…
உலகம் உருண்டை என்கிற விஞ்ஞானத்தைச் சொன்ன
கலிலியோ பழம் கிருஸ்தவர்களது நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

‘பிராம்மணனும் அப்பிராம்மணனும் சமமே’ என்ற புத்தர்
வர்ணாசிரம நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

‘நட்ட கல்லும் பேசுமோ?’ என்று கேட்ட சிவவாக்கியர்
உருவ வழிபாட்டாளர்களின் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

எந்த மார்க்கமோ, எந்த தத்துவமோ, எந்த இயக்கமோ
அதற்குத் தேவை கருத்தைக் கருத்தால் சந்திக்கும் துணிவு.

இல்லாவிடில்…

‘கொலை வாளினை எடடா
மிகும் கொடியோர் செயல் அறவே’ என்றாராம் பாரதிதாசன்.

அப்படியாயின்…

கொடியோரைக் கொடியோர் என்று அழைப்பதுகூட
ஒருவேளை கொடியோரது நம்பிக்கையில் குறுக்கிடுவதாக ஆகிவிடுமோ என்னவோ?

நன்றி: தீராநதி- 2004
 

ஆரிய உதடுகள் உன்னது….

 

தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும்…
இந்திய துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும்…
சனநாயகத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில்
மூன்றாவதோ, நான்காவதோ தூணான பத்திரிக்கைத் துறையின்
‘பிதாமகன்’களில் ஒருவருமான…
அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
சந்திக்கும் பாக்கியம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை.
அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ‘ஆபத்து’ வந்தபோது
தமிழகத்துப் பத்திரிக்கையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில்
பேசும்போது கூட….
இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது
என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது.

சுற்றி வளைப்பானேன்…?
அவர்தான் ‘இந்து’ ராம்.

காரல்மார்க்சுக்கு அடுத்த இத்தகைய மாமேதையைக் குறித்து
அண்மையில் நான் கேள்விப்பட்ட சில செய்திகள்
என்னை அதிர்ச்சியின் விளிம்புக்கே இட்டுச் சென்றன
என எழுதினால் அது பொய்.

மாறாக, மனசுக்குள் போட்டு வைத்திருந்த கணக்கை சரிபார்த்துக் கொள்ளக் கிடைத்த
அரியதொரு வாய்ப்பாக அமைந்தது என்பதுதான் மெய்.

அதில் ஒன்று தான்:
சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்காகக் குரல் கொடுத்து வருபவரும்…
சி.பி.எம்.முடன் காற்றுக்கூட நுழைய இடமின்றி
இறுக்கமான இணைப்பு வைத்திருப்பவரும்…
அதனது எஸ்.எப்.ஐயின் தந்திராலோசனைக் கூட்டங்களில்
தவறாது பங்கேற்கும் தளகர்த்தரும்….
கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளைக்கு இன்னல் நேரும்போதெல்லாம்
களத்தில் குதித்துக் கத்தியைச் சுழற்றுபவருமான…
‘இந்து’ ராம் எதற்காக பலான குற்றச்சாட்டுக்களிலிருந்து
பல்வேறு குற்றச்சாட்டுகள் வரைக்கும் ஆளான
விஜயேந்திரரை ஓடோடிச் சென்று தனது சொந்தக்காரில் அழைத்து வந்தார்? என்பது தான்.

இது குறித்து நமது கேள்விகளெல்லாம் வெகுவெகு எளிதானவை.

தீவிர இடதுசாரி…
சாதி மறுப்பாளர்…
மதச்சார்பின்மையின் மொத்த உருவம்…
என்கிற அளவிற்கு உருவகப்படுத்தப்படும் இந்த ராம்
எதற்காக விஜயேந்திரரை நேரில் சந்தித்து அழைத்து வந்தார்?

அவருக்கும் இவருக்குமான உறவு
வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் முகிழ்த்த உறவா…?
அல்லது அவரும் இவரைப் போல் SFI யின்
அரசியல் வகுப்பெடுக்கும் மார்க்சிய ஆசானா…?

ராம் சார்ந்திருப்பதாகச் சொல்லப்படும் அக்கட்சி
இச்செயலை எவ்விதம் பார்க்கிறது?
(‘இந்து’ ராம் சார்ந்திருக்கும் என்பதைவிடவும்…
இந்து.ராமை சார்ந்திருக்கும்… என்று எழுதத்தான் ஆசை…
ஆனாலும் சந்திரிகாவின் இந்த இனிய நண்பர்,
அமைப்புரீதியாக இதில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? என்பது புரியாத
எண்ணற்ற விக்ரமாதித்தியன்கள் வேதாளங்களின் கேள்விகளுக்கு
விடை தெரியாமல் நம்மைப் போலவே தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சிக்கல்).

திலீபன் மன்றத்தைத் துவக்கியதற்காகவும்…
ஈழத்தில் ‘அமைதி’ப்படையின் அத்துமீறல்களுக்கு எதிராய்
மனிதச் சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டதற்காகவுமே…
அநேகரைக் கட்சியை விட்டுக் கட்டம் கட்டிய காம்ரேடுகள்
இதில் மட்டும் மெளனம் சாதிப்பதின் பின்னணி என்னவாக இருக்கக்கூடும்…?

சரி, இவை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.
நாம் அடுத்த விஷயத்திற்கு வருவோம்.

சுனாமியின் சோகம் இன்னும்கூட மக்களின் மனங்களைவிட்டு அகலாத சூழலில்…

எத்தனை உயிர்கள் பறிபோயிற்று…?
பெற்றோரைத் தொலைத்த மழலைகளின் நிலை என்ன…?
அரசினது நிவாரண பணிகள் மக்களைச் சென்றடைகிறதா இல்லையா…?
தமிழகக் கரையோரங்களில் ஒதுங்கிய உடல்கள் எவ்வளவு…?
அரசினது உதவிகளுமின்றி ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும்
பலியானவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபடுகின்றன…? என்கிற கவலைகளை காட்டிலும்…….

“கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே”

என்கிற கதையாய் சிறீ லங்காவின்  ‘THE ISLAND’ பத்திரிக்கை கிளப்பிய புரளியை
ஆதாரமாக்கி ‘Is Prabhakaran Dead or Alive?’ என
சனவரி 9ஆம் தேதியே முதல் பக்கத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

‘ஏன் இந்த அக்கறை…?
அதிலும் யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எதற்கு…?’ என
பராசக்தி பாணியில்தான் நாம் ராமையும்…
1878லிருந்து  ‘India’s National News Paper’ ஆக
இருந்து கொண்டிருக்கும் ‘இந்து’ நாளிதழினையும் நோக்கி
நாம் வினவவேண்டி வருகிறது.
போதாக்குறைக்கு அடுத்தநாளே இதற்கென ஒரு தலையங்கம் வேறு.

இப்படி எண்பதுகளின் இறுதியில்
சங்கரராமனை ‘மோட்சத்திற்கு’ அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் நபர்
பத்து பதினைந்து நாட்களுக்கும் மேலாய் ‘காணாமல்’ போயிருந்தபோது
‘Is Acharya dead or Alive?’ என்று கட்டம் கட்டிப்போட இவர்களுக்குத் தோன்றவில்லையே…
அதற்கு என்ன காரணம்?

அவரோடும் அவரது இயக்கத்தோடும் ஆயிரம் முரண்பாடுகள் அநேகருக்கு இருக்கலாம்.
ஆனால் தமிழக அரசு ஒரு நடவடிக்கையில் இறங்கினால் Freedom of Expression
எனத் தொண்டை கிழியக் கத்துகிற ஒரு நாளிதழ்…
புரளிகளை ஆதாரங்களாகவும்
ஆதாரங்களை புரளிகளாகவும் பார்க்கிற போக்கிற்கு என்ன பெயர்?

“பத்திரிகா தர்மம்…?”

“ஆங்கிலப் பத்திரிக்கை ஆரம்பிக்க சொல்கிறீர்களே அய்யா…
செய்திகளுக்கு எங்கே போவது?” என ஒருமுறை பெரியாரிடம் கேட்டார்களாம்.
அதற்கு அவர், ‘செய்திக்கா பஞ்சம்…? இன்னத்த ‘இந்து’ பேப்பர் வாங்கீட்டு வா…
அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் தப்புன்னு எழுது…
எதத் தப்புன்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் சரின்னு எழுது…’ என்றாராம்.

இந்த “மெளண்ட்ரோடு மகாவிஷ்ணு” விஷயத்தில் அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது.

எது எப்படி இருப்பினும்
நம்முன் எழும் அடிப்படைக் கேள்வி ஒன்றே ஒன்றுதான்:

அது சரி…
ஒரே ஊரில் எதற்காக இரண்டு இலங்கைத் தூதரகங்கள்…?

நன்றி : புதிய பார்வை                     15.2.2005

ஆச்சி…

1aaachi.jpg

சொக்கலிங்கம்தான் ‘ஆச்சி மெஸ்ஸை’அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போதெல்லாம் முன்பணம் கட்டாமல்
எங்கேயும் சாப்பிட விடமாட்டார்கள்.

தொலைகாட்சியில் கமல்ஹாஸனோ – ரஜினிகாந்த்தோ எழுந்தருளி
‘ஒழுங்காக வருமானவரி கட்டுங்க’ என்றெல்லாம்
தொண்டை கிழியக் கத்தினாலும் கட்டாத ஜாதி நான்.
காரணம் அந்தளவு ‘செம’ வருமானம்.

‘அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க வாங்க’ என்று
ஆச்சியிடம் கூட்டிப்போய் ‘ஆச்சி இவுரு நம்ம நண்பர் பாத்துக்கங்க’ என்று ‘கணக்கு’ ஆரம்பித்து வைத்தவர் சொக்கலிங்கம் தான்.
அதற்கு முன்பு வரைக்கும் சுரேஷ்பாபு – ரமேஷ் இருவரது புண்ணியத்தில் ‘மரணவிலாஸில்’ இரவுச் சாப்பாடு ஒரு வழியாக ஒடிக் கொண்டிருந்தது.

‘வாய்யா… எப்ப வேணும்னாலும் வந்து சாப்பிடு…
நாராயணா! இவுருக்கு எலே எடுத்துப் போடு’ என்றது ஆச்சி.

பரிமாற வந்த பையன் கேட்டான் ‘சாருக்கு எந்த ஊரு?’
‘இதே ஊருதான்’ என்றவனை ஏற இறங்கப் பார்த்தான்.
எனக்கு வீட்டுச் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்கிற
உண்மையை எப்படிச் சொல்ல அவனிடம்?

அது சரி தம்பி… உம் பேரு…? என்றேன்.

‘தடியப்பன்’ என்று பதில் வந்தது.

இப்படி ஒரு பேரா? என்றவனுக்கு…
‘இது எங்க குலதெய்வம் பேரு சார்’ என்றான் பையன்.

அன்றிலிருந்து எனக்கும் நண்பர்களுக்கும் ஆச்சி மெஸ்தான்.
ஆச்சியின் மகன் மகேஷ் அநியாயத்துக்கும் அப்பாவி.
இரவில் புரோட்டாவும் குருமாவுமாய் தின்று தள்ளும்
மேன்சன் வாலாக்களோடு பழகிப் பழகி
மரியாதை தருவதாக நினைத்துக் கொண்டு
‘ஜி, ஜி’ என்பார் மகேஷ்.

எனக்குக் கேட்டதுமே எரிச்சல் வரக்கூடிய
ஒரே வார்த்தை இந்த ‘ஜி’தான்.
தமிழர்களை மரியாதைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு
‘பான்பராக் பார்ட்டிகளிடம்’ கடன் வாங்கிக் கொடுக்கும் வார்த்தை அது.

ஆனாலும் என்ன செய்வது ‘அக்கவுண்டில்’ சாப்பிடுபவன்
இதையெல்லாம் முதலிலேயே கேட்டுவிட முடியுமோ?
‘மகேஷ் என்னெ இப்படிக் கூப்பிடாதீங்க.
பேசாம பேர் சொல்லியே கூப்பிடுங்க’ என்பேன்.

‘அதெப்படி ஜி! அப்படிக் கூப்பிட முடியும்?’ என்பார் மீண்டும்.

நண்பர்கள் பரிவாரங்களோடு அங்கு செல்லும் குடும்ப இஸ்தன்
நானாகத்தான் இருக்கும்.
நாங்கள் போய் கொஞ்ச காலம்வரை
சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
அளவு கிடையாது.

ஆனால் என்னோடு வந்த சோதிபுரம் கு.செயகுமாரால்
ஆச்சி மெஸ்ஸின் சட்டதிட்டங்களையே மாற்ற வேண்டி வந்தது.

சாம்பாருக்கு மூணு முறை சோறு…
ரசத்துக்கு மூணு முறை சோறு…
மோருக்கு மூணு முறை சோறு… என சாப்பாடு வாங்கினால்
அப்புறம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்?

பார்த்துப் பார்த்து சலித்துப் போய்
ஒன்றாம் தேதியிலிருந்து இனி எல்லோருக்கும் ‘அளவு சாப்பாடு’தான்
என போர்டு எழுதித் தொங்கவிட்டு விட்டார்கள்.

கூட வருகிற குண்டு சிவா, சார்லஸ், மொட்டை சிவா எல்லோருக்கும்
பிடித்த ஒரு விளையாட்டுப் பொருள் தடியப்பன் தான்.

‘டேய் தடி இங்க வா… இவுரு யார் தெரியுமா?’ என்பார்கள்
மூக்கு நீட்டமாக இருக்கிற வெங்கட்டை காட்டி…

‘சினிமாவுல எல்லாம் பார்த்திருப்பியே…’ பீடிகை தொடரும்.
பரிமாறுவதை விட்டுவிட்டு முழிக்கத் தொடங்கும் தடியப்பனிடம்
‘இவருதான் நடிகர் ரகுவரனோட தம்பி’ என்பார்கள்.
தடியப்பனோடு சாந்தாராமும் சேர்ந்து கொண்டு
வாயைப் பிளந்து கொண்டு நிற்பார்கள்.

மத்த டேபிள்காரர்கள் கையோடு மண்டையும் காய்ந்து போய் உட்கார்ந்திருப்பார்கள்.

மதுரையிலிருந்து வரும் ‘கு.ப.’ அவர்களிடம் ‘ஆபாவாணனாக’ அவதாரம் எடுப்பான்.
‘அண்ணே! ஒரு ஆட்டோகிராப் வாங்கி குடுங்கண்ணே’
என நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆச்சி இதையெல்லாம் ரசித்தபடி முன்புறம் கட்டிலில் அமர்ந்திருக்கும்.
இரவு பதினொரு மணிக்குமேல் போனாலும்
எதையாவது சாப்பிட வைத்து அனுப்பாமல் இருக்காது ஆச்சி.
‘நாராயணா, அந்த அடுப்பை மூட்டு’ என்று குரல் கொடுக்கும்.
அப்புறம் ஆச்சியே எழுந்துவந்து அறையில் இருக்கும்
கப்போர்டைத் திறந்து… தனக்கென வைத்திருக்கும்
இட்லிப் பொடியை எடுத்துக் கொடுக்கும்.
சில நாட்களில் நானும் கட்டிலில் போய் அமர்ந்து கொள்ளும் வேளைகளில்
தான் 13 வயதில் கோயம்புத்தூருக்கு வந்திறங்கி
கஷ்டப்பட்ட கதையைச் சொல்லத் தொடங்கும்.

என்றாவது என்னோடு மகன் வரும்போது
கட்டிலில் பக்கத்தில் அமர வைத்து வாழைப்பழம்
உரித்துக் கொடுக்கும் ஆச்சி.
‘இவுங்க அம்மா வந்துட்டாளாய்யா?’ என்று கேட்கும்.
இன்னும் இல்ல ஆச்சி என்பேன்.
தனக்கு வைத்திருக்கும் பூஸ்ட்டில் பையனுக்குக் கொடுத்துவிட்டு
பழைய நினைவுகளில் புகுந்துவிடும்.

ஆச்சிக்கும், மகேசுக்கும் இருந்தது தலைமுறை இடைவெளிதான்.
மகேஷ் மெஸ்ஸை நவீனப்படுத்த நினைப்பார்.
ஆச்சிக்கு அதெல்லாம் பிடிக்காது.
மெஸ்ஸுக்கு வந்துபோகும் ‘வொயிட் காலர்களை’
எப்படி எப்படியெல்லாம் திருப்திபடுத்துவது
என்பதிலேயே மகேஷின் கனவுகள் இருக்கும்.
ஆச்சிக்கோ வேறு மாதிரி இருக்கும்.

இடையில் வெளியூருக்கு மாற்றல் வர …
ஆச்சியிடமும், மகேஷிடமும் போய் சொல்லிவிட்டு
“மகேஷ் இன்னமும் நான் உங்களுக்கு ஆயிரம் ரூபா பாக்கி” என்றேன்.

‘அதனால் என்ன சார்… எங்க போயிரப் போறீங்க…?’ என்றார் மகேஷ்.
‘காசாப்பா முக்கியம்? பத்திரமாப் போயிட்டு வாய்யா’ என்றது ஆச்சி.

உருண்டோடிய காலங்களில் ஓரிருமுறை ‘ஆச்சிமெஸ்’ பக்கம் தலையைக் காட்டினேன்.
கடைசியாக ஒருமுறை போனபோது…..

‘ஆச்சி போயி இன்னையோட பதினேழு நாளாகுது’ என்றார் இலை எடுக்கும் சுந்தரம்.
மனது கனமாகிப் போனது.

இப்பொழுது மிக நவீனமாகி விட்டது மெஸ்.
முன்புறம் இருந்த வாசலையும் சேர்ந்து விரிவுபடுத்தி விட்டார்கள்.
பார்சலுக்கென்று தனி இடம்.
எல்லாம் பிளாஸ்டிக் டப்பாக்களில்…
பூண்டு சாதம், மிளகு சாதம், கேரட் சாதம் என எல்லாமும் கிடைக்கிறது.

ஆச்சியின் அன்பைத் தவிர.

நன்றி: “புதிய பார்வை”                   1.1.2005

பகிரங்கக் கடிதங்கள் – இயக்குநர் எவரெஸ்ட் – ஆல்ப்ஸ் – தொட்டபெட்டா கே.பாலசந்தர் அய்யா அவர்களுக்கு…!

kb

கும்புடறன் சாமி…

சின்ன வயசுல இருந்தே உங்க படம் பாக்குறதுக்குத் தவியா தவிச்சிருக்கேன். ஆனா…எங்க ஊட்லதான் உடமாட்டேன்னு 144 தடை உத்தரவு போட்ருவாங்க.

“அதெல்லாம் நீ பாக்கக் கூடாது. வேணும்ன்னா ‘பட்டணத்தில் பூதம்’ போ, பணம் தர்றேன்னு சொல்லீட்டு அவுங்க ‘அரங்கேத்தம்’ போயிடுவாங்க. எனக்கு எரிச்சல் எரிச்சலா வரும். ஊருக்குள்ள பலபேரு புதுமை புதுமைன்னு சொல்றாங்களே…அப்படி அதுல என்னதான் இருக்குன்னு ஒரே ஆசையா இருக்கும். அப்புறம் எட்டாங்கிளாசோ ஒன்பதாம் கிளாசோ படிக்கறப்போ உங்களோட ‘அபூர்வ ராகங்கள்’ பாத்து புல்லரிச்சுப் போயிட்டேன் எவ்ளோ பெரிய சிக்கலையும் நீங்க எவ்ளோ ஈஜியா தீக்கறீங்கன்னு பாத்து புளகாங்கிதம் அடைஞ்சேன். அப்பன் புள்ளைய லவ் பண்றான். மகன் அவளோட ஆத்தாள லவ் பண்றான்.

இல்லயில்ல…..

அந்தப் புள்ளதான் லவ் பண்ணுது…ஆனா அவளோட அம்மாக்காரிய இந்த அப்பனோட பையன் லவ் பண்றான்…பாத்தீங்களா….இதச் சொல்றதுக்குள்ளயே நாக்கு கொழறுது. ஆனா நீங்க ….எவ்ளோ பெரிய சிக்கலை இந்த மக்களுக்குக் குடுத்து அத எவ்வளவு ஈஜியாத் தீக்கறதுன்னும் ‘தீர்வு’ குடுக்கறீங்களே….
இதுதாங்க கே.பி.டச்சு….

இருந்தாலும் பாருங்க….இந்த எழவுகளுக்குப் புரியுதா…?

இந்தத் ‘தரை டிக்கட்டுக’ இருக்கானுகளே….அதுகளுக்கெல்லாம் உங்க படம்ன்னாலே ரொம்ப எளக்காரங்க….

“வித்தியாசமா இருக்கிறதுங்கிறது வேற, வித்தியாசமா இருந்தே தீரணும்கிறதுக்காக வித்தியாசமா காட்டிகறது வேற. உங்காளு இது ரெண்டாவது ரகம்….இந்தாளு புருசம் பொண்டாட்டி உறவத் தவிர ஊருல எத்தனை விதமான கேடு கெட்ட உறவெல்லாம் இருக்கோ….அத்தனையையும் படமா எடுக்கறதுதான் இந்தாளு வேல.
பாட்டி பேரனக் காதலிக்கறது, மருமகன் மாமியாரக் காதலிக்கறதுன்னு எடுக்கறதத் தவிர வேறெதாச்சும் தெரியுமா? இங்க அவனவன் சோத்துக்கே வக்கில்லாமச் சாகறப்போ சக்கரப் பொங்கல் சாப்புடுங்கற கதையா இந்தாளு படமெடுக்க அத இந்த வெவஸ்தை கெட்ட வெட்டிப் பசங்க கே.பி.டச்சு…. கே.பி.டச்சு….ன்னு வேற புலம்பிச் சுத்துதுக”ன்னு நொன நாயம் பேசறானுக.

ஏன் நம்ம பாலச்சந்தர் இத மட்டுமா எடுக்குறாரு? ‘தண்ணீர் தண்ணீர்’ எடுக்கலியா, அவ்வளவு அருமையான படம். அதுல சொல்லாத பிரச்சனையா மத்தவங்க சொல்லிட்டாங்க….அந்த மாதிரி ஒரு புரட்சிப் படம் இதுவரைக்கும் வந்திருக்கா…பாலச்சந்தர் படம் பாக்கரதுக்கெல்லாம் சாதாரண அறிவு பத்தாது. உங்கள மாதிரி ரசனை கெட்ட ஜென்மங்களுக்கெல்லாம் அது எங்க வெளங்கப் போகுது…ன்னு திருப்பி நானும் குடுத்தேன் ஒரு சூடு. ஒரு பய வாயத் தொறக்கல.

“அது சரி…’சிந்து பைரவி’ பாத்தியா?”ன்னாங்க. ஒருதடவையில்ல மூணு தடவ பாத்தேன் சாமி. நம்ம ரஜினிசாமி கூட பாம்ப கையிலெடுத்துட்டு சுத்துவாரே…அதுதானே சாமின்னேன். ” கருமம்… கருமம் அது பைரவிய்யா. நாங்க சொன்னது சிந்து பைரவி”ன்னாங்க நம்ம கே.பி.படமா சாமி….பாக்காம இருப்பனா? கே.ஜி.ல பிளாக்குல வாங்கிப் பார்த்தது சாமி….

“மொதல்ல பாக்கறவனையெல்லாம் சாமின்னு சொல்றத நிறுத்து….படம் எப்படி….?”

எப்படியா…? ஒரு இசை மேதை தன்னோட அறிவுக்கும், தெறமைக்கும் பொருத்தமா சம்சாரம் கெடைக்கலியேன்னு வருத்தப்பட்டு பாரம் சுமக்கறப்போ…நானும் கொஞ்சம் சொமக்கறேன்னு ஒரு பொண்ணு வர்றா….மேதையும் மேதையும் சேந்து இன்னொரு மேதைய இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்கறாங்க…ஏன் இதுல என்ன சிக்கல்…? இதுலயும் ஏதாவது நொன சொல்றதுக்கு இருக்கான்னேன்.

“கே.பி.ப்ப்ப்ரியா! நீ சொல்றதையே….இப்படிக் கொஞ்சம் மாத்தி யோசிச்சுப்பாரு…உங்க மேதைக்கு இன்னொரு மேதை கெடைக்கலியேங்கற கவலைல ‘குவாட்டர்’ அடிச்சுட்டுக் குப்புறக் கெடந்த மாதிரி….ஜே.கே.பொண்டாட்டி…அதான் அந்த சுலக்சணா…அந்தப் பேதையும் உலகம் புரியாத ஒரு அப்பவிப் புருசன் வேணும்ன்னு ‘முக்கால்’ அடிச்சுட்டு சுத்தறமாதிரி எடுத்திருக்கலாமில்ல. மேதைக்கு மேதை. போதைக்குப்….ச்சே பேதைக்குப் பேதை…அப்படி எடுத்திருக்கலாமில்ல. ஆம்பளேன்னா மட்டும் அறிவுக்குப் பொருத்தமா இல்லேன்னா எத்தனை வேணும்ன்னாலும் வெச்சுக்கலாம்…பெத்துக்கலாம்ன்னு சொல்றது கடைஞ்செடுத்த பைத்தியக்காரத்தனம்…இதுல வேற பெண்ணினத்த நான் தான் தூக்கி நிறுத்தறேன்னு பெனாத்தல் வேற….”
நான் மட்டும் அன்னைக்கு ‘மால’ போட்ருக்கலேன்னா…அந்த அய்யப்பனே வந்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது…மகனுகள கீசியிருப்பேன் கீசி. மனசுக்குள்ள கெட்ட கெட்ட வார்த்தையா வந்தாலும் வாயில வந்தா சாமி குத்தமாச்சேன்னு வாய மூடிக்கிட்டேன்.

இடைல நம்ம தலைவர் வேற…”இதோ வர்றேன்….அதோ வர்றேன்”னு சொல்லீட்டு இருந்ததால போஸ்டர் ஒட்டற வேலையும் இல்லாமப் போயிடுமோங்கற பயத்துல அந்தப் பண்ணாடைக(ஹி…ஹி…உங்க வஜனந்தாங்க) பக்கமே திரும்பிக்கூட பாக்கலே.

எனக்கு மனசே சரியில்லே. இதென்னடாது நம்ம சிகரத்தப் பத்தியே இவ்வளவு தரக்குறைவா பேசறானுகன்னு வெசனமாப் போச்சு.

அப்புறம் தேர்தல் களேபரத்துல சினிமாப் பாக்கவே சந்தர்ப்பம் இல்லாமப் போச்சுங்க. தேர்தல் சமயத்துல கூட உங்க ஞாபகம்தான். ‘கையில காசு…வாயுல தோசை’ன்னு தேர்தலப் பத்தி நீங்க எடுத்த ‘அச்சமில்லை அச்சமில்லை’ படம்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பழைய மந்திரிமாருக எல்லாம் வரிசையா ஒவ்வொருத்தரா ‘களி திங்கப்’ போறதைப் பாக்குறதே ஒரு சினிமா பாத்த மாதிரி இருக்குதுங்க.

சரி….சம்சாரம் நச்சறாளேன்னு எதாவது படத்துக்குப் போலாம்ன்னு பாத்தா..அட…உங்க படமே ரிலீசாயிடுச்சுன்னு சொன்னாங்க. இதுவும் பொம்பளங்க விடுதலையப் பத்திதான்னு சொன்னாங்க.

வழக்கம்போல ‘தரை டிக்கட்டுக’ எல்லாம் காலி. ரசனை கெட்ட ஜென்மங்க…படம் பாக்கப் பாக்க எனக்குக் கோபம் கோபமா வருது. இப்படி ஒரு புருசன் இருப்பானான்ன்னு…சொடுக்குப் போட்டு சித்ரவதை பண்றது….பொண்டாட்டி கையில துப்பறது….இப்படிப்பட்ட ஆம்பளைக உருப்படுவானுகளான்னு ஆத்தரமாயிடுச்சு.

இடை வேளைல ஒரு காப்பியும், தம்மும் அடிச்சிட்டு உள்ள போயி உக்காந்தா…என்னடாது தியேட்டர் என்னாவது மாறி கீறி வந்துட்டமான்னு சந்தேகம்…கதையே சுத்தமா மாறிப் போச்சு. அந்த வெறி புடுச்ச ரெண்டு பெண்டாட்டிக்காரன திருத்தறதுக்காக அந்த சின்னப் பொண்ணே அவ்ங்கூடப் போயி…அவன மயக்கி…திருத்தறதுக்காகவே ஒரு புள்ளையும் பெத்து…அட…அட…இப்படியெல்லாம் யோசிக்க உங்க ஒருத்தராலதான் முடியும். சிகரம்ன்னா சும்மாவா?

பெண் விடுதலைக்கு இப்படி ஒரு வழி உங்க ஒருத்தராலதான் சொல்ல முடியும்.

அதப் பாத்த உடனே எனக்கும் ஒரு யோசனை தோணுதுங்க…ஒவ்வொரு ஊர்லயும் உள்ள இந்தக் கோர்ட்டுக்கெல்லாம் போயி….எந்தெந்த ஆம்பளை ‘விவாகரத்து’ வாங்கீருக்கான்னு அட்ரஸு வாங்கீட்டு வந்து….

அதென்ன…அந்தக் குமுதமோ….கல்கியோ…அது மாதிரி பொண்ணுங்கள மாவட்டத்துக்குப் பத்து பேரோ…பதினைஞ்சு பேரோ தயார் பண்ணி….”நீங்களும் அந்தக் கல்கி மாதிரி புரட்சிப் பெண்ணா இந்திந்த அட்ரஸுக்குப் போங்க….போயி மயக்குங்க….
அப்புறம்….
சொடுக்கு போடற புருசன்னா நீங்களும் சொடுக்கு போடுங்க… கையில துப்பற புருசன்னா நீங்களும் துப்புங்க… நிதானமா ஒரு புள்ளையப் பெத்து மொதல் சம்சாரத்துக்கிட்ட குடுத்துட்டு அடுத்த ஊருக்குப் புறப்படுங்க…’ஒழிஞ்சது ஆணாதிக்கம்! அடைஞ்சாச்சு பெண்விடுதலை!’ன்னு ஏற்பாடு ப்ண்ணா எப்படி இருக்கும்…? எப்படி நம்ம ஐடியா…?

“பொம்பளைங்க வெறும் புள்ள பெக்கற மெஷின் இல்லய்யா… அவுளும் நம்மள மாதிரி மனுசிதான். முடிஞ்சளவுக்கு பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளும் தொல்லையிலிருந்து விடுபட்டாதான் அவுங்களுக்கு நிம்மதி”ன்னு நாப்பது அம்பது வருசத்துக்கு முன்னாடியே பெரியார் சொன்னா…நீங்க என்னடான்னா…இந்த நாட்டுல ஒரு ‘மேதை’க்குக் கவலைன்னா அவங்கூட சேர்ந்து ஒரு புள்ளய பெத்துக் குடுக்கறது….கொடுமைக்காரப் புருசன்னா அவங்கூடயும் சேர்ந்து ஒரு புள்ளய பெத்துக் குடுக்கறதுன்னு வழி காட்டுறீங்களே…உருப்பட்டாப்பலதான்.
மார்கெட்ல தகராறு பண்ற ஆசாமிய சரிகட்டீட்டு…உங்க ‘கல்கி’ பேசறாளே ஒரு டயலாக்…

“உனக்கெதுக்குய்யா மீசை…பேசாம போய் ஒரு பொடவையைக் கட்டிக்கோ’ன்னு…இது டயலாக். கை தட்டல் தியேட்டரே அதிருதுங்க. அதுசரி கே.பி….மீசைங்கறது ‘ஆண்மை’யின் சின்னம்னு எந்த ‘அறிவாளி’ சொன்னான் உங்களுக்கு?

மீசைக்கும், வீரத்துக்கும் சம்பந்தம் கிடையாது…அது பதினேழாம் நூற்றாண்டு சமாச்சாரம்னு பொறந்த குழந்தைகூட சொல்லுமே…”பொடவையைக் கட்டிக்கோ”ங்கிற மாதிரி கேணத்தனமான ‘புரட்சிகர’ வசனத்த உங்க கதாநாயகிதான் பேச முடியும்.

எல்லாப் படத்துலயும் ஒரு சங்கீதக்காரன் இல்லாட்டி ஒரு சங்கீதக்காரி. இருகோடுகள்ல இருந்து இப்பத்த எழவு வரைக்கும் ஒருத்தி கூட ஒரு பாட்ட முழுசாப் பாடுனதில்ல….
“பாடுவேனடி”ன்னு ஒருத்தி இழுக்க…இன்னொருத்தி முடிப்பா….”கேள்வியின் நாயகனே”ன்னு ஒருத்தி ஆரம்பிக்க…”பதிலேதய்யா”ன்னு இன்னொருத்தி முடிப்பா….

இந்தக் கல்கிலயும் “எழுதுகிறேன் ஒரு கடிதம்”னு முதல் சம்சாரம் ஆரம்பிக்க மூணாவது சம்சாரம் முடிச்சு வைப்பா….படத்துல வர்ற எல்லாப் பாத்திரமும் பக்கம் பக்கமா நாடகம் மாதிரி வசனம் பேசறதையும், அரைச்ச மாவையே அரைக்கறதையும் பாத்து பாத்து சலிச்சுப் போச்சு.

இந்த நாட்டுல எத எதத்தான் ‘புரட்சி’ங்கிறதுன்னே விவஸ்தையில்லாமப் போச்சு…..துணி விக்கறவன் கூட….”புரட்சிகர துணி விற்பனை”ங்கிறான். நாளைக்கு “புரட்சிகர சிரிப்பு நடிகர் லூஸ்மோகன்”
“புரட்சிகர கவர்ச்சி நடிகை ஜோதி மீனா”ன்னு சொல்ல ஆரம்பிச்சா எங்க கதி….?

உங்க மூளையை இனியாவது இந்தச் சமூகத்துக்குப் பயன்படுத்துற எண்ணம் இருந்தா….

ஒரே ஒரு கேள்வி….

கோபிக்க வேண்டாம்….

இதுவரைக்கும் நான் பேசுனது உங்க நாடகங்களைப் பத்திதான்.

அதுசரி….

‘சினிமா’ எடுக்கறதப்பத்தி எப்ப கத்துக்கப் போறீங்க….?

அதுவும்

வீடு….

உதிரிப்பூக்கள் மாதிரி.

கவலையுடன்,
பாமரன்

தெருவோரக் குறிப்புகள்.

கொஞ்சம் கேப்ஸிகா சாஸை எடுத்துக் கொள்ளுங்கள்….
பக்கத்திலேயே ஆலிவ் ஆயிலும் அவசியம்.
தேன் இல்லாவிட்டால் சரியாகாது….
எப்படியாவது ரோஸ் வாட்டர் அதி முக்கியம்….
இதையெல்லாம் சட்டீல உட்டு நல்லா ஒரு ஆட்டு ஆட்டுங்க.
ஒரே நிமிசத்துல ரெடி….
நம்ம பப்பாயா தாய் சாலேட்…..
ஹலோ…என்ன சொல்ல சொல்ல சட்டையப் புடிக்கிறீங்க…?
என்ன ரேஷன் அரிசிக்கே திண்டாட்டமா?
ஊகூம்…இதெல்லாம் ரேஷன்ல போட மாட்டாங்க….
என்ன மூடணுமா?
ஐய்யய்யோ இதெல்லாம் நான் சொல்லுலீங்க. நாம எப்படி சோறு சாப்புடறதுன்னு டீ.வீ.ல சொல்லிக் குடுத்தத திருப்பிச் சொன்னேன்… அவ்வளவுதான்….

தாயோ தகப்பனோ ஊட்டுல தறுதலையா இருந்தா, நாமெல்லாம் இப்புடி பப்பாயா தாய் சாலேட்டோ…தகப்பன் சாலேட்டோ சாப்பிட வேண்டீதுதான்.

= = = = = = = = = = = =

மேலை நாட்டு மேதை இங்கர்சால் எழுதிய ஒரு நூலைப் படிக்க நேரிட்டது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெ.சாமிநாதசர்மாவால் மொழிபெயர்க்கப்பட்ட ‘மக்கள் உரிமை’ என்கிற அந்த நூல் என்னுள் எண்ணற்ற ஆச்சர்யங்களை ஏற்படுத்தியது. தத்துபித்தென்று குழந்தையை வளர்க்கும் முட்டாள் பெற்றோர்களையும், மதவாதிகளையும் தூக்கிப்போட்டு மிதிக்கின்றன இங்கர்சாலின் வரிகள்.

வாயைத் திறக்காமல் சாப்பிடு.

கண்ணுல தண்ணி வராம அழு.

தூக்கம் வருலேன்னாலும் படு.

என்று ஹிட்லர்களாய் மாறி விடுகிற பெற்றோர்களைப் பின்னி எடுக்கிறார் இங்கர்சால். சிறு வயதிலேயே சொர்க்கம், நரகம் என்று பிஞ்சுகளுக்குப் போதித்து அவர்களை துன்பத்திற்கு உட்படுத்துகிற பரமபிதாவான ஒரு கடவுள் இருப்பாரேயானால் அந்தக் கடவுளோடு நான் சொர்க்கத்தில் இருப்பதைக் காட்டிலும் நரகத்திலேயே வசிக்க விரும்புகிறேன் என்று நேற்று இன்றல்ல நூற்றிப் பத்து வருடங்களுக்கு முன்பே சாடி இருப்பது பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

எட்டு பதிப்புகள் வந்துவிட்ட அந்த நூலில் ஒன்பதாவது பதிப்பில் சேர்க்க வேண்டிய செய்தி ஒன்றும் உண்டு.

பல்வேறு தத்துவங்களை அலசி ஆராய்ந்த இங்கர்சாலே ஏற்றுக்கொண்டு புகழ்ந்து தள்ளியிருக்கிற ஒரு நூல்…நம்மவர் எழுதியது என்பதுதான் அந்த செய்தி.

‘அவனது குழந்தைகள் தகப்பன் இல்லாமல் போகட்டும். அவனது மனைவி விதவையாகட்டும். அவனது குழந்தைகள் பிச்சை எடுத்தும் நாடோடிகளாகவும் திரியட்டும்’ என்று குழந்தைகளைக்கூட சப்பிக்கிற ஒரு ‘கடவுளை’ இங்கர்சால் குறிப்பிட்டு “ஆனால் அந்தக் கடவுள் தென்னிந்திய மண்ணில் உதித்த ஒருவரது இனிய மொழிகளைக் கேட்டிருக்க மாட்டார். இசையாய் எனது காதுகளைத் தொட்ட அந்த வரிகள்:

குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.”

என திருக்குறளைச் சொல்கிறார் இங்கர்சால்.

நம்மவர் பெருமை பிற மேதைகளுக்குப் புரிகிறது. ஆனால் இங்குள்ள பல போதைகளுக்கு அது புரிவதேயில்லை. அது ஏனுங்க?

= = = = = = = = = = = =

ஆடத் தெரியாத எவரோ மேடை சரியில்லை….ன்னாராமா. அப்படி இந்த பயாலஜி, சோஷியாலஜி மாதிரி நியூமராலஜி…நேமாலஜி…வந்தாலும் வந்தது…பலருக்குக் கிறுக்கு மண்டைக்கு ஏறிவிட்டது.
அடங்கப்பா பேரை மாத்தறேன்….ஸ்பெல்லிங்க மாத்தறேன்னு சொல்லி இன்ஷியல என்னாவது மாத்தீராதீங்கப்பா. குடும்பத்துக்குள்ள கொழப்பம் என்னாவது ஏற்பட்டறப் போகுது.

= = = = = = = = = = = =

கடந்த வாரம் சென்னை ஔகிலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அறுபதைக் கடந்தவர்கள் அடைக்கலமாகியிருந்தனர் அதில். பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்டு சிலர். கணவனால் கைவிடப்பட்டு சிலர். விரும்பி ஏற்றுக் கொண்டு வந்தவர் சிலர்.

இளையராஜா ஒருமுறை இங்கு வந்து போனால் ‘ அம்மா என்றழைக்கின்ற உயிரில்லையே’ என்று தனது பாட்டை மாற்றிப் பாட வேண்டியிருக்கும். அங்கு உள்ளோரது துயரை மனதில் சுமந்தபடி இருள் கவியத் துவங்கிய வேளையில் வெளியேறினேன். இயந்திரமயமாகிக் கொண்டிருக்கிற உலகில் இனி இது அதிகரிக்கவும் கூடும்.

‘குடும்பம்தான் எல்லாம். குடும்பம்தான் பாதுகாப்பு’ என்று நம்பியவர்களின் நிலையை எண்ணும்போது மனது வலித்தது.

குடும்ப உறவு உண்மையில் எப்படி உள்ளது என்பதைக் கிண்டலடித்து ஓஷோ ஒருமுறை சொன்ன கதை நினைவுக்கு வந்தது.

லட்சியத் தம்பதிகளுக்கு அவர்களது துணிச்சலை சோதித்துப் பார்க்க போட்டி வைத்தார் ஒருவர். மூவர் மட்டுமே அமரக்கூடிய அவரது குட்டி விமானத்தில் ஏறி தைரியமாகப் பயணம் செய்யும் தம்பதிகளுக்கு பத்து லட்சம் பரிசு. ஆனால் ஒரு நிபந்தனை. பறக்கும் நேரத்தில் அந்த இருவரில் ஒருவர்கூட பயத்தில் சின்ன முணுமுணுப்பு செய்தாலும் பரிசு அம்போ.
போதாக்குறைக்கு ஒரு லட்சம் அபராதம் வேறு. மூவர் மட்டுமே அமர வசதி உள்ள விமானத்தில் ஒரே ஒரு சிக்கல். அதற்கு மேல் மூடி கிடையாது. உட்காருபவர்கள் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு உட்காரவேண்டும் அவ்வளவுதான். ஒவ்வொரு தம்பதியாக விமானத்தில் ஏறுகிறார்கள். வழியில் பயந்து போய் ‘அய்யோ’ என்றோ ‘அம்மா’ என்றோ கத்தினால் போதும். உடனே விமானம் கீழே இறக்கப்பட்டு விமானி அபராதத் தொகை ஒரு லட்சத்தை வாங்கி பெட்டியில் போட்டுக் கொள்வார்.
கடைசியாக ஒரு தம்பதியினர் ஏறி அமர்கிறார்கள். பறக்கத் தொடங்கி பல நிமிடமாகியும் தைரியமாக அம்ர்ந்திருக்கிறார்கள் அவர்கள் இருவரும். விமானி மலையின் மீது மோதுவது போல் போகிறார்…. சத்தம் போடுவதில்லை இருவரும்.அப்படியே கீழே கொண்டு வருகிறார்…. சத்தம் போடுவதில்லை இருவரும். தலைகீழாக திருப்பி ஓட்டுகிறார்….சத்தம் போடுவதில்லை இருவரும். கடைசியில் விமானியே களைத்துப் போய் வேறு வழியின்றி தரை இறக்குகிறார். ஆச்சர்யம் தாங்காமல் கணவனின் கையைப் பிடித்து “உங்களைப் போல தைரியசாலி தம்பதியைப் பார்த்ததே இல்லை இதுவரை. ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. உண்மையாகவே நீங்கள் ஒரு முறைகூட பயப்படவில்லையா…” என்று கேட்க…”ஒரே ஒருமுறைதான் பயந்தேன். ஆனால் லட்ச ரூபாய் போய்விடுமே என்ற பதட்டத்தில் கத்தவில்லை அவ்வளவுதான்” என்றார் கணவர்.

“எந்த இடத்தில் கத்த நினைத்தீர்கள்? நான் நேராக அந்த மலைமீது மோதுவது போல் சென்ற போதா….?”

“இல்லை.”

“சரி நான் விமானத்தைத் தரை மீது மோதுவது போல் சென்று திருப்பினேனே அப்போதா…?”

“கிடையாது” என்றார் கணவர்.

“ஆங் இப்போது தெரிந்து விட்டது. நான் தலைகீழாக விமானத்தைத் திருப்பி ஓட்டினேனே அப்போதுதானே….?”

“ஊகூம்.”

“சரி எப்பதான் கூச்சல் போட நினைத்தீர்கள்? அதையாவது சொல்லித் தொலையுங்கள்” என்றார் விமானி ஆத்திரமாக.

“பத்து நிமிடத்துக்கு முன்பு என் மனைவி மேலிருந்து விழுந்தாளே அப்போதுதான்” என்றார் வெகு அமைதியாக.