திராவிட இயக்க தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்….

pamaran pakiarnga1
எனக்கு 12 வயதிருக்கும்போது அம்மாதான் கிளை நூலகத்தில் இருந்து
“ஈ.வே.ரா.சிந்தனைகள்” தொகுப்பை படிக்க எடுத்துக் கொடுத்தார்.

இத்தனைக்கும் அவர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்.
அப்பாவோ முரசொலி படிப்பவர்.

கும்பிடு என்று அம்மா கட்டாயப்படுத்தியதுமில்லை.
கும்பிடாதே என்று அப்பா குறுக்கிட்டதுமில்லை.

கலவையாய் வளர்ந்தேன் நான்.

போதாக்குறைக்கு எம்.ஜி.ஆர். ரசிகன் வேறு.

அம்மாவுடன் வாரியார் கச்சேரிகளுக்கும்,
அப்பாவுடன் திமுக கூட்டங்களுக்கும் என
ஊடாடித் திரிந்ததொரு காலம்.

அப்பாவுக்கு அறிஞர் அண்ணா மீது ஏகப்பற்று.
தாத்தா இறந்தபோதுகூட அழாதவர்
அண்ணா இறந்தபோது வீட்டிலிருந்த மர்பி ரேடியோ முன்பு
குமுறி அழுதது இன்னமும் நினைவில் இருக்கிறது.

ஆயினும் ஏனோ எனக்கு அண்ணா மீது
ஈர்ப்பு ஏற்படவேயில்லை.

கல்லூரிக் காலங்களில்கூட பக்திக்குப்
பஞ்சமில்லை எனக்குள்.
காதலிக்கு கவிதை எழுதுவதென்றால்கூட….

“புலியூரானைப் பேசாத நாளெல்லாம்
பிறவா நாளே என்றாராம் அப்பர்.
என்னைப் பொறுத்தவரை
பூவிதழாள் உன்னை நினையா நாள்தான்
நான் பிறவா நாள்”
என்று பக்தி பிரவாகம் எடுக்கும்.

பள்ளி இறுதியாண்டுகள் நாட்டில் எமர்ஜென்சி
அறிவிக்கப்பட்டிருந்த இருண்ட காலம்.
கொஞ்சம் கொஞ்சமாய் திமுக ஆதரவாளனாக
மாறிக்கொண்டிருந்த பொழுது அது.
அக்கட்சியின் அவைத் தலைவராய் இருந்த
பி.எஸ்.ஜானகிராமன் என்பவரது மகன் ராஜசேகர்
என்னோடு படித்துக் கொண்டிருந்தார்.

அவசரநிலை பிரகடனத்தில் கைது செய்யப்பட்டு
அவரது அப்பாவும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
பள்ளி செல்லும்போதும் திரும்பும்போதும்
ஏதோ எங்களுக்குத் தெரிந்த அரசியலை
பேசிக் கொண்டு வருவோம்.

சிறைக்கொடுமைகளுக்கு ஆளாகி
உயிர் இழந்த சிட்டிபாபு எம்.பி. யின்
”சிட்டிபாபுவின் சிறைக் குறிப்புகளை”
முரசொலியில் படித்துக் கண்கலங்குவோம் அப்பாவும் நானும்.

இந்திராவின் இருண்டகாலம் முடிந்து
ஜனதாவின் குடுமிபிடி காலம் தொடங்கிய பொழுதில்
புகுமுக வகுப்புக்காய் கல்லூரியில் கால்வைத்திருந்தேன் நான்.
லாலிரோட்டில் உள்ள திமுக ஆபீசில் இருந்து
உறுப்பினர் அட்டையெல்லாம் வாங்கி வந்து
மயிலிறகென பத்திரப்படுத்தியிருந்தேன்.
அவ்வளவு பெருமிதம்.

ஆனால் அதற்கும் வந்தது ஆப்பு.
எண்ணி இரண்டரை வருடத்திலேயே
எமர்ஜென்சி சித்ரவதைகளையெல்லாம் மறந்து
“நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!!” என
அடித்தது பல்டி என் ”ஆருயிர்க் கழகம்”.

தொட்டகுறை விட்டகுறையாய் தொடர்ந்த
பாசப்பிணைப்பை பிற்பாடு வந்த ஈழப்போராட்டம்
மொத்தமாய் முடித்து வைத்தது.
அதற்காக என்னைப் போன்ற
ஒரு பொடிப்பயல் எல்லாம்
ராஜினாமா கடிதமா அனுப்ப முடியும்?

திமுக பேச்சாளர் வெற்றிகொண்டானோ
யாரோ சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது :

”இங்க வந்த மாட்டை கட்டறவனுமில்ல… போன மாட்டை தேடறவனுமில்ல…”

அரசியல்ரீதியாகச் சொன்னால்
எண்பதுகளின் மத்தியப் பகுதி……
தமிழகத்திற்கு ஒரு பொற்காலம்.

எங்கு திரும்பினாலும் ஈழப் போராளிகள்.
ஒரு புறம் ஈழத் துயரை விளக்கும் கண்காட்சிகள்…
தாக்குதல்களை தத்ரூபமாகக் காட்டும் வீடியோ திரையிடல்கள்….
அகிலத்தையே அலசும் அரசியல் வகுப்புகள்….
உலகின் ஒவ்வொரு மூலையிலும் நடந்து கொண்டிருக்கும்
விடுதலைப் போராட்டங்களைப் பற்றிய எண்ணற்ற புத்தகங்கள்….
என தமிழகமே தகதகத்துக் கொண்டிருந்தது.

சாவையே எதிர்கொண்டு வரவேற்ற போராளிகள்
மத்தியில் “ஆறிலும் சாவு…நூறிலும் சாவு” என
மேடையில் முழங்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து
சிரிப்பு வந்தது எமக்கு.

அந்த நேரம்தான் என்னுள் ஏகப்பட்ட மாற்றங்கள்
உருவான நேரம்.
அந்த வேளையில்தான் நான்
திராவிட கட்சிகளுக்கும் – திராவிட இயக்கங்களுக்குமான
அடிப்படையிலேயே உள்ள வேறுபாடுகளை
உணரத் தொடங்கினேன்.

அடுத்த தேர்தலுக்காக உழைத்தவர்களுக்கும் –
அடுத்த தலைமுறைக்காக போராடியவர்களுக்குமான
அப்பட்டமான இடைவெளி எனக்கு உறைத்தது.

ஏற்கெனவே ”அந்திமழை”யில் சொன்னதுதான் என்றாலும்
இன்னுமொருமுறை சொல்வது
ஒன்றும் “தெய்வ”குற்றம் ஆகிவிடாது….
எனவே :

”திராவிடர் இயக்கத்திற்கும்
திராவிட கட்சிகளுக்கும் இடையே
பண்பாட்டுத் தளத்தில்…
செயல்பாட்டுத்தளத்தில்..
அணுகுமுறைகளில்… என
எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு.

சுற்றிவளைக்காமல் சுருக்கமாகச் சொன்னால்…

தனது தங்கையோ துணைவியோ யாராயினும்
சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து
சிறைசெல்ல துணை நிற்பது திராவிட இயக்கக்கூறு.

கணவனோ புதல்வனோ
“வெற்றிவாகை” சூடிவர நெற்றித்திலகமிட்டு
வழியனுப்பி வைத்துவிட்டு
வாசலோடு நின்றுவிடுவது திராவிட கட்சிக்கூறு.

அடுத்த தலைமுறையின் நலனுக்காக
தன்னையே பலி கொடுப்பது திராவிட இயக்கப் பண்பு.

அடுத்த தேர்தலின் நலன்களுக்காய்
தலைமுறையையே பலி கொடுப்பது திராவிட கட்சிப் பண்பு.

மாதவி வீட்டிலேயே விருந்துண்டு கிடந்த
கணவனுக்காக காத்திருந்த கண்ணகியின்
காற்சிலம்பையும் கற்பையும் போற்றிப் புகழ்பாடுவது
திராவிட கட்சியின் “இலக்கியம்”.

”தன் கணவன் கொல்லப்பட்டதற்காக
\அக்கினி பகவானிடம் கண்ணகி மதுரையைச் சுட்டெறி
எனக் கட்டளையிட்டால் அது அவள் கற்பின் பெருமையா?
அவள் புத்தியின் பெருமையா?
அக்கினி பகவானுக்கு புத்தி வேண்டாமா?
ஒரு பெண்பிள்ளை முட்டாள்தனமாக
உளறினால் நிரபராதிகளைச் சுடலாமா?
(அதுவும் “தமிழ்நாட்டு யூதர்களை” மட்டும்
கொளுத்தாமல் விதிவிலக்கு அளித்து விட்டு…)
ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா
என்கிற அறிவு வேண்டாமா?”
என இலக்கியங்களையும் இதிகாசங்களையும்
கேள்விக்குள்ளாக்குவதுதான் திராவிட இயக்கத்தின் இலக்கணம்.

பெண்ணினம் விடுதலை அடைய வேண்டுமானால்
”ஆண்மை” என்ற பதமே அழிய வேண்டும் என்பது
திராவிட இயக்கக் கலாச்சாரம்.

பெரியார் வழி வந்ததாய் சொல்லிக் கொண்டு
”குங்குமம்” ”சுமங்கலி” என்கிற பெயரில்
பத்திரிகை நடத்துவது திராவிடக் கட்சியின் “பகுத்தறிவு”.

பச்சையாகச் சொன்னால்
1947 லேயே தந்தை பெரியாரோடு இந்திய சுதந்திரத்தை
ஏற்றுக் கொள்வதில் முரண்பட்டு..
சரியான தருணத்திற்காகக் காத்திருந்து….
1949இல் பிரிந்து… பிற்பாடு விரிந்து
கிளை பல பரப்பி நிற்பவை யாவும்
திராவிடக் கட்சிகள்….. கட்சிகள்…. கட்சிகள்…..

திராவிட இயக்கங்கள் அல்ல.

பெரியாரின் திராவிட இயக்கம்
முன் கூட்டியே கணித்ததை..
நினைத்ததை…
வலியுறுத்தியதை…
போராட்டங்களால் நெருக்கடி கொடுத்ததை
பல வேளைகளில் திராவிடக் கட்சிகள்
நிறைவேற்றித் தந்தன என்பதும் உண்மைதான்.
ஆனால் இயக்கத்திற்கும் கட்சிக்கும்
இடையே உள்ள குணாம்சங்கள் வேறு வேறு.”

என்னைப் பொறுத்தவரை
சமரச அரசியலின் தொடக்கம் என்பது …..

”இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் அரசர்
எப்போதும்போல இந்தியாவின்
மன்னராகவே இருந்து வருவார்….

அவரது அங்கீகாரம் இன்றி
யாரும் கவர்னர் ஜெனரல் ஆக முடியாது…

வெளிநாடுகளுக்கு தூதர்களை
அனுப்பும் உரிமை இந்தியர்களுக்கு இல்லை…

இராணுவத் தளபதியும் ஆங்கிலேயரேதான்…
கொடி மட்டும்தான் மாற்றம்…
வேறு ஒன்றுமில்லை… ”
என கனடா பிரதமர் தொடங்கி
பார்வேர்டு பிளாக் தலைவர் வரைக்கும்
சொன்ன ஆகஸ்ட் 15 நாளை
”இது ”துக்கநாள்”. இதில் திராவிடர் குதூகலிக்க
ஒன்றுமில்லை”என்று அறிவித்த பெரியாருக்கு எதிராகவே

“இது இன்பநாள்”தான்
With Perusuஎன பொங்கி எழுந்தாரே தளபதி அண்ணா….
அன்று தொடங்கியது சமரச அரசியல்.

1947 லேயே தலைவர் பெரியாருக்கு எதிராகவே
காரியதரசியாக இருந்த அண்ணா
”காங்கிரஸ் திராவிடர்களை மதிக்க வேண்டும்” என
பகிரங்க அறிக்கைப் போர் நடத்தினாரே…
அன்று தொடங்கியது அது.

காலம் கனிய இரண்டாண்டுகள் காத்திருந்து….
அப்புறம் தனியாக வந்த பின்பு போட்ட போடுதான்
பகுத்தறிவுக்கு பை பை சொன்ன
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” முழக்கம்….
அன்று தொடங்கியது அது.

முன்னர் திராவிடர் கழக மாநாட்டில்
தேர்தல் புறக்கணிப்பு தீர்மானத்தை
முன்மொழிந்தவரே பின்னர் தேர்தல் பாதைக்கு
சத்தமில்லாமல் திரும்பினாரே…
அன்று தொடங்கியது அது.

பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்
பிள்ளையாருக்கு தேங்காயும்
உடைக்க மாட்டோம் என்கிற
லாவக அரசியலின் பரிணாம வளர்ச்சிதான்….

காலையில் பெரியார் பிறந்தநாளுக்கு மலர்மாலையும்…
மாலையில் விநாயகர் பிறந்தநாளுக்கு கொழுக்கட்டையும்
தின்ன வைத்திருக்கிறது எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனை.

இந்த லாவக அரசியலின் தொடர்ச்சிதான்
“திருப்பதி கணேசா திரும்பிப் பார்” என்று
சிவாஜிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய கட்சியில்
வந்த எம்ஜிஆரை மூகாம்பிகை நோக்கி நகர வைத்தது.

இந்த லாவக அரசியலின் தொடர்ச்சிதான்
தலைவி சிறைக்குப் போனாலும்
பால்குடம்… பன்னீர்குடம்… மொட்டை… மண்சோறு….
என பல்வேறு பரிமாணங்களை எட்ட வைத்திருக்கிறது.

1967 இல் ”குலக்கல்வி புகழ்” ராஜாஜியோடே
அண்ணா வைத்த கூட்டணிதான்…
1998 இல் பாஜக வோடு முதல் ஆளாய்

MILLENNIUM PHOTO: RAJAJI AND c n ANNADURAI.==========="THE MAIL" CENTENARY CELEBRATIONS-15-12-1968.

MILLENNIUM PHOTO: RAJAJI AND c n ANNADURAI.===========”THE MAIL” CENTENARY CELEBRATIONS-15-12-1968.


புரட்சிப் புயலையும்,
பின்னர் புரட்சித் தலைவியையும்
கூச்சமின்றி கரம் கோர்க்க வைத்தது…..

”RSS ஒரு ஆக்டோபஸ்” என்ற கலைஞரை
1999 இல் பாஜக வோடு சேர்ந்து
“ஆக்டோபஸ் கூட்டணி” அமைக்க வைத்தது….

எங்கும் சமரசம்….
எதிலும் சமரசம்
இது திராவிட கட்சிகளது வாழும் வரலாறு.
இவர்களே இப்படி என்றால்
தேசியக் கட்சிகளின் யோக்யதை
எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை.

திராவிட கட்சிகளை அப்படிப் பார்க்கலாம்…..
ஆனால் திராவிட இயக்கங்களை
அப்படிப் பார்த்து விட முடியாது.
அவர்கள் கருப்புச் சட்டை போட்டிருக்காவிட்டால்
என் தகப்பன் வெள்ளைச் சட்டை அணிந்திருக்க முடியாது.

அவ்வளவு ஏன்…
எனது ஒவ்வொரு வளர்ச்சியின் பின்னணியிலும்
ஏதோ ஒரு சுமரியாதைக்காரனின் உழைப்பு
ஒளிந்துகொண்டுதானிருக்கிறது.

சில வேளைகளில் வரம்புமீறி விமர்சித்தாலும் கூட
நட்பு முரணுக்கும் பகை முரணுக்குமான
வேறுபாடு புரிந்து பெருந்தன்மையோடே
என்னைப் பேணி இருக்கிறார்கள்
திராவிட இயக்கத்தவர்கள்.

திராவிடர் விடுதலைக் கழகமாகட்டும்
பெரியார் மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியாகட்டும்
திராவிடர் கழகமாகட்டும்
தந்தை பெரியார் திராவிடர் கழகமாகட்டும்
அவர்கள் எந்தப் பெயரில் இயங்கினாலும்சரி.
எவரது தலைமையில் பணியாற்றினாலும் சரி.

தேர்தலைப் பற்றிச் சிந்திக்காமல்
தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கும்
அந்த நேச சக்திகளுக்கும்
சொல்வதற்கு ஒரிரண்டு உண்டு.

அதில் ஒன்றுதான்
தேர்தல் காலத்து மெளன விரதம்.

ஆம்….
இன்று திமுக வுடன் இருக்கிறதே பாஜக
என்று அதிமுக வையும்…

அதிமுக வுடன் இருக்கிறதே பாஜக
என்று திமுக வையும்… தேர்தலில் ஆதரிப்பது.

தொண்ணூறுகள் வரை இதே அளவுகோலை
”காங்கிரஸ் எதிர்ப்பை” வைத்து
காம்ரேடுகள் செய்து கொண்டிருந்தார்கள்.

தேர்தலுக்குத் தேர்தல் இவர்கள் யாராவது ஒருவர்
மாற்றி மாற்றி அவர்களோடு கூட்டணி
வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
அது அவர்களது தேர்தல் நலன்.

அன்று காங்கிரஸ். இன்று பாஜக.
(அடிப்படையில் இரண்டும்
”ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்”
என்பது வேறு விஷயம்)

ஆனால் தேர்தலையே துச்சமென மதிக்கிற
திராவிட இயக்கங்களுக்கு…
நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன?

மனதார யோசித்தால்….
ராஜாஜி என்று அறியப்பட்ட ராஜகோபாலாச்சாரியாரையே
முதல்வர் பதவியை விட்டு ஓடவைத்த பெரியாருக்கு
இருந்த வலுவா இன்று நம்மிடம் இருக்கிறது.?

குடியாத்தம் இடைத்தேர்தலில் முதல்வர் பதவிக்காக
With Kamarajar Newபோட்டியிட்ட காமராசரை வெற்றி பெற வைத்த
பெரியாருக்கு இருந்த வலுவா இன்று நம்மிடம் இருக்கிறது.?

இல்லை.

ஆனால் அந்த வலிமை தானாக வந்து சேரும்.

அதுதான்:
யார் ஆட்சிக்கு வந்தாலும்சரி.
தேர்தலுக்கு ஆறு மாதம் முன்பும்….
தேர்தல் முடிந்து ஆறு மாதம் வரைக்கும்…
நாம் காக்கும் மெளனம்.

அதன்பின்பு……
யாராயினும்….
ஆறு மாத ஆட்சியைக் கணித்த பிறகு….
துல்லியமாய் கண்காணித்த பிறகு….
திராவிட இயக்கங்கள் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும் ஆட்சியாளருக்கு சிம்ம சொப்பனமாய் இருக்கும்.

சொந்த லாபங்கள் ஏதுமற்ற
இவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
என மக்களை மேலும் மேலும் நம்மை நோக்கி வரவழைக்கும்.

ஆட்சி சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை
மக்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில்
ஆட்சியாளர்களது தரத்தை
நிர்ணயித்துச் சொல்லக் கூடிய கருவியாக…
தர அளவுகோலாக….
திராவிட இயக்கம் உருமாற வேண்டும்.

பச்சையாகச் சொன்னால்…
பாஜக, பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத் என
எந்தப் பெயரில் இயங்கினாலும்
அதற்கான சாவி எப்படி ஆர்.எஸ்.எஸிடம் இருக்கிறதோ….
அப்படி….

திமுக, அதிமுக, மதிமுக என சகல ”முக” க்களும்
நம்மைத் தேடி வரும்படி சாவி
திராவிட இயக்கத்தவர்கள் கையில் இருக்க வேண்டும்.

பிரதமரே ஆனாலும் ஓடோடிச் செல்கிறாரே
மோடி ஆர்.எஸ்.எஸ்.தலைவரை பார்க்க…

அப்படி திராவிட இயக்கத் தலைவர்களைத்
தேடி தமிழக முதல்வர்கள் ஓடி வர வேண்டும்.

வர வைக்க முடியும்.

வர வைத்த காலங்களும் இருந்திருக்கிறது.

அதற்கு….
நமது தேர்தல் கால மெளனம்தான்
சரியான மருந்து என்பது இச்சிறுவனின் கருத்து.

இதைச் சொல்ல எந்தத் தகுதியும் இல்லாவிடினும்
திராவிட இயக்கத்தவர்களிடம் சொல்ல
உரிமை இருப்பதாகவே உணர்கிறேன்.

எத்தகைய மாற்றுக் கருத்துக்களையும்
உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த இயக்கம்தான்
திராவிடர் இயக்கம் என்கிற புரிதலே
என்னை இப்படி எழுத வைத்திருக்கிறது.

பரிதாபத்துக்குரிய பாலியல் தொழிலாளிகள்…

வீடும் விரட்டி நாடும் ஏற்காமல்
ஏளனத்துக்கு உள்ளாகும் திருநங்கையர்கள்….

உலகையே மாயமாக்கக் காத்திருக்கும்
உலக மயத்தின் பலியாடுகள்….

அணு உலைகளின் அபாயங்கள்….

என சகல திசைகளிலும்
இன்னமும் முழுவீச்சோடு
நம் பங்களிப்பு தொடர வேண்டும்.

அதுதான் நம் எதிரி நுழையும்
ஒவ்வொரு புறவாசலையும்
ஓசைப்படாமல் அடைத்துக் கொண்டே வரும்.

அதுதான் நம் மக்களுக்கான
உண்மையான விடுதலையைத் தரும்.

அதுவரை வணக்கம் சொல்லி விடைபெறுவது….
உங்கள் பாமரன்.

periyar1

நன்றி :”அந்திமழை” அக்டோபர் 2015

“பாட்டாளி” தமிழ் நடிகர்களுக்கு…….(கிளைமேக்ஸ்..)

”மாயா மப்படிச்சுட்டு வந்து
தகராறு செய்யறாரு”ன்னு ஒரு கோஷ்டி சொல்ல…

”அன்னைக்கு நான் பச்ச தண்ணிகூட குடிக்கல….
என் வாய மோந்து பாத்தவங்க
Sikபலபேரு இருக்காங்க சாட்சிக்கு”ன்னு
அந்தத் ‘தியாகி’ திருப்பிச் சொல்ல….

“அந்தாளு ஒரு மாமா”ன்னு இவுரு சொல்ல….
“நீ மாமாவுக்கே மாமா”ன்னு அவுரு சொல்ல…..
“சிவராமன் செத்ததுக்கு மலர் வளையம் வைக்க
விஜயகுமார் போகலை”ன்னு ராதாரவி சொல்ல….
“சிலுக்கு சுமிதா செத்ததுக்கு மலர் வளையம் வைக்க
ராதாரவி போகலை”ன்னு விஜயகுமார் சொல்ல…..

நாம செத்தா பொணத்தை பொதைக்கவாவது
உடுவாங்களாங்கிற பயத்துல
பானுப்பிரியாவும், நக்மாவும் பயந்து வெளிய ஓட….
Banupriya’ஒட்டுமொத்தமா இந்த சினிமா உலகத்துக்கே
ஒரு மலர் வளையம் வெச்சுட்டா என்ன?’ன்னு
சனங்க நெனைக்க வேண்டி வந்திருச்சு.

அந்த நேரத்துலதான் எக்குத்தப்பா
நம்ம கலாரசனையத்த கந்தசாமி கிட்ட சிக்கித் தொலைச்சேன்.
உங்க வண்டவாளங்க எல்லாம் தண்டவாளம் ஏறுன
செய்திகள அவனும் படிச்சுத் தொலைச்சிருக்கான்.

வந்ததும் வராததுமா…..
“உங்க ‘கலைஞருக’ அடிக்கிற லூட்டியப் பாத்தியா?”ன்னான்.

பாத்தேன்…ன்னேன்.

“என்னக் கேட்டா பேசாம…..
இந்த சினிமா எடுக்கறதையே
பத்து வருசத்துக்கு தடை பண்ணீரனும்……”ன்னான்.

அதெப்புடி கந்தசாமி….. நகச்சுத்து வந்துச்சுன்னா…..
விரலயே எடுத்துருவியா நீயி?…..ன்னேன்.
வந்துதே கோபம் அவனுக்கு.

“இது நகச்சுத்து இல்லய்யா….. புத்துநோயி….
இவுங்க சினிமாங்கற பேர்ல இந்த நாட்டையே
குட்டிசுவரா ஆக்கீட்டு இருக்காங்க.
நூத்துக்கு 98 படங்க நம்ம பண்பாட்டையே
பாழாக்குற படங்கதான்.
மீதி ரெண்டு சதவீதமும்
இவுங்களையும் மீறி தப்பித்தவறி வெளி வர்ற படங்க.

பாதிப்படத்துக்கு மேல……
தொப்புள்ல பம்பரம் உடறது…..
ஆஃப்பாயில் போடறது…..
கொத்துப் புரோட்டா போடறது…..ங்கிற கதையா
வர்ற படங்கதான்.

இவுங்க தானும் உருப்படாம
மக்களையும் உருப்படாமப் பண்றதுதான் சகிக்க முடியல.
இதுல இந்தப் பெரிய பெரிய நடிகருககிட்டயும்,
டைரக்டருக கிட்டயும் சிக்கீட்டு
இந்தத் துணை நடிகருகளும்,
உதவி இயக்குநர்களும் படறபாடு இருக்கே…..
அத எழுத்துல சொல்ல முடியாது.

இந்தத் தொழிலையே இழுத்து மூடுனா…..
Thoppulஅவுங்கபாடுதான் கொஞ்சம் கஷ்டம்.
ஆனா….
மொதல்ல கஷ்டமா இருந்தாலும்…..
அவுங்களும் மத்த சனங்க மாதிரி
உப்பு வண்டி இழுத்தோ….
தார் ரோடு போட்டோ….
செருப்புத் தெச்சோ பொழைக்கப் போலாம்.
அரைக்கஞ்சி குடிச்சாலும்
ஆரோக்கியமா போகும் பொழுது.
இந்த மகராசருக கிட்ட தவணை முறைல
துட்டு வாங்கிப் பொழைக்கறதவிட
மானத்தோட பொழைக்கலாம் தெரிஞ்சுக்கோ……”ங்குறான் கந்தசாமி.

இப்ப என்னவோ டைரக்டர்களுக்கும்…..
அதென்னவோ மேளக்காரருக்கும் சண்டை….
அங்கியும் நாற்காலி பறந்துச்சுன்னு படிச்சனே…..
அது என்ன கந்தா….?ன்னேன்.

“யோவ்….. அது மேளக்காரரு இல்ல…. சம்மேளனக்காரரு…..

’நடிகரோட சம்பளத்தைக் கொறைக்கணும்’கறாங்க படத் தயாரிப்பாளருக…

‘உன்ன நம்பி வாங்குன பல படங்க டப்பாக்குள்ள பூந்துடுச்சு.
அதுனால நீ மொதல்ல பட வெலையக் கொறை……’ங்கறாங்க
விநியோகஸ்தருங்க…..

‘அதெல்லாம் இருக்கட்டும்…..
படம் தயாரிக்க கோடி கோடியா கொட்டறியே…..
எங்க கூலிய எப்ப ஒசத்தப்போறே?’ங்கறாங்க தொழிலாளிக…..

இந்த முக்கோணப் பிரச்சனையப் புரிஞ்சுக்கறதுக்குள்ள
நாமெல்லாம் சட்டையப் பிச்சுகிட்டு
சுத்த வேண்டீதுதான்” கலாரசனையத்த கந்தன்.

இப்ப மட்டும் என்ன வாழுது?ன்னேன்.

“ஒரு பக்கம் நடிகருகளுக்குள்ள சண்டை…..

இன்னொரு பக்கம் நடிகருகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சண்டை….

இந்தப் பக்கம் இயக்குநருக்கும் சம்மேளனத்துக்கும் சண்டை….

அந்தப் பக்கம் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் சண்டை….

எப்படியோ…. இந்தக் களேபரத்துல ஒருவழியா
சினிமாவையே ஊத்திமூடீட்டா ஊராவது உருப்படும்னு பாத்தா
அது நடக்கற வழியக் காணோம்…..”ன்னு பெருமூச்சு விடறான் கந்தசாமி.

அதெல்லாம் கெடக்கட்டும் கந்தா….!
ஏற்கெனவே இந்த யோக்கியசிகாமணிக
பேங்க்குல வாங்குன கடனையே திருப்பிக் கட்டலையே….
அதுக்கு இந்த பேங்க்காரனுக ஏதாவது
நடவடிக்கை எடுத்தாங்களா?….ன்னு கேட்டதுதான் தாமதம்……

”அட அரை லூசு… வெவரம் புரியாமப் பேசறதே
உனக்கு பொழப்பாப் போச்சு…..
கடன் வாங்குனவுங்க என்ன நம்மள மாதிரியா….?
கரண்ட் பில்லு கட்டுலேன்னாலே
பீஸ் கட்டையப் புடுங்கீட்டுப் போறதுக்கு?

வாங்குனவுங்க இந்த நாட்டோட
“முன்னேத்தத்துக்கே” முதுகெலும்பா இருக்குறவங்க……
“கலைஞருக”…..

உன் பேர்ல வேண்ணா…..
ஏற்கெனவே இந்த அகண்டவானமும்…. ஆறடி பூமியும் இருக்கு…..
ஆனா அவுங்க…..? அடுத்த வேளை சோத்துக்கே
லாட்டரி அடிக்கறவங்க”ன்னு கந்தன் சொல்லச் சொல்ல……

எனக்கு வந்துதே கோபம்…….
கந்தா! இத்தோட நிறுத்திக்கோ….
தின்னு கொழுத்த அவங்களும் நானும் ஒண்ணா?
எங்கிட்ட மிஞ்சுனதே ரெண்டு ஓட்டைச் சட்டிதான் புரிஞ்சுக்கோ…..
வீணா கோபத்தக் கெளப்பாதே…..ன்னேன்.

“அப்படி வா வழிக்கு…..
இதே கோவந்தான்யா மக்களுக்கும் வருது….
‘இவுங்க படங்களால எங்குளுக்கும் பயனில்ல….
இந்த சமூகத்துக்கும் பயனில்ல…..
இதுல எதுக்காக எங்க வரிப்பணத்துல இருந்து
ஒரு கோடிய இந்த அரசாங்கம் இவுங்குளுக்குக்
குடுக்கணும்?ன்னு கேக்கறாங்க.

இருக்குற இரண்டரைக் கோடி கடன்ல
Moopanar-01ஒரு கோடிய மானியமா இந்த அரசாங்கமே
இந்த ”ஏழைகளுக்கு” அள்ளிக்குடுத்திருமாம்….

மீதி இருக்குற ஒண்ணரைக் கோடியையும்
கடனா குடுக்குமாம்…..
”அத வந்து வாங்கீட்டுப் போங்க”ன்னு
இவுங்கள வெத்தலை பாக்கு வெச்சு கூப்புடுது கெவர்மெண்ட்டு….

பத்தாத்துக்கு….. இதுல ஒரு கூட்டம்
மத்திய அரசு மூலமா அந்த ஒண்ணரைக் கோடியையும்
N-S-Krishnanதள்ளுபடி பண்ணீரலாம்ன்னு மூப்பனாரைப் போய்ப் பார்க்க…..
அவுரு பேங்க்குன்னு சொன்னாலே……
”அய்யோ….. ஆள உடு….. கோபாலா…! கிருஷ்ணா….!”ன்னு
கையெடுத்துக் கும்புடுறாராம் கலாரசனையத்தவன்.

வெவரம் புரியாம…..
அது யாருப்பா கோபால கிருஷ்ணன்…?ன்னேன்.

“வாய மூடு…. குறுக்கே பேசாத…..
என்.எஸ்.கிருஷ்ணன்…. எம்.ஆர்.ராதா மாதிரி நடிகருக
சம்பாதிக்கறது மாத்திரமே குறியா இல்லாம,
இந்த சமுதாயத்தை மேம்படுத்தறதுக்காக
பல இடங்கள்ல கல்லடி….. தடியடி…. கத்திக்குத்து…..ன்னு
M.R.RADHAACTING2எல்லாத்தையும் சந்திச்சாங்க…..

சினிமாங்கறது மக்களுக்கு உருப்படியான செய்திகளச் சொல்லும்
ஒரு நல்ல சாதனம்ன்னு நெனச்சாங்க….
அதுக்காக உழைச்சாங்க….

ஆனா இவுங்க…..?
கட்ட வேண்டிய வருமான வரி பாக்கியவே
ஒழுங்காக் கட்டறதில்ல……” அப்படீன்னு போட்டுத் தள்ளுறான்
நம்ம கலாரசனையத்த கபோதி கந்தசாமி.

ஒரு நிமிசம் கந்தா….!
எனக்கொரு சந்தர்ப்பம் குடு…..
நான் ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன்….ன்னேன்.

“சரி கேளு”ன்னான்.

அது ஒண்ணுமில்ல…..

அதான்….. வந்து…..

நம்ம கலைஞர்ஜியையும் மூப்பனார்ஜியையும் சேத்து……

ராவ்ஜியையும் ஜெயலலிதாஜியையும் ஒதுக்கி…..
Rajinikanth
தமிழகஜீக்களுக்கு விடிவத் தந்ததா சொல்ற……

ரஜினிஜி இருக்காரே…..

அந்தஜி என்னஜி பண்றாருஜி……ன்னேன்.

“அடச்சீ…..
தமிழ்நாட்டுல இருந்துகிட்டு
இந்த “ஜி” சொல்றத மொதல்ல உடு.

கொஞ்சம் உட்டா இன்னும் அம்பது வருசம்
பின்னால போயி…..
“அக்கிராசனார் அவர்களே !
அபேட்சகர் அவர்களே !ன்னு ஆரம்பிச்சுருவ போலிருக்கு…….

ரஜினி மட்டுமில்ல…..
”நான் மொதல்ல இந்தியன்…….
அப்புறம்தான் தமிழன்”ன்னு
நம்ம பழைய மூப்பனார் கணக்கா பேசறாரே கமலு…..
அவரும் ஒண்ணும் பண்ணல.

மாநிலத்தோட….. நாட்டோட பிரச்சனையவே
தீக்கறவங்கன்னு நம்பப்படற
இவுங்க ரெண்டுபேர் நெனச்சாலே போதும்
இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துரும்.

யார் யாருக்கொ படம் நடிச்சுக் குடுக்குற இவுங்க……
Kamal_Hassanஇவுங்களோட சங்கக் கடனுக்காக
ஒரு படம் நடிச்சுக் குடுத்தாங்கன்னாப் போதும்.

அதச் செய்யாம…..
பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காகப் போக வேண்டிய
அரசோட பணத்தை நடிகர் சங்கம் வாங்கறதுக்கு
இவுங்களும் துணைபோறது வெட்கக்கேடு……

பல நடிகருக்கிட்ட இருக்குற கருப்புப் பணத்தை
ரெய்டு பண்ணி வெளிய கொண்டு வந்தாலே போதும்…..
முழுப்பிரச்சனையும் முடிவுக்கு வந்துரும்….”கிறான் கந்தசாமி.

சரி…..கந்தா! எனக்கு நெறைய வேல இருக்கு…..
சுருக்கமா என்னதான் சொல்ல வர்றே……
அதச் சொல்லித்தொலை…..ன்னேன் ஆத்திரம் தாங்காம.

ஆனா….
அதுக்கெல்லாம் நம்ம கலாரசனையத்த கந்தன் அசந்தர்ற ஆளா….?

”இப்பச் சொல்றேன் கேட்டுக்கோ…..”ன்னான்.

சொல்லித்தொலை….ன்னேன் மறுபடியும்.

“இந்த நடிகருகளால சமூகத்துக்கு எந்தப் பிரயோஜனமும் இல்ல…..
நாடே சாதிச்சண்டை…… மதச் சண்டைல ரத்தம் சிந்திகிட்டு
இருக்குற இந்த வேளைல….. இவுங்க எதைப் பத்தியும்
கவலப்படாம சண்டப் போட்டுகிட்டு
இருக்குறதப் பாக்குறப்போ எரிச்சல் எரிச்சலா வருது.

அதுனால…..
நம்ம அரசு எக்காரணம் கொண்டும் அரசுப்பணத்துல இருந்து
சல்லிக்காசுகூட மானியமா மட்டுமில்ல…..
கடனாக்கூட குடுக்கக் கூடாது…..”

மேல சொல்லு……..

“சாதாரண சனங்க போனா
அல்லாடவைக்கிற இந்த பேங்க்காரனுக…..
இந்தக் கடன வட்டியோட மட்டுமில்ல…..
அதுக்கு மேலயும் ஒரு கோடியோ ரெண்டு கோடியோ
அபராதமாப் போட்டு வசூல் பண்ணனும்….”

அப்பவும் வசூலாகலேன்னா…..?

“மாட்டு லோன் கட்டாதவன் மாட்டை
திருப்பிப் புடிச்சுகிட்டுப் போற மாதிரி….
நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கணும்…..
அப்பவும் கட்டலேன்னா…..?

அத முழுசா இடிச்சுட்டு….
தியாகராயர் நகர் மக்களோட………..

ஆத்தர அவசரத்துக்கு ஒதவுற மாதிரி……

அந்த எடத்துல…….

இலவசக் கழிப்பிடம் ஒண்ணு கட்டலாம்.

அதுதான் சரி.

அவசரத்துடன்,
பாமரன்.
(நன்றி : குமுதம் ஸ்பெஷல் 1997)

நடுத்தெருவுக்கு வந்துவிட்ட “பாட்டாளி” தமிழ் நடிகர்களுக்கு…….

“கலைஞன் என்பவனுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா….?”

”உண்டு. பஞ்சமாபாதகத்தில் அவன் ஒரு பார்ட்னர்.”
-நடிகவேள் எம்.ஆர்.ராதா.


ஏறக்குறைய இருபது வருசத்துக்கும் மேல இருக்குமுங்க.
கலையுலகத்துக்கும் நமக்கும் உள்ள தொடர்பு.
உங்க படங்கள எல்லாம் பாக்கறதுக்காக….
கியூவுல நின்னு மூச்சு திணறியிருக்கேன்….
முட்டிக்குக் கீழே போலீசுகிட்ட அடிவாங்கியிருக்கேன்….
பஸ்சுக்குப் போக வெச்சிருந்த காசைக்கூட பறிகொடுத்திருக்கேன்.

ஆனா இத்தன வருசம் திரைல மட்டுமே பாத்துப் பாத்துப் பூரிச்ச
உங்க சமாச்சாரங்கள நடுத்தெருவுல பாக்கறதுக்கான வாய்ப்பு
இப்பத்தாங்க கெடச்சுது. இந்தக் “கலைய” வளக்கறதுக்காக
நீங்க ஆத்துற தொண்டிருக்கே தொண்டு….
அது நம்ம சுபாசு சந்திரபோசு செஞ்ச தொண்டுக்கும் மேல.
இப்படிப்பட்ட தேசபக்தருகளுக்கு ஒரு சிக்கல்ன்னா….
அது இந்த தேசத்துக்கே வந்த சிக்கல்தானுங்களே…..

ஆனா…. இந்தக் கலாரசனையத்த கந்தசாமி இருக்கானே…
அவனுக்கு வாய் ரொம்ப நீளங்க….
இந்த நாடே உருப்படாமப் போனதுக்குக் காரணமே நீங்கதானாம்.
நீங்க இல்லாட்டி இந்த ஊர் இளிச்சவாயனுக என்னமோ
அமெரிக்காக்காரனுக்கு முன்னாடியே
அணுகுண்டக் கண்டுபுடுச்சிருப்பானுகங்கிற கணக்கா பேசறான்.

”கந்தசாமி….! சினிமான்னா ஏதோ ஒண்ணு ரெண்டு உருப்படாத கேசு
இருக்கத்தான் செய்யும்.
அதுக்காக நீ ஒட்டுமொத்த கலையுலகையே திட்டித் தீக்காதே…..”ன்னேன்.

அவன் கேட்டாத்தானே…?

“ஒண்ணு ரெண்டு உருப்படாத கேசு இருந்தா நான் ஏன் பேசறேன்?
ஆனா…. உருப்படற கேசே அங்க ஒண்ணு ரெண்டுதான் இருக்கு….
இதுல வேற இவுங்குளுக்குள்ள நாயடி….பேயடி அடிச்சுக்கறதப் பாத்தா
மானக்கேடா இருக்குது…..”ங்குறான் கந்தசாமி.

“கலைச்சேவை” செய்ய வந்தவங்களுக்குள்ள
ஏதாவது பிரச்சனை வராமயா இருக்கும்?
அதப்போயி ஏன் பெருசா எடுக்கறே?”ன்னேன்.

”யோவ் லூசு! இது “கலைச்சேவை” செய்யறவங்களுக்குள்ளே வந்த பிரச்சனை இல்ல…..
கடங்காரனுகளுக்குள்ள வந்த பிரச்சனை.
சினிமாவ எப்படி ஆரோக்கியமா எடுக்கறதுங்கறதுல வந்த பிரச்சனையில்லய்யா….
வாங்குன கடன கட்டாம எப்படி டிமிக்கி குடுக்கறதுங்கறதுல
வந்த பிரச்சனை. அதப் புரிஞ்சுக்கோ……”ங்குறான் கந்தன்.

“என்னது….. கடனா….? யாரு நம்ம நடிகருக வாங்குனாங்களா….?
அவுங்குளுக்கு என்னய்யா கொறைச்சல்…? காரு…. பங்களா…ன்னு
ராசாவாட்டம் இருக்குற அவுங்களப்போயி
கடன் வாங்குனாங்கன்னு புளுகறியே…..
இது உனக்கே நல்லாயிருக்கா கந்தசாமி…?”ன்னேன்.

”இங்க பாரு…. விசயம் முழுசா தெரிஞ்சா பேசு….
இல்லாட்டி ஆளவிடு….”ன்னு கெளம்புனுவனப் புடிச்சு
கெஞ்ச வேண்டீதாப் போச்சு…….

ஒருவழியா சமாதானப்படுத்தி அவனப் பேசவைக்கறதுக்குள்ள
மனுசனுக்குப் போதும் போதும்ன்னு ஆயிருச்சு.

“காத்தால எந்திரிச்சா கைல காசு இல்லாம….
MGRகுடிக்கக் கஞ்சியும்….. தொட்டுக்க ஊறுகாயுமா….
காலந்தள்ளுற உங்க நடிகருக……
சங்கத்துக்கு சொந்தமா ஒரு கட்டடம் கட்டணும்ன்னு முடிவு பண்ணி
ஸ்டேட் பாங்குல இருபத்தி ஐஞ்சு லட்சம் கடன் வாங்குனாங்க……
ஏறக்குறைய பதினெட்டு வருசம் முன்னாடி.

வாங்குனது என்னவோ 25 லட்சம்…..
ஆனா வாங்குன காச ஒழுங்கா கட்டாம…
வாங்குன கடனுக்கு வட்டி மேல வட்டி ஏறி….
இப்ப அது இரண்டரை கோடில வந்து நிக்குது.

அது எம்.ஜி.ஆர். உசுரோட இருந்தப்பவே உருவான கடன் தான்.
அத அவரும் தீக்க முயற்சி எடுக்கல…
அப்பத் தலைவரா இருந்த சிவாஜியும் தீக்கல…
Sivajiஅதுக்கப்புறம் வந்த தலைவர்களும் தீக்கல…
இப்போ இருக்குற தலைவரும் தீக்கல…
இனி வரப்போற தலைவரும் தீக்கப்போறதில்ல…
இது தான் இன்னத்த நெலமை… புரிஞ்சுதா…?”ன்னான்

இதென்னடாது… சினிமாவுலயும் நேர்லயும் சர்ர்ர்ரு புர்ர்ர்ருன்னு
கார்ல வந்தெறங்குற நம்மாளுகளா கடங்காரனுக…?
இவுங்க ஏதோ பாரி வள்ளல் பரம்பரைன்னு நெனச்சுகிட்டு
தியேட்டர்ல நாம விசிலடிச்சுகிட்டு இருந்தா…
இவுங்க நம்மள விட பிச்சைக்காரனுகளா இருக்கானுகளேன்னு
வருத்தமாப் போச்சு….

இருந்தாலும்…. சொந்தத்துல காரு… பங்களான்னு… வெச்சுருக்குற இவுங்க
எதுக்கு பேங்குல போயி கடன் வாங்குனாங்க…?
சரி இவுங்கதான் கேட்டாங்கன்னா…
‘இவ்வளவு வசதி இருக்குற உங்களுக்கு எதுக்குக் கடனு?’ன்னு
பேங்க்காரனுகளாவது கேட்டானுகளான்னு… பல சந்தேகம்…

வாயி சும்மாயிருக்காம அதக் கேக்கப்போயி…
கலாரசனையத்த கந்தசாமி குண்டக்கமண்டக்கன்னு கிழிக்க ஆரம்பிச்சுட்டான்.

“யோவ் அரைப்பைத்தியம்! இந்த நாட்டுல பேங்க்காரனுக என்ன…
உன்ன… மாதிரி அன்னாடங்காச்சிகளுக்கு லோன் குடுக்கவா
பேங்க் வெச்சிருக்கான்… ?
வக்கில்லாதவனுகளுக்கு கடன் குடுக்க இல்லையா பேங்க்கு…
வசதி உள்ளவனுக்கு கடன் குடுக்கத்தான் பேங்க்…

உன்னமாதிரி மொளங்கால் வரைக்கும் வேட்டிகட்டுனவனுகளுக்கு
குடுத்தா அவுங்களுக்கு என்ன லாபம்…?
உனக்கு பதிலா… அஞ்சாறு நடிகனுகளுக்கோ,
nadigar1நடிகைகளுக்கோ கடன்குடுத்தா….
பேங்க்கு மேனேஜரு பக்கத்துல நின்னு
பல்லிளிச்சுகிட்டு போஸ் குடுக்கலாம்…

உன்னப் பக்கத்துல நிக்க வெச்சுப் போட்டோ எடுத்தா
எவன் சீந்துவான் அவுங்கள…? இது புரியாம ஒளறாதே…”ன்னான்.

அதென்னமோ உங்க சினிமாவுல அடிக்கடி வருமே…
கிளாஸ்பேக்கோ…. பிளாஸ்பேக்கோ… அந்தமாதிரி
ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு.

ஏழெட்டு வருசம் முன்னாடி….
பக்கத்துல உள்ள பேங்குல மாடு வாங்க லோன் குடுக்குறாங்கன்னு
நம்ம கருப்பராயன் சொன்னான்னு நம்பி….
நாம்போயி அந்த பேங்க் மகராசருககிட்ட பட்டபாடு இருக்கே…

மொதல்ல வெளீல நின்ன பியூனுகிட்டக் கெஞ்சிக்கூத்தாடி
உள்ளாற போறதுக்குள்ளயே போதும் போதும்ன்னு ஆயிருச்சு…

உள்ளாற போன…
”சொந்தமா எடமிருக்கா…?”ன்னான்

இல்லே…ன்னேன்

“வேறு ஏதாவது சொத்து பத்து இருக்கா…?”ன்னான்

அது இருந்தா நா ஏன் இங்க வர்றே…ன்னேன்

“உம் பொண்டாட்டி பேர்லயாவது இருக்கா…?”ன்னான்

அதுவுமில்லே…ன்னேன்

“உனக்கு கடன்குடுத்தா நிச்சயமா நீ திருப்பிக் கட்டுவேங்குறதுக்கு
உத்தரவாதக் கையெழுத்துப் போட ரெண்டு பேர் இருக்காங்களா…?”ன்னான்…

ஓ…. இருக்காங்க…. நம்ம வறட்டி தட்டுற சின்னப்பனும்…
மாடு மேக்கிற அமாவாசையும் போதுமா…?ன்னேன்

“அவுங்கெல்லாம் ஆகாது…
நீ ஒழுங்காக் கட்டலன்னா அவுங்ககிட்ட ஜப்தி பண்றதுக்கு
கோவணத்தத் தவிர வேறென்ன இருக்குது…?
அதுனால ஊருக்குள்ள யாராவது ரெண்டு ‘பெரிய’
மனுசனுகள கையெழுத்துப் போட கூட்டிட்டு வா…

வர்றப்ப… ரெண்டு பேர சாட்சிக்கு வேற கூட்டிட்டுவா….

அப்படியே மறந்திடாம மாடு புண்ணாக்குதான் திங்கும்குறதுக்கு
சர்ட்டிபிகேட் ஒண்ணையும் உங்க ஊர் வக்கீலுகிட்ட வாங்கீட்டு வா…”ன்னான்

இவனுககிட்ட இத்தன லோல்பட்டு கடன் வாங்குறத விட…
காக்கஞ்சி குடிச்சுட்டு காலத்த ஓட்டறதுதான் செரீன்னு முடிவு பண்ணி….
மாடாவது மண்ணாங்கட்டியாவதுன்னு நடையக் கட்டீட்டேன்….

“ஏங் கந்தசாமி…. மாட்டு லோனுக்குப் போன நம்மளையே
அந்தப்பாடு படுத்துனாங்களே இந்த பேங்க் ஆபீசருக…..
25 லட்சம் கேட்டுப் படியேறுன நம்ம “கலைஞருகள”
என்னபாடு படுத்தீருப்பாங்க….?ன்னு கேட்டேன்.

கடுப்பாயிட்டான் கந்தன்.

“வெவரம் புரியாமப் பேசாத….
ஏற்கெனவே ‘இந்தியன் பேங்க்’ வெவகாரத்துல
பல ’தன்மானக் காங்கிரஸ்’ தலைக உருண்டுகிட்டுக் கெடக்குது…..
குள்ள பத்மினிக்குக் குடுத்தது…..
குண்டு பத்மினிக்குக் குடுத்தது….
எல்லாம் ‘கோவிந்தா’ ஆயிப்போயி……
இப்ப பேங்க்கயே பெனாயில் போட்டுக் கழுவீட்டு இருக்கானுக.
இத்தன சட்டதிட்டங்களும் உன்ன மாதிரி
இளிச்சவாயனுகளுக்குத்தான்.

நடிக நடிகையருக்குன்னா…..
நாக்கத் தொங்கப்போட்டுகிட்டு குடுப்பாங்க நம்ம ஆபீசருக……
புரிஞ்சுதா……?”ங்கறான் நம்ம கலாரசனையத்த கந்தசாமி.

இடைல எந்தப் பொழுதுபோக்குமே இல்லாம நாளு நகர்ந்துகிட்டு இருக்க…..
திடுதிப்புன்னு ஒரு நாள்……
“நடிகர் சங்கத்தில் கலாட்டா….”
“காது கிழிந்தது…”
”நாற்காலி பறந்தது”
ன்னு பத்திரிக்கைகள்ல பக்கம் பக்கமா செய்தி.

ஊர் ரெண்டுபட்டா
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்….
ஆனா…..
Radharaviகூத்தாடிகளே ரெண்டுபட்டா
பத்திரிக்கைகளுக்கு சந்தோசம் இல்லாம இருக்குமா…..?

ஆனா…. எனக்குத்தான் வருத்தமாப் போச்சு…..
“கலை” ஒலகமே இப்புடி ரெண்டுபட்டா….
இந்த நாடு என்னாகறது?
இந்த சனங்க அடுத்தவேளை சோத்துக்கு
என்ன பண்ணுவாங்கன்னு ஒரே கவலையாப் போச்சு.

நடிகர் சங்க கலாட்டாவுல நீங்க எல்லாம்….
“கடன்கார ராதாரவி ஒழிக”ன்னு ஒரு புறமும்…..

“கடனடைக்க வர மறுக்கிற கடன்கார விஜயகுமார் ஒழிக”ன்னு மறுபுறமும்
Vijayakumar_alterமாறி மாறி நின்னு உங்க “கொள்கை முழக்கங்கள”
முழங்கியதப் பாத்து புல்லரிச்சுப் போச்சுங்க.

இதுல வேற நம்ம காந்தியார்கூட
உப்பு சத்தியாக்கிரகத்துல கலந்துகிட்டு
தேச சேவைக்கே தன்னை அர்ப்பணிச்சுகிட்ட
‘தியாகி’ மாயாவோட ஜாக்கெட்ட
யாரோ ஒருத்தரு கிழிக்க…..

இந்தத் ’தியாகி’ அவுங்களக் கடிக்க….

சரத்குமாரோ யாரோ புடுச்சுத் தள்ள…..

அவுரு இவரத்தள்ள….

விஜயகாந்த் குதிச்சு வந்து சமாதானம் பண்ண…..

உடனே ஒரு கோஷ்டி சட்டசபை கணக்கா ‘வெளிநடப்பு’ பண்ண….

ஒருத்தன் “டேய் மான்ங்கெட்டவங்களா”ங்க…….

இன்னொருத்தன் “நீங்கதண்டா அது”ங்க…..

போதாக்குறைக்கு நம்ம பத்திரிக்கைக
“மாயா கடிபட்ட இடம் இதுதான்”ன்னு
முதுகுல அம்புக்குறி வேற போட்டு போட்டோ போட……

”நல்லவேளை கடிச்ச மகராசரு
Mayaமுதுகுல கடிச்சாங்களே”ன்னு
சனங்கள நிம்மதிப் பெருமூச்சு விடவெச்சுட்டீங்க.

அதுக்கப்புறம் நீங்க மாத்தி மாத்தி குடுத்த அறிக்கைக இருக்கே…….

அட…… அட……..

(இடைவேளை)

Inter

(இதன் கண்றாவி கிளைமேக்ஸ் நாளை…….)

நன்றி : குமுதம் ஸ்பெஷல் – 1997

உன்னைப் போல் ஒருவன்:கமலுக்கு பகிரங்கக் கடிதம் 3

ஆசுபத்திரில இருந்து வந்ததுல இருந்தே பலமாசமா மனசு செரியில்ல. ஈழத்துல நம்ம சனங்கள அந்த நாசமாப் போறவனுக கொத்துக் கொத்தா குண்டப் போட்டுக் கொல்றாங்கன்னு வர்ற சேதிகளக் கேட்டா சோறு கூட உள்ள எறங்க மாட்டேங்குது. யாரு கூட எதப் பத்திப் பேசிகிட்டு இருந்தாலும் நெனப்பு அங்க கொண்டு போயி உட்டுருது.

இதுக்கெடையில எவனாவது அந்தப் படம் பாத்தியா? இந்தப் படம் பாத்தியா?ன்னு கேட்டா…… கால்ல இருக்குறத கழட்டி அடிக்கலாமான்னு கோபம் கோபமா வருது.

அவ்வளவு ஏன்….. எனக்கு உங்க படம் பாக்கக்கூட மனசு வர்லேன்னா பாத்துக்கங்களேன். ஆனா இந்த மனித உரிமை மார்த்தாண்டன்தான் “இப்புடியே ஊட்டுக்குள்ள கெடந்தா எப்படி? வா உங்காளு தமிழர்களோட அருமை பெருமைகளப் பத்தி  புர்ர்ர்ர்ட்சிகரமா ஒரு படம் தயாரிச்சு அதுல நடிச்சும் இருக்காரு பாக்கலாம்”ன்னு கூட்டிகிட்டு வந்தான்.

”உன்னைப் போல் ஒருவன்”ன்னு பேரே வித்தியாசமா இருந்துச்சு. ச்சே….. என்னதான் சொன்னாலும் நம்மாளு நம்மாளுதாண்டான்னு மனசுக்கு அப்பவே பட்டுச்சு.

அதைவிடவும் போலீசுக்கே உரிய தொப்பையும் தொந்தியுமா நம்ம மோகன்லாலு வேற ’உனிக்கு என்ன வேணம்’, ’எனிக்கு இப்புவே தெரிஞ்ஞ்ஞ்சாகணும்’ ’எண்ட பணி நான் செய்யும்’ன்னு வசனம் பேசப் பேச தியேட்டர்ல விசிலும் கைதட்டலும் காதைப் பொளக்குது. இதென்னடாது நாம கோயம்புத்தூர்ல இருக்கமா? இல்ல கோழிக்கோட்டுல இருக்கமா…… ன்னு சந்தேகம் வந்து சுத்தியும் முத்தியும் பாத்தா எல்லாம் நம்ம கேரளத்து சேட்டன்மார் கூட்டம்.

ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணைல தண்ணி பிரச்சனை……. அது போதாதுன்னு இந்த மோகன்லால் வேற “Not only Kerala……. திஸ் ஈஸ் மை நாடு ஆல்சோ”ன்னு வசனம் பேசறதக் கேட்டதும் திக்குன்னு ஆயிருச்சு. நம்ம தமிழ்நாட்ட இன்னும் தனியாத்தான் உட்டுவெச்சிருக்கானுகளா இல்ல மொத்தமா கேரளாவோட சேத்தீட்டானுகளான்னு ஊட்டுக்குப் போனதும் மொதல்ல மேப்ப எடுத்துப் பாக்கணும்ன்னு முடிவுபண்ணீட்டு அப்புடியே படத்துல மூழ்கீட்டேன்.

ஒரு குத்துப்பாட்டு….. ஒரு பைட்டு….ன்னு இல்லாம இந்த நாட்டை சூறையாடுற தீவிரவாதிகள நீங்க போட்டுத் தள்றதப் பாத்ததும் அப்படியே மயிர்க்காலெல்லாம் சிலிர்த்துகிச்சு. அதுலயும் ”காலேஜு டீனேஜு பெண்கள்….. எல்லோர்க்கும் என் மீது கண்கள்”ன்னு அரை டவுசரோட ஆடாம கூடை நெறையா தக்காளிப்பழம், மொழகா, கொத்தவரங்கான்னு ஊட்டுக்கு வாங்கீட்டுப் போற காமன்மேனா வர்றீங்களே அதுக்கே குடுக்கனும்ங்க ஒரு ஆஸ்கார்.

ஆனா மனித உரிமை மார்த்தாண்டன்தான் கடுப்போட படத்தப் பாத்துகிட்டு இருந்தான். படம் உட்டதும் மனசே பாரமாப் போச்சு. என்ன ”மனித உரிமை” நம்மாளு நல்ல மெசேஜ்தான சொல்லீருக்காரு……. இதுலயும் என்னாவது கொறை கண்டுபுடுச்சுருக்கியா?ன்னேன்.

“வெங்காயம்……. அழுத்தக்காரன் சந்தைக்குப் போனா புழுத்த கத்தரிக்காங்குற மாதிரி…… இந்தில இருந்து ஒரு புழுத்தத் தூக்கீட்டு வந்திருக்காரு உங்க ஆஸ்கார் ப்ரியன்….. வழக்கம்போல குண்டு வெக்கறவன் எல்லாம் பாயு……. தாடி வெச்சவன் எல்லாம் தீவிரவாதி…..ங்குற வழக்கமான பல்லவிதான் இதுலயும்”ங்குறான் எரிச்சலோட.

”ஏம்ப்பா….. ஒரு இந்துவும்தான தப்புப் பண்ணுறதா காட்டீருக்காரு நம்ம காமன்மேன்?”ன்னான் பக்கத்துல இருந்த அறிவொளி அப்பாசு.

”அப்பாசு……… இந்த ஆளவந்தான்கூட சேர்ந்து நீயும் அதே மாதிரி ஆனதுதான் மிச்சம். ஒரு தீவிரவாதத்தை இன்னொரு தீவிரவாதத்தாலதான் தீர்க்கணும்ங்குற ’ மாபெரும் தத்துவத்தை’  சொல்றதுக்கு இம்மாம் பெரிய ’மேதை’ தேவையில்ல…… அதுக்கு பொட்டிகடை முன்னாடி பேப்பர் படிக்கறவங்க போதும். உண்மையா சமுதாயத்த நேசிக்கறவன் தீவிரவாதத்துக்கான காரணம் எங்கிருந்து கெளம்புது…… அதை எப்படி முதல்ல சரி பண்ணுறதுன்னுதான் யோசிப்பான்.

கொசுவ ஒழிக்கணும்ன்னா டார்டாய்ஸ் கொளுத்துன்னு சொல்றது புத்திசாலித்தனமில்ல……. சாக்கடைய மூடச் சொல்றதுதான் சரியான தீர்வு.

இதத்தான் எங்கூர்ல தும்பை விட்டுட்டு வாலைப் புடிக்கறதுன்னு சொல்லுவாங்க புரியுதா?”ன்னு பட்டையக் கெளப்பறான்.

அப்ப தீவிரவாதம் சரிதான்னு சொல்ல வர்றியா?ன்னேன் கடுப்பு தாங்காம.

“யோவ் அரை லூசு ஆனைக்கு அர்றம்ன்னா……. குதிரைக்கு குர்றம்ன்னு சொல்லக் கூடாது. இஸ்லாமிய தீவிரவாதம் பத்தி நீட்டி முழங்குறவங்க இந்துத் தீவிரவாதம் பத்தி வாயே திறக்கறதில்லையேங்கறதுதான் நம்ம கேள்வி. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பப் பத்தி பேசறவங்க அதுக்கு மூணு மாசம் முன்னாடி நடந்த பதினேழு அப்பாவி இஸ்லாமியர்க படுகொலைகளப் பத்தி பேசறதில்ல…… மும்பை குண்டுவெடிப்புகளப் பத்தி பேசறவங்க அதுக்கு முன்னால பாபர் மசூதி இடிச்சப்ப நடந்த மும்பை படுகொலைகளப் பத்தி வாயே திறக்கறதில்ல.

அந்த மசூதிய இடிச்சு வருசம் பதினேழாச்சு. இன்னும் அதுக்குக் காரணமானவங்க தண்டிக்கப் படலை. பத்தாதுக்கு அந்தப் புண்ணியவானுக இன்னைக்கும் முதலமைச்சரா இருக்காங்க……  முன்னாடி மத்திய அமைச்சர்களாகவே இருந்திருக்காங்க.

மக்களைப் பலியாக்குற எந்தத் தீவிரவாதமா இருந்தாலும் கண்டிக்கணும் அது இந்துத் தீவிரவாதமா இருந்தாலும் சரி…. அது இஸ்லாமிய தீவிரவாதமா இருந்தாலும் சரி.”ன்னு பெரிய கதாகாலட்சேபமே நடத்தீட்டான் அந்த உருப்படாதவன்.

கண்டிக்கறது இருக்கட்டும்……. கோர்ட்டு கேசுன்னு அலைஞ்சு தண்டிக்கிறது எப்போ?ங்குறதுதான் நம்ம காமன்மேன் கேக்குற கேள்வி….ன்னேன் பொட்டுல அடிச்சாப்புல.

”இப்படிப்பட்ட அபத்தமான கேள்விய எந்தக் காமன்மேனும் கேட்கமாட்டான். காமன்சென்சே இல்லாதவன்தான் கேட்பான். இப்படித்தான் முதலமைச்சர் மோடியக் கொல்லவந்தவங்கன்னு சொல்லி ’இர்ஷத்’ அப்படீங்குற காலேஜ் படிக்குற 19 வயசு புள்ளைய 2004லுல அநியாயமா சுட்டுக் கொன்னாங்க குஜராத்துல. ஆனா அது மோடிகிட்ட நல்ல பேரும்…… பிரமோசனும் வாங்குறதுக்காக குஜராத் போலீஸ்காரங்க நடத்துன பச்சைப் படுகொலைன்னு அஞ்சு வருசத்துக்குப் பிறகு உண்மையக் கண்டறிஞ்சு 2009ல அறிக்கை குடுத்திருக்காரு மாஜிஸ்ட்ரேட் ”தமங்”. அவரும் ஒரு நேர்மையான இந்துதான். இப்புடித்தான்….. எப்பவுமே ஒங்க ஒலகநாயகன் உப்பு விக்கப் போனா மழையடிக்குது……. உமி விக்கப் போனா காத்தடிக்குது என்ன செய்ய?.”ன்னு நக்கலாச் சிரிக்கிறான் மார்த்தாண்டன்.

இவனுக பேசறதக் கேட்டா எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல குருவே. நீங்க எம்மாம் பெரிய படிப்பாளி….. நீங்க போயி இப்புடி ஒரு ஊத்தைக் கதைய வடநாட்டுல இருந்து தூக்கிக்கிட்டு வரலாமா? ஏதோ கேக்கணும்ன்னு தோணுச்சு கேட்டுட்டேன். மனசுல எதுவும் வெச்சுக்காதீங்க துர்நாதரே….. அடச்சே…… வாயு கொளறுது……… சாரி……குருநாதரே.

நல்லவேளை நம்ம கலாரசனையத்த கந்தன்தான் நான் முழிச்சுகிட்டு நின்ன நேரமாப் பாத்து உள்ளாற புகுந்து பேச்சோட ரூட்டையே மாத்துனான்.

”அதுசரி நம்மாளோட கனவுத்திட்டமான “மருதநாயகம்” எப்ப வெளிவரும்?”ன்னான் கந்தன்.

எது அந்த வரலாறு படைக்கப் போற வரலாற்றுப் படமா? வரும்….. ஆனா வராதுகிற கதைதான் அது….ன்னேன்.

”என்னது……..? வரலாற்று சம்பவத்தைப் பத்துன படமா? அதுவும் உங்காளு எடுக்குறாரா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி.” ன்னான் ம.உ.மார்த்தாண்டன்.

ஏன் எடுக்கக் கூடாதா?ன்னேன் கோபமா.

”உ.போ.ஒருவன்லயே தெரிஞ்சுதே உங்காளுக்கு இருக்குற வரலாற்று ”ஞானம்”………. அதுல இது வேறயா? 2002ல குஜராத் பெஸ்ட் பேக்கரில மூணாவது பொஞ்சாதியக் கொன்னதுக்கு பழிவாங்க 1998ல கோவைல குண்டுவெச்சேன்….ன்னு சொல்ற வரலாற்றுச் சிரிப்பு மிக்க தீவிரவாதிய உங்காளு படத்துலதான் பார்க்க முடியும். அதைவிட ரெண்டாவது பீவி…… மூணாவது பீவீன்னு உங்காளு படத்துல பேசறதக் கேட்டாத்தான் சிரிப்பா இருக்கு”ன்னு எகத்தாளமாப் பேசறான் அந்த வெத்து வேட்டு. எனக்கே வெக்கமாப் போச்சு அவன் பேசுனதக் கேட்டு. நீங்குளும் இனியாவது கொஞ்சம் வெவரமாப் பேசணும் குருவே.

ஏம்ப்பா கந்தா!…… நான் உண்மையிலேயே தெரியாமத்தான் கேக்குறேன். அவுரு  வெறும் நடிகர் மட்டும்தான். டைரக்டர் என்ன சொல்றாரோ அத அப்படியே செய்யறதுதான் அவுரோட வேலை. டைரக்டர் பண்ணுன தப்புக்கு அந்தக் கதாபாத்துரத்துல நடிச்சவரை குத்தம் சொல்றது சரியான்னு நீயே யோசிச்சுப் பாரு….ன்னேன் உருக்கமா.

Kamal Hassan Unnai Pol Oruvan

“நீ சொல்றதும் ஓரளவு உண்மைதான்.

ஆனா……உங்காளு நடிச்ச படங்க நல்லா பேசப்பட்டுச்சுன்னா……. அதை இயக்குன டைரக்டர்க சுனாமீல சிக்குன சூட்கேஸ் மாதிரி காணாமப் போயிர்றதும்……..

படம் சந்தி சிரிச்சுதுன்னா…… அதுக்குக் காரணம் டைரக்சன்தான்னு நழுவுறதும்தானே இதுவரைக்கும் நடந்துகிட்டு இருக்கு.

நானும் தெரியாமத்தான் கேக்கறேன்…. ராஜபார்வையைப் பத்தி பேசும்போது அதோட டைரக்டர் சிங்கீதம் சீனிவாச ராவ் பத்தி யாராவது எங்கியாவது பேசி கேட்டியா?

”மகாநதி”ய மனசத் தொட வெச்சதுல அதோட இயக்குனர் சந்தானபாரதிக்கும் பங்குண்டுன்னு யாராவது முணுமுணுத்ததையாவது கேட்டியா?

”அன்பே சிவம்” படம் பெரிய அளவில் பேசப்பட்டபோது அதனோட உருவாக்கத்துல சுந்தர்.சி யோட உழைப்பும் ஒளிஞ்சிருக்குன்னு யாராவது சொல்லிக் கேட்டியா?

அவ்வளவு எதுக்கு இந்த உ.போ.ஒருவனோட டைரடக்கரு டெக்கால்ட்டியோ…… டக்கால்ட்டியோ அவுரோட போட்டோவையாவது எங்கியாவது பாத்தியா நீ?

படம் ஓடுச்சுன்னா அது கமல்னாலதான்னும்…… படம் ஊத்திகிச்சுன்னா அது டைரக்டர்னாலதான்னும் நடந்துக்குறது மத்தவங்க உழைப்பைக் கொச்சைப் படுத்தறவிசயம். நான் சொல்றது சரியா?இல்லையான்னு நீயும் யோசிச்சுப் பாரு”ங்குறான் அவனும் பதிலுக்கு உருக்கமா.

யோவ் எங்காளு எவ்வளவு பெரிய மேதை……. கோட்சே……. காந்தி…… ப்ராய்டு……..பெரியாரு….ன்னு பல பேரப் பத்தி கரைச்சுக் குடிச்சவரு….. எங்காளப் போயி குத்தம் சொல்றியே…….. இதே எங்காளு ’தேவர்மகன்’ல வர்ற பாட்டுல ”தமிழச்சி பால் குடிச்சவண்டா”ன்னு பாடுனப்ப மட்டும் வாயப் பொளந்துகிட்டு விசில் அடிச்சீங்கல்ல….. அப்ப எங்க போச்சு புத்தி?ன்னு போட்டேன் ஒரு போடு. ஆனா அதுவே வாயக் குடுத்து வம்புல மாட்டுன  மாதிரி ஆயிடுச்சு.

”இங்கபாரு ஞானசூனியம்…….. பெரியார ஏத்துக்கறவன் சாதிய ஏத்துக்க மாட்டான்……. சாதிய ஏத்துக்கறவன் பெரியார ஏத்துக்க மாட்டான். ரெண்டையும் ஏத்துக்கறேன்னு சொன்னா அவனுக்கு தலைக்குள்ள எங்கியோ கோளாறு இருக்குன்னு அர்த்தம். இத உங்க கோமானுக்கு மட்டும் சொல்லல….. பல சீமானுகளுக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். உங்காளு திடீர்ன்னு தேவர்மகனா வருவாரு……… அப்புறம் தமிழச்சி பால் குடிச்சவன்பாரு…….. திடுதிப்புன்னு நான் இந்தியண்டான்னு சாமியாடுவாரு. இந்தக் கடவுள்பாதி….. மிருகம்பாதி பிசினெஸ் எல்லாம் எங்க கிட்ட செல்லுபடியாகாது அதுக்கு வேற ஆளப்பாக்கச் சொல்லு உங்காள……”ன்னு போட்டுப் பொளக்குறான் கலாரசனையத்த கந்தன்.

கலைமாமணியே!……… இவனுக கிட்ட போயி இப்புடி எக்குத்தப்பா மாட்டிகிட்டமேன்னு மனசுக்குக் கஸ்டமாப் போச்சு.

ஆனா……. உங்க உன்னைப் போல் ஒருவன் படத்தப் பாத்து நமக்கே கோபம் வந்துச்சுன்னா பாத்துக்கங்களேன்.

”எது?”ங்கறீங்களா?

அதுதான் ஐம்பது வருசமா உங்களத் தூக்கிச் சொமக்கிற நம்ம தமிழனுகளுக்கே பல இடங்கள்ல உள்குத்து விடறீங்களே அதுதான்.

தமிழ்நாட்டுல தலைமைச் செயலாளர்ல இருந்து பஸ் கண்டக்டர் வரைக்கும் எல்லாரும் பிரச்சனைக்கு பயந்தவங்க……. அல்லது பொறுப்பில்லாதவங்க…… மலையாள மாறார் மட்டும்தான் ஒரே நேர்மையான அதிகாரி. ஆனா அவுரும் தன் கடமையச் செய்த பாவத்துக்காக கமிசனர் பதவியப் பறிகொடுப்பவரு……ன்னு மொத்த தமிழ்நாட்டையும் கேவலப்படுத்தி இருக்கீங்களே அதை நெனச்சாத்தான் மனசுக்கு கஸ்டமா இருக்கு.

அதைவிட நீங்க தமிழனுகளுக்கு அறிவுரை சொல்றேன்னு அவுத்து உடற வஜனங்கள் இருக்கே….. அதக் கேட்டா பின்னால பிளேடுலயும் கீறி மிளகாயவும் தேய்ச்ச மாதிரி இருக்கு.

“மும்பைல குண்டு வெடிச்சா அதப் பத்தி நமக்கென்ன? நம்ம வேற ஊரு….. பாம் மேல பாம் வெடிச்சா நம்ம டீ.வி.ல போட்டுக்கூட காட்டமாட்டோம். நமக்கு நடந்தா அது நாசம். அவனுக்கு நடந்தா அது நியூஸ். நம்ம தமிழ்நாடு….. அமைதிப் பூங்கா. பாம்பேல நெஞ்சுல ஈட்டி பாஞ்சா நமக்கென்ன? கன்யாகுமரில கால் ஊணி நாமதான் நிம்மதியா நின்னுகிட்டு இருக்கோமே……”ன்னு போட்டிருக்கீங்களே பெரிய போடு….. அதக் கேட்டதும்தான் எதுல  சிரிக்கறதுன்னே தெரியல.

பாம்பேலயாவது நெஞ்சுல ஈட்டி பாஞ்சுது…… ஆனா ”கன்யாகுமரியும் எங்குளுக்குத்தான்”னு பட்டக்சுலயே ஈட்டிய உட்டானுக உங்க மாறார் தேசத்துக்காரனுக…… நம்ம மார்ஷல் நேசமணி மாதிரி பல நல்ல மனுசனுக போராடுலேன்னா கன்யாகுமரியும் திருப்பதி மாதிரி……. நம்ம சாரி…. எங்க கைய விட்டுப் போயிருக்கும்.

மும்பைல குண்டுவெடிச்சதக்கூட தமிழ்நாட்டு டீ.வீ .ல காட்டமாட்டேங்கராங்க….ன்னு கொந்தளிக்குறீங்களே…….. மாசத்துக்கு நாலு  தடவையாவது சுட்டுக்கொல்லப் படறாங்களே நம்ம தமிழக மீனவருக….. அதை எந்த வட இந்தியாக்காரன் போட்டுப் போட்டு காட்டுனான்.?

மே மாசம் ஈழத்துல எங்க உறவுக ஆயிரக்கணக்குல கொத்துக் கொத்தா செத்து உளுந்தாங்களே அதை எந்தப் புடுங்கி கவலையோட போட்டுக் காமிச்சான்? அவ்வளவு எதுக்கு……. நீங்க தனிப்பட்ட விதத்துல மனம் துடிச்சுப் போயி என்னத்தைக் கிழிச்சீங்க?

வேணாங்க மாஜி தலைவரே…… ஏற்கெனவே நாங்க நொந்து போயி இருக்கோம். எங்க உணர்வுகளோட விளையாடாதீங்க. காமன்மேன்….. காமன்மேன்…..ன்னு கதை அளக்குறீங்களே உங்க பாணீலயே சொல்றேன்…. கேரளத்துக் காமன்மேன முல்லைப் பெரியாறுல புது அணை கட்டாம நிறுத்தச் சொல் நானும் காமன்மேனா ரோட்டுக்கு வர்றேன்.

காவிரில ”சண்டியர்த்தனம்” பண்ணாம ஒழுங்கா தண்ணி விடச் சொல் நானும் காமன்மேனா கவலைப்படுறேன்.

மும்பைக்குப் போனா ஓட ஓட வெரட்டுரானே ”அந்த சேட் கம்மனாட்டி”(உங்க நாயகன் வஜனம்தான்) அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன்.

இந்த லட்சணத்துல …… ”மறதீங்குறது ஒரு தேசிய வியாதி” ன்னு வஜனம் வேற…… இங்க தேசியமே ஒரு பெரும் வியாதியாத்தான் இருக்கு அதைப் புரிஞ்சுக்கங்க மொதல்ல.

தமிழ்நாட்டுல எந்த ஊருக்குள்ள நொழஞ்சாலும்……

அங்க ”பட்டேல்” ரோடு இருக்கும்……

”சாஸ்திரி” நகர் இருக்கும்…..

”காந்தி” புரம் இருக்கும்…….

”நேரு” சிலை இருக்கும்.

அதைப் போல நீங்க தலைல தூக்கிவெச்சுகிட்டு கூத்தாடுகிற மத்த மாநிலங்கள்ல எங்கியாவது

காமராசர் சாலையையும்……

செக்கிழுத்த சிதம்பரனார் நகரையும்……

கொடி புடிச்சு அடிவாங்கியே இறந்த குமரன் புரத்தையும்…..

கட்டபொம்மன் சிலையையும் காட்டுங்க…..

அப்ப ஒத்துக்கறோம் நாங்களும் இந்தியன்…… அவனுகளும் இந்தியன்னு.

எல்லாத்தை விடவும் நீங்க கமலஹாசனா இருந்து கமல் ஹாசனாப் போனாலும் உங்க அற்புதமான நடிப்ப வடக்கத்தியான் ஏத்துக்கல. எங்க இளையராஜாவ ஒத்துக்கல. சிறந்த பாடகர் ஜேசுதாச கண்டுக்கல.

இங்க பாரம் தூக்கிப் பொழைக்கறவங்ககூட ”தேசிய பாரம் தூக்குவோர் சங்கம்”ன்னுதான் வெச்சுருக்காங்க. ஆனா இந்தத் தேசியமே பெரும் பாரம்தானோ?ங்குற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துகிட்டே வருது அதப் புரிஞ்சுக்கங்க.

உங்களக் கெஞ்சிக் கேக்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்……களத்தூர் கண்ணம்மாவுல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஐம்பது வருசமா உங்க நடிப்பை மனசார மதிக்கற…… உங்க கட் அவுட்டுகளுக்கு பாலாபிசேகமும் பண்ணுற தமிழனுகள கொச்சைப் படுத்தறத விடுங்க.

அதுதான் நீங்க  சோத்துல போட்டு சாப்புடுற உப்புக்கு குடுக்குற உண்மையான மரியாதை.

தமிழ்நாட்டப் பொறுத்தவரை இந்துவோ முஸ்லிமோ கால்வயிறு கஞ்சியாவது நெரைஞ்சா போதும்டா சாமின்னு ஒருத்தருக்கு ஒருத்தர் பழசெல்லாம் மறந்து தாயா, புள்ளையா பழகிக்கிட்டு இருக்காங்க. நீங்க இந்த நேரத்துல உங்க வட நாட்டு சரக்க இங்க இறக்குமதி பண்ணி அவுங்க பொழப்பக் கெடுத்தறாதீங்க.

ஏன்னா சகலகலா வல்லவனா இருந்தாலும் சரி……

அது உன்னைப் போல் ஒருவனா இருந்தாலும் சரி………

சினிமாங்குறது உங்குளுக்குக் காசு.

எங்குளுக்கு வாழ்க்கை.

அதுல மட்டும் மண்ணள்ளிப் போட்டுறாதீங்க.

உங்கள் இரக்கத்தை நாடும்,

பாமரன்.

”உலக நாயகன்” கமலுக்கு பகிரங்கக் கடிதம்-2

bush

நெசமாவே தசாவதாரம் மாதிரி ஒரு படத்தை என் வாழ்நாளுல பார்த்ததேயில்லீங்க….

அதுவும் ராமசாமி, பூவராகவன், நாயுடு, சிங்கு, புஸ்சு, அப்பறம் ….. அதென்ன புளிச்சரோ…….பிளிச்சரோ…… ன்னு நீங்க பத்து வேசத்துல கலக்குன கலக்கு இருக்குதே அதப் பாக்க கண் கோடி போதாதுங்க.

அதுவும் ஆராய்ச்சி பண்ணுற எடத்துல அநியாயத்துக்குச் சாகிற அந்தக் கொரங்கப் பாத்து கூட நீங்க படுற பாடு இருக்கே….. அடடா அதப் பாத்ததும் கண்ணுல தளுக்குன்னு தண்ணீ வந்துடுச்சுங்க. நீங்க வெறும் அந்தக் கதாபாத்திரம் மட்டுமில்ல……. நீங்க ஒரு வாழும் வள்ளலார்ன்னு அப்பவே புரிஞ்சு போச்சு.

ஆனா என்ன புரிஞ்சு என்ன பண்ண? வேட்டிக்குள்ள வீச்சருவாள சொருகுன மாதிரி ”மனித உரிமை” மார்த்தாண்டனும்….. ”அறிவொளி” அப்பாசும் நம்ம கூடவே இருக்கானுகளே….. படம் உட்ட உடனே இவனுக கிட்ட இருந்து எப்புடிடா தப்பிக்கறதுன்னு ஒரே கவலையாயிடுச்சு. எப்படியோ ஒருவழியா தப்பிச்சோம் பொழச்சோம்ன்னு எஸ்கேப் ஆகி சைக்கிள் பூட்டைத் தொறந்தா……. டோக்கனக் காணோம்.

”என்ன அரைவேக்காடு டோக்கனத் தேடுறாப்பல போலிருக்கு…..?”ன்னு அசரீரி மாதிரி பின்னால சத்தம் கேட்குது. திரும்பிப் பாத்தா அந்த ரெண்டு ஜென்மங்களும் பல்லை இளிச்சுகிட்டு நிக்குதுக.

“இடைவேளைல நீ வாயப் பொளந்துகிட்டு உங்காளு புராணம் பாடீட்டு இருந்தியே……. அப்ப நீ கீழ போட்டது……….. இந்தா”ன்னு டோக்கன நீட்டறானுக. சரி நாயோட படுத்தா உண்ணியோடதான் எந்திரிக்கணும்……ன்னு நெனச்சுகிட்டே அவனுகளோட வெளீல வந்தேன். வேற வழி?

“அப்பாசு எனக்கென்னமோ அந்த பல்ராம் நாயுடு கேரக்டர்தான் புடிச்சுது. நீ என்னாங்கற?” ன்னு ஆரம்பிச்சான் மனித உரிமை.

”இல்லப்பா எனக்கு அந்த பூவராகவன் கேரக்டர்தான் புடிச்சுது”ன்னான் “அறிவொளி”. இதென்னடாது ரெண்டுபேரும் கட்சி கிட்சி என்னாவது மாறீட்டானுகளான்னு நமக்கு சந்தேகமே வந்துடுச்சு.

”நெஜமாத்தான் சொல்றீங்களா?”ன்னு ”கற்றது தமிழ்” கதாநாயகி கணக்கா ஆச்சர்யத்தோட கேட்க…….

”இதிலென்ன சந்தேகம்? உங்க ஒலகநாயகன் மேல சத்தியமா”ன்னு என் தலைல கைய வெக்கறானுக ரெண்டு பேரும். அப்பவாவது நான் சும்மா இருந்திருக்கலாம். நமக்குத்தான் நாக்குல நர்த்தனம் ஆடுதே ”சனி”…… உடுமா?

’எனக்கென்னவோ அந்த புஸ்சு கேரக்டர்தான் புடிச்சுது’ன்னேன்.

”நெசந்தான் ஆப்பாயில்…… அந்த ”ஒலக மகா யோக்கியன” உங்க ஒலகநாயகனத் தவுற வேற யாரும் இப்படி நல்லபடியா காட்டுனதில்ல….. அதுக்கே உங்காளுக்கு நோபல் பரிசு குடுக்கலாம்.” ன்னான் மார்த்தாண்டன்.

நெஜமாத்தான் சொல்றியா?ன்னேன்.

“வெங்காயம்……. மொதல்ல உன் வாய ஆசிட் உட்டு அலசு. ஒலகத்துல ஒரு நாடு மிச்சம் இல்லாம அட்டூழியம் பண்ணுற புஷ்சு யோக்கியனாம்….. ஒலகத்த அழிவுல இருந்து காப்பாத்த படத்துல படாத பாடு படறாராம். பத்தாததுக்கு படத்தோட கடைசீ காட்சில புஸ்சே தமிழோட அருமை பெருமைகளையெல்லாம் அவுத்து உடறாராம். இத விட அயோக்கியத்தனம் வேற இருக்க முடியுமா?

கேட்கறவன் காமன்மேன்னா…… கழுதை கூட கப்பல் ஓட்டுதூம்பாரு உங்க கமலகாசன்”ங்குறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

”ச்சே…. என்னப்பா இப்புடி அமெரிக்காவத் திட்டுற.? அது எல்லா நாட்டு மேலயும் குண்டு போட்டதா சொல்றதெல்லாம் பச்சப் பொய்யு. அது குண்டு வீசாத நாடும் இருக்குது தெரியுமா?”ங்குறான் அறிவொளி அப்பாஸ்.

“எது?”ன்னான் கடுப்போட மார்த்தாண்டன்.

“எதுவா…… அமெரிக்காதான்”ன்னு சொல்லீட்டு சிரிக்கிறான் அறிவொளி.

“அப்பு அது ரொம்பத் தப்பு. வெளீல செய்யுற வேலைய சொந்த நாட்டுலயும் காமிச்சிட்டான் அமெரிக்காக்காரன். யோக்கியர் புஸ்சோட காலத்துல ரெட்டைக் கோபுரத்த தகர்த்தது அல்கொய்தாவுமில்ல அனகொண்டாவுமில்ல……. செஞ்சது எல்லாமே புஸ்ஸோட ஆளுகதான்ன்னு ஒரு கலக்கல் படம் புள்ளி விவரத்தோட வந்திருக்கு தெரியுமா உனக்கு?”ன்னு ஒரு பெரிய்ய குண்டாத் தூக்கிப் போடுறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

“என்னது அது அமெரிக்காவே சொந்த செலவுல வெச்சுகிட்ட சூனியமா? உன் கப்சாவுக்கு ஒரு எல்லையே இல்லையா?”ன்னு இணைந்த கைகள் மாதிரி ரெண்டு பேரும் கோரசா கேட்க……..

“அவந்தான் அரைவேக்காடுன்னா…… அப்பாசு உனக்குமா அறிவில்ல? உண்மையிலேயே லூஸ் சேஞ்ச்(Loose Change) ன்னு ஒரு சூப்பர் படம்

அவங்களே விமானம் மோதறதுக்கு முன்னாடி எப்படியெப்படி டுவின் டவர்ல பாம் செட் பண்ணுனாங்க……

அதுக்கு முன்னால எத்தனை கோடி டாலருக்கு அந்தக் கட்டடத்தை இன்சூரன்ஸ் பண்ணுனாங்க……

கீழ் தளத்துல டன் கணக்குல இருந்த தங்கம் எங்க போச்சு……

இதுக்கான திட்டம் எந்த வருசத்துல தயாராச்சு?ன்னு புட்டுப் புட்டு வெக்குது அந்த டாக்குமெண்டரி”.ன்னு பின்னிப் பெடல் எடுக்குறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

“மார்த்தாண்டா……. நல்ல காலத்துலயே நீ பேசுனா புரியாது. நீ ஆள் பேரச் சொல்றியா……? இல்ல ஊர் பேரச் சொல்றியா…..?ன்னு புரியறதுக்குள்ளயே பொறந்தநாள் கண்டுரும். எல்லாம் தெரிஞ்ச பண்டிதரு எங்காளு…… அவுருகிட்ட என்ன கொறை கண்டே அதச் சொல்லு மொதல்ல….ன்னேன் பொறுக்க முடியாம.

”அட கமல்பித்தா……… கொஞ்சம் பொறு….. நடக்கக் கையாலாகாதவன் எங்கியோ பொண்ணு கேட்கப் போன மாதிரி ஏன் பறக்குற? சரி உன் ஆளு விசயத்துக்கே வருவோம். பத்து அவதாரத்துல ஒரு அவதாரமா “பிளிச்சர்”ன்னு வர்றாரே உன் ஆளு…….

அந்த ஆளை மட்டும் ”எக்ஸ் சி.ஐ.ஏ” ன்னு சொல்றாரே உங்காளு Why?”ங்குறான் திடீர்ன்னு.

வொய்?ன்னா என்ன சொல்றது.? ”எக்ஸ்”ன்னா அந்த அக்குறும்பு புடிச்ச பிளீச்சர் முன்னாள் சி.ஐ.ஏ,ன்னு அர்த்தம்……ன்னேன்.

“அப்ப இந்நாள் சி.ஐ.ஏ. எல்லாம் கையுல ராட்டையையும் காதுல பஞ்சையும் வெச்சுகிட்டு ’ரகுபதி ராகவ ராசாராம்’ன்னு அகிம்சா ராகம் பாடிகிட்டா இருக்காங்க? ஆனா……. அதில்ல பிரச்சனை இந்நாள் சி.ஐ.ஏ.ன்னு படத்துல சொன்னா அப்புறம் உங்காளுக்கு அடுத்த தடவை அமெரிக்கா போறதுக்கு விசா கெடைக்காதுன்னுதான் வெவரமா ”எக்ஸ் சி.ஐ.ஏ”.ன்னு அவுத்து உடறாரு.

போதாததுக்கு……. படத்தோட ஆரம்பத்துல வருதே உங்காளு வாயாலயே ஒரு வஜனம்……… “செப்டம்பர் 11 (தாக்குதல்)க்குப் பிறகு அமெரிக்கா தன்னை பயோ ஆயுதத் தற்காப்பிற்கு தயார்படுத்திக் கொள்கிற மும்முரத்தில் இருந்தது”ன்னு இது எப்படி இருக்கு?”ன்னு சொல்லீட்டு மொறைக்கிறான்.

ஏம்ப்பா……. அப்ப…….. அமெரிக்க மாமா நல்லவரா……. இல்ல கெட்டவரா? புரியலயேப்பா”ன்னேன் உங்க ’நாயகன்’ ஸ்டைலுலயே.

“எந்தக் கர்மம்தான் புரிஞ்சுது உனக்கு.? என்னமோ அமெரிக்கா ரெட்டைக் கோபுர தாக்குதலுக்கு முன்னாடியெல்லாம் ரொம்ப யோக்கியமா இருந்த மாதிரியும்……. அதுக்கப்புறம்தான்…… அதுவும் “தற்காப்புக்காக” மட்டும் ஆயுதம் தயாரிச்ச மாதிரியும் உங்காளு அளக்குறதக் கேட்டா அமெரிக்காக்காரனே அதுல சிரிப்பான். அமெரிக்கா எப்படிப்பட்ட நாடு…… அதோட ஜனாதிபதிக இதுவரைக்கும் பண்ணுன அட்டூழியங்க என்னென்ன ங்குறதெல்லாம் பச்சக் குழந்தையக் கேட்டாக் கூட சொல்லும்……அடச்சே…….ஆள உடுறா சாமி…… நீயாச்சு….. உன் ஆளாச்சு…… நான் கெளம்பறே”ன்னு சைக்கிள்ல ஏறி உட்கார்ந்துட்டான்.

ஆனா…… இந்த அப்பாசுதான் சும்மா இருக்காம போனவன தடுத்து நிறுத்தி “நீ பாட்டுக்கு சும்மா திட்டிகிட்டே போனா எப்படி? என்ன இருந்தாலும் நம்மாளு அவதார் சிங்கா வந்து கலக்குறாரே…… அதுகூடவா உனக்குப் புடிக்கல?”ன்னு நச்சுன்னு கேட்டான் ஒரு கேள்வி.

“யப்பா…… அவுரோட நடிப்ப யாரும் கொறை சொல்லுல…….. உண்மையிலேயே மகா தெறமைசாலிதான். அவுருக்கு வேணும்னாலும் அவுரோட நடிப்பு மேல சந்தேகம் இருக்கலாம். ஆனா நமக்கு இல்ல. நம்ம ஆசையெல்லாம் இப்படிப்பட்ட கலைஞருக சொல்ற கதையுலயும் கொஞ்சமாவது உண்மையா இருக்கணும். வரலாற்றை திரிக்கற மாதிரி இருந்தறக் கூடாதுங்குறதுதான் நம்ம ஆதங்கம்” ன்னு சொல்லீட்டு பெருமூச்சு விடறான் ”மனித உரிமை”

சரி இதுதான் நாலு வார்த்தையாவது இவன் நல்லா பேச கிடைச்ச ஒரே சந்தர்ப்பம்…….ன்னு நெனச்சுகிட்டு…….. அது சரி மார்த்தாண்டா நம்ம அப்பாஸ் கேட்ட அவதார்சிங் கேரக்டரு எப்புடீ? ன்னேன்.

”கேரக்டர் என்னமோ நல்ல கேரக்டர்தான். உங்காளு நடிப்பும் வழக்கம் போல சூப்பர்தான்…… ஆனா……”ன்னு இழுக்குறான் ம.உ.மார்த்தாண்டன்.

ஏம்ப்பா…… உன்னால இந்த “ஆனா” போடாம பேசவே முடியாதா?ன்னேன் எரிச்சல் தாங்காம.

”நானா வெச்சுகிட்டே வஞ்சகம் பண்ணுறேன். அதுவா வருது என்ன பண்ண? உங்காளு படத்துல “அவதார் கண்ணத் தெறந்து பாருங்க. நீங்க நல்லாயிட்டீங்க…… நாங்க சர்ஜரி பண்ணீருந்தாகூட இவ்வளவு பர்பெக்ட்டா பண்ணீருக்க முடியாது . அந்த புல்லட்டு உங்க குரல உட்டுட்டு அந்த கேன்சர எடுத்துட்டுப் போயிருச்சு”ன்னு டாக்டர் சொல்லுறதக் கேட்டாத்தான் கொடுமையா இருக்கு. இப்புடி ஒரு ஐடியா இருக்குறது தெரிஞ்சிருந்தா இருபத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னாடி சுட்டாவது எங்கப்பனைக் கேன்சர்ல இருந்து காப்பாத்தீருப்பேன்”ங்குறான் அந்த வெவகாரம் புடிச்சவன்.

கொழப்பாதே…….. கடைசியா என்ன சொல்ல வர்றே……….

தசாவதாரம் நல்லா இருக்குன்னு சொல்ல வர்றியா……..இல்ல நல்லா இல்லேன்னு சொல்ல வர்றியா……..ன்னேன் மண்டை காஞ்சுபோயி.

”படம் நல்லா இல்லன்னு சொல்ல வர்ல.

ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமேன்னுதான் சொல்ல வர்றேன்.” ன்னு அவன் சொல்லச் சொல்ல தலை சுத்துற மாதிரி இருந்துச்சு. கண்ண இருட்டிகிட்டு வர்றமாதிரி ஒரு ஒணர்வு. அவ்வளவுதான் தெரியும். முழிச்சுப் பாத்தா ஆசுபத்திரி பெட்டுல என்னச் சுத்தி ஒண்ணுக்கு ரெண்டு உபத்திரவத்துக்கு மூணூங்குற கதையா இவனுகளோட கலாரசனையத்த கந்தனும் பல்லக் காட்டீட்டு நிக்குறான்.

இதென்னடாது……

ஆசைக்கு அவளக் கட்டி…….

கூடிப் பொழைக்கலாம்ன்னு கொளுந்தியாளக் கட்டி…..

சேர்ந்து பொழைக்கலாம்ன்னு சின்னாயாளைக் கட்டி…….

கடைசீல மூணும் கடைநாசமாப் போன மாதிரி இவனுக வேறையான்னு பயந்து மிரண்டவனப் பாத்து

“பயப்படாதே நானும் உன்னைப் போல ஒருவன்தான்”ன்னு பொடி வெச்சுப் பேசறான் கந்தன்.

(மிச்சம் சொச்சம் எல்லாம் அடுத்த வாரம்)

Loose

கலை ஒலக மாமேதை ஒலகநாயகன் அய்யா சமூகத்துக்கு…..

kuruthi

 கண்மணி….. வம்போட…. பாமரன்

நான்…. நான்…. எழுதும் கடிதம்…..

இல்ல லெட்டர்ன்னு வெச்சுக்கலாமா……

வேணாம் கடுதாசியே இருக்கட்டும்…..

ஊடால…… ஊடால….. ஆஸ்கர்…… ஐ.நா…….. சாக்ரடீஸ்…..

நீட்ஷே…… கிரகாம்பெல்…. சீமைக்கருவ….. அய்யனாரு…… எல்லாம் சேர்த்திக்குங்க…….

அய்யோ……. உண்மையச் சொல்லீர்றன் சாமீ…….. உங்கள மாதிரி எல்லாம் யோசிக்க நம்மால செத்தாலும் முடியாது. ஆனா….. சின்ன வயசுல இருந்தே உங்க படம் பார்த்துப் பாத்து வளந்த ஒடம்புங்க இது.

நீங்க சிகரெட் புடிச்சுகிட்டே சுமித்ராவோட திமிர அடக்குற ஸ்டைலுக்காக ”நெழல் நெசமாகிறது” படத்த பதினேழு தடவை பாத்திருக்கேன்…..

சொல்லாம கட் அடிச்சுட்டு மன்மதலீலை போயி ஊட்ல செருப்படி வாங்கீருக்கேன்…..

மாமன் கல்யாணத்துக்கு சிகப்பு ரோஜாக்கள் கண்ணாடியும் தொப்பியும் இருந்தாத்தான் வருவேன்னு ஊரையே கூட்டி அழும்பு பண்ணீருக்கேன்….

இளமை ஊஞ்சலாடறதப் பாத்துட்டு ’வெச்சா முன்னாடி முப்பது இஞ்ச் நீளத்துக்கு வெச்சாத்தான் போடுவேன்’ன்னு பெல்ஸ் பேண்ட்டுக்காகவே பெருஞ்சண்டை போட்டிருக்கேன்னா பாத்துக்கங்களேன்.. எப்படி நீங்க நம்ம ஊனோடயும்…. உசுரோடையும் கலந்து இருந்திருக்கீங்கன்னு…….

மனசார சொல்லணும்ன்னா உங்க ”மகாநதி” பாத்து தேம்பித் தேம்பி அழுதிருக்கேன்.

ஆனா……. உங்களத் திட்டறதுக்குன்னும் ஊருக்குள்ள நாலஞ்சு அனாமத்துக இருக்குதுக. நாம எதைச் சொன்னாலும் அதுக்கு ஒரு நொள்ளையச் சொல்றதே அவனுக பொழப்பு. இவனுக இருக்குறதே பூமிக்கு பாரம்ன்னு சொல்லி வோட்டர் லிஸ்ட்டுல கூட இவனுக பேரச் சேத்தாம விட்டிருக்காங்கன்னா பாருங்களேன்..

                                           நம்மளோட “குருதிப்புனல்” வந்த சமயம் இப்படித்தான் ஒருநாள் அதுக கிட்ட எக்குத்தப்பா மாட்டிகிட்டேன். உங்கள மாதிரியே…… இருக்குற மீசையையும் வழிச்சுகிட்டு வெறைப்பா நடக்கணும்ன்னு “அன்பு முடி திருத்தகம்” உள்ள நொழைஞ்சா……..

”வாப்பா பித்துக்குளி கமல் தாசா” ன்னு சத்தம் கேட்குது. பாத்தா….. நம்ம ”கலாரசனையத்த கந்தன்” பல்லுகூட வெளக்காம இழிச்சுகிட்டு உக்காந்திருக்கான் ஏற்கெனவே. என்னடாது ஏழரை எதுக்காலயே உட்காந்திருக்கேன்னு நெனச்சுகிட்டே…..

என்னப்பா கந்தா சேவிங்கா?….ன்னேன்.

”இல்ல…. மொட்டை” ன்னான்.

ஏன் திடீர்ன்னு மொட்டை?ன்னு கேட்க……..

 ”தங்கப்பதக்கம் எஸ்.பி.செளத்ரிக்கு அப்புறம் இருந்த ஒரே நேர்மையான போலீஸ் அதிகாரியும் போய்ச் சேர்ந்துட்டாரேன்னுதான் மொட்டை” ங்குறான் எகத்தாளமா.

இந்தக் கலாரசனையத்த கந்தன் எப்பவுமே இப்புடித்தான். எதச் சொல்ல வர்றான்னு லேசுல புரியாது. புரிஞ்சாலும் அதுக்குள்ள ஒரு உள்குத்து இருக்கும். என்ன பண்ணித் தொலைக்க….. நாயுக்கு வாக்கப்பட்டா கொலைச்சுதானே தீறனும்?

“யார் அந்த நேர்மையான அதிகாரி?”ன்னேன் புரியாம.

“யாரா……. நம்ம ’ஆதி நாராயணன்’தான்” ன்னு குருதிப்புனல்ல வர்ற உங்க கேரக்டர் பேரச் சொல்லீட்டு எளக்காரமா சிரிக்கிறான் கந்தன்.

ஏன் கந்தா அப்புடிப்பட்ட அதிகாரிகளே இல்லையா?ன்னேன்.

”அட கமல்தாசா……. இருக்காங்களோ இல்லியோ….. ஆனா உங்காளு மக்களுக்காக தீவிரமா போராட வர்றவங்க எல்லாம் கொடூரமா இருப்பாங்க….. அதிகாரி வீட்டு நாயக் கூட விட்டு வைக்க மாட்டாங்க…. அவுங்க ஊட்ல இருக்குற பொண்ணு…. பொண்டாட்டியக் கூட பாலியல் பலாத்காரம் பண்ணத் தயங்கமாட்டாங்க…..ன்னு அவுத்து உடறாரே சரக்க அத நெனச்சாத்தான் எரிச்சல் எரிச்சலா வருது”ங்குறான் கலாரசனை.

எரிச்சல் வந்தா என்னாவது சாம்பல் மேட்டுல உளுந்து படுத்துப் பொறளு…. ஆனா எங்காள அனாவசியமா வம்புக்கு இழுக்காதே. அது சரி….. அவுரு சொன்னதுல என்ன தப்பு?ன்னேன் கோபத்தோட…..

”சொன்ன நேரம்தான் மகாதப்பு……. அதுவும் தர்மபுரி பக்கம் இருக்குற வாச்சாத்தில பழங்குடி மக்களோட வீடுகள சூறையாடி, அப்பாவி ஆதிவாசிப் பெண்கள் 18 பேரை சூறையாடுன 108 போலீஸ்காரங்க மீதான வழக்கும்……

கோவைப் பக்கம் சின்னாம்பதீல பழங்குடிப் பெண்களை போலீஸ்காரங்க சீரழிச்ச வழக்கும்……. சந்தி சிரிச்சுகிட்டு இருக்கற நேரமாப் பார்த்து வந்திருக்கே உங்காளோட ”குர்ர்ர்ர்திப்புனல்” அத நெனச்சாத்தான் எதுல சிரிக்கறதுன்னே தெரியல. இத விடக் கேவலமான ஒரு போலீஸ் டாக்குமெண்ட்ரிய போலீசே நெனச்சாலும் எடுக்க முடியாது. அந்தத் ’ தெறமை ’ உங்க இன்பார்மருக்குத்தான் இருக்கு”.

ஒரு உண்மையான தேசபக்தர் எங்காளு….. அவுரப் போயி ஒரு போலீஸ் இன்பார்மர்ன்னு சொல்றியே கந்தா இது நியாமா?ன்னு கவலையோட கேட்டேன். ஆனா ஆளுதான் அசர மாட்டேங்கறான்.

தேசபக்தர்க லிஸ்ட்டுல உங்காளே மொதலா நிக்கட்டும் அதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல. ஆனா அதுக்கு மொதல்ல……..

பயங்கரவாதின்னா யாரு?

தீவிரவாதின்னா யாரு?

போராளின்னா யாரு?

ஒவ்வொருத்தருக்குள்ளயும் என்ன வேறுபாடு? ங்குற அடிப்படை வித்தியாசங்களை தெரிஞ்சுக்கச் சொல்லு. எதுவும் தெரியாம சும்மா சொதப்பக் கூடாது…… புரிஞ்சுதா?” ன்னு பொழந்து கட்டுறான்.

காதல் இளவரசரே……. நான் என்ன உங்கள மாதிரி பெரிய்ய்ய்ய்ய பெரிய்ய்ய்ய தலகாணி சைஸ் புஸ்தகமெல்லாம் படிக்குற ஆளா? நானே தற்குறி. ஆனா நம்ம கந்தன் சொன்னதை எல்லாம் எந்தக் கேணையனாவது கேட்டான்னா நீங்க நியூஸ் பேப்பர் கூட ஒழுங்காப் படிக்காத ஆளுன்னு தப்பாப் புரிஞ்சுக்குவானுக. என்ன இருந்தாலும் நீங்க ”நம்மவரு” நான் அப்புடி நெனைக்க முடியும்களா?

”என்ன கமல்பித்தா பலத்த யோசனை? உன் கண்கள்ல ஒரு கலாச்சார பயம் தெரியுதே?” ன்னு தறிகெட்டு ஓடற நம்ம சிந்தனைக் குதிரையத் தடுத்து நிறுத்தீட்டான் கந்தன்.

இனியும் இவன்கிட்ட இருந்தா பொழப்பு நாறீடும்ன்னுட்டு……. சரி கந்தா பையனப் பள்ளிகூடத்துல இருந்து கூட்டீட்டு வரணும்ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்.

கலைஞானியே ! உங்களோட எந்தப் படமா இருந்தாலும் மொதல் நாள் மொதல் ஷோ பாக்குற காலம் எல்லாம் மலையேறிப் போச்சேங்கறத நெனச்சாலே வருத்தமாத்தான் இருக்கு. இடைல வேற ஈழப்பிரச்னை…. இட ஒதுக்கீட்டுப் பிரச்னைன்னு ஏகப்பட்ட பிரச்னைக. முன்ன மாதிரியெல்லாம் படம் பாக்கவா முடியுது.?

                                திடீர்ன்னு ஒரு நாள் நீங்க பத்து வேசத்துல நடிச்சிருக்கிற படம் ஒண்ணு வந்திருக்குன்னு சொன்னாங்க. அட நம்ம சிவாஜி ஒம்பது வேசங்கள்ல நடிச்சதயே பீட் பண்ணி நம்மாளு பத்து வேசத்துல நடிச்சிருக்காரான்னு அடிச்சுப் புடிச்சு ஓடியாந்து பிளாக்குல டிக்கெட் வாங்கி ஒரு வழியா உள்ளாற பூந்திட்டேன்.

படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் கொழப்பமா இருந்தாலும்… அடுத்த கமல் எப்ப வருவாருன்னு ஒரே குஷியாயிடுச்சு. படம் போட்டு கொஞ்சம் லேட்டா வந்த பக்கத்து சீட் ஆசாமி “படம் இப்பதான் போட்டாங்களா”ன்னு கேட்க…..

அட பக்கத்துல ஒரு கமல்…

ச்சே… வெறும் பிரமை. கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருந்தாலும்….. நீங்க ஒவ்வொரு சீன்லயும் தெறையில தோன்றி ”என்னப் பாரு…” ”என்னப் பாரு…”.ன்னு நடிச்ச நடிப்புல ஆடியே போயிட்டேன்.

ஒருவழியா இடைவேளை விட…… ஒரு டீயும் பப்சும் சாப்பிடலாமேன்னு வெளிய வந்தா……. கண்ணத் தின்ன நாயு எதையோ தின்ன மாதிரி….. நேரா வந்து மோதறானுக நம்ம ”மனித உரிமை மார்த்தாண்டனும்”, ”அறிவொளி அப்பாசும்”.

”என்ன அரைவேக்காடு……. எப்படி உங்காளு சர்க்கஸ்?” ங்குறானுக கர்மம் புடிச்சவனுக. கரூர் போனாலும் கருமம் தொலையாதுங்கறது இதுதானோன்னு தோணுச்சு.

ஏன்யா எங்காளு மாத்தி மாத்தி பத்து வேசத்துல கலக்குறாரு…… உங்குளுக்கெல்லாம் பாராட்டவே மனசு வராதா?ன்னு கோபமா கேட்டேன். ”பத்தென்ன பதினொன்னா இன்னொரு வேசம் கூட சேர்த்துப் போட்டிருக்கலாம் உங்க ஒலகம்.” ங்குறான் மனித உரிமை.

பதினொன்னாவதா…. அது என்ன வேசம்? ன்னேன்.

”ரெண்டே ரெண்டு தொட்டாங்குச்சி இருந்திருந்தா அசினாவும் அவரே வந்திருக்கலாம்….”ன்னு சொல்லீட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறானுக பண்ணாடைக.

”சார் பப்ஸ் வேணுமா?”ன்னு கேட்ட குரலைத் திரும்பிப் பார்த்தா நீங்க நிக்கறீங்க……. அடச்சே இதுவும் பிரமைதான். என்ன பண்ண…….. தியேட்டர்ல வடை போண்டா விக்கறவன் கூட உங்கள மாதிரியே தெரியறான் எல்லாம் படத்தோட பாதிப்பு……

( மத்த பாதிப்புகள் அடுத்த வாரம் )

இருபதாம் நூற்றாண்டின் ”இசை நந்தன்” ராசையாவுக்கு…

                   Rasa2

இசை குறித்தும் அதனது ஆழ அகலங்கள் குறித்தும்
அணுவளவும் அறிவற்ற பாமரன் எழுதும் மடல்.

இதனை எழுதும்போது கூட….
சுரங்கள் ஆறா, ஏழா என்று அநாவசியக் குழப்பத்துடன்தான்
ஆரம்பிக்கிறேன் இதனை.

நினைவு தெரிந்த நாளிலிருந்து….
“…திரை இசை இத்தோடு முடிந்தது.
மீண்டும் அடுத்த திரை இசை மாலை 6.10-க்கு….”
என்பதோடு என் வீட்டு வானொலியின்
கழுத்து திருகப்பட்டு விடும்.

ஹம்சத்வதனியோ..கல்யாணியோ..
கரகரப்ப்ரியாவோ..கரகரப்பில்லாத ப்ரியாவோ…
அணுவளவும் அறிந்ததில்லை நான்.

உன்னை இசைஞானி என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில், படத் தயாரிப்பாளனில்லை நான்.

உன்னை ராகதேவன் என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில் எந்தப் படத்தையும் இயக்கப் போவதில்லை நான்.

உன்னை மேஸ்ட்ரோ என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில் விநியோகஸ்தனுமில்லை நான்.

எனவே… என் இனிய ராசையா !

எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் ஒலி பெருக்கிகள்……
அந்த அதிகாலை பொழுதுகளில் ஒன்று :
யாதோங்கி பாரத் பாடலுடன் துயில் எழுப்பும்.
அல்லது ‘ஏ தோஸ்து கீ’ பாடலுடன் சோம்பல் முறிக்கும்.

மொழி புரிகிறதோ இல்லையோ….
பாபியோ, குர்பானியோ பத்து காசு கொடுத்து
பாட்டுப் புத்தகம் வாங்கி வந்து
மனப்பாடம் செய்துவிட்டுத்தான் மறுவேலை.

ஏனெனில் இந்திப் பாடல் தெரிந்திருப்பது என்பது 
எமக்கான அங்கீகாரத்திற்கான அடையாளங்கள்.

அழகாயில்லை என்பதற்காக அம்மாவைகூட
வேலைக்காரி என்று கூறும் மரபில் வந்த மண்ணின் மைந்தர்கள் நாங்கள்.

எப்படி இன்றைக்கு கிரிக்கெட் குறித்து
சிலாகிக்காமல் இருப்பது “அநாகரீகமோ”
அப்படி அன்றைக்கு இந்திப் பாடல் முணுமுணுக்காது
இருப்பதும் ‘அநாகரீகம்’

அத்தகைய பொழுதுகளில் தான் அறிமுகமானாய் நீ எமக்கு.
அன்று ‘அன்னக்கிளி’ யின் முறுக்கு பிழியும் இசையோடு
ஆர்ப்பாட்டமாய் அடியெடுத்து வைத்த நீ
இன்று ‘ராமன் அப்துல்லா’ வரையிலும்
இதயத்தை பிழியும் இசையோடு எங்களை ஆக்ரமித்து வருகிறாய்.

இடையில் எத்தனை காலம் உருண்டோடியிருக்கிறது
என்று எண்ணிப் பார்க்கிறேன்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகள்..
7300 நாட்கள்….
எனக்குத் தெரிந்தவரை……
இத்தகையதொரு வரலாறு எந்தவொரு
இசையமைப்பாளனுக்கும் இருந்ததில்லை.

உனது வருகைக்குப் பின்னர்தான் எம்மூர் ஒலிபெருக்கிகள்
இந்திப் பாடல்களுக்குப் பிரிவுபச்சார விழா நடத்திவிட்டு
தமிழைத் தாங்கி கொள்ளத் துவங்கின.

ராஜாஜி தொடங்கி பக்தவச்சலம் வரைக்கும்
அரசாண்ட காலங்களில் அரசாணைகளாக வடிவெடுத்த
இந்தித் திணிப்பிற்கு எதிராக
தமிழறிஞர்களும் திராவிடத்தலைவர்களும்
தோள் தட்டிக் களம் குதித்த பொழுதுகளில்……
புறமுதுகிட்டது “பொதுமொழி”.

அது நான் அரை டிராயர் போட்டுத் திரிந்த காலங்கள்.
நெடியதொரு மொழிப்போர் நிகழ்ந்ததன் சுவடுகளே புரியாமல் வளர்ந்த நாங்கள்
ஓடி வந்த இந்திப் பெண்ணே ! கேள்…
நீ நாடி வந்த நாடு இதல்ல
” என்ற முழக்கங்களை மறந்து அந்நிய மொழியின்
அரவணைப்பில் துயில் கொள்ளத்துவங்கிய போது அறிமுகமானாய் நீ எனக்கு.

தார் பூசி அழிக்கவில்லை நீ.
தடைமீறி மறியலுக்கு போகவில்லை நீ.
சத்தமின்றி ஒரு மொழிப்போர் நடத்தின உனது சங்கீதங்கள்.

மெளனமாய் நீ தொடுத்த அமைதிப்போரில்
அந்நிய மொழியின் அடிச்சுவடு கூட அழிந்து போயிற்று.

இனிய ராசையா!
உண்மையை ஒளிக்கது சொல்லவேண்டுமென்றால்……
எங்களையே எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் நீ தான்.

நாங்கள் தொலைத்த எமது அடையாளங்களை……
மறந்த கலாச்சாரத்தை……
நீண்ட கோடைவிடுமுறையில் பரணுக்குப் போய்விட்ட
புத்தகப் பையைக் கீழிறக்கி,
தூசி தட்டித் துடைத்து தோளில் மாட்டி அனுப்பும் ஒரு தாயாய்……
தவறவிட்ட தடயங்களை திரும்பவும் தோளில் மாட்டி விட்டவன் நீயேதான்.

அதன் விளைவுதான்…..
நகர்புறத்து ஜீன்ஸ் இளைஞன் கூட ‘இஞ்சி இடுப்பழகா’
என்று கிராமிய மெட்டை முணுமுணுத்தது..

அதன் விளைவுதான்….
விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனது வட்டாரப் பாடல்கள்
மீண்டும் நகர்வலம் வந்தது.

அதன் விளைவுதான்…. 
புஷ்பவனம் குப்புசாமியின் தமிழிசைப் பாடல்கள்
இத்தமிழ் மண்ணில் தனிக்கவனம் பெற்றது.

ஆனால் ராசையா..
நீ அன்னக்கிளியில் அடியெடுத்து வைத்த போது….
“வெறும் டப்பாங்குத்து….” என்ற உதடுகள்…
“தவுல் பார்ட்டி….” என்ற உதடுகள்…
“எண்ணி எட்டே படம் தான்….” என்று சொன்ன உதடுகள்..

உனது ‘மண்வாசனை’யில் மயங்கி…
‘மூடுபனியில்’யில் விறைத்து…
‘நெஞ்சத்தைக்கிள்ளாதே’யில் நெருங்கி…
‘கவிக்குயிலில்’ கரைந்து…
உனது ‘பயணங்கள் முடிவதில்லை’ என்று ஒப்புக்கொண்டன.

இனிய ராசையா….
இவரிவர் தான் பாடவேண்டும்….
இப்படித்தான் பாட வேண்டும்…..
இனிமை என்றால் இது தான் என்று
இறுகிக் கிடந்த இசையுலகை நெகிழ்த்தியவன் நீ தான்.
அதன் பிறகுதான் சாதாரணர்களின்……
மிக மிகச் சாதாரணர்களின் குரலை நாங்கள் கேட்கத் துவங்கினோம்.

‘அண்ணே அண்ணே சிப்பாயண்ணே’ வின் கரகரத்த குரலும்……

‘ஓரம்போ ஓரம்போ’வென தென் மாவட்டத்துச் சிறுவர்களின்
சில்லுடையாக் குரல்களும்..

‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் எறங்கு ‘ என
சிட்டுக்குருவியில் ஒலித்த நடத்துனரின் குரலும்….
எமக்கு புதியவை ராசையா.

இம்மண்ணில் “புனிதம்” என்று எதுவுமில்லை.
“தீண்டத்தகாதது” என்று ஒன்றும் இல்லை..
ஆனால் “புனிதம்” என்ற சொல் ஒழிக்கப்படும் வரை
“தீண்டாமைக்கு” விடிவு இல்லை என்பதை
புரிந்து கொண்டவர்கள் நாங்கள்.

இத்தோடு நின்றதா உன் இசைப்பயணம் ?

திரை இசையோடு தீர்ந்து போயிற்று
உனது இசைச் சரக்கு
என்று இருந்தவர்களுக்கு……
வந்து சேர்ந்தன உனது இசை தொகுப்புகள்.

ஒன்று : காற்றை தவிர வேறில்லை (Nothing But Wind )

மற்றொன்று : எப்படிப் பெயரிட்டு அழைப்பது
( How to Name It )

இவையிரண்டும்  இசையின் இன்னொரு பரிமாணம்.

அதை வார்த்தைகளால் வர்ணிப்பது என்பது
குயிலின் குரலை காகிதத்தில் எழுதிப்படிப்பதற்கு ஒப்பானது.

சரி…. அத்தோடு தான் நின்றதா ராசையா உனது இசைப்பயணம் ?

சூரியன் மறையாத தேசத்துக்குச் சொந்தக்காரர்கள்
எழுந்து நின்று உன் எழுச்சிக்கு தலைவணங்கிய வேளையில்….Rasa3
உன் சொந்த நாட்டுக்காரர்களோ….
சுஷ்மிதா சென்னில் சொக்கிப்போய் ரத்தினக் கம்பள வரவேற்பு
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

உன்னிடம் என்ன இருக்கிறது ?
எங்கள் சுஷ்மிதா சென்னின் நுனி நாக்கு ஆங்கிலம் வருமா  உனக்கு ?

உன்னிடம் என்ன இருக்கிறது ? 
நகர்ப்புற நாகரீகம் தெரிந்தவனா நீ ?

உன்னிடம் என்ன இருக்கீறது ?
லண்டனுக்கு கூட வேட்டி கட்டிபோன ஒரு பண்னைப்புரத்தான் தானே ?

எங்கள்’சென்’னின் அழகும்….
அறிவும்…. ஆங்கிலமும்…. ஒயிலான நடையும் முன்னே நீ எம்மாத்திரம் ?

வயிறு பற்றி எரிகிறது ராசையா……
கோபம் பொங்குகிறது……
ஆத்திரத்தில் வார்த்தைகள் வசமிழந்து விடக்கூடாது.
இரு என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டாக வேண்டும்……
ஓரிரு நிமிடங்கள் அவகாசம் கொடு ராசையா…

லண்டனிலுள்ள ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவில்
சிம்பொனி இசை அமைக்க :
தமிழகத்திலிருந்து….
இல்லை இந்தியாவிலிருந்து……
அது கூட இல்லை
இந்த ஆசியாக் கண்டத்திலேயே அழைக்கபட்ட
முதல் மனிதன் நீ தான்.
இதை பல மிருகங்கள் புரிந்து கொள்ளவேயில்லை……

மன்னித்துவிடு..
இவர்களைக் காட்டிலும்
மிருகங்கள் மகத்தானவை என உணர்வேன்.

‘காதலுக்கு’
‘கருமாதிக்கு’-
‘கழுதை வியாபாரத்திற்கு’ என இலவச இணைப்புகள் போட்ட
அநேக பத்திரிக்கைகள்..
நினைத்துப் பார்க்க முடியாமல் நிகழ்ந்து விட்ட
இந்த நிஜத்தை நினைத்து நடுங்கிப் போனது
நிஜத்திலும் நிஜம்.

தென் திசையிலுருந்து ஓர் புயல் புறப்பட்டு கரை கடந்ததையோ……
அது இங்கிலாந்தில் மையம் கொண்டதையோ…….

அது ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவையே
இசையால் சுழற்றி அடித்ததையோ..

வரைபடத்தில் மட்டுமே இந்தியர்களாய்
வாழ்ந்து கொண்டிருக்கும்
அநேக வட இந்தியர்களுக்கு உறைக்கவேயில்லை

காரணம் : உன் தோலின் நிறம்.
காரணம் : நீ ஒரு மதராசி.
காரணம் : உன் மொழி.

அநேக சமயங்களில் உன் மீதே கூட கோபம் வருகிறது ராசையா.
கேட்டால்…
“உன்னை உணர்” என்பாய்.
”மெளனம்….ஞானம்..விதி..” என்பாய்.
“ஆத்மாவை உணர்வது” என்பாய்.

என்னைப் பொறுத்தவரை ஆஸ்துமாவை தவிர
வேறெதையும் உண்ர்ந்ததில்லை.

தன்னை உணர்வது ஒரு புறமும்
தன்னைச் சுற்றி நிகழ்வதை மறுபுறமும்
ஒரு சேர உணர்வது தான்
என்னளவில் சரியெனப்படுகிறது..

உன்னுடைய இசைத்திறமை குறித்து
இங்கே எண்ணற்ற வியாக்கியானங்களும்….
சொற்சிலம்பங்களும் நடந்து கொண்டிருக்கின்றன..

“பல பிறவிகளில் செய்த புண்ணியத்தின் தொடர்ச்சி” என்று சிலரும்…

“ஸ்வர தேவதைகள் உன்னோடு ஐக்கியமாகி
இந்த ஜென்மத்தில் உனக்கு சேவை
செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று வேறு சிலரும்..

“ஏதோ ஒரு சக்தி என்னை இயக்குது” என நீயும்
கூறிக்கொண்டிருப்பது
சிரிப்பைத்தான் வரவழைக்கிறது ராசையா.

இந்த மண்ணில் ‘ஆவி அமுதா’வும் கூட
அப்படித்தான் சொல்லி கொண்டிருக்கிறார்.
உனது இசை மேன்மைக்கு காரணம் :
உழைப்பு – உழைப்பு-உழைப்பு-
அதுவும் உன் ஓயாத உழைப்பு.

இனிய ராசையா,
உன்னை நேசிப்பதற்கு
எவ்வளவு உரிமை எடுத்துக் கொள்கிறேனோ..
அவ்விதமே உன்னை யோசிக்க வைப்பதற்கும்
உரிமையிருப்பதாகவே உணர்கிறேன்.

அதுவே ஒரு தோழனுக்குரிய கடமையும் கூட..

ஆன்மீகமோ – பகுத்தறிவோ
அது அவரவர்
உணர்தலையும் உரிமையையும்
உள்ளடக்கிய விஷயம்.

ஆனாலும் ராசையா..
சித்தர்களைச் சில விசயங்களில் சிலாகிக்கும் நீ
நட்டகல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுத்திவந்து மொணமொணவென்று
சொல்லும் மந்திரமேதடா..
” என்ற
சிவவாக்கியரைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல்
திருவரங்கம் கோயில் கோபுரத்துக்கு எட்டு லட்சம்
கொட்டிக் கொடுத்தாயே
அது தான் சற்று உறுத்துகிறது மனதை.

ஒரு வேளை உனக்கு……
நாரதகான சபாக்களின் நாக்குகளால் நற்சான்றிதழ்
வாங்குவது தான் நோக்கமோ எனும்
நெருடல் நெடுங்காலமாய் உண்டு.

இந்த நூற்றாண்டின் இசை நந்தனோ?
எனும் அச்சமும் உள்ளுக்குள் உறுத்துகிறது.

சமத்துவமற்ற சமயத்தலம்
எவருடையதாயினும்
நமக்கு வேண்டாம் ராசையா….

‘நந்தி விலகாதா?’ எனும் நந்தனின் நிலையில்
உன்னை உணர்ந்ததாலோ என்னவோ
எட்டு லட்சம் எண்ணிக் கொடுத்தாய் ?

நந்தி விலகும் விட்டலாச்சார்யா காலத்து வேலையெல்லாம்
இளைய தலைமுறையிடம்
இனி செல்லுபடி ஆகாது ராசையா.Rasa4
ஒன்று  : நந்தன் உள்ளே போக வேண்டும்.

அல்லது: சிவன் வெளியில் வரவேண்டும்.

இது தான் ராசையா…
இன்றைய நிலை
இன்றைய அரசியல்
இன்றைய ஆன்மீகம்.

அடுத்ததாய் அங்கலாய்க்க நினைத்த விசயம் அழகிப்போட்டி.

எத்தனை பேர் எதிர்த்த விசயம் அது.
ஆனால் எதிர்த்த அத்தனைபேரும்
முற்போக்காளர்கள் அல்ல என்பது வேறு விசயம்.

பெண்ணைப் பற்றி ‘சினிமா மொழி’யில் சொல்வதனால்…
ஒன்று “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்று உருகுவது….
அல்லது ”புதுசா சுட்ட பணியாரமாய்” கடை விரிப்பது .
இதுவா ராசையா பெண் ?

அழகு என்கிற போது
அவளது அறிவு புறந்தள்ளப்படுகிறது

அழகு என்கிற போது
அவளது உழைப்பு புறந்தள்ளப்படுகிறது

அழகு என்கிற போது
அவளது திறமை புறந்தள்ளப்படுகிறது

”உன்னை உணர்தலிலேயே” பெரும் பொழுது போய்விட்டபடியால்
”பெண்ணை” உணரத் தவறிவிட்டாய்.
பெண்ணை போகப் பொருளாக்கும் ஓர் இழிவான நிகழ்ச்சியில்
உனது இசையும் இணைந்து கொண்டது
ஏற்றுக் கொள்ள இயலாத  வருத்தம்தான்.

பெண் குறித்த புரிதல் இருந்திருக்குமேயானால்
“நிலாக்காயுது”வும்….
“சித்தெறும்பு கடிக்குது”வும்….
உனது இசையில் அரங்கேறியிருக்காது.

குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டிய சில பாடல்கள்
உனது இசையின் வலிமையால்
கோபுரத்தின் உச்சியிலே போய் உட்கார்ந்து கொண்டதனை
ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இனிய ராசையா….
இவை எல்லாம் நீ நிமிர்ந்து பார்த்தாலேயே
நின்றுவிடக் கூடிய விஷயங்கள்தான்..
கோடம்பாக்கத்தில் இத்தகைய ஆர்ப்பாட்டமற்ற….
ஆரோக்கியமான…. எளிமையான மனிதர்கள்
விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே இருக்கிறார்கள்
என்பது வருத்தமான விஷயம்.

அதிலும் ஒருவனாக
எமது ராசையா இருக்கிறானே என்பது
வருத்தத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.

”வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடந்த” உனது எழுத்துக்களை
எட்டிப்பார்த்தேன்.
அதில் :
“நாம்-இந்தச் சமூகத்தின் அங்கம்.
நம்மில் ஒரு மாற்றம் நிகழாமல்-
அது இந்தச் சமூகத்தில் நிகழப் போவதில்லை”

என்று எழுதி இருந்தாய்.

ஆம் இதுவும் உண்மைதான் ராசையா.

ஆனால் இதுமட்டுமே போதுமானதாகப்படவில்லை.

தன்னை உணர்தலுக்கு இடையேயும்
இச்சமூகத்தின் அவலங்களுக்கு எதிராக
நாம் சுட்டுவிரலையாவது அசைத்துத்தானாக வேண்டும்.

அய்ரோப்பிய நாடுகளுக்கு நீ போயிருந்த போது
பீத்தோவனின் கல்லறைக்கும்….
பிற இசைமேதைகளின் கல்லறைக்கும் போய்ப் பார்த்தாயாம்.

கொஞ்சம் திரும்பிப் பாரேன் என் ராசையா…
இந்த நாடே கல்லறையாக…
சாதிவெறியால்….
மதவெறியால்…
பிணங்கள்….
குவியல் குவியலாய்…
ஒட்டப்பிடாரம் துவங்கி மீரட் வரையிலும்
நாளைய பொழுது நிச்சயமற்றதாய் நகர்கிறது.

பயந்து விடாதே…
உன்னை கொடி தூக்க சொல்லவில்லை.

எடு அந்தப் பறையை சாதி வெறிக்கெதிராய்..
எடு அந்தப் பறையை மத வெறிக்கெதிராய்..
எடு அந்தப் பறையை மனித உரிமைகளுக்காய்..

கொட்டு… கொட்டி முழங்கு… இந்தத் தேசமெங்கும்.

கலாச்சாரத்தில் வேறுபட்ட மேற்கத்திய இசைக் கலைஞர்கள் கூட
நிறவெறிக்கெதிராய் பாடியிருக்கிறார்கள்.

சுற்றுசூழலுக்காய் தங்கள் முழக்கங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

எண்பதுகளில் மனித உரிமைகளை வலியுறுத்தி
டிரேசி சேப்மேன், பீட்டர் கேப்ரியேல்
போன்ற பாடகர்கள் உலகளாவிய இசைப் பயணம்
மேற்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்……
ஆந்திராவினது இசைக்கலைஞர் கத்தார்
இம்மக்களது துயரங்களை
பாடல்களாய் பவனி வரச் செய்யவில்லையா…

அதைப் போன்று…
கயத்தாரின் சோகங்களை……
தூத்துகுடியின் துயரங்களை……
மீரட்டின் மதக்கலவரங்களை……
ஒடுக்கப்படும் தலித்துகளின் துயரங்களை
நீயேன் பாடல்களாக……
இசைத்தொகுப்புகளாக……
இம்மண்ணில் வலம் வரச்செய்யக் கூடாது.?

இங்குள்ள மக்கள்
ஆப்பிரிக்க விடுதலைக்கான பாடல்களை பாடும்போது…
நீயேன் இம்மக்களது சோகங்களை
ஆப்பிரிக்க…. அய்ரோப்பிய நாடுகளில்
எதிரொலிக்க வைக்கக்கூடாது ?

நீயேன் இந்த ‘இழிந்த’ மக்களின்
கிழிந்த வாழ்வைச் சுமந்து கொண்டு
ஒர் இசைப்பயணம் மேற்கொள்ளக்கூடாது ?

செய்வாயா ராசையா ?

இம்மண்ணின் மக்கள் உன் மீதான அன்பை
உனக்குப் பலமுறை உணர்த்திவிட்டார்கள்.
அதற்குக் கைமாறாக
உன் முன் வைக்கப்படும் ஒரே வினா :
நீ எப்போது…? எப்படி…?

இனிய ராசையா,

நாங்கள் மறந்து போயிருந்த இயற்கையின் கீதங்களை…

வெத்திலை கொட்டும் ஒலியை….

துணி துவைக்கும் ஓசையை….

சலசலக்கும் நீரோடையை….

உனது இசையில் கேட்டுக் கொண்டிருந்தோம் இது வரை.

இனி இவைகளை இசை வடிவத்தில்
கேட்பது மட்டுமே சாத்தியம்
என்கிற இயந்திர கதியில்
போய்க் கொண்டிருக்கிறது இன்றைய உலகம்.

நகரத்தின் நகங்கள் நீண்டு……
வயல்வெளிகள் ரியல் எஸ்டேட்டுகளாய்…….

மிச்சமிருக்கிற மரங்களும் சூறையாடப்பட்டு…….
உயர் ரகக் குழந்தைகளுக்கான டிஸ்னி லேண்டுகளாய்…….

கிராமத்துச் சிறுவர்கள் வெட்டுக்கிளியும்,
பொன்வண்டும் பிடித்துத் திரிந்த புதர்க் காடுகள்….
ஹாலிடே ரிசார்ட்டுகளாய்….

எங்கள் இயற்கை ”நவீனத்தின்” கோரப்பற்களால்
குதறப்பட ஆரம்பித்தாயிற்று.

இனி …
நாங்கள் அந்த குயிலின் ஓசைகளையும்…….
சலசலக்கும் நீரோடையின் ஒலிகளையும்…….
உனது பாடல்களில் கேட்டால்தான் உண்டு.

இங்கு எல்லாமே ஆடம்பரமாய் போயிற்று.

வாழ்வில்…..

காதலில்……

கல்வியில்….

ஆன்மீகத்தில்….

இசையில்….

அரசியலில்….

என எல்லாமே……

ஆடம்பரம்….ஆரவாரம்.
பேரிரைச்சல்……
காதைக் கிழிக்கும் ஓலம்……

இடையிடையே மரண ஓலங்களும் கூட.

போதும் போதும்…. என்கிறவரை போகட்டும்.

இந்த ஆரவாரப் பேரிரைச்சல்களில் இருந்து
விடுபட மாட்டோமா என இதயங்கள்
ஏங்கத் துவங்கும் காலம் நிச்சயம் வரும்.

அப்போது…
உனது ஒற்றைப் புல்லாங்குழலின் இசைக்காக
இந்த உலகம் காத்திருக்கும்.

அப்போது…
நீ இருக்க மாட்டாய்…

ஆனால்….
உனது இசை இருக்கும்.

என்றென்றைக்கும் இந்த மக்களோடு………

நம்பிக்கையுடன்,
பாமரன்.

 
நன்றி: குமுதம் ஸ்பெஷல். மே 1997