தெருவோரக் குறிப்புகள்.

கொஞ்சம் கேப்ஸிகா சாஸை எடுத்துக் கொள்ளுங்கள்….
பக்கத்திலேயே ஆலிவ் ஆயிலும் அவசியம்.
தேன் இல்லாவிட்டால் சரியாகாது….
எப்படியாவது ரோஸ் வாட்டர் அதி முக்கியம்….
இதையெல்லாம் சட்டீல உட்டு நல்லா ஒரு ஆட்டு ஆட்டுங்க.
ஒரே நிமிசத்துல ரெடி….
நம்ம பப்பாயா தாய் சாலேட்…..
ஹலோ…என்ன சொல்ல சொல்ல சட்டையப் புடிக்கிறீங்க…?
என்ன ரேஷன் அரிசிக்கே திண்டாட்டமா?
ஊகூம்…இதெல்லாம் ரேஷன்ல போட மாட்டாங்க….
என்ன மூடணுமா?
ஐய்யய்யோ இதெல்லாம் நான் சொல்லுலீங்க. நாம எப்படி சோறு சாப்புடறதுன்னு டீ.வீ.ல சொல்லிக் குடுத்தத திருப்பிச் சொன்னேன்… அவ்வளவுதான்….

தாயோ தகப்பனோ ஊட்டுல தறுதலையா இருந்தா, நாமெல்லாம் இப்புடி பப்பாயா தாய் சாலேட்டோ…தகப்பன் சாலேட்டோ சாப்பிட வேண்டீதுதான்.

= = = = = = = = = = = =

மேலை நாட்டு மேதை இங்கர்சால் எழுதிய ஒரு நூலைப் படிக்க நேரிட்டது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெ.சாமிநாதசர்மாவால் மொழிபெயர்க்கப்பட்ட ‘மக்கள் உரிமை’ என்கிற அந்த நூல் என்னுள் எண்ணற்ற ஆச்சர்யங்களை ஏற்படுத்தியது. தத்துபித்தென்று குழந்தையை வளர்க்கும் முட்டாள் பெற்றோர்களையும், மதவாதிகளையும் தூக்கிப்போட்டு மிதிக்கின்றன இங்கர்சாலின் வரிகள்.

வாயைத் திறக்காமல் சாப்பிடு.

கண்ணுல தண்ணி வராம அழு.

தூக்கம் வருலேன்னாலும் படு.

என்று ஹிட்லர்களாய் மாறி விடுகிற பெற்றோர்களைப் பின்னி எடுக்கிறார் இங்கர்சால். சிறு வயதிலேயே சொர்க்கம், நரகம் என்று பிஞ்சுகளுக்குப் போதித்து அவர்களை துன்பத்திற்கு உட்படுத்துகிற பரமபிதாவான ஒரு கடவுள் இருப்பாரேயானால் அந்தக் கடவுளோடு நான் சொர்க்கத்தில் இருப்பதைக் காட்டிலும் நரகத்திலேயே வசிக்க விரும்புகிறேன் என்று நேற்று இன்றல்ல நூற்றிப் பத்து வருடங்களுக்கு முன்பே சாடி இருப்பது பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

எட்டு பதிப்புகள் வந்துவிட்ட அந்த நூலில் ஒன்பதாவது பதிப்பில் சேர்க்க வேண்டிய செய்தி ஒன்றும் உண்டு.

பல்வேறு தத்துவங்களை அலசி ஆராய்ந்த இங்கர்சாலே ஏற்றுக்கொண்டு புகழ்ந்து தள்ளியிருக்கிற ஒரு நூல்…நம்மவர் எழுதியது என்பதுதான் அந்த செய்தி.

‘அவனது குழந்தைகள் தகப்பன் இல்லாமல் போகட்டும். அவனது மனைவி விதவையாகட்டும். அவனது குழந்தைகள் பிச்சை எடுத்தும் நாடோடிகளாகவும் திரியட்டும்’ என்று குழந்தைகளைக்கூட சப்பிக்கிற ஒரு ‘கடவுளை’ இங்கர்சால் குறிப்பிட்டு “ஆனால் அந்தக் கடவுள் தென்னிந்திய மண்ணில் உதித்த ஒருவரது இனிய மொழிகளைக் கேட்டிருக்க மாட்டார். இசையாய் எனது காதுகளைத் தொட்ட அந்த வரிகள்:

குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.”

என திருக்குறளைச் சொல்கிறார் இங்கர்சால்.

நம்மவர் பெருமை பிற மேதைகளுக்குப் புரிகிறது. ஆனால் இங்குள்ள பல போதைகளுக்கு அது புரிவதேயில்லை. அது ஏனுங்க?

= = = = = = = = = = = =

ஆடத் தெரியாத எவரோ மேடை சரியில்லை….ன்னாராமா. அப்படி இந்த பயாலஜி, சோஷியாலஜி மாதிரி நியூமராலஜி…நேமாலஜி…வந்தாலும் வந்தது…பலருக்குக் கிறுக்கு மண்டைக்கு ஏறிவிட்டது.
அடங்கப்பா பேரை மாத்தறேன்….ஸ்பெல்லிங்க மாத்தறேன்னு சொல்லி இன்ஷியல என்னாவது மாத்தீராதீங்கப்பா. குடும்பத்துக்குள்ள கொழப்பம் என்னாவது ஏற்பட்டறப் போகுது.

= = = = = = = = = = = =

கடந்த வாரம் சென்னை ஔகிலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அறுபதைக் கடந்தவர்கள் அடைக்கலமாகியிருந்தனர் அதில். பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்டு சிலர். கணவனால் கைவிடப்பட்டு சிலர். விரும்பி ஏற்றுக் கொண்டு வந்தவர் சிலர்.

இளையராஜா ஒருமுறை இங்கு வந்து போனால் ‘ அம்மா என்றழைக்கின்ற உயிரில்லையே’ என்று தனது பாட்டை மாற்றிப் பாட வேண்டியிருக்கும். அங்கு உள்ளோரது துயரை மனதில் சுமந்தபடி இருள் கவியத் துவங்கிய வேளையில் வெளியேறினேன். இயந்திரமயமாகிக் கொண்டிருக்கிற உலகில் இனி இது அதிகரிக்கவும் கூடும்.

‘குடும்பம்தான் எல்லாம். குடும்பம்தான் பாதுகாப்பு’ என்று நம்பியவர்களின் நிலையை எண்ணும்போது மனது வலித்தது.

குடும்ப உறவு உண்மையில் எப்படி உள்ளது என்பதைக் கிண்டலடித்து ஓஷோ ஒருமுறை சொன்ன கதை நினைவுக்கு வந்தது.

லட்சியத் தம்பதிகளுக்கு அவர்களது துணிச்சலை சோதித்துப் பார்க்க போட்டி வைத்தார் ஒருவர். மூவர் மட்டுமே அமரக்கூடிய அவரது குட்டி விமானத்தில் ஏறி தைரியமாகப் பயணம் செய்யும் தம்பதிகளுக்கு பத்து லட்சம் பரிசு. ஆனால் ஒரு நிபந்தனை. பறக்கும் நேரத்தில் அந்த இருவரில் ஒருவர்கூட பயத்தில் சின்ன முணுமுணுப்பு செய்தாலும் பரிசு அம்போ.
போதாக்குறைக்கு ஒரு லட்சம் அபராதம் வேறு. மூவர் மட்டுமே அமர வசதி உள்ள விமானத்தில் ஒரே ஒரு சிக்கல். அதற்கு மேல் மூடி கிடையாது. உட்காருபவர்கள் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு உட்காரவேண்டும் அவ்வளவுதான். ஒவ்வொரு தம்பதியாக விமானத்தில் ஏறுகிறார்கள். வழியில் பயந்து போய் ‘அய்யோ’ என்றோ ‘அம்மா’ என்றோ கத்தினால் போதும். உடனே விமானம் கீழே இறக்கப்பட்டு விமானி அபராதத் தொகை ஒரு லட்சத்தை வாங்கி பெட்டியில் போட்டுக் கொள்வார்.
கடைசியாக ஒரு தம்பதியினர் ஏறி அமர்கிறார்கள். பறக்கத் தொடங்கி பல நிமிடமாகியும் தைரியமாக அம்ர்ந்திருக்கிறார்கள் அவர்கள் இருவரும். விமானி மலையின் மீது மோதுவது போல் போகிறார்…. சத்தம் போடுவதில்லை இருவரும்.அப்படியே கீழே கொண்டு வருகிறார்…. சத்தம் போடுவதில்லை இருவரும். தலைகீழாக திருப்பி ஓட்டுகிறார்….சத்தம் போடுவதில்லை இருவரும். கடைசியில் விமானியே களைத்துப் போய் வேறு வழியின்றி தரை இறக்குகிறார். ஆச்சர்யம் தாங்காமல் கணவனின் கையைப் பிடித்து “உங்களைப் போல தைரியசாலி தம்பதியைப் பார்த்ததே இல்லை இதுவரை. ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. உண்மையாகவே நீங்கள் ஒரு முறைகூட பயப்படவில்லையா…” என்று கேட்க…”ஒரே ஒருமுறைதான் பயந்தேன். ஆனால் லட்ச ரூபாய் போய்விடுமே என்ற பதட்டத்தில் கத்தவில்லை அவ்வளவுதான்” என்றார் கணவர்.

“எந்த இடத்தில் கத்த நினைத்தீர்கள்? நான் நேராக அந்த மலைமீது மோதுவது போல் சென்ற போதா….?”

“இல்லை.”

“சரி நான் விமானத்தைத் தரை மீது மோதுவது போல் சென்று திருப்பினேனே அப்போதா…?”

“கிடையாது” என்றார் கணவர்.

“ஆங் இப்போது தெரிந்து விட்டது. நான் தலைகீழாக விமானத்தைத் திருப்பி ஓட்டினேனே அப்போதுதானே….?”

“ஊகூம்.”

“சரி எப்பதான் கூச்சல் போட நினைத்தீர்கள்? அதையாவது சொல்லித் தொலையுங்கள்” என்றார் விமானி ஆத்திரமாக.

“பத்து நிமிடத்துக்கு முன்பு என் மனைவி மேலிருந்து விழுந்தாளே அப்போதுதான்” என்றார் வெகு அமைதியாக.