விடைபெற்றுவிட்ட அக்கா செங்கமலம் நினைவாக…..

DSC_2678 copy

ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும். ஒரு பிரபல வார இதழின் ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருக்கையில் ஏதோ ஒரு உலகமகா விஷயத்தைக் கண்டுபிடித்தவர் போல என்னை ரகசியமாக ஓரங்கட்டினார். “யார் கிட்டயும் சொல்லீர வேண்டாம்….. இது நமக்குள்ளயே இருக்கட்டும்….. உங்கள ஒண்ணு கேட்பேன்…… மழுப்பாம பதில் சொல்லுவீங்களா?” என்றார்.

முதலில் விஷயத்தை சொல்லுங்க என்றேன்.

சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துவிட்டு…… “நம்ம கலைஞர் ஒரு தீவிரமான நாத்திகர். ஆனா…. அவங்க வீட்டுல பலபேர் சாமி கும்புடுறாங்களே…… இது நாத்திகத்துக்கு கிடைத்த தோல்விதானே?” என்றார் படுரகசியமாக.

நீங்க சொல்ற மாதிரி அப்படியும் வெச்சுக்கலாம். ஆனா இதுல இன்னொரு கோணமும் இருக்கிறதே….. என்றேன்.

”அதென்ன கோணம்?” என்றார் பத்திரிகை ஆசிரியர்.

“தன்னை நாத்திகராய் சொல்கிற கலைஞர் வீட்டில் சிலர் சாமி கும்பிடுவது நாத்திகத்துக்குக் கிடைத்த தோல்வி என்றால்……. ஆன்மீகத்தைக் கடைபிடித்த அவரது பெற்றோர் முத்துவேலருக்கும் அஞ்சுகத்தம்மாளுக்கும் கலைஞர் மகனாகப் பிறந்தது ஆத்திகத்துக்குக் கிடைத்த தோல்விதானே?”என்றேன்.

அதன் பிறகும் என்னோடு பேசிக் கொண்டிருக்க அவருக்கு என்ன மண்டையில்  மறையா கழண்டிருக்கிறது? என்ன ஆனாலும் சரி..… எப்போதும் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கும் அவரது பெயரை மட்டும் ஒரு போதும் சொல்ல மாட்டேன் நான்.

இப்படித்தான் இப்போது இன்னொரு உலகமகா சர்ச்சை. இயக்குநர் மணிவண்ணன் சீரடி சாய்பாபா கோயிலுக்குப் போய் ஆத்திகராக அவதாரம் எடுத்துவிட்டார் என்று.

பொதுவாக அவரும் நானும் சினிமா தவிர உலக நிகழ்வுகள் குறித்தே உரையாடிக் கொண்டிருப்போம்.  ஒரு புத்தகம் வெளிவந்து அச்சு காய்வதற்குள் படித்து முடித்து விடுவது அவரது வழக்கம்.

கடந்த வாரம் பேசிக் கொண்டிருந்தபோது “என்ன தலைவா….. நம்மளையும் ஒரு சீரடி சிஷ்யனாக சேர்த்துக் கொள்ளக் கூடாதா?” என்றேன். அவரோ சீரடிக்கு அருகிலுள்ள மகாத்மா பூலே அவர்களது சிந்தனையாளர் வட்டத்தைப் பற்றியும் அவர்கள் நடத்தி வருகிற நூலகம் பற்றியும் சொல்லிக் கொண்டு போனார்.

எனக்குத் தெரிந்து தோழரின் துணைவியார் செங்கமலம் அவர்கள்தான் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர். ஓரிரு அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்ட அவருக்குத் துணையாக எங்கும் அழைத்துச் செல்வது  மட்டுமே மணிவண்ணன் அவர்களது பணி. அவர் சீரடி போனதும் தெரியும். திரும்பி வந்ததும் தெரியும் நண்பர்களுக்கு. இதற்குள் யாரோ ஒரு புண்ணியவான் திரித்துவிட்டார் கயிரை.

அதுவும் ஆன்மீகவாதிகள் கொலைக்கேசு……. ரேப் கேசு……. போதை மருந்து மிக்சிங் கேசு…… என்று ஆன்மீகத்தின் அண்டர்வேரே கிழிந்து தொங்கும் நேரமாகப் பார்த்து அங்கே போய் தஞ்சம்புக அவருக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

1983 லேயே வாடிகன் போனபோது போப்பாண்டவரைப் பார்த்துவிட்டு வந்தவர்தான் நம்ம மணி.

(”அட என்னப்பா சந்தடி சாக்குல நம்ம பேரச் சொல்லி கூப்பிடுற….?”

”அப்பறம் மணிதானுங்களே உங்க பேரு?”)

அதற்காக……..

இஸ்ரேல் போனதற்காக யூதராகவோ……

வாடிகன் போனதுக்காக கிருஸ்தவராகவோ…….

மெக்கா போனதுக்காக முஸ்லிமாகவோ…….. ஆகின்ற சமாச்சாரமெல்லாம்

அண்ணாத்தையின் அகராதியில் கிடையாது.

இருவரும் இதைப்பற்றிப் பேசுவதைக் கேட்ட அவரது துணைவியார்…..”அவரு கொள்கை அவருக்கு. என்னோட கொள்கை எனக்கு.  எனக்குத் துணையாக வருவதால அவரு ஆத்திகருமில்ல….. அவருடன் கூட்டங்களுக்குச் செல்வதால் நான் நாத்திகருமில்ல தம்பி.” என்று பெரிய போடாய் போட்டார் அக்கா செங்கமலம்.

இது எப்படி இருக்கு?

நன்றி : தமிழக அரசியல் இதழ்

வரலாற்றுச் “சிரிப்பு” மிக்க வாக்குறுதி…

ஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப இவன் 2010 க்கு வர்றது? நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது? என்று எரிச்சல் கூட வரலாம்.

ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்?

ஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்…..

”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது.

அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல வேண்டுமானால் நாம் மீண்டும் 1947 குச் செல்ல வேண்டும்.” என்று நாம் கடந்த இதழில் கூறியிருந்தபடி இப்போது அதில் அடியெடுத்து வைப்போம்.

அந்த நாள்தான் அக்டோபர் 24. அன்றுதான் குறிப்பிட்ட மூவாயிரம் பழங்குடியினர் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரில் நுழைகிறார்கள்.

மன்னர் அரிசிங் இந்தியாவோடு இணைய விரும்பாமலோ அல்லது எந்த முடிவும் எடுக்க தீர்மானிக்க இயலாத நிலையிலோ இருந்த நேரத்தில்தான் இவர்கள் நுழைகிறார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் இந்துக்களும், சீக்கியர்களும் நுழைய….. இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய இரு புறமும் கொலை, கொள்ளை, தீவைப்பு. இந்தத் தாக்கம் ஜம்மு பகுதியிலும் தொற்றிக் கொள்ள…. அப்போது நுழைந்தவர்கள்தான் அம்மூவாயிரம் பழங்குடியினர்.

இந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஆசி இருந்தது. காப்பாற்ற வந்ததாகச் சொன்னவர்களே காஷ்மீரின் பல பகுதிகளிலும் வன்முறையில் ஈடுபட இசுலாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என அனைவரும் இப்பழங்குடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இதில் பாரமுல்லா எனும் நகரத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் மூவாயிரம் பேர்.

இந்த வேளையில்தான் கலவரக்காரர்களை விரட்டியடிக்க மன்னர் அரிசிங் இந்திய உதவியை நாடுகிறார். இந்த உதவி காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் கிடைக்காது என்பது பள்ளிச் சிறுவனுக்குக்கூட தெரியும். அப்புறம் இது மாட்சிமை தாங்கிய மன்னருக்கு தெரியாமலா இருக்கும்.

தெரிகிறது.

புரிகிறது.

1947 அக்டோபர் 26 ஆம் தேதி மன்னருக்கும் இந்தியாவுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

அதன்படி பாதுகாப்பு…. வெளியுறவு…. தகவல் தொடர்பு…. இம்மூன்றில் மட்டும்  இந்திய அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொள்கிறார் மன்னர்..

”ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பிறகு மக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்பே இந்த இணைப்பை இறுதியானதாக ஏற்றுக் கொள்வோம்” என்று மறுநாள் இந்தியாவும் பதிலுக்கு ஒரு அறிக்கை வெளியிடுகிறது.

பிறகு இந்தியப்படைகள் சிறீநகரில் நுழைந்ததும்…..

பள்ளத்தாக்கில் ஊடுருவல்காரர்கள் நுழைந்துவிட்டார்கள் என கேள்விப்பட்டு மன்னர் பரம்பரை நிர்வாகத்தை தேசிய மாநாட்டுக் கட்சியினரிடம் ஒப்படைத்து விட்டு ஜம்மு நோக்கி ஓட்டம் விட்டதும்……

சேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியினர் இந்துக்களையும், இசுலாமியர்களையும் அணி திரட்டி பாலங்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பளித்ததும்……. ஏறக்குறைய அறிந்த செய்திகள்தான்.

இவற்றுக்கு மத்தியில்  நவம்பர் இரண்டாம் நாள் அகில இந்திய வானொலியில் உரையாற்றிய பிரதமர் நேரு “ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் அம்மாநில மக்களால் தீர்மானிக்கப்படும் என்கிற வாக்குறுதியை மீண்டும் உறுதிபடுத்துகிறேன். அமைதி நிலைநாட்டப்பட்ட உடனேயே சர்வதேச பார்வையாளர்கள் தலைமையின் கீழ் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.” என்று மீண்டும் ஒரு முறை அடித்துச் சத்தியம் செய்கிறார்.

இந்திய ராணுவம் ஊடுருவல்காரர்களை பாகிஸ்தான் எல்லைக்குள் விரட்டியடிக்க…..பாகிஸ்தான் ராணுவமோ இந்திய எல்லைக்குள் நுழைந்து சண்டையிட போர் உருவாகிறது.

போரின் முடிவோ காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதில் போய் முடிகிறது.

ஊடுருவ வந்து பாகிஸ்தான் கைப்பற்றிய ஒரு பகுதியை ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என்று இந்தியா அழைக்க……

உதவ வந்து இந்தியா மீட்ட மற்றொரு பகுதியை “இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என்று பாகிஸ்தான் அழைக்க….

அக்பர் தொடங்கி அரிசிங் வரைக்கும் எண்ணற்ற ராஜபரிபாலனைகளைப் பார்த்த காஷ்மீர் மக்கள் வாழ்க்கையில் இனம்புரியாத இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது.

அதுவரையில் மன்னர்களது குத்துகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ”ஜனநாயக” கும்மாங்குத்துக்களை அனுபவிக்கும் ”பாக்கியம்” அப்போதுதான் வாய்க்கிறது.

காஷ்மீரின் ஒரு பகுதியை மீட்ட நேரு தலைமையிலான இந்திய அரசு  ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததற்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு உறுதிமொழியை ஐ.நா.சபையிடம் சமர்பிக்கிறது. அந்த நாள்தான் 1947 டிசம்பர் 31. அந்த உறுதிமொழி இதுதான்.:

“ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை அரசியல் அறுவடை செய்து கொள்ள இந்திய அரசு பயன்படுத்துகிறது என்ற தவறான கருத்தை அகற்ற பின்வரும் செய்தியை இந்திய அரசு தெளிவாக முன் வைக்கிறது. அதாவது, படையெடுப்பாளர்கள் விரட்டப்பட்டு இயல்புநிலை நிலைநாட்டப்பட்ட உடனேயே அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே சுதந்திரமாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வாக்கெடுப்பு அல்லது நேரடி வாக்கெடுப்பு என்ற சனநாயக வழிமுறைகள் மூலம் மக்களின் விருப்பம் முடிவு செய்யப்படும். சுதந்திரமான, நியாயமான நேரடி வாக்கெடுப்பிற்கு ஐ.நா.சபையின் மேற்பார்வை அவசியப்படும்.”

இதுதானய்யா அந்த வரலாற்றுச் சிரிப்பு மிக்க வாக்குறுதி.

ஆக இன்னமும் படையெடுப்பாளர்கள் விரட்டப்படவில்லை…. அன்று தொடங்கி இன்று வரை இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை…. அதனால் அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் நேரம் கனியவில்லை… அதனாலேயே நேரடி வாக்கெடுப்பு நடத்த முடியவில்லை….. இதுதான் பல ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருந்த ஒரே பல்லவி.

நேரடி வாக்கெடுப்பு நடந்தால் காஷ்மீர் மக்கள் நம் பக்கம்தான் சாய்வார்கள் என நாக்கைத் தொங்கப்போட்டபடி பாகிஸ்தானும் அதற்கு தலையாட்டியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 47 இல் நடந்த யுத்தம்….. 65 இல் நடந்த யுத்தம்…… 71 இல் நடந்த யுத்தம்…. இவற்றின் போதெல்லாம் பாகிஸ்தான் பக்கம் கனவிலும் தலைவைத்துப் படுக்காத காஷ்மீர் மக்களைப் பற்றி அது அறிந்து வைத்திருந்தது அவ்வளவுதான்.

இந்தியாவைத் தொடர்ந்து ஐ.நா.வும் தன் பங்குக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்மானத்தை 1948 இல் நிறைவேற்றியது. “சண்டையிடுவதற்காக அம்மாநிலத்திற்குள் நுழைந்த பழங்குடிப் படையெடுப்பாளர்களும், அம்மாநிலத்தில் வசித்து வராத ஏனைய பாகிஸ்தான் தேசிய இனத்தவரும் அம்மாநிலத்திலிருந்து வெளியேறுவதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உள்ளூர் அரசாங்கத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச இராணுவத்தை மட்டுமே இந்திய அரசு ஜம்மு காஷ்மீரில் வைத்திருக்க வேண்டும். இணைப்பு பிரச்சனையின் மீது அம்மாநில மக்கள் வாக்களிப்பதற்குத் தேவையான முழு சுதந்திரத்தையும், சூழ்நிலையையும் இரு நாட்டு அரசாங்கங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.”

ஆனால் அவ்வளவு லேசுப்பட்ட நாடுகளா இந்தியாவும்…. பாகிஸ்தானும்….? வெளிப்பார்வைக்கு வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டாலும் இரண்டுக்கும் உள்ளூர ஒரு பயம். இரண்டு நாட்டுக்குமே இந்த மக்கள் அல்வா கொடுத்து விட்டால் என்ன செய்வது என்றுதான்.

அப்புறம் நேரடியாவது….. மறைமுகமாவது……? அப்படியே தொடர்கிறது கதை.

மன்னனிடம் இருந்து விடுபட்டு காஷ்மீர் மக்கள் தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வது என்பதில் தொடங்கிய கதை பிற்பாடு இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்னையாக விரிவடைந்து…. அப்புறம் இருநாட்டுக்குமான பாதுகாப்புப் பிரச்சனையாக பரிமாணம் எடுத்ததில் போய் முடிந்தது.

முதலில் காஷ்மீரிகளின் கதி அக்பரின் கைகளில் இருந்தது…..

அப்புறம் சில முகலாய மன்னர்கள் அதை வைத்திருந்தார்கள்…..

பிற்பாடு சீக்கியர்கள் வைத்திருந்தார்கள்….

அடுத்து டோக்ரா இந்து மன்னன் வைத்திருந்தான்…..

அதற்கும் பிற்பாடு இந்தியா பாகிஸ்தான் நாடுகள் வைத்திருந்தன……

அது சரின்னே…. அப்ப இந்த ரெண்டு நாடுகள வேற யாருன்னே வெச்சிருந்தா? என கரகாட்டக்காரனில் செந்தில் கேட்டதைப் போல யாரேனும் கேட்டால்…?

அதற்கும் இருக்கிறது பதில். அதுதான் அமெரிக்க-சோவியத் வல்லரசுகள்.

ஆம் 1953 க்குப் பிறகு தங்களது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்க வந்த அமெரிக்காவோடு பாகிஸ்தான் கொண்ட காதலும்….. சோவியத் யூனியனோடு இந்தியா கொண்ட மையலும்….. இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையாக உருமாறிப் போயிருந்த காஷ்மீரப் பிரச்சனையை அமெரிக்கா- சோவியத் பிரச்னையாக தடம் மாற்றிப் போட்டன.……

இவ்வளவுக்கும் மத்தியில் “பணிவானவர்கள்….. கோழைகள்” என வர்ணிக்கப்பட்ட காஷ்மீரிகள் ஆயுதப் போராட்டத்துக்கு அறிமுகமானதே 1988 க்குப் பிற்பாடுதான்.

இதிலும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்கிற (JKLF) அமைப்பு ”எங்களுக்கு பாகிஸ்தானும் வேண்டாம்…. இந்தியாவும் வேண்டாம்…. எங்கள் வாழ்க்கையை நாங்களே நிர்ணயித்துக் கொள்கிறோம்” என்று போராடுகிற அமைப்பு. ஆனால் இந்த அமைப்பை பாகிஸ்தானுக்கும் பிடிக்காது. இந்தியாவுக்கும் பிடிக்காது. போதாதற்கு ”மதசார்பற்ற அரசுதான் காஷ்மீரில் அமைய வேண்டும்” என்பதுதான் அந்தப் போராளி அமைப்பின் லட்சியமாக சொல்லப்படுகிறது.

இந்த அமைப்பினரை ஒட்டுமொத்தமாக தாக்கி அழிக்க ஆள் அனுப்பும் ஒரே நாடு பாகிஸ்தான்தான். அதைப் போலவே மதசார்பற்ற ஒரு அமைப்பை எதிரியாகக் காண்பித்து போரை நடத்துவதை விடவும் பாகிஸ்தான் ஆதரவும், மதப்பிடிப்பும் கொண்ட ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற குழுக்களை முன்னிறுத்தி போரிடுவதாகக் காண்பிப்பதுதான் இந்தியாவுக்கு லாபம்.

ஆயுதப் போராட்டம் அறிமுகமானதற்கே முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது அதற்கு முன்னர் நடந்த தேர்தல் கூத்துக்கள்தான் என்பது அநேகரது கருத்து. சனநாயகம் சிரிப்பாய்ச் சிரித்த தேர்தல்கள் அவை. நம்மூர் இடைத் தேர்தல்கள் எல்லாம் இந்தியா நடத்தும் காஷ்மீர் தேர்தல்கள் முன் பிச்சை வாங்க வேண்டும். ஒன்று இந்தியாவுடன் இணைப்பை வலியுறுத்துகிற வேட்பாளர் போட்டியின்றியே ”தேர்ந்தெடுக்கப்படுவார்”. அல்லது எதிர்த்து நிற்கிற வேட்பாளரது மனு தள்ளுபடி பண்ணப்படும். அங்கு எல்லாமே ”சிதம்பரம் பாணி” தேர்தல்கள்தான்.

சட்டப்பிரிவு 370 இன் ஓட்டைகள்….. பாகிஸ்தான் ஆயுத உதவி பெற்ற குழுக்களது வன் செயல்கள்….. நான்கு சதவீதமே உள்ள பண்டிதர்களது அதிகாரப்பகிர்வு….. பெரும்பாலான காஷ்மீரிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பாகிஸ்தானின் ஆதரவு குழுக்கள் பண்டிதர்கள் மீது நடத்திய  தாக்குதல்கள்…. இடையில் ஆளுநராக அரசாண்ட ஜக்மோகனின் லீலைகள்….. என எழுதிக் கொண்டே போக ஏராளம் இருக்கிறது.

இந்த மண்ணின் மக்களது தொடரும் துயரங்களை இந்தத் தொடருக்குள்ளேயே முடித்து விட முடியாதுதான். ஆனாலும் இந்த மக்களின் வலியைப் புரிந்து கொள்ள இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதுதான் இம்மூன்று வார கட்டுரையின் நோக்கம்.

ஜம்மு – காஷ்மீரின் அடிப்படைப் பிரச்சனை என்பது இந்து முஸ்லீம் மோதலுமல்ல…… இந்தியா – பாகிஸ்தான் இரண்டுக்குமான போட்டி சமாச்சாரமும் அல்ல. அது காஷ்மீரிகள் தங்களது தன்னுரிமைக்காக ஏங்கும் ஏக்கங்களில் கலந்து நிற்கிறது.

எது எவ்வாறாயினும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது அது ஒன்றே ஒன்றுதான்.

சுருக்கமாகச் சொல்வதானால்……

காஷ்மீர் விடுதலைக்காக

ஆயுதம் ஏந்தியவர்களெல்லாம்

போராளிகளும் அல்ல.

தன்னுரிமையை

நேசிக்கும் காஷ்மீரிகள் எல்லாம்

தேசத்துரோகிகளும் அல்ல.

காஷ்மீரிகளின் தனித்துவம்…..

”ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் இருந்து வருகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முசுலீமுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.”

– மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தினை இந்து முசுலீம் இடையிலான போராட்டம் என்றோ……

அல்லது இந்தியா பாகிஸ்தான் இடையிலான யுத்தம் என்றோ எண்ணிக் கொண்டிருந்தால்…..

நாம் எங்கோ தவறான திசையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை ஓரளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னதாக காஷ்மீரி மக்களின்  தனித்துவமான பண்பாட்டைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் அது சாத்தியப்படும்.

பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்கள் என்றாலும் பெளத்தர்கள்….. சீக்கியர்கள்…. இந்துக்கள் என அனைவருமே உழைத்து உண்டு உறவாடிய மண்தான் காஷ்மீர மண். அவர்களை ஆண்ட ஆட்சியாளர்கள்தான் அடக்குமுறையாளர்களாக வந்து வாய்த்தார்கள்.

அது இந்து மன்னனாக இருந்தாலும் சரி. இசுலாமிய மன்னனாக இருந்தாலும் சரி. இரண்டுமல்லாது சீக்கிய மன்னனாக இருந்தாலும் சரி. இம்மன்னர்களது மொழி என்பது கொடுங்கோலாட்சியும் ஒடுக்குமுறையும்தான்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் துவங்கிய போராட்டங்கள் ஏதோ 1947 இல் தொடங்கிய போராட்டமாக….. அதுவும் இந்திய “சுதந்திரத்தைத்” தொடர்ந்து அதனோடு இணைவதா இல்லையா என்பதில் தொடங்கிய போராட்டமாகத்தான் இன்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீர் மக்களது விடுதலைக்கான வேட்கை என்பது  1586 ஆம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறது.

ஆம்.

பேரரசரான அக்பர் தனது அதிகாரத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் விரிவுபடுத்திய ஆண்டுதான் 1586. அப்போதும் காஷ்மீர மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

அதன் பிற்பாடு பிரிட்டிஷ்காரர்கள் 1846 இல் எழுபத்தி ஐந்து லட்சம் ரூபாய்க்கு  மன்னன் குலாப்சிங்கிற்கு ஜம்மு காஷ்மீரை விற்றபோதும் காஷ்மீர் மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

அதற்கும் பிற்பாடு சமஸ்தானங்களின் முழு இறையாண்மையை மதிப்பதாக முகம்மது அலி ஜின்னா உறுதியளித்ததைப் பார்த்து பாகிஸ்தானிடம் போகலாமா? என்று இந்து டோக்ரா மன்னன் ஹரிசிங் ஊசலாட்டத்தில் இருந்த போதும் காஷ்மீர மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

இப்படி எல்லாவற்றுக்கும் பிற்பாடு எதிர்பாராத பழங்குடித் தாக்குதலால் தன்னை தற்காத்துக் கொள்ள இயலாமல் இந்தியாவோடு அதே மன்னன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட போதும் காஷ்மீர் மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

பொதுவாக காஷ்மீரி இஸ்லாமியர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். உலகின் பிற பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு.

குறிப்பாகச் சொன்னால் இறுக்கம் நிறைந்த ”ஆச்சாரமான” வைதீக இஸ்லாமியர்களுக்கும் காஷ்மீர இஸ்லாமிய மக்களுக்கும் வாழும் முறையில் இருந்து வழிபடும் முறைகள் வரைக்கும் எண்ணற்ற விசயங்களில் ஒத்துப் போகாது.

காஷ்மீர் இசுலாமியர்கள் இறுக்கமற்ற சூஃபி வழியில் வந்த இசுலாமைப் பின்பற்றுபவர்கள். இந்த வழியில் வந்த சூஃபி ஞானியான ”சில்சிலா ரிசியான்” என்பவரது இசுலாத்தைத்தான் இம்மக்கள் பின்பற்றுகிறார்கள்.

இதை நாம் நமக்குத் தெரிந்த அளவில்  புரிந்து கொள்ள வேண்டுமென்றால்  தென்னகத்தில் அர்த்தமற்ற ஆச்சாரங்களையும்….. மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்த இறுக்கம் நிறைந்த வைதீக கட்டுப்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கிய சித்தர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஓரளவு இந்த சூஃபி துறவிகளைப் புரிந்து கொள்ளலாம்.

அந்த சில்சிலா பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்த ஞானிகளில் மிக முக்கியமானவர்தான் நூருதீன். பதினாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் துறவியை ரிசி என்று இன்றும் அழைக்கிறார்கள். இவரை இசுலாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் பிற சமயத்தவர்களும் கூட பெரும் ஞானியாக மதிக்கிறார்கள்.

மக்களோடு நெருக்கமாக நின்ற நூருதீன் போதித்தபடி வாழாத முசுலீம் துறவிகளை கடுமையாக வெறுத்தார். பேராசை….. பாசாங்கு…. அகந்தை கொண்டு அலைந்த உலோமாக்களை கேலி செய்தார்.

இத்தகைய ஞானிகள் கூட்டத்தில் பெண்களும் அடக்கம் என்பதுதான் ஆச்சர்யம் அளிக்கும் செய்தி. இது வைதீக இசுலாமின் கொள்கைக்கு எதிரானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சங்காபீபி, பேகத்பீபி போன்றவர்கள் இந்த சில்சிலா மரபில் பெண் ஞானிகளாகவே வலம் வந்தனர்.

அதைப்போலவே லாலாமாஜி எனும் சைவத் துறவி பெரும் புகழ் பெற்றிருந்தார். தேவையற்ற சடங்குகளையும், ”உயர் சாதி” மனோபாவங்களையும் இவர் மிகக் கடுமையாகச் சாடினார். இவரை காஷ்மீர் முசுலீம்கள் இன்றும் கூட ஒரு பெரும் ஞானியாகப் பார்க்கிறார்கள்.

காஷ்மீரின் இந்து முசுலீம் மக்களுக்கிடையே நிலவிய இத்தகைய ஒரு அற்புதமான சகிப்புத் தன்மையை நான் வேறு எங்கும் கண்டதில்லை என்று ஆங்கிலேய ஆணையர் ஒருவரே ஆச்சர்யப்பட்டு சொல்லியிருக்கிறார்.

காஷ்மீரி இசுலாம் பண்பாடு சகலரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாடு. மத ஞானிகளது புனிதத்தலங்களில் காஷ்மீரிகள் செய்து வரும் சடங்குகளில் பிற சமயத்தவர்களது சடங்குகளும் கலந்திருக்கின்றன. மசூதிகளோடு பிற புனிதத் தலங்களையும் வழிபடும் போக்கு காசுமீர இசுலாமியர் மரபு. (இதில் நமக்குத் தெரிந்த உதாரணம் விரும்புபவர் எவர் வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய நாகூர் தர்கா)

ஆனால் வைதீக இசுலாமியர்களுக்கு இப்போக்கு ஏற்புடையதாய் இல்லை.

வைதீக விதிகளில் நாட்டம் கொண்ட இசுலாமியர்களுக்கும் அதை ஏற்றுக் கொள்ளாத காஷ்மீர இசுலாமியர்களுக்கும் இடையிலான இந்த நெருடல் காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்கள் மத்தியிலும் கூட எப்படி பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்தின என்பதைப் பிற்பாடு பார்ப்போம்.

ஓரளவுக்கு நாம் புரிந்து கொண்ட காஷ்மீர மக்களது தனித்துவங்கள் இவை. மன்னர்கள் மாறி மாறி வந்தாலும் மக்களுக்குள் மகத்தான உறவே நிலவியது. ஏறக்குறைய பிரிட்டிஷ் இந்தியாவின் பெரும்பகுதி மத மோதல்களில் மூழ்கிக் கிடந்தபோது காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டும் மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டே நின்றது. அதுதான் காஷ்மீரத்தின் தனித்துவம். இன்றைக்கும் காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது.

அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல வேண்டுமானால் நாம் மீண்டும் 1947  க்குச் செல்ல வேண்டும்.

(அது அடுத்த வாரம்)

ஒரு முன்கதைச் சுருக்கம்….


உண்மையாகச் சொன்னால் இந்தக் கட்டுரையை எழுதும் தெம்பும் திராணியும் எனக்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வாரம் எழுதலாம்…… இல்லையில்லை அடுத்த வாரம் எழுதலாம் என்று ஒவ்வொரு வாரமும் தள்ளிப் போட்டுக் கொண்டே போன கட்டுரைதான் இது.

அதுவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன?

இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்…..

ஆயிரக்கணக்கான கட்டுரைகள்……

மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்….

என எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.?

ஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலும்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது.

“ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.”

“அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு”

“பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான்.

ஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு நூறு உண்மையான செய்திகள்தானா?

அல்லது அத்தனையும் அப்பட்டமான பொய்களா?

இதில் எது உண்மை?

எது பொய்? கொஞ்சம் ஆழமாகக் கவனித்தால் எதார்த்த உண்மை இந்த இரண்டுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பது தெரியும்.

அந்த உண்மையை வெளிக்கொணர நாம் காஷ்மீரின் கடந்த கால வரலாற்றினை ஓரளவுக்காவது உள்வாங்கிக் கொண்டால்தான் சாத்தியப்படும்.

இது காஷ்மீருக்கு மட்டும் என்றில்லை. எந்தவொரு போராட்டத்தின் ஆணிவேரையும் அறிந்து கொள்ள இந்த அணுகுமுறைதான் நம்மை ஓரளவுக்காவது உண்மையின் பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும்.

சரி இனி விசயத்திற்குள் வருவோம்.

நாற்பத்தி ஏழாம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி என்ன நாள் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் மட்டும் ஏறக்குறைய 550. இந்த சமஸ்தானங்கள் இந்தியாவோடோ அல்லது பாகிஸ்தானோடோ…… இவர்களில் யாரோடு வேண்டுமானாலும் சேரலாம். அது அவரவர்கள் விருப்பம் என சொல்லிவிட்டு வெள்ளையர் வெளியேற….. பல சமஸ்தானங்கள் சத்தமில்லாமல் இந்தியாவோடு சேர்ந்து கொண்டன.

இதில் ஐதராபாத் சமஸ்தானத்தின் நிஜாம் பாகிஸ்தானோடு போக விரும்பினார். மக்கள் விருப்பத்தைப் புறக்கணித்து பாகிஸ்தானோடு சேரத் துடித்த மன்னனை பட்டேல் அனுப்பிய படைகள் 1948 செப்டம்பர் 13 இல் தோற்கடிக்க…. ஐதராபாத் இந்தியாவோடு சேர்கிறது.

ஆண்ட மன்னனோ இஸ்லாமியர்….. மக்களோ இந்துக்கள்….

தென்னகத்தில்  திருவாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரோ ”திருவாங்கூர் சமஸ்தானம் இனி தனி நாடாக இயங்கும்” என அறிவிக்கிறார்.

இங்கு மன்னனும் மக்களும் ஒரே சமயத்தவர்கள்.

ஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த ஹரிசிங் மன்னரோ ”எமக்கு இந்தியாவும் வேண்டாம்….. பாகிஸ்தானும் வேண்டாம் என்று முடிவெடுத்து தனி நாடாக இருக்கவே விருப்பம்” என அறிவிக்கிறார்.

இங்கோ ஆண்ட மன்னன் டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இந்து. பெரும்பாலான மக்களோ இஸ்லாமியர்.

அதற்கு முன்னரே காஷ்மீர் மக்களது உரிமை போராட்டங்களுக்கு முன்னனியில் நின்று போராடி வந்தவர்தான் சேக் அப்துல்லா. இவர் தனது கட்சி மதசார்பற்று அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் ”முசுலீம் மாநாட்டுக் கட்சி”  என்கிற தனது கட்சியின் பெயரையே ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி என துணிச்சலாக மாற்றி அமைக்கிறார்.

வெள்ளையர் வெளியேறும் வேளையில் இந்து அரசர் தனி நாடாக இருக்க முடிவெடுக்க சேக் அப்துல்லாவோ இந்தியாவோடுதான் இணையவேண்டும் என போராட்டத்தில் குதிக்கிறார்.

கட்சியின் பெயரை மாற்றுவதில் இருந்து…. மன்னனின் முடிவையே எதிர்த்து இந்தியாவோடுதான் இணைய வேண்டும் என்று போராட்டங்களில் குதித்தது வரைக்கும் சேக் அப்துல்லா உறுதியாக இருந்ததற்கு எது காரணம்?

நேருவின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை. அவரது வார்த்தைகளின் மீதும்…. வாக்குறுதிகளின் மீதும் இருந்த அசாத்திய நம்பிக்கை.

இந்த வேளையில்தான் யாரும் எதிர்பாரா வேளையில் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான பழங்குடியினர் படை எடுத்து  காஷ்மீரினுள் நுழைகிறார்கள். இதற்கு பாகிஸ்தானின் படைத் தளபதி அக்பர்கான்தான் தலைமை. இது திட்டமிட்ட படையெடுப்பாக இல்லாவிட்டாலும் பாகிஸ்தானுக்குத் தெரிந்து நடந்த படையெடுப்பு.

உள்ளே நுழைந்த கலகக்காரர்கள் தீ வைப்பு…. கொள்ளை….. பாலியல் பலாத்காரம்….. என சகல விதமான நாசச் செயல்களிலும் ஈடுபட……

மன்னர் ஹரிசிங் நிலைமையைச் சமாளிக்க வழி தெரியாது தத்தளிக்க…..

அபயக்கரம் நீட்டுகிறார் ஜவஹர்லால் நேரு.

ஒரு உன்னதமான உறுதிமொழியோடு……..

என்ன அந்த உன்னத உறுதிமொழி?

(அடுத்த வாரம்)

ராஜ ராஜ சோழன் நான்….

நமக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடபுத்தகத்தில் மதிப்பெண்களுக்காக “சோழர் வரலாறு” படித்ததோடு சரி.

சிறு வயதில் அம்மா கூட்டிப் போன ஏ.பி.நாகராஜனின் 4975 மீட்டர் நீளமுள்ள “ராஜராஜ சோழன்” படத்தினைப் பார்த்து வாயில் ஈ போவது கூட தெரியாமல் வியந்திருக்கிறேன். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் படம் அதுதான்.

பின்னர் பல வருடங்கள் கழித்து தஞ்சை மண்ணில் கால் வைத்தபோது பிரமிப்பு விலகாமல் அணு அணுவாக ரசித்த இடம் ஒன்று உண்டென்றால் அது தஞ்சை பெரிய கோயிலாகத்தான் இருக்க முடியும்.

பதிமூன்று அடுக்குகள் கொண்ட அதன் வேலைப்பாடுகளும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. நேற்று கட்டிய காமன்வெல்த் விளையாட்டிற்கான பாலமே குப்புறக் கவிழ்ந்து பலபேர் குற்றுயிராய்க் கிடக்கும்போது பத்து நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் இன்னமும் கம்பீரமாய் காட்சி தருகிறதே என்ன காரணம்?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பி.இ படிப்பும் இல்லை…… எம்.இ.படிப்பும் இல்லை…… பெற்றோரது அடிவயிற்றில் கட்டியிருக்கும் பணத்தைக் கூட அடித்துப் பிடுங்கும் பொறியியல் கல்லூரிகளும் இல்லை…… அப்புறம் எப்படிக் கை வந்தது இந்தக் கலை?

அதுதான் பட்டறிவுக்கும் பாட அறிவுக்கும் உள்ள வேறுபாடு.

பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மக்களது அயராத உழைப்பும்…. தொழில் நுட்ப அறிவும்…. கலை நயமும்தான் இன்று அது விண்ணுயர எழுந்து நிற்கக் காரணம். கூடவே மன்னனது ரசனையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கும்தான்.

சரி…… இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்…… வழிபாட்டுத்தலங்கள்…… சிற்பங்கள்….. ஓவியங்கள்……… அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?

“மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?” எனக் கேட்டுவிட்டு உப்பரிகையில் ஓய்வெடுக்கப் போய் விட்டார்களா? அல்லது மக்களோடு மக்களாக நின்று அவர்களது துயரங்களைத் துடைக்க துணை நின்றார்களா? இதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.

தஞ்சை பெரிய கோவில் கம்பீரமாக நிற்கிறது வெளிப்புறத்தில். ஆனால் மக்கள் வழிபாடு நடத்துவதற்கும்….. வழிபடுவதற்கும் சமத்துவம் நிலவியதா உட்புறத்தில்?

இல்லை……. இல்லை……. இல்லை……. இல்லை……. இல்லவேயில்லை என்கின்றன சோழர் காலத்திய கல்வெட்டுகளும் ஆய்வு நூல்களும்.

சமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல சோழப்பேரரசில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது? அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது? பெண்களது நிலை எவ்வாறு இருந்தது? நிலம் யார் வசம் இருந்தது? பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது? இதுவெல்லாம் முக்கியமில்லையா நமக்கு?

சரி….. மக்கள் எப்படி இருந்தார்கள்? அதை முதலில் பார்ப்போம். சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காவிரி ஆற்றின் தென் கரையில் இருந்த இரு ஊர்களை தங்களின் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்கள் அதிர்ந்து போனார்கள். ஊரே சாதியால் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து.

ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி சோழப்பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இடுகிறான். அதன் பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளர பொன்னையும் பொருளையும் நிலத்தையும் தானமாக அள்ளி வழங்குகிறார்கள். எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு மட்டும். இதனை துல்லியமாகப் போட்டு உடைக்கிறார் கே.கே.பிள்ளை என்கிற வரலாற்று ஆய்வாளர்.

“வேத நெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடி புகுந்த பிராமணருக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினர். பிராமணர்களுக்குத் தனி நிலங்களும், முழு கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் வழங்கின. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிர்வாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் கூட அவற்றினுள் செயல்பட முடியாது. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள்…. கட்டணங்கள்…… கடமைகள்….. ஆயங்கள்…… என அனைத்தில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டன.” என்று சோழர்களது கல்வெட்டுக்களில் இருந்தே எடுத்துக் காட்டி அம்பலப்படுத்துகிறார் கே.கே.பிள்ளை.

நிலமும் இலவசம்…..

வரிகளும் கிடையாது……

கட்டணங்களும் இல்லை…..

அரசன் கூட கேள்வி கேட்க முடியாது……

அதாவது இன்றைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்காக ஏகப்பட்ட வரிச் சலுகைகளுடனும், ஏகப்பட்ட வரி விலக்குகளுடனும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள  ”சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப்” (S E Z – Special Economic Zone) போல…..

அன்றைக்கு ராஜராஜ சோழன் அமைத்துக் கொடுத்தது ”சிறப்புப் பிராமண மண்டலங்கள்”.

அதாவது (S B Z – Special Bramanical Zone).

இதிலென்ன தவறு? தனக்கு எவரைப் பிடிக்கிறதோ அவருக்கு விருப்பமானவற்றையெல்லாம் வாரி வழங்குவதுதானே மன்னர்களது விருப்பம்? குற்றமில்லைதான்.

ஆனால் அதே சோழ சாம்ராஜ்ஜியத்தில் மற்ற மக்கள் எப்படி வாழ்ந்தார்களாம்? அதற்கும் இருக்கிறது கல்வெட்டு.

”வேதம்” ஓத வந்தவர்களுக்கு சோழ அரசு சலுகை காட்டிய அதே வேளையில் உழவர்கள், கைவினைக் கலைஞர்கள், பிறதொழில் செய்வோர் மீது கடுமையான வரிகளை விதித்தது. இவற்றுள் அடித்தள எளியமக்களான சலவையாளர்கள், குயவர், தறி நெய்பவர், தட்டார், ஓடங்களைச் செலுத்தியோர் மீது முறையே….. வண்ணார்பாறை பயன்பாட்டு வரி….. குசக்காணம்……. தறிக்கூரை….. தட்டார்பாட்டம்…. என வரி மேல் வரி போட்டுத் தள்ளியதோடு நிறுத்தாமல் உழவர்கள் ஒரு பயிருக்கு ஊடாக இன்னொரு பயிரை வளர்த்தால்கூட அதற்கும் ஊடுபோக்கு என வரி போட்டு பரிபாலனம் செய்தவர்கள்தான் இந்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ பராக்கிரம ராஜ கெம்பீர மன்னர்கள்.

நிர்வாகமும் நீதியும் இப்படியிருக்க….. பெண்கள் நிலை எப்படி இருந்ததாம்? அதற்கும் இருக்கிறது ஆப்பு. எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.

அது சரி…. கல்வி?

அதுவும் குலத்துக்கொரு நீதிதான். அப்புறம் எங்கு போகும் எல்லோருக்கும் கல்வி?

இதையெல்லாம் பாமரன் சொன்னால் தப்பென்று சொல்லலாம். ஆனால் பண்டிதர்கள் சொன்னால்? அதுவும் இவைகளை தமிழக அரசே வெளியிட்டால்? ஆம் தமிழக அரசே வெளியிட்டது.. இப்போதல்ல. 1976 இல். அதுவும் தி.மு.க. அரசு.

தி.மு.க.ஆட்சியில் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனமே “தமிழ் நில வரலாறு” என்கிற நூலை வெளியிட்டது அதன் பதிப்பாசிரியர் கோ.தங்கவேலு. சோழர் கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கு எப்பேர்ப்பட்ட பொல்லாத காலமாக விளங்கியது என்பதை அக்குவேறாக அலசியது அந்த நூல். பிற்பாடு தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இது ”பிரம்மதேய ஆலோசகர்” குழுவால் தடை செய்யப்பட்டது.

மன்னர் காலத்தில் ஏன் மார்க்சீயம் வரவில்லை? ராஜராஜ சோழன் ஏன் பின் நவீனத்துவம் பற்றிப் பேசவில்லை? என்பது போன்ற கேள்விகளல்ல நமது கேள்விகள்.

ஈழம் வென்றதும்….. கடாரம் சென்றதும்……. வெற்றிக்கொடி நாட்டியதும் மகிழத்தக்கதுதான் ஆனால்……. தனது குடிமக்களுக்குள்ளேயே ஏன் பாகுபாடு காட்டினான்? ஒரு பக்கம் சுகத்தையும்….. ஒரு பக்கம் சுமையையும் ஏற்றியது ஏன்? இந்தக் கேள்விகள் நிறைகளைப் பற்றி சிலாகிக்கும் வேளையிலும் நெஞ்சில் உறுத்தும் கேள்விகள் அல்லவா?.

சோழர்கள் என்றில்லை பல்லவ மன்னர்களும், நாயக்க மன்னர்களும் இன்னபிற இத்யாதி மன்னர்களும்தான் என்ன கிழித்தார்கள்?

நாம் மன்னர் காலத்தை விட்டு வெகு நூற்றாண்டு வந்தாயிற்று. அப்புறம் எதற்கு அரசு செலவில் விழா?

என்பதுதான் நமது வினா.

இது……

”கோயில்கள் கூடாதென்பதல்ல. கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை.”

என்று இன்றல்ல……. ஐம்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவருக்குத் தெரியாதா……..

சோழர்கள் காலத்தில் கோயில்கள் யாருடைய கூடாரங்களாக இருந்தன என்பது.?

ஒரு கொடியில் இரு மலர்கள்…

ஒரு வழியாக அணுவிபத்து நஷ்ட ஈட்டு மசோதாவை காங்கிரசும் பிஜெபி யும் கைகோர்த்து நிறைவேற்றி ஆயிற்று.

அணு உலை என்றாலே ஆபத்து கிடையாது என இதுவரை அடித்துச் சத்தியம் செய்து வந்தவர்கள் இப்போது அணு விபத்து நடந்தால்எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கலாம் என்கிற அளவுக்கு ”இறங்கி” வந்திருக்கிறார்கள். அணுசக்திக் ”கொள்கை”யைப் பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

நஷ்ட ஈட்டுத் தொகையை நிர்ணயிப்பதிலும், அணு உலைக்கான கருவிகளை வழங்கும் நிறுவனங்களை ”விபத்துக்கு” பொறுப்பாக்கலாமா….?. கூடாதா? என்பதிலும்தான் பிரச்சனை.

ஆபத்து எரிமலையை என்றென்றும் தாங்கி நிற்கும் அணு உலைகளே கூடாது என்பதில் இரு தரப்பும் மெளனம்தான் சாதிக்கின்றன. தகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியல் கண்டுபிடித்த “இடதுசாரிகளும்” இதில் அடக்கம்.

அப்படி நடந்தால் எவன் சாவான்? எப்படிச் சாவான்? செத்தவனுக்கு எவ்வளவு கொடுக்கலாம்? என்பதற்கான மசோதாவை விஞ்ஞான மந்திரி சவான் தாக்கல் செய்து ஏழை மக்கள் வயிற்றில் புளுட்டோனியப் பால் வார்த்திருக்கிறார்.

இந்த ”அரிய செயலை” செய்ய விட்டதற்காக எதிர்க்கட்சியான பிஜெபி.க்கு ஆளும் கட்சி நன்றி சொல்வதென்ன…… பிஜெபி. ஆளும்கட்சிக்கு நன்றி சொல்வதென்ன….. சொக்கத்தங்கம் சோனியாவின் ”மியாவ்” மன்மோகன் அத்வானிக்குப் போன் போட்டு ”பகுத் அச்சா ஜீ” என பரவசப்படுவதென்ன….. பதிலுக்கு அத்துவானியும் நிதி மந்திரிக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக ஆனந்தக்கண்ணீர் வடிப்பதென்ன…… அட…… அட…… கண்கொள்ளாக்காட்சிதான் போங்கள்.

ஏதோ இன்று மட்டும்தான் இவர்களுக்குள் இந்தப் பிணைப்பு என்று எண்ணினால் நாம் ஏமாந்துதான் போவோம்.

வெளிப்பார்வைக்குப் பார்த்தால் பிஜிபி.யும் காங்கிரசும் வேறு வேறாகத்தான் தோன்றும். ஆனால் இந்த இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது கொஞ்சம் ஊன்றிப்பார்த்தால்தான் புரியும்.

அன்றைய காந்தி கொலையில் இருந்து இன்றைய அணுவிபத்து நஷ்ட ஈட்டுக் கொள்கை(?) வரைக்கும் இரண்டுமே ஒன்றுதான்.

(இந்த இரண்டின் லட்சணங்களையும் புட்டுப் புட்டு வைக்கும் புத்தகம் ஒன்றினை சமீபத்தில்தான் வாசித்தேன். எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை எழுதி ”அடையாளம்” பதிப்பகம் வெளியிட்டுள்ள “இந்து இந்தியா” என்கிற நூல்தான் அது. காங்கிரஸ் பற்றியும் பிஜெபி பற்றியும் ஏகப்பட்ட வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுகிறது அந்தப் புத்தகம். வாசிக்க விருப்பமுள்ளவர்கள் யோசிக்காமல் டயல் செய்ய வேண்டிய எண்: 04332 273444.)

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்……….

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கொல்லப்படுவதற்கு ஓரிரு மாதங்கள் முன்பே…….

“காந்தியைக் கொலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப் படுகின்றன……

பிர்லா மாளிகையில் காந்தி மீது குண்டு வீசப்படுகின்றது……..

நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த கொடூர நிகழ்ச்சி குறித்த புலன்விசாரணையை மேற்கொண்ட போலீசார் முழு விவரங்களையும் கண்டறிவதில்லை……

குண்டுவீச்சுக்குப் பிறகு காந்தியின் உயிரைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகளோ……. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை……

மதவெறி பிடித்து மோதிக்கொள்ளும் தரப்புகள் ரத்ததாகத்தை நிறுத்த வேண்டும் என காந்தி உடனடியாக உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் (இரண்டரை மணி நேரமல்ல)………

ஆனால் காந்தியின் உண்ணாநிலை தனக்கு எதிரானது என வல்லபாய்பட்டேல் முடிவுகட்டிக் கொண்டு போக வேண்டாம் எனப்பலர் தடுத்தும் காந்தியைக் கைவிட்டு விட்டு டெல்லியில் இருந்து பம்பாய்க்கு பொட்டி தூக்குகிறார்…….

எந்த நேரமும் கொல்லப்படலாம் என ஆபத்தில் இருக்கும் காந்தியை அம்போ என விட்டுவிட்டு பட்டேல் பம்பாய் சென்றது உள்ளூர் போலீஸ்காரர்கள் மீது மிக மோசமான அவப்பேரை உருவாக்குகிறது.

ஏனெனில் பாதுகாப்புக்கான ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டியதே பட்டேல்தான். உள்ளூர் அதிகாரிகள் சர்தார் பட்டேலிடம் இருந்து காந்தியைப் பாதுகாப்பதற்கான உத்தரவுகள் வரும் வரும் வரும் வரும் வரும் எனக் காத்திருக்கிறார்கள்.

ஆனால் வெறும் காத்துதான் வருகிறது பம்பாய்க்குப் போன பட்டேலிடம் இருந்து.

காந்திஜியின் பாதுகாப்புக்காக சிறப்பு ஆணைகள் எதையும் பட்டேல் வழங்காததைக் கண்ட அதிகாரிகள் “இந்தக் கிழவனுக்கெல்லாம் எதற்குப் பாதுகாப்பு?” என மூலையில் ஒதுங்கி குறட்டை விட ஆரம்பிக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு பொன்னான வாய்ப்புக்காகக் காத்திருந்த நாது ராம் கோட்சே நிர்க்கதியாய் தனித்து விடப்பட்ட அந்தக் கிழவரை சுட்டுக் கொல்வதன் மூலம் தன் தாகத்தைத் தணித்துக் கொள்கிறான்.

இந்த நாது ராம் கோட்சேவுக்கும் இந்து மகாசபைக்கும் இருந்த  நெருங்கிய தொடர்பு உலகறிந்த ரகசியம்.

காந்தியின் படுகொலைக்கு சர்தார் பட்டேலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணனும், பி.ஜி.கோஷும் பகிரங்கமாகவே அறிவிக்கின்றனர். இந்திய பாகிஸ்தான் பிரிவினையை இறுதிவரை எதிர்த்த அபுல்கலாம் ஆசாத்தும் அறிவிக்கிறார்.

“இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா” என அன்றைக்கே கவுண்டமணி பாணியில் சொன்ன சர்தார்பட்டேல் அதற்கு சொன்ன காரணம் என்ன தெரியுமா?

“இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாம் மகாகனம் பொருந்திய காங்கிரஸ் பேரியக்கத்தை பலவீனப்படுத்துவதற்காக எதிரிகளால் சொல்லப்படுபவை. காந்திஜி மீது எனக்கு இருக்கும் விசுவாசம் உறுதியானது. அவரது மறைவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கட்சி ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.” என்று காங்கிரஸ் ”காரிய” கமிட்டிக் கூட்டத்தில் முழங்கினார் பட்டேல்.

இன்றைக்கும் எதிர்க்கட்சி ஆட்சிகளின் ”கதை” முடிக்கவோ அல்லது “கதை” முடிந்ததுமோ “காரியம்” செய்வதற்காக காரியக் கமிட்டியைக் கூட்டுவதுதானே அப்பேரியக்கத்தின் தொட்டில் பழக்கம்? இன்றைக்குப் போலவே அன்றைக்கும்  நடந்ததில் அதுவும் ஒன்று.

காங்கிரசை அறிந்தவர்கள் பட்டேலின் நதிமூலத்தை அறிவார்கள்.

பிஜெபி.யை அறிந்தவர்கள் இந்து மகாசபையின் நதிமூலத்தை அறிவார்கள்.

இன்னமும் புரியலேன்னா……

இன்றைய பிஜெபி.தான் நேற்றைய காங்கிரஸ்.

அல்லது நேற்றைய காங்கிரஸ்தான்

இன்றைய பிஜெபி.

மொத்தத்தில்…….

நடிகர் அர்ஜுனின் சினிமாக்களில் வருவது போல குத்திட்டு நிற்கும் “தேசபக்தி”……

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக தொடைதட்டிக் கொண்டு விடும் சவால்கள்…….

வெண்டைக்காய் மொழிக் கொள்கை…….

மாநிலத்துக்கு மாநிலம் மரம் தாவும் மகத்தான ”தேசியக்” கொள்கை…..

அது தடாவைக் கொண்டு வந்தால்……

இது பொடாவைக் கொண்டுவரும் சனநாயகச் சாக்கடைக் கொள்கை…….

என எல்லாவற்றிலும் இரண்டுமே ஒரே கொடியில் பூத்த இரு மலர்கள்தான்.

மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும்

கடந்தவாரம் அயல்நாடொன்றில் இருந்து அவசர அழைப்பு.

“அண்ணே நம்ம பாலா அண்ணனைப் பத்தி செய்தி ஒண்ணு வந்திருக்கு….. பாத்தீங்களா? அவர் உயிரோடுதான் இருப்பார் போலிருக்கு…… ராணுவ முகாமில் எடுத்த புகைப்படத்தோடு இன்னும் பல தகவல்கள் வெளியாகி இருக்கு……” என்றபடி நீண்டது அந்த உரையாடல்.

என்னது….. தோழர் பாலா இன்னமும் இருக்கிறாரா…….?

அட….. அப்படியானால் இதற்கு முன்னர் வந்த செய்திகள் தவறானதுதானா?…… நெஞ்சைப் பிளக்கும் சோகங்களுக்கு மத்தியிலும் ஒரு மெல்லிய ஒளிக்கீற்று…….

அந்த முனையில் இருந்து நண்பர் பேசப்பேச என் நினைவுகள் இருபத்தி ஐந்து ஆண்டுகள் பின்னே பயணிக்க ஆரம்பித்து விட்ட்து. ஈழ விடுதலைக்காகப் போராட களத்தில் குதித்த இயக்கங்களில் ஒன்றுதான் ஈரோஸ். அதனைத் தமிழில் ஈழப் புரட்சிகர அமைப்பு என அழைப்பார்கள்.

சமூகத்தைப் பற்றிய சீரிய புரிந்துணர்வும்…. உலக நாடுகளது உரிமைப் போராட்டங்களைப் பற்றியும் அதனது படிப்பினைகளைப் பற்றிய துல்லிய பார்வையும் கொண்ட அமைப்புதான் அந்த ஈரோஸ். தனியான தலைவர் என்று எவருமில்லை அந்த இயக்கத்திற்கு. கூட்டுத் தலைமைதான். அப்படி அதில் ஒரு பொறுப்பாளராகத்தான் தோழர் பாலகுமாரன் அறிமுகம் எனக்கு.

எளிமை என்றால் அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான் க.வே.பாலகுமார்.

ஆர்ப்பரிக்காத அரசியல்…..

எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பெருந்தன்மை….

இந்தியப் பிரதமரையே முதல் நாள் சந்தித்துவிட்டு வந்தாலும் மறுநாள் ஒரு ஓட்டை சைக்கிளில் கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றிவரும் எளிமை…..

இதுதான் தோழர் பாலா.

ஒருமுறை பத்திரிகை ஒன்றின் நேர்காணலுக்காக பாலாவைச் சந்தித்து முடித்த பின்னர் மிகுந்த தயக்கத்தோடு அவருடைய புகைப்படம் ஒன்றினைக் கேட்கிறேன். “நம்ம சனங்களுக்கு எங்கட கருத்துக்கள்தான் முக்கியமே தவிர படங்களல்ல…..” என மிக மென்மையாக மறுக்கிறார் பாலா. அதன்பிறகு சுந்தர், பார்த்திபன் என யாரைக்கேட்டாலும் அது கிடைக்காது என எனக்குத் தெரியும். வேறு வழியின்றி நடையைக் கட்டுகிறேன்.

அதன்பிறகு அந்தத் தோழனுடன் எழுத்தாளன் என்ற வகையில் எண்ணற்ற சந்திப்புகள்…..

ஈழத்தில் இருந்து வந்திருக்கும் ஏதிலிகளால்(அகதிகள்) ஏற்பட இருக்கும் கலாச்சார மாற்றங்கள்…..

பொறுப்பற்ற சில குழுக்களால் ஏற்பட இருக்கும் சில சட்ட ஒழுங்கு சிக்கல்கள்….

நாளை மலரப்போகும் ஈழம் எதிர் கொள்ள வேண்டிய பொருளாதார சவால்கள்….. என அனைத்தையும் முன்கூட்டியே தெளிந்த பார்வைகளோடு விளக்கிச் சொல்வார் க.வே.பாலகுமாரன்.

அமைச்சரைச் சந்தித்தாலும் சரி…… கோடம்பாக்கம் பெஸ்ட் ஆஸ்பத்திரி அருகிலுள்ள ஒரு டீக்கடைக்காரரைச் சந்தித்தாலும் அதே கனிவு…. அதே அன்பு….. அதே நிதானம்… அதுதான் பாலா.

1990க்குப் பிற்பாடு அந்த ஈரோஸ் இயக்கம் கலைக்கப் பட்டதும்….. அதில் கொஞ்சம் பேர் புலிகளுக்குப் போனதும்…. இன்னும் கொஞ்சம் பேர் தனித்து இயங்கியதும்…… இந்த இரண்டிலும் ஒப்புதலில்லாத கொஞ்சம் பேர் புலம்பெயர்ந்து போனதும் பின்னர் நடந்த நிகழ்வுகள். அதில் புலிகளோடு போன பிரிவில் இருந்தார் பாலா.

ஈரோஸில் பங்கெடுத்தாலும் சரி….. புலிகளோடு அரசியல் பணிகளைப் பகிர்ந்து கொண்டாலும் சரி….. எங்கிருந்தாலும் அதனைச் செழுமைப்படுத்தும் விதத்தில் பயனுள்ளதாகத்தான் பாலா இருப்பார் என்பதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் புரிந்து கொண்டோம் நாங்கள். அதன் பிற்பாடு அவரைச் சந்திக்க விடாது காலம் தனது கனத்த திரையைப் போட்டு மூடி விட்டது.

கடந்த ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈழப்படுகொலைகளில் கொத்துக் கொத்தாய் குண்டுவீசிக் கொல்லப்பட்ட மக்கள் எத்தனை ஆயிரம் பேர்……?

கணவனைப் பறிகொடுத்து பரிதவிப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்….?

பெற்றோரைப் போருக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு பரிதவிக்கும் மழலைகள் எத்தனை ஆயிரம் பேர்….?

இந்தப் பேரவலத்தில் எங்கே போய் எம் பாலாவைத் தேட? அதை அவரும் விரும்பமாட்டாரே…..

ஆனாலும் அவ்வப்போது சேதிகள் வந்து கொண்டுதான் இருந்தது.

”டிசம்பரிலேயே குண்டு தாக்குதலுக்கு ஆளான அவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்த நிலையில் மே 17 ஆம் தேதியன்று முன்னணிப் போராளிகள் சிலரை அழைத்துக் கொண்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்துவிட்டார்….. ”

”கொழும்புக்கு கொண்டு சென்று விட்டார்கள்…… ”

”சிறுகச் சிறுக சித்ரவதை செய்து கொல்லும் “நாலாவது மாடி”க்கு கூட்டிப்போய் விட்டார்கள்…… ” என எதுவும் உறுதிபடுத்தப்படாத எண்ணற்ற சேதிகள்…… நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்காகவே உழைத்த அந்த நல்ல மானுடனையும் மறக்கத் தொடங்கினோம்.

முள்ளிவாய்க்காலில் தப்பி……. முள்வேலி முகாம்களில் சிக்கியவர்களைப் பற்றி மட்டுமே எங்களைப் போன்றவர்கள் பேசத் தொடங்கினோம்…..

அப்படியாயின் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அந்தப் பனிரெண்டாயிரம் போராளிகள்?

தன் வீடு….

தன் குடும்பம்….

தனது கல்வி…..

தனது காதல்… என சகலத்தையும் துறந்து இந்த மக்களின் விடிவுக்காகவும் இந்த மண்ணின் விடுதலைக்காகவும் ஆயுதம் தரித்தார்களே…..

அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா?

மக்களையே சிங்கள அரசு சின்னா பின்னப்படுத்தும்போது அந்தப் போராளிகளை எந்தெந்தவகைகளில் எல்லாம் சித்ரவதை செய்வார்கள்?

”நரகம்” என்றால் என்னவென்பதற்கான அர்த்தத்தினை இக்கட்டுரை எழுதும் நொடி தொடங்கி நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி வரைக்கும் சந்தித்துக் கொண்டிருக்குமே அந்த ஜீவன்கள்……

சுயநலமற்ற அந்த ஜீவன்களின் விடுதலைக்காக யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்?

போரில் சரண் அடைந்த எந்தப் போராளியாக இருந்தாலும் அவர்கள் கண்ணியத்துடனும், மனித மாண்புடனும் நடத்தப்பட வேண்டும் என்கிற ஐ.நா.வின் அடிப்படை விதிகள் ஆகட்டும்…… ஜெனிவா உடன்படிக்கைகள் ஆகட்டும்…… போரியல் நியதிப்படி சிங்கள அரசு கடை பிடிக்கிறதா இல்லையா என்பதை யார் கண்காணிக்கிறார்கள்?

மக்கள் இருந்த முகாம்களைப் பார்வையிட்டுவிட்டு “பாலும் தேனும் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடுகிறது” எனச் சொல்கிற மனித உரிமைப் புடுங்கிகள் எவராவது சரணடைந்த போராளிகள் இருக்கும் முகாம் பக்கமாவது எட்டிப் பார்த்தார்களா?

ரத்தமும் சிறுநீரும் மலமும் ஒரு சேர ஓடும்…… ஓலங்கள் ஓயாத அந்த சித்ரவதைக் கூடங்கள் குறித்து சிந்தித்தாவது பார்த்தார்களா?

அவர்கள் கிடக்கட்டும் நாமாவது சிந்தித்தோமா?

முதல் உலகப் போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் சரண் அடைந்த போர் வீரர்கள் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் வகையில் எவ்வாரெல்லாம் நடத்தப்பட்டார்கள்…… சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டார்கள் என்கிற வரலாற்றையெல்லாம் நாவல்களாகவும்….. திரைப்படங்களாகவும் இன்றைய வரை பார்த்துப் பரிதவித்துக் கொண்டிருக்கிற நம்மில் எத்தனை பேர் சரண் அடைந்த அந்தப் 12000 பேருக்காகக் குரல் கொடுத்திருக்கிறோம்?

அவர்கள் யாருக்காக போராளிகள் ஆனார்கள்?

நாம் பாதுகாப்பாக பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பதுங்கு குழிகளுக்குள் நின்று பாதுகாத்தவர்களல்லவா அந்தப் பிள்ளைகள்?

போரியல் நியாயங்களின்படி எத்தனை பேர் சரண் அடைந்தார்கள்?

தெரியாது……

எத்தனை பேர் மிஞ்சியிருக்கிறார்கள்?

தெரியாது……..

எதற்காவது பட்டியல் இருக்கிறதா?

கிடையாது.

இன்று பாலகுமாரைப் பற்றிப் பேசுவோம்….

நாளை யோகியைப் பற்றிப் பேசுவோம்…..

நாளை மறுநாள் புதுவை இரத்தினதுரையைப் பற்றிப் பேசுவோம்…..

அப்புறம்?

இதோ ராணுவ பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தோழர் பாலா தனது மகனுடன் இருக்கும் காட்சி. இதனை லங்கா கார்டியன் பத்திரிகை வெளியிட்டு….

சரண் அடைந்த பின்னர் எடுக்கப்பட்ட இப்படத்திற்குப் பிறகு என்னவானார் பாலா?

அவருடன் சரண் அடைந்தவர்கள் கதி என்ன?

உயிருடன் இருந்தால் இப்போது அவர்கள் எங்கே?

அப்படி உயிரோடு இல்லாவிடில் சரண் அடைந்த போர்க் கைதிகளைக் கொல்வது போர்க்குற்றம் ஆகாதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

பாலா சரண் அடைந்த பிறகு நடந்த இலங்கையின் அதிபர் தேர்தலின் போது பச்சைத் துரோகி கருணாவும், படுபாதகன் பசிலும் இவரை அணுகி மிச்சமுள்ள மக்களுக்கும் குழிவெட்டக் கூப்பிட்டிருக்கிறார்கள். ”இதற்கு மறுத்தால் என்னை என்ன செய்ய முடியும்! எனது உயிரைப் பறிக்க முடியும். அவ்வளவுதானே?” என்று சுயமரியாதை மிக்க மனிதனாக நின்று முழங்கினாராம் பாலா.

இப்படி கேட்பாரற்ற அனாதைகளாய்ப் போன அவர்களில் இருந்து ஒவ்வொரு ஜீவனாய் இழந்து கொண்டே இருக்கப் போகிறோமா நாம்?

அல்லது சரணடைந்த ஜீவன்களுக்கான நேர்மையான விசாரணையை…….

சித்ரவதைகளற்ற கண்ணியமான பாதுகாப்பினை……

தொலைத்தவர்கள் போக இருப்பவர்கள் பட்டியலினை…….. வலியுறுத்தி வீதியில் இறங்கப் போகிறோமா?

இதுதான் களத்திலும்….. புலத்திலும்…. இருக்கும் நம் போன்றோர் முன்னிருக்கும் பிரதான கேள்வி.

நாளை நமது முழக்கம் :

ஒன்று விசாரணை செய்.

அல்லது விடுதலை செய் என்பதாக இருப்பது மிக நல்லது.

அதுதான் எஞ்சியிருக்கும் உயிர்களையாவது காப்பாற்ற நம் முன்னே உள்ள ஒரே வழி.

எனக்குத் தெரிந்து அவர்கள் செய்த குற்றம் ஒன்றே ஒன்றுதான்:

அது : தன்னைத் தொலைத்து இந்த மண்ணை மீட்க நினைத்ததுதான்.

ஆப்புகளின் கதை…


இது ஒரு ஆப்புகளின் கதை. ஒருவர் மாற்றி ஒருவருக்கு வைத்த ஆப்பு இப்போது எங்கே வந்து முடிந்திருக்கிறது என்பதைச் சொல்லும் கதை.

ஐஸ்வர்யாராய்…… ஐஸ்வர்யாராய்…… என்னும் முன்னாள் உலகப் பேரழகியும் சல்மான்கான்….. சல்மான்கான் என்கிற இந்திப்பட நடிகனும் முன்னொரு காலத்தில் நகமும் சதையுமாக இருந்து வந்தனர். பிற்பாடு யாருடைய கண்ணோ காதோ பட்டதோ தெரியாதுஅந்த உறவு அம்போன்னு ஆக….. ஐஸ்வர்யாராய் தனக்கு ஆப்பு வைத்துவிட்டதாக நினைத்த சல்மான்கான் சலம்போ சலம்பென்று  சலம்ப அது போலீஸ் ஸ்டேசன் வரை போனது.

இது  சினிமா செய்திகளைக் கண்ணும் கருத்துமாக வரி விடாது வாசிக்கும் சகல கபோதிகளுக்கும் தெரிந்த விசயம்.

அப்போது பார்த்து கண்ணியவானாய் உலக அழகியின் கண்முன்னே வந்து நின்ற நடிகர் விவேக்  ஓபராய் “சகல ஆறுதலின் தேவனாக” அவதாரம் எடுக்க….. அதுவும் கொஞ்சகாலம் ஓடியது.

ஐஸ்வர்யாராயின் அன்பைப் பெற அலப்பறை வழிமுறை செல்லுபடியாகாது என்பதைப் புரிந்து கொண்ட மிஸ்டர்.கண்ணியம்  சலம்பல் சிங்கத்தின் கதி தனக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்று முடிவுகட்டி சமூகசேவை சிங்கமாக அவதாரம் எடுத்து சுனாமிக் கரையோரங்களில் சுற்றி வந்தார்.

ஆனால் அந்த ஆசாமிக்கும் வந்தது ஆப்பு அமிதாப்பச்சன் மகன் அபிசேக்பச்சன் வடிவத்தில். அந்த அபிசேகப்பச்சனை கரம் பிடித்ததன் மூலம் ஆப்புகள் முறையே சல்மான்கான் மற்றும் விவேக் ஓபராய் இருவருக்கும் சரிசமமாக அடிக்கப்பட்டது. ஐஸின்ஆப்பால்அல்லோலகல்லோலப்பட்ட இருவரும் மரியாதை நிமித்தமான மறு ஆப்புக்காகக் காத்திருந்த வேளையில்தான்…….

இடைவேளை……….

ஈழத்தில் சிங்களக்காடையர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்ததும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையின் விளைவாக மயான அமைதி ஏற்படுத்தப்பட்டதும் நடந்து முடிந்தது. ரத்தக்கறைகளை மறைக்க கேளிக்கை விழாக்களை கொண்டாட வேண்டிய நிர்பந்தம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இந்த வேளையில்தான் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை கொழும்பில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டது. ”படுகொலைகளை மறைக்கத்தான் இந்தக்கூத்தும் கும்மாளமும் இதில் எக்காரணம்கொண்டும் கலந்துகொண்டு விடாதீர்கள்” என ஒட்டுமொத்த தமிழர்களது வேண்டுகோளையும் ஏற்று தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது அமிதாப் பச்சன், ஷா ருக் கான்,  ஐஸ்வர்யா ராய், அமீர் கான், அபிஷேக் பச்சன் உட்பட பலர் இதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர் என்பது நாம் ஏற்கெனவே அறிந்த செய்தி.

அதுவும் அதன் செய்தித் தொடர்பாளராக இருந்த அமிதாப்பச்சனே தமிழர்களது வேண்டுகோளை ஏற்று புறக்கணித்துவிட்டார் என்கிற செய்தி அவரது மருமகளின் ஆப்புகளால் ஏற்கெனவே அவதிப்பட்டு வந்த சல்மானுக்கும், அந்த ஓப்புராயுக்கும் ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்த….. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது அவர்களுக்குள்.

”மேய்ச்சா மதனிய மேய்ப்பேன் இல்லாட்டி பரதேசம் போவேன்” என்று ஒற்றைக்காலில் நின்றிருந்த இந்த இரண்டும் ”நீ இலங்கை போகாட்டி என்ன? நாங்க போய்த்தான் தீருவோம். எந்தத் தமிழன் எதிர்க்கிறான் பார்ப்போம்…..” என்று தொடைதட்டிக் கிளம்பின.

அப்போதுதான் அரங்கேற ஆரம்பித்தது “அறக்கட்டளை அரசியல்.” அதுவும் அறமே இல்லாத நாட்டில்.

கொலைபாதகன் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே தான் நடத்தி வரும் “அறக்கட்டளை” யின் பெயரால் இலங்கையில் ஒரு விழாவை ஏற்பாடு பண்ண……

இந்தியாவில் “அறக்கட்டளை” ஒன்றை நடத்திவரும் ஆப்பழகன் ஓபராய் அங்கு போய் இறங்க……

ஏற்கெனவே மொரீசியசில் “ரெடி” என்கிற தனது இந்திப்பட சூட்டிங்கை நடத்துவதாக இருந்த முதலாம் ஆப்பழகன் சல்மான்கான் அதனை இலங்கைக்கு மாற்றிக் கொண்டு கொழும்பில் கால்வைக்க….

எங்கியோ போற மாரியாத்தா…..

எம்மேல வந்து ஏறாத்தா….. என்கிற கதையாக ஏற்கெனவே துயரத்தின் விளிம்பில் நிற்கும் தமிழர்கள் மீது வந்து ஏறின இந்த ரெண்டு ஜென்மங்களும்.

கதாநாயகன் போனால் கதாநாயகி போக வேண்டாமா? அப்படிப் போனவர்தான் சேச்சி அசின்.

“என்னாத்தை சொல்வேணுங்கோ….. வடு மாங்கா ஊறுதுங்கோ” என்று தமிழகத்தில் ”கலைச்சேவை” செய்து கொண்டிருந்த அசின் “தயிர்சாதம் ரெடி பண்ண” இந்திக்குத் தாவினார். அப்படியே இந்தி “ரெடி” சூட்டிங்குக்காக இலங்கைக்கும் தாவினார்.

ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழ்த் திரை உலகினரின்  தடை உத்தரவை தூக்கி குப்பைக் கூடையில் வீசிவிட்டு ”ஐபா (திரைப்படவிழா) பிரச்சினை முடிந்து விட்டது. இலங்கைக்குள் செல்ல தொழில் துறையினருக்கும், விளையாட்டுத் துறையினருக்கும்  தடையில்லை. கலைஞர்களான எங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? இதையும் மீறி தடை விதிக்கப்பட்டால் அது குறித்து நான் கண்டுகொள்ள மாட்டேன்.” என்று முதலில் திமிர்த்தனமாக சிங்கள அரண்மனையில் இருந்து பேட்டி கொடுத்தார்.

ஒருவேளை நாளை இந்திப்பட உலகம் தனக்கு அல்வா கொடுத்துவிட்டால் தமிழ்நாட்டுப் பக்கம் தப்பித்தவறிக்கூட தலைவைத்தும் படுக்கமுடியாதே என்ன செய்ய?

அட…. இருக்கவே இருக்கு “அறக்கட்டளை டெக்னிக்”.

ஒன்றைரை மாதமாய் ஈழத்தமிழர் அவலம் குறித்து அமைதி காத்த அம்மணி வாழும் தெரசாவாய் அவதாரம் எடுத்தார்.

”தமிழ் மக்களைக் காப்பாற்ற அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்து விட்டேன். ஐந்தே நாட்களில் 300 பேருக்கு ஆபரேஷன் ஆகிவிட்டது. இன்னும் பலருக்கு பண்ண 5 கோடி ஒதுக்கி இருக்கிறேன்.” என்று அம்மக்களது கண்களைப் பிடுங்கி இந்த கதிக்கு ஆளாக்கிய ராஜபக்சேவின் தர்மபத்தினியை உடன் வைத்துக் கொண்டு அள்ளிவீசினார் அம்மணி அசின்.

ஆக இனப்படுகொலை நடத்திய ராஜபக்சேவின் மகனும் ஒரு அறக்கட்டளை.

அமிதாப் மருமகளை லவட்டப் பார்த்த விவேக் ஓபராயும் ஒரு அறக்கட்டளை.

இலங்கைக்கு சூட்டிங் போன அசினும் ஒரு அறக்கட்டளை.

அப்புறம் என்ன ஒரே நான்ஸ்டாப் கொண்டாட்டம்தான்.

உண்மையில் இவர்களது அறக்கட்டளைகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்?

சர்வதேச தொண்டு நிறுவனங்களைக் கூட இலங்கைக்குள் கால் வைக்க அனுமதிக்காத சிங்கள அரசு இவர்களை மட்டும் உலா வர எப்படி அனுமதிக்கிறது.?

சர்வதேச பொது மன்னிப்புச் சபை, ஐரோப்பிய யூனியனது மனித உரிமை அமைப்புகள் என எவரையுமே அனுமதிக்காத சிங்களம் எப்படி ஓபராய்களுக்கும், சல்மான்களுக்கும், அசின்களுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து “கண்ணொளி வழங்கும் திட்டம்….. காதொலி வழங்கும் திட்டம்” என சகல திட்டங்களுக்கும் அனுமதி வழங்குகிறதே….. இதன் பின்னிருக்கும் திட்டம் என்ன? இவைதான் நம் முன்னே உள்ள மிக எளிமையான கேள்விகள்.

போதாக்குறைக்கு மருத்துவமனையில் ராஜபக்சே பெண்டாட்டியைப் பக்கத்தில்   வைத்துக்   கொண்டு    பேட்டி   அளித்த   அசின்    சேச்சி

”இலங்கை ஒரு அருமையான நாடு. இங்கு தமிழர்கள் அனைவரையும் அத்தனை சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறது ராஜபக்சே அரசு. சர்வதேச தரத்தில் இங்கு வைத்திய வசதிகள் தரப்படுகின்றன. தமிழர்களுக்கு ராஜ வைத்தியம் அளிக்கப்படுகிறது. எனவேதான் இங்குள்ள தமிழர்களுக்கு சுதந்திரமோ சுயாட்சியோ முக்கியமில்லை.” என்று முழங்கியதைக் கேட்டதும் நம் காலில் இருப்பதைக் கழட்டி நம்மை நாமே தலை தலையாய் அடித்துக் கொண்டால் கூட தப்பில்லை என்று தோன்றியது.

இதற்கிடையே அறக்கட்டளை புகழ் விவேக் ஓபராயுடன் கொங்குச் சீமைச் சிங்கம் சூர்யா சேர்ந்து நடித்த “ரத்த சரித்திரம்” படம் வெளிவருமா வராதா என பெங்களூர் மிரர் பத்திரிக்கை கேள்வி கேட்டபோது “அதெல்லாம் முடிந்து போன கதை. விவேக் ஓபராய் செய்தது சரிதான்” என தன்னை வளர்த்து விட்ட தமிழக மக்களுக்கும் சேர்த்து சூர்யா வைத்தார் ஒரு ஆப்பு.

எது எதன் பின்னாடி அலைஞ்சா என்ன?

எது எதைக் கல்யாணம் கட்டிகிட்டா என்ன?

எது எதை ஆப்படிச்சா என்ன?

இந்தக் கர்மம் எல்லாம் நமக்குத் தேவையா? என நீங்கள் எரிச்சலின் உச்சத்தில் நின்று கேட்பது புரிகிறது.

என்ன செய்ய? கண்ட கண்ட கருமாந்திரமெல்லாம் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்தின் தலையில் கை வைக்கிறதே…. அதன் பின்னணி என்ன…… யார் இயக்குகிறார்கள் என்கிற சதிகளையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் சில கழிசடைகளின் கடந்த காலத்தையும் கவனித்துதான் தீர வேண்டி இருக்கிறது.

அதன் விளைவே துர்நாற்றம் வீசும் இந்த ஆப்பு வரலாறு.

”யானை இளைத்தால் எலி குடும்பம் நடத்தலாம் வா” என்று கூப்பிடுமாம். அதைப் போல ஆயிற்று தமிழர்களின் நிலை.

ஆனால் கவலையும் கோபமும் பொங்க தமிழீழ மக்களும் தமிழக மக்களும் இவர்களது ஆட்டத்தை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அது சல்மான்கானாய் இருந்தாலும் சரி

சேச்சி அசினாயிருந்தாலும் சரி

விவேக் ஒபராயாய் இருந்தாலும் சரி

அந்த ஜந்துவுக்கு ஒத்தூதும் சூர்யாவாகவே இருந்தாலும் சரி……

யாராய் இருந்தாலும்

சரியான நேரம் வரும்போது ஒட்டுமொத்தத் தமிழர்களும் சேர்ந்து வைப்பார்கள் ஒரு ஆப்பு.

ஆனால் அது சாதாரண ஆப்பாக இருக்காது….. உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக வைக்கும் மெகா ஆப்பாக இருக்கும் அது.

வெளிவரட்டும் தமிழனின் உண்மையான வரலாறு!

2010 – மார்ச் மூன்றாவது வாரம்…..

”ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டுதான் தூங்கினோம். எத்தனை நாளைக்குத்தான் சாவை கேட்டுக் கொண்டே இருப்பது. நாளைக்கு சாகப் போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும்?

இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.

தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை. கலைஞர் கூப்பிட்டதினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”

–    பேராசிரியர் ”தொ.ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் “சண்டே இந்தியன்” இதழுக்கு அளித்த பேட்டி.

24-03-2010 – பாளையங்கோட்டை.

”எங்கள் அன்பிற்குரிய ”தொ.ப” அவர்களே…… உங்களது இந்த உணர்வுதான் எங்களை இங்கு வரவைத்திருக்கிறது. நீங்கள் மட்டுமில்லை நாங்களும் கலந்து கொள்ளப்போவதில்லை. செம்மொழி மாநாட்டின் போது இங்கு வந்து உங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து தமிழ் கற்றுக்கொள்வோமே ஒழிய….. ஒருபோதும் அங்கிருக்க மாட்டோம்…..” என்று அன்று அவரது மணிவிழாவில்  பேசியபடி செம்மொழி மாநாட்டுத் துவக்க விழாவன்று கோவையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தோம் நாங்கள். இது ஒரு நூதன நாடுகடத்தல். ஆம்….. வேறு வகையில் சொல்வதானால் தன்னைத் தானே நாடு கடத்திக் கொள்வது.(Self Deportatation). எங்கள் வாகனம் கோவையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் “உடன்பிறப்புகளது” எண்ணற்ற வாகனங்கள் செம்மொழியைச் “செழுமைப்படுத்த” ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தன.

முதல் பொழுது…… செயல்படாத தமிழ்ச்சங்கம் இருக்கும் மதுரையில் கழிய மறுநாள் பயணமானோம் தோழன் தொ.ப.வின் திசை நோக்கி திருநெல்வேலிக்கு. வழக்கமாக இலக்கிய சங்கமம் நிகழும் தெற்கு பஜார் சாலையின் தேநீர்க்கடையில் நண்பர்களோடு தேநீர் சாப்பிடலாம் என காலை வைத்தால்……

“என்னது…. மேடையில் சொன்னமாதிரியே  வந்துட்டீக…..?” என ஆச்சர்யம் அகலாமல் கேட்டார் சாலையில் புத்தகக்கடை வைத்திருக்கும் தோழர்.

மேடையில் ஒன்று…… மேடையை விட்டிறங்கினால் மற்றொன்று…… என பார்த்துப் பார்த்துச் சலித்த பூமியாயிற்றே இது. பாவம் அவர் என்ன செய்வார் அதற்கு?

வீட்டினுள் நுழையும்போது.தமிழிசையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் மம்முது அவர்களின் “தமிழிசைப் பேரகராதி” என்கிற நூலை வாசித்துக் கொண்டிருந்தார் தொ.பரமசிவன்.

எங்கள் பேச்சு எது பல்லவி? எது அனுபல்லவி? அனுராகம் என்பது எது? என்கிற திசையில் நகரத் தொடங்கியது.

உடன் வந்த நண்பர் “அனு” என்றால் என்ன? என்று கேட்க….. ”அனு” என்றால் ”தொட்டடுத்து வருவது” என்றார் தொ.ப. நமக்குத் தெரிந்ததெல்லாம்….. அனுபல்லவி தியேட்டரும்…… நடிகை அனுராதாவும்தான்.

இந்தித் திணிப்பிற்கெதிராக குரல் கொடுத்த பரவஸ்த ராஜகோபாலாச்சாரியார் யார்?

”அபிதகுஜலாம்பாள்” என்பதற்கான அர்த்தம் என்ன?

திராவிட இனத்துக்காக டி.எம்.நாயர் ஆற்றிய பங்குகள் என்னென்ன?

மருதநாயகம் என்றழைக்கப்படும் கான்சாகிப் குறித்து சிலிர்க்க வைக்கும் அம்சங்கள் எவையெவை?

என எண்ணற்ற விஷயங்கள் வந்து விழ விழ மண்டையே சூடாகிப் போனது.

பேச்சு “ஆதிச்சநல்லூர்” பக்கம் திசை மாற…… அதென்ன ஆதிச்ச நல்லூர்? அங்கென்ன இருக்கிறது? என்றேன். சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டம் என்னை ஏற இறங்கப் பார்த்தது. நான் தான் அறியாமைக்கென்றே அவதாரம் எடுத்தவனாயிற்றே….. அப்புறம் எப்படிப் புரியும் அதெல்லாம்?

”தொ.ப.” சிரித்துக் கொண்டே…. ”நாளை நாம் நேரிலேயே போய் பார்க்கலாம்… ஆதிச்சநல்லூரைப் பற்றி அங்கு வைத்தே விளக்கிச் சொல்கிறேன்.” என்றார்.

கோவையில் இருந்து சென்ற நண்பர்களோடு திருநெல்வேலி தோழர்களும் இணைந்து கொள்ள அங்கிருந்து இருபத்தி நாலு கிலோமீட்டர் பயணம். சாலையின் ஓரத்தில் தெரியும் ஒரு பொட்டல் காட்டில் வண்டியை நிறுத்தச் சொல்கிறார் ”தொ.ப.”

“இதுதான் ஆதிச்ச நல்லூர்”

இதென்ன சுடுகாடு மாதிரி இருக்கிறது…… இதைப்போய்….. என்று நண்பர்கள் இழுக்க…..

“உண்மைதான். ஆனால் இது இடுகாடு. ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர் இதுதான்” என்கிறார் அந்த பொட்டல் வெளியைக் காட்டி.

ஒன்றும் புரியாமல் முழித்தவர்களைப் பார்த்து “இன்னும் கொஞ்ச தூரம் நடப்போம் வாங்க….” என முன்னே செல்கிறார் தொ.ப.

ஏறக்குறைய இருபது அடி கூட நடந்திருக்க மாட்டோம்…… காலுக்குக் கீழே சிதில் சிதிலாய் ஓடுகள்…… சில கறுப்பில்…. சில சிவப்பில்…..

“இதுதான் அந்த மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மிச்சம்….. அதோ அதன் வாய்ப் பகுதி….. எவ்வளவு நேர்த்தியான வேலைப்பாட்டுடன் உருவாக்கியிருக்கிறார்கள் பாருங்கள்…….” என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போக வியப்பில் பிரமித்துப் போய் நிற்கிறோம் நாங்கள்.

ஆதிச்சநல்லூரின் ஆதி வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறார் தொ.ப.

”ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம்  மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.” என்று நீண்ட பெருமூச்சோடு  நிறுத்தியவர் அந்தப் பகுதியையே சுற்றும் முற்றும் கவனிக்கத் துவங்குகிறார்.

உடன் வந்த மற்றொரு நண்பர் அவர் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்குகிறார்.

“அதன் பின்பு வந்தவர்தான் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த ரியா. இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்” என முடிக்க…..

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என எல்லோரும் கும்பலாய் குரல் கொடுக்க……

“அவர்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.” என தொடர்கிறார் தொ.ப.

”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்….. அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்…. அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்…. அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்.”

அந்தக்கணம்தான் உறைக்கிறது எனக்கு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” என்பதெல்லாம் நமது ஆட்கள் கொஞ்சம் ஓவராகப் பீலா காட்டிய விஷயமோ என்றிருந்த எனக்கு அவர் பேசப் பேச கிலி கிளப்புகிறது.

அந்த ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்றோம் ஏக்கத்தோடு.

”எல்லாம் அரசியல்தான்” என்றார் பேராசிரியர்.”தொ.ப.” வருத்தத்தோடு.

“இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்சனை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலைத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.” என்று தொ.ப.கூறி முடித்தபோது எங்களது கனத்த மெளனங்களையும் தாண்டி காற்றுமட்டும் பலத்த சலசலப்போடு எதையோ சொல்லிக் கொண்டிருந்தது.

சரி….இங்கு  எடுத்துச் சென்ற பொருட்களையெல்லாம் இங்கேயே கொண்டு வந்து சேர்த்து ஒரு அருங்காட்சியகமாவது வைக்கலாமே… என்றேன்.

”அருங்காட்சியகமும் வரட்டும். ஆனால் அதற்கு முன்னதாக பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிற தமிழனின் வரலாறு வெளியே வரட்டும். அதுவும் உலக வரலாறுகளையே புரட்டிப்போட இருக்கிற உண்மையான வரலாறு.”என்றார் அழுத்தம்திருத்தமாக.

யார் இதைச் செய்ய வேண்டியது?

”மத்திய அரசு.”

அதைச் செய்யவைப்பது?

”மாநில அரசு.”

துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கத்தானே சொல்லியிருக்கிறார் வள்ளுவர்?.

சிரிக்கத் தொடங்கினோம் நாங்கள்.

எல்லாம் முடிந்து வண்டியில் ஏறும் போது மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன் பொட்டல் காட்டை.

இப்போது அது பொட்டல் காடாய்த் தெரியவில்லை எனக்கு.

ஓர் அமெரிக்க ‘தாதாவின்’ வாக்குமூலம்!

”ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…………….. நம்ம தலைவர் கிட்டயே மோதறியா? உன் நெஞ்சுல இருக்குற மாஞ்சா சோத்தை எடுக்காம விடமாட்டேன்….மவனே.” என்று கிடுகிடுக்க வைக்கும் ஆளை என்னவென்று அழைப்பீர்கள்?

“அடியாள்”

“நம்மாள என்னனுடா நெனச்சே? சிங்கம்டா….. தில் இருந்தா வெளிய வாடா” என்று வீட்டின் மீது சோடா பாட்டில் வீசும் ஆளை என்னவென்று அழைப்பீர்கள்?

“அடியாள்”

இறுகக்கட்டிய டை…….

போர்த்தியிருக்கும் கோட்……. மாட்டியிருக்கும் சூட்…….

நாக்கைச் சுழற்றும் ஆங்கிலத்தோடு…… ”உங்கள் நாட்டின் தொலைத்தொடர்பு வசதிகளைப் பெருக்குவதற்காக ஆயிரம் கோடி டாலர்களை கொடுத்து உதவலாம் என்று வந்திருக்கிறோம். எப்படி உங்க வசதி?” என்று கனிவாகக் கேட்கிற கண்ணியவானை ”அடியாள்” என்று சொன்னால் அடிக்கத்தானே வருவீர்கள்?

ஆனால்……

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படித்த….

அமெரிக்காவின் அதிஉயர் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…..

பொருளாதார ஆலோசனை நிறுவனமான  மெய்ன்(MAIN) என்கிற மாபெரும் வர்த்தக நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்ட……

”ஜான் பெர்கின்ஸ்” தன்னை ஒரு அடியாள் என்றே அழைத்துக் கொள்கிறார்.

சாதாரண அடியாள் இல்லை.

அதுவும் ”பொருளாதார அடியாள்”.

சாதாரண அடியாட்கள் கூலிக்குப் போட்டுத் தள்ளுவார்கள்….. அல்லது சோடாபாட்டில் அடிப்பார்கள்……. காட்டிக்கொடுப்பார்கள்……. தேவைப்பட்டால் கூட்டிக் கொடுப்பார்கள்…….

ஆனால் அமெரிக்கப் பல்கலையில் பொருளாதாரம் பயின்ற ஜான் பெர்கின்ஸ் எப்படியாம்?

”நானும் அப்படித்தான். ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் அப்பட்டமாகத் தெருவில் நின்று செய்வதையெல்லாம் நான் படுரகசியமாக காதும் காதும் வைத்த மாதிரி செய்திருக்கிறேன் அத்தனை அட்டூழியத்தையும். நான் செய்தது அனைத்தும் ”நாட்டு நலத்தின்” பெயரால். ஆனால் அடிப்படையில் வித்தியாசம் ஒன்றுமில்லை எனக்கும் அவர்களுக்கும்.” என கடந்த காலங்களில் தான் செய்த அவ்வளவு சதிச் செயல்களையும் அப்பட்டமாகப் போட்டு உடைத்திருக்கிறார் ஜான் பெர்கின்ஸ். அதுவும் தாளமுடியாத குற்ற உணர்ச்சியோடு.

ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அமெரிக்க உளவுக் கும்பலின் சதிகாரச் செயல்களுக்கு எந்தெந்த வகைகளில் துணை போனார் என்று துல்லியமாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் அவர் எழுதியிருக்கிற புத்தகத்தின் மூலம்.

அந்தப் புத்தகத்தின் பெயர்தான் : ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல்  வாக்குமூலம்.”

 

புத்தகம் தமிழில் வெளிவந்து நான்காண்டுகள் ஆயிற்று. அதுவும் ஐந்து பதிப்புகளுக்கும் மேல் வந்தாயிற்று. இன்றுதான் விடிந்திருக்கிறது எனக்கு. உண்மையை ஒளிக்காது சொல்வதானால் இந்த நூலைப் படித்ததும் ஆடிப்போய்விட்டேன் நான். அமெரிக்கா அணுகுண்டு வீசும்…… படைகளை அனுப்பி கொன்று குவிக்கும்……. என்பதெல்லாம் ஊரறிந்த சமாச்சாரங்கள்தான். ஆனால் இவ்வளவு நூதனமாக நாம் விழித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே தொடையில் கயறு திரிக்கும் என்பதுதான் இந்நூலில் உள்ள அதிர்ச்சிகரமான செய்திகள். விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தை  மிக அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் இளம் வழக்கறிஞராக இருக்கும் இரா.முருகவேள்.

நெருடாத வார்த்தைகள்…….

எளியோருக்கும் புரியும் வண்ணம் கைபிடித்து அழைத்துச் செல்லும் மிக மிக இலகுவான நடை……

இது ஆளின் பெயரா அல்லது நாட்டின் பெயரா என்று அனாவசியத்துக்கு குழம்பிக் கொள்ளும் என்னைப் போன்ற குழப்பவாதிகளுக்குக்கூட புரிகிற மாதிரி தமிழில் தந்திருக்கிற முருகவேள் கஞ்சத்தனமில்லாமல் மனதார பாராட்டப்பட வேண்டியவர்.

இந்த நூலை ஜான் பெர்கின்ஸ் எழுதியதை விடவும் அவர் எப்படி இன்னமும் உயிருடன் உலவ விடப்பட்டிருக்கிறார் என்பது மிக முக்கியமானது.

இதை 1982 இல் இவர் எழுத ஆரம்பித்தவுடனேயே பலபக்கமிருந்தும் கடும் எதிர்ப்புகள்………கொலை மிரட்டல்கள்……..லஞ்ச பேரங்கள்…….

மீண்டும் எழுதுவதைத் தள்ளிப் போடுகிறார்.

இப்படி ஒருமுறை அல்ல.

நான்குமுறை.

கடைசியாக அவரது ஒரே மகள்

ஜெசிகாவிடம் தனது அச்சத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அந்தப் பெண் சொல்லிய பதில்தான் மிக அற்புதமானது.

“கவலைப்படாதீர்கள் அப்பா. அவர்கள் உனக்கு முடிவு கட்டினால், நீ விட்ட இடத்திலிருந்து நான் தொடர்வேன். உனக்கு ஒரு நாள் நான் பெற்றுத்தரப் போகும் பேரக் குழந்தைகளுக்காக இதை நாம் செய்தே ஆக வேண்டும்.” இதுதான் அந்த பதில்.

சரி அதில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் அந்த ஜான் பெர்கின்ஸ்? அவரை யார் எதற்காகக் கொல்ல வேண்டும்? என்று நீங்கள் கூவுவது கேட்கிறது. அதை நான் சொல்வதை விட அந்த அமெரிக்கரது வார்த்தைகளிலேயே சொல்வதுதான் சாலச் சிறந்தது. இனி நீங்களாச்சு…… அந்த ஜான் பெர்கின்ஸ் ஆச்சு…..

“பொருளாதார அடியாட்களாகிய நாங்கள் தந்திரம் மிக்கவர்கள்; வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டவர்கள். இன்று நாங்கள் வாளேந்திச் செல்வதில்லை. போர்வீரர்களுக்குரிய ஆடைகளோ, கவசங்களோ பூணுவதில்லை. ஈக்வடார், நைஜீரியா, இந்தோனேஷியாவில் நாங்கள்

உள்ளூர் பள்ளியாசிரியர்கள் அல்லது கடைக்காரர்கள் போலத்தான் உடையணிகிறோம். வாஷிங்டனிலும், பாரீசிலும் அரசு அதிகாரிகள் அல்லது வங்கிப் பணியாளர்கள் போன்ற தோற்றத்தில் உலவுகிறோம். அடக்கத்துடனும் இயல்பாகவும் நடந்து கொள்கிறோம்.”

அப்புறம் என்னதான் சிக்கல்? இவ்வளவு எளிமையாகவும், அடக்கமாகவும் உலவுகின்றவர்களை எதற்காக குறி வைக்க வேண்டும்? என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்யும்.

அது இந்தியாவாகட்டும் அல்லது ஈக்வடார் ஆகட்டும்…… உலக வங்கியோ அல்லது ஏதாவது பன்னாட்டு நிதி நிறுவனமோ கோடிக்கணக்கில் கடன் கொடுக்கிறது என்றால், அந்த நாடு பொருளாதாரத் துறையில் ”ஓகோ”ன்னு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அல்ல. அப்படி எவராவது நினைத்தால் அவரை விட அடிமுட்டாள் யாரும் இருக்க முடியாது. ஆனால் முட்டாள் என்கிற சந்தேகம் அவர்களுக்குள் ஏற்பட்டுவிட முடியாதபடி  கடன் வாங்க வைக்க வேண்டும். அப்படி அவர்களை பெரும் கடன்காரர்கள் ஆக்க வைப்பதற்கான டுபாக்கூர் புள்ளி விவரங்களை அள்ளி வீசுவதுதான் நிபுணர் ஜான் பெர்கின்ஸின் வேலை. இந்த வேலையைச் செய்வதற்காக அவர் ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன திரைமறைவு வேலைகளைச் செய்தார் என்பதை மனத்துயரத்தோடும், மாபெரும் குற்ற உணர்ச்சியோடும் விளக்கும் வரிகள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய வரிகள்.

அவருக்கு இடப்பட்ட கட்டளை:

நாடுகளுக்கு மிகப் பெரிய அளவிற்குக் கடன் வழங்கி அதே பணத்தை பெரும் கட்டுமானத் திட்டங்கள் மூலம் அமெரிக்க நிறுவனங்களே கைப்பற்றி திரும்பவும் அமெரிக்காவுக்கே கொண்டு வருவதை நியாயப்படுத்த வேண்டும்.

கடன் வாங்கிய நாடுகளை போண்டியாக்குவதற்கு வேலை செய்ய வேண்டும்.

அப்படி அவற்றை ஓட்டாண்டி ஆக்கினால்தான் அவை எப்போதும் கடன்காரர்களுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும்.

அப்போதுதான் அமெரிக்காவுக்குத் தேவையான இராணுவத் தளங்களை அமைப்பதென்றாலோ….. அந்நாட்டில் உள்ள எண்ணெய் போன்ற இயற்கை வளங்களைச் சுரண்டுவது என்றாலோ…. ஐ.நா.சபையில் தனக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்றாலோ….. இந்தக் கடன்கார நாடுகள் உறும முடியாது….. திமிர முடியாது…… முக்க முடியாது….. முனக முடியாது.

அதற்கு முதலில் இந்நாடுகளைக் கடன் வாங்க உடன்பட வைப்பதுதான் இந்தப் பொருளாதார அடியாளின் தலையாய பணி.

கடன் வாங்காத நாடுகளின் தலைவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது?

அல்லது எப்படி விமான விபத்திலோ அல்லது சாலை விபத்திலோ பரலோகம் அனுப்பி வைப்பது…..

பொன் கேட்டவர்களுக்குப் பொன்.

பெண் கேட்டவர்களுக்கு பெண்.

இப்படி தான் செய்த அநீதியான செயல்களுக்குப் பிராயச் சித்தமாக அங்கிருந்து வெளியேறி இந்நூலை எழுதியிருக்கிறார் ஜான் பெர்கின்ஸ். உலகத்தின் மூலை முடுக்கில் எல்லாம் ஒளிந்திருக்கும் மர்மப் பகுதிகளை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இந்நூல் தொட்டுச் செல்லும் சர்வதேச அரசியல் சமாச்சாரங்களையெல்லாம் எப்பாடுபட்டாலும் ஓரிரு பக்கங்களில் விளக்கி விட முடியாது. மனித குலத்தில் அக்கறை கொண்டவர்கள்…… மனித குலத் துயருக்கு விடிவு காண வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள் என ஒவ்வொருவர் கையிலும் நிச்சயம் இருந்தாக வேண்டிய புத்தகம் இது.

இதையே நூலின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால்……

“நமது கடந்தகாலத் தவறுகள் புரிந்து கொள்ளப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை மக்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியும்.”

ஆம் நானும் நான்காண்டுகளாய் இந்நூலை வாசிக்காத தவறைப் புரிந்திருக்கிறேன்.

நீங்கள் நிச்சயம் அப்படியில்லை என்பதை உணர்த்த….

இப்புத்தகம் உங்கள் கரங்களில் இருக்க அவசியம் அழையுங்கள்: 09443468758.