காதலர் தினம்.. சில்பா ஷெட்டி …

pamaran_recent.jpg

மொத்தத்தில் “காதலர் தினம்” வந்தாலும் வந்தது…..யாருக்கு எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் குழப்பமோ குழப்பம். கலாச்சாரக் காவலர்கள் “கூடவே கூடாது” என்று நின்றால்…… கட்டுடைப்பாளர்களோ “கொண்டாடியே தீருவோம்” எனக் கும்மி அடிக்கிறார்கள். எதிர்ப்பவர்களாகட்டும்…. ஏற்றுக்கொள்பவர்களாகட்டும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரே விசயம் கார்ப்பரேட் கம்பெனிகளால் ஊதிப் பெருக்கப்பட்ட இக் கொண்டாட்டம் அவர்களது கல்லாப் பெட்டியை நிச்சயம் நிரப்பும் என்பதே. காதல்..கீதல் செய்து தொலைத்தால் நம்ம சாதிக்கும்-மதத்துக்கும் சிக்கல் வந்து சேருமே…அப்புறம் நம் பிழைப்பு என்னாவது என்கிற கவலையில் பா.ஜ.க, சிவசேனா,பஜ்ரங்தள் போன்ற கும்பல்கள் ஒரு புறம்….
இதுகளெல்லாம் எதிர்க்கும் போது சும்மாயிருந்துவிட்டால் மதவெறி ஜோதியில் நாமும் சங்கமமாகி விட்டதாக அர்த்தமாகி விடுமே என்கிற பதைபதைப்பில் வாலண்டைனின் வாரிசுதாரர்களாகிவிட்ட நம்மவர்கள் மறுபுறம்.

நமது கேள்வியெல்லாம் பிப்ரவரி 14 “காதலர் தினம்” என்றால், வருடத்தின் மற்ற நாட்களெல்லாம் என்ன தினம்?
நம்மைப் பொறுத்தவரை வருடத்தின் 365 நாட்களும் காதலர் தினம்தான்.
லீப்வருடமெனில் 366.

அம்மா… அப்பா… சித்தப்பா… அப்பப்பா… அம்மம்மா… மச்சினி… மாமனார் என சகலருக்கும் ஒரு தினம் ஒதுக்கீடு செய்திருக்கின்றன மேற்கத்திய நாடுகள்.
மேற்கத்திய உலகு சொல்கின்ற யாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வதும் அல்லது எதிர்ப்பதும் அபத்தத்தில்தான் போய் முடியும்.
மே 1,
மார்ச் 8,
டிசம்பர் 10
என இவற்றை ஏகபோகமாகக் கொண்டாடலாம் சரி.
ஆனால் தப்பித் தவறிக்கூட நமக்கு ஹிரோசிமா – நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய நாசகாரத் தாக்குதல்கள் நம் நினைவுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே மிகத் தந்திரமாக ஆகஸ்ட் 6 ஐ “நண்பர்கள் தினம்” என திசை திருப்பினால் எங்கே போய் முட்டிக் கொள்வது?
நாளை மற்றுமொரு நாளே.

***************

இந்த “தகுதி”, “திறமை”க்கான ஒட்டுமொத்த பட்டாதாரர்களின் கூப்பாடு ஓரளவிற்கு ஓய்ந்த மாதிரித் தெரிந்தாலும் மறுபடி எப்பக் கிளம்பும் என்பது தெரியவில்லை. உயர் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்ட 27 சதவீத ஒதுக்கீட்டையும் இவர்கள் இஷ்டப்பட்டபடி பிரித்துக் கொடுக்கலாம் என்கிற ஒரு அம்சம் வெகு வெகு வசதியாகப் போய் விட்டது இந்த ஜென்மங்களுக்கு.

வரும்…வரும்…வரும்…வரும்…வரும்…வரும்…வரும்…வரும்… என்று குணா கமல் கணக்காய் கூறிக்கொண்டிருந்தவர்கள் ஆடி அசைந்து 69 வருடம் கழித்து ஒரு வழியாய் ஒதுக்கிய அந்த 27 சதவீதத்தையும் குரங்கு ஆப்பம் பிய்த்த கதையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு
ஆமதாபாத் ஐ.ஐ.எம்…ல் வெறும் 6 சதவீதம்….
பெங்களூர் ஐ.ஐ.எம்…ல் 10 சதவீதம்….
வர்க்க “விடுதலைக்கான” பாதையில் வெற்றி நடை போடும் “காம்ரேடு”களது மே.வங்கத்தில் 0 சதவீதம்…
என “தாராளமாய்” ஒதுக்கியிருப்பதைப் பார்த்தால் எப்படியோ கிருஸ்து பிறப்பு 3047 க்குள் நிரப்பப்பட்டு விடும் என நம்பலாம். (இப்போது அதுவும் நட்டுகிட்டுப் போயிடுச்சு “உச்சா நீதி” மன்றத்தால்….)

ஏனுங்க நமக்கொரு சந்தேகம்….
இந்தத் தகுதி….தெறம….தெறம…. ங்கறாங்களே….நம்முளுக்குத் தெரிஞ்சு ISRO வுல சுத்தமா சாதியே “பார்க்காம” அக்மார்க் “தெறமய” வெச்சுத்தான் ஆளெடுக்கறாங்க….
நம்ம சிவகாசி ராக்கெட் கூட வானத்துல போகுது.
ஆனா பல நூறு கோடி செலவு பண்ணி நம்ம விஞ்ஞானிக உடற ராக்கெட்டுக பெரும்பாலும் கடலுக்குள்ளதான போகுது….?

ஒருவேள இதுதான் தகுதி…. தெறம….ங்கறதுங்களா?

***************

ஆசிரியர் : உலகில் இனவெறிக்கு எதிராகப் போரிட்டவர்கள் யார்…யார்…?

மாணவன் :

1. நெல்சன் மாண்டேலா

2. மகாத்மா காந்தி.

3. ஷில்பா ஷெட்டி.

நண்பர் செந்தமிழ்ச்செல்வன் சொன்னாரே என்று தமிழகத்தின் குக்கிராமம் ஒன்றில் போய் முடங்கிக்கொண்டது எவ்வளவு பெரிய இமாலயத் தவறு என்பது பின்னர்தான் புரிந்தது. தகவல் தொழில் நுட்பத் தொந்தரவுகள் எதுவுமின்றி அங்கிருந்த வேளையில்தான் இந்தியாவையே உலுக்கிய அந்தச் சம்பவம் நடந்து முடிந்திருந்தது. நமக்குத் தெரிந்ததெல்லாம்
கோமுட்டி செட்டி…
தேவாங்க செட்டி…
நாட்டுக்கோட்டை செட்டி வகையறாக்கள்தான். ஆனால் இந்த ஷில்பா செட்டியைத் தெரியாமல் தொலைந்ததை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியாது.
ச்சே… இந்தளவிற்கு தேசபக்தி இல்லாமல் இருந்ததை நினைத்தால் எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.

நண்பர்கள்தான் சொன்னார்கள்:
“அவர் சாதாரண நடிகை கிடையாது. காந்தியாரின் தண்டி யாத்திரையில் கூட அவரது குடும்பத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்தியத் திரை உலகமே அவர் திறமையைக் கண்டு மூக்கின் மேல் விரல் வைத்துக் கிடக்கிறது….தமிழ்த் திரையிலும் அவர் கலைச்சேவை ஆற்றியதற்கு வரலாற்று ஆவணங்கள் பல இருக்கின்றன. சேம்பிளுக்கு ஒன்று….அவர் நடித்த ரோமியோவின் போது காணாமல் சாமியாராய்ப் போன பிரபுதேவா இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார். அதுவும் டைரக்டராக. வடக்கு தெற்கு என்றில்லை… மொத்தத்தில் அவர் ஒரு தேசிய சொத்து.”
என்றார்கள்.

அவர் கேவலம் மூன்றரைக் கோடி பிசாத்துக் காசுக்காக அவமானப்படுத்தப்பட்ட விதத்தினைக் கேட்கக் கேட்க ரத்தம் கொதித்தது. நாமெல்லாம் இந்தியனாய் இருப்பதை விட நாண்டுகிட்டே சாகலாம் என்று கூடத் தோன்றிவிட்டது. நல்ல வேளையாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தில் தாமதிக்காமல் இந்திய அரசு சுறுசுறுப்பாக செயல்பட்ட விதம்தான் என்னைப் போன்றவர்களைக் காப்பாற்றி கட்டுரை எழுத வைத்திருக்கிறது.

செய்தி கேள்விப்பட்ட மறுநொடியே பிரிட்டனின் சேன்சிலரைக் கூப்பிட்டுக் கண்டித்தது….
மனித உரிமைப் போராளி டோனி பிளேயரை குரல் கொடுக்கத் தூண்டியது….என அடுக்கிக் கொண்டே போகலாம்.

தேசத்தின் கௌரவத்தைத் தூக்கி நிறுத்தப்போன ஷெட்டிக்கு ஒரு அவமானம் என்றால் அது தேசத்துக்கே ஏற்பட்ட அவமானமல்லவா?

அதுவும் இனவெறிப் பேச்சை எப்படி சகித்துக் கொள்ளும் இந்தியா?
கயர்லாஞ்சியில் நிலவும் சமத்துவமாகட்டும்….
இன்றோ நாளையோ என்று இழுத்துக் கொண்டு கிடக்கும் சமூக நீதியாகட்டும்….
எந்த விதத்தில் சளைத்தது….பசுவும் புலியும் ஒரே ஓடையில் நீர் அருந்தும் இந்த ராமராஜ்ஜியம்?

என்னைக் கேட்டால் தேசத்தின் சொத்துக்கு ஏற்பட்ட சேதாரத்திற்கு பிரிட்டன் மீது பொருளாதாரத் தடையே விதித்திருக்க வேண்டும்.

முடிந்தால் ஷில்பா ஷெட்டியோடு ஒரு ‘அமைதிப் படை’யைக் கூட அனுப்பி வைக்கலாம்…..
சொல்ல முடியாது….
செய்தாலும் செய்வார்கள்.

ஆற அமர கறி சோறு சாப்பிட்டு….
அப்படியே வெத்திலை போட்ட கையோடு
ஒரு குட்டித் தூக்கமும் போட்டு….
சோம்பல் முறித்து நிமிர்ந்து பார்க்க…
எங்க ஷில்பா ஷெட்டி என்ன ஈழத்தமிழர்களா என்ன?

பின் குறிப்பு:
லண்டனில் ஷெட்டிக்கு ஏற்பட்ட அவமானம்
இந்தியாவுக்கே ஏற்பட்ட அவமானம் என்றால்…

டெல்லியில் ஷில்பாவுக்குக் கிடைத்த முத்தம்
ஒருவேளை இந்தியாவுக்கே கிடைத்த முத்தமோ….
புரியலியேப்பா……..

தலைப்புகளைத் தாண்டி…

பாமரன்

‘தொட்டால் பூ மலரும்’ என்று பாடியபடியே அய்யப்பனைத் தொட்டுவிட்ட ஜெயமாலா பட்டபாடு பெரும்பாடாகி விட்டது. ‘தொடாமல் நான் மலர்ந்தேன்’ என்று பதிலுக்கு பாட்டு வந்ததா இல்லையா என்பதை உண்ணிக் கிருஷ்ண பணிக்கன்தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் “ஹண்ட்ரட் பர்செண்ட் லிட்ரசியாக்கும்….”(அதாவது நூறு சதவீத எழுத்தறிவு) என்று பீற்றிக்கொண்டிருந்த மொத்த கேரளாவும் சோளி குலுக்கிப் போட்டு….
சாமி சிரிக்கிறதா….?
குளிக்கிறதா….?
குஷியாக இருக்கிறதா…? என்றெல்லாம் ‘பிரஸ்னம்’ பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ஒரு உண்மை விளங்குகிறது.

எழுத்தறிவு என்பது வேறு.
பகுத்தறிவு என்பது வேறு என்கிற உண்மைதான் அது.

இந்த இரண்டாவது விஷயத்தில் ஈ சேட்டன்கள் நம்மட பாண்டிமார் பக்கத்தில்கூட நெருங்க முடியாது கேட்டோ…? பட்சே……..

மாத்ருபூதத்தின் கலையுலக வாரிசு குஷ்பு எக்குத்தப்பாய் உளறிக் கொட்டிய போது அவருடன் கூடி நின்று கும்மி அடித்தவர்கள்……
Freedom of Expression என்று தொண்டை கிழியக் கத்தியவர்கள்….
“பெரியார் சொல்லாததையா குஷ்பு சொல்லிவிட்டார்?” என எடுத்துக் கொடுத்தவர்கள்…..
கருத்துச் சுதந்திரத்தின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள்…
கொம்பு ஆராய்ச்சியாளர்கள்….
வால் ஆராய்ச்சியாளர்கள்….
எல்லாம் ஜெயமாலா பிரச்சனையில் சிக்கிக்கொண்டு தவித்த வேளையில் எங்கே போய்த் தொலைந்தார்கள் என்பதுதான் புரியாத புதிராய் இருக்கிறது.

கருத்துச் சுதந்திரப் போரில் காணாமல் போன இந்த வெண்ணை வெட்டி சிப்பாய்கள் படங்களை காவல்துறை வசம் ஒப்படைத்தால் அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்குகளில் அடையாளம் காணப் பயன்படக் கூடும்.(ஒருவேளை நேரக்கூடாத ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்கிற கவலைதான் வேறென்ன…)

“கற்பு” பிரச்சனையில் பெரியாரைத் துணைக்கு அழைத்தவர்களுக்கு… குறைந்தபட்சம் பெண்கள் வழிபடும் உரிமைகளுக்காக பெரியார் என்னென்ன பேசியிருக்கிறார் என்று புட்டுப் புட்டு எடுத்து வைப்பதில் என்ன சிக்கல் வந்து விட்டது?

தமிழக ஆதிபராசக்தி கோவில்களில் பெண்கள் வழிபாடே நடத்திக் கொண்டிருக்கும்போது அய்யப்பன் கோயிலில் வழிபடக்கூட உரிமையில்லை என்கிற அயோக்கியத்தனம் இந்த ‘யோக்கியர்களுக்கு’ ஏன் உரைக்கவில்லை என்பதுதான் நமது கேள்வி.

ஜெயமாலா என்கிற பெண் ஒட்டு மொத்த ஒரு மாநில அரசால் பந்தாடப்படும்போது எங்கே போய்த் தொலைந்தார்கள் இந்தக் கருத்துச் சுதந்திரப் பேர்வழிகள்?

கேரள மந்திரி தொடங்கி தந்திரி வரைக்கும் ஜெயமாலா மீது
விசாரணை…..
குற்றப்பத்திரிக்கை…..
எச்சரிக்கை….
என அடுக்கடுக்காகத் தாக்குதல் நடத்தியபோது சகலத்தையும் பொத்திக்கொண்டு இருப்பதற்குப் பெயர்தான் கருத்துச் சுதந்திரமா?.
பஞ்சமர்கள்….
சூத்திரர்கள்….
பெண்கள்…
கோயில்களில் வழிபடுவது குறித்து….
வழிபாடு நடத்துவது குறித்து….
பெரியார் எதுவுமே பேசவில்லையா?

பேசினார்….
பேசினார்….
மூச்சு அடங்குவதற்கு முந்தைய நொடிவரை கூட பேசினார்.
அவை எல்லாம் இவர்களுக்குத் தெரியும்.அப்புறம் இவர்கள் தப்பித் தவறிக் கூட இவை பற்றியெல்லாம் முணுமுணுக்கக்கூட இல்லையே ஏன்?

காரணம் என்னவாக இருக்கும்?

இதிலெல்லாம் எக்குத்தப்பாக பெரியாரை இழுத்துத் தொலைத்தால் அப்புறம் கோயில்களில் இருக்கும் அவர்களது பரம்பரைகளுக்கு வருங்காலத்தில் வருமானம் இல்லாமல் போய்விடும் என்கிற ‘ரத்தபாசம்’ தவிர வேறென்ன காரணம் இவர்களைத் தடுத்திருக்க முடியும்?
சாமியேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சரணமய்ய்ய்ய்யப்ப்ப்பா.

******
(முன் குறிப்பு: இது கொழும்பிலும்….பலாலியிலும் “வாணவேடிக்கை” நடக்கும் முன்னர் எழுதப்பட்டது. போற போக்கைப் பார்த்தால் பேசாமல் நானும் உண்ணிக் கிருஷ்ண பணிக்கனைப் போல் “பிரஸ்னம்” பார்க்கப் போலாம் போலிருக்கிறதே….?)

நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைகளுக்குக் கொஞ்சம்கூட விவஸ்தையே கிடையாது. “இலங்கை அரசுக்கு உதவாதே…ரேடார் கொடுக்காதே..” என இவர்கள் போடும் கூப்பாடு காதைக் கிழிக்கிறது. ஒரு பக்கத்து நாடு உதை தாங்க முடியாமல் அலறுகிறது. வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி? பக்கத்து வீடாய் இருந்தால் உதவ மாட்டோமா? அப்படித்தான் பக்கத்து நாடும்.

என்னைக் கேட்டால் ரேடார் மட்டுமல்ல…
ராக்கெட் லாஞ்ச்சர்கள் கொடுக்கலாம்….
கடலில் விடுவதற்காகவே தயாரிக்கப்படும் ராக்கெட்டுகளைக் கொடுக்கலாம்…
சுவீடனிலிருந்து வாங்கிய சுடாத பீரங்கிகளைக் கொடுக்கலாம்….
இன்னும்கூட உலக சந்தையில் நவீன ஆயுதங்களை ஹோல்சேலாய் கொள்முதல் செய்து “இந்தா பிடி” என்று உதயா டி.வி. சீரியல் நடிகரைப் போலிருக்கிற ராஜபக்சேவுக்குக் கொட்டி அழலாம். (எதைக் கொடுத்தாலும் அப்படியென்ன கிழித்துவிடப் போகிறது இலங்கை ராணுவம்….?)

எத்தனை நவீன ஆயுதமாய் இருந்தாலும் பத்து நாளைக்குப் பிற்பாடு அது தானாகவே போராளிகள் கைக்கு வந்து விடப் போகிறது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்… ஈழம் காலத்தின் கட்டாயம் என்று நம்புகிற நம்மைப் போன்றவர்கள் “இந்திய அரசே! உடனடியாக நவீன ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கு” என்று பெரும் போராட்டம் நடத்தலாம்.

எவ்வளவுக்கெவ்வளவு அதி நவீன ஆயுதங்கள் இலங்கைக்குக் கிடைக்கிறதோ…
அவ்வளவுக்கவ்வளவு ஈழம் அடையும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதானே எதார்த்தம்?

எப்படி எங்கட கதையில் பிழையொண்டும் இல்லைதானே?

******

இந்த கௌதம் மேனனுக்கு திடீரென்று என்னவாயிற்று என்று புரிபடவில்லை. எங்கேயோ வேட்டையாடட்டும் விளையாடட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் யாரும் தமிழர்களை வேட்டையாடுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியாது.

அவரது வே.வி.யில் வரும் இரு வில்லன்களது பெயருமே அழகிய தமிழ்ப் பெயர்கள்.
ஒன்று: இளமாறன்
மற்றொன்று: அமுதன்

படம் பார்க்கப் பார்க்க எழுந்த எரிச்சலுக்கு அளவேயில்லை. திட்டமிடாமல் இந்தப் பெயர்களை வைத்திருக்க முடியாது என்பதை அடித்துச் சொல்லலாம். ஆக இளமாறன் – அமுதன் போன்ற அழகிய தமிழ்ப் பெயர் சுமக்கும் இளைஞன்களெல்லாம் சைக்கோ – ஓரினப்புணர்ச்சியாளர்கள் வரிசையில் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டியவர்கள் என்கிற சேதியை மறைமுகமாக அல்ல நேரடியாகவே சொல்லியிருப்பதற்காக பலமாகத்தான் பாராட்டியாக வேண்டும் கௌதமை. இத்தனைக்கும் தனது முந்தைய படத்தில் அன்புச்செல்வன் – இளமாறன் போன்ற பெயர்களை கதாநாயகன் வகையறாக்களுக்குச் சூட்டியிருந்தவர்தான் இந்தக் கௌதம். சரி…தமிழ் மீது கொண்ட காதலின் விளைவாகக் கூட இருக்கலாம் என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டு படம் பார்க்கலாம் என்றால் ராகவனாக வந்து நிற்கிறார் கமல்ஹாசன்.

ராகவன்: பொட்டில் அடித்த மாதிரி சாதியைச் சொல்லும் பெயர்.

அதுவும் பச்சையாகச் சொன்னால் அய்யங்கார் வீட்டு ‘அழகன்’களின் பெயர். ராகவன்களின் பெயரை பிற சாதியினர் வேண்டுமானாலும் வைத்துத் தொலைக்கலாமே ஒழிய ஒருபோதும் இளமாறன்களின் பெயரை அந்த வீட்டு ‘அழகன்’கள் சுமக்க மாட்டார்கள் என்பதுதான் எதார்த்தம்.

இந்த சந்தேகம் படம் பார்ப்பவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ராகவன் வீட்டு டைனிங் டேபிளில் ஒரு வஜனம்: ” இனிமே சண்டேல மட்டுந்தான் நம்ம வீட்டுல நான்வெஜ்”. அட…அட…

(போதாக்குறைக்கு அரவாணிகளையும் விட்டு வைக்கவில்லை கௌதம். மனிதப் பிறப்பில் அச்சுப்பிழையாகிப் போய் அவலம் சுமக்கும் இந்த மாறிய பாலினத்தவர்களை சக மனிதர்களாகப் பார்க்கும் காலம் வரும் வரைக்கும் நாம் நாகரீகமானவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இருக்க முடியாது. தெருவில் நடக்கையில் “ஒம்போது” என்று கத்துகின்ற தெருப் பொறுக்கிகளுக்கும் இந்த கௌதம்…சுப்ரமண்யசிவா…எழில் போன்றவர்களுக்கும் வித்தியாசம் இருப்பதாய்த் தெரியவில்லை எனக்கு)

மீண்டும் பெயர்ப் பிரச்சனைக்கு வருவோம். எதேச்சையாக அப்படிப்பட்ட பெயர்கள் அமைந்துவிட்டது என்கிற குரல் எங்கிருந்தாவது எழுமானால் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி:
இப்படி என்றைக்காவது வில்லன்களின் பெயராக
ஒரு சர்மாவோ….
சாஸ்திரியோ…
அல்லது ஜெயேந்திரனோ…
விஜயேந்திரனோ எதேச்சையாக வைக்கப்பட்டிருக்கிறதா என்பதே அது.

அறிவழகன் – அன்பரசன் போன்ற தமிழ்ப்பெயர்களை தொடர்ந்து வில்லன்களுக்கு சூட்டி வருவதற்கு இனியாவது தமிழ் சினிமாக்காரர்கள் முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
இல்லாவிட்டால்…
விளையாட்டாய் இருக்கும் தமிழர்கள் இப்பிரச்சனைகளை
வேட்டையாடித்தான் தீர்க்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால்
அப்புறம் உங்க கதை கந்தல்தான்.

******