வேறென்ன பெருமை…?

manavai
யார் முதலமைச்சர்….?
யாருக்கு மக்களின் உண்மையான ஆதரவு? என
நாம் அனைவரும் மயிர்பிளக்க
விவாதித்துக் கொண்டிருந்த வேளையில்
இந்த மொழிக்காகவும் மக்களுக்காகவும்
சத்தமின்றி உழைத்த ஒரு மகத்தான மனிதர்
தன் வாழ்நாளை நிறைவு செய்து கொண்டார்.
.
அவர்தான் தமிழறிஞர் மணவை முஸ்தாபா.
.
கவிதைத் தமிழ் வளர்ந்தால் மட்டும் போதாது
கணிணித் தமிழும் வளரவேண்டும் என்று
அதற்கான கலைச்சொல் அகராதியை
உருவாக்கியவர்தான் மணவை முஸ்தாபா.
.
தமிழை வளர்ப்பதற்கு புலவர்களும் புரவலர்களும் இருக்க…..
தமிழர்கள் வளர வேண்டுமானால்
அவர்கள் தொழில் நுட்பம்…. அறிவியல்…. மருத்துவம் என
அனைத்துத் துறையிலும் தூள் கிளப்ப வேண்டும் என
அவர் உருவாக்கித் தந்த அகராதிகள் ஏராளம்.
.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மூவரிடமும் விருது பெற்ற ஒரே தமிழறிஞர் இவராகத்தான் இருக்க முடியும்.
.
தமிழ் மீது கொண்ட காதலால்
தன் குழந்தைகளுக்கு
“செம்மல்”…. ”அண்ணல்”…. ”தேன்மொழி”…..என
தூய தமிழ்ப் பெயர்களையே சூட்டியவர் இவர்.
.
பத்தாண்டுகள் முன்பான மாலைப் பொழுதொன்றில்
எங்கள் அறையில் அவர் காலடித் தடம் பதிந்தபோது
அவர் வாசித்த தமிழை
நாங்களும் கொஞ்சம் சுவாசித்தோம்.
.
எத்தனையோ அகராதி பிடித்தவர்களோடு
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்
மக்களுக்காக எண்ணற்ற அகராதிகளைப் படைத்தவர்
வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்
என்பதைக் காட்டிலும் பெருமை வேறென்ன இருக்க முடியும்?

Advertisements

போரும் அமைதியும்… உனக்கொரு பொருள்…. எனக்கொரு பொருள்….

அமைதி என்கிற வார்த்தையைக் கேட்டாலே
அச்சமாக இருக்கிறது.

அமைதி….

யாருக்கான அமைதி?

எதற்கான அமைதி?

எப்பேர்ப்பட்ட அமைதி?
.
இப்படித்தான்….
IPKF1எண்பதுகளின் மத்தியில் அமைதியை வேண்டி நின்ற ஈழத்து மக்களுக்கு
அதைப் பரிசளிப்பதற்காக எண்ணற்ற டாங்கிகளோடும்
ஏவுகணைகளோடும் இங்கிருந்து சென்றது ஒரு ”அமைதி”ப்படை.
.
அது நிலை நாட்டிய ”அமைதி”யையும்…. ”
அகிம்சை”யையும் பற்றி ஈழத்து மக்களைக் கேட்டால்
இன்றும் சொல்வார்கள் தெளிவாக.
.
அந்த அமைதிக்காக காணிக்கையாக்கப்பட்ட
பல்லாயிரம் உயிர்களையும்….
பாலியல் வல்லுறவால் சிதைக்கப்பட்ட
பலநூறு ஜீவன்களையும் என்றும் மறவார்கள் அம்மக்கள்.
.
சிங்கள ராணுவத்துக்கு ஒரு தோட்டாகூட
செலவில்லாமல் நேசநாட்டு ஸ்பான்சரில் நிகழ்த்தப்பட்ட
அமைதிக்கான யுத்தம் அது.
.
தொண்ணூறுகளின் துவக்கம்தான்
இப்படித் தொலைந்து போயிற்று என்றால்

இரண்டாயிரங்களின் தொடக்கமோ
இரட்டை கோபுரத் தகர்ப்பில் ஆரம்பித்தது.

அத்தாக்குதல் குறித்து ஆயிரத்தெட்டு
சந்தேகங்கள் இருந்தாலும்
அகப்பட்டுக் கொண்டது ஆப்கானிஸ்தான்.

அதை வைத்து உலகமெங்கும் ”பேரமைதி”யை
”நிலைநாட்ட” அமெரிக்க அங்கிள் எடுத்துக் கொண்ட
”அசாத்திய முயற்சி”கள் சொல்லி மாளாதவை.
.
பயங்கரவாதத்தைப் பற்றியும்
உலக அமைதியைப் பற்றியும்
அமெரிக்க வள்ளலார்கள் மனம் உருகப் பேசிய பேச்சுகளில்
மனம் கிரங்கிப் போனார்கள் உலக மக்கள்.

அதுவரை அமெரிக்காவும் அதனது சி.ஐ.ஏ.வும்
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
எப்பேர்ப்பட்ட அமைதியை நிலை நாட்டியிருந்தார்கள் என்கிற
உண்மையை உணர்ந்திருந்தவர்கள்
வாயில் சிரிக்காமல் வேறொரு உறுப்பில் சிரித்தனர்.
.
பயங்கரவாத இயக்கங்களின் பட்டியல் என்று
பயங்கரவாத நாடே அறிவித்தது.

அப்புறமென்ன ஆப்கனோடு நிற்குமா அது?
ஈராக்கிலும் பத்து லட்சம் பேரை
மோட்சத்துக்கு அனுப்பும் பெரும்பணியை
சிரமேற்கொண்டு செய்து முடித்தது.

அதில் சதாம் உசேனது உயிரும் அடக்கம்.
.
இது சர்வதேசம். சரி.
.
அப்புறம் எப்படி இருக்கிறது இந்த தேசம்?
இதுதான் கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் நடத்திய பூமியாயிற்றே….

மூடநம்பிக்கைக்கு எதிராக முழக்கமிட்ட
நரேந்திர தபோல்கர் “அமைதியாக” முடித்து வைக்கப்பட்டார்.
.
பூனாவில் இவ்விதமாக அமைதி நிலைநாட்டப்பட்டது.
.
மகாராஷ்டிராவில் எண்ணற்ற சாதி மறுப்புத் திருமணங்களை
முன்நின்று நடத்தி வைத்தவர் கோவிந்த் பன்சாரே.
அத்தோடு எழுத்தாளரும் கூட.

உண்மையில் சத்ரபதி சிவாஜி யார்?
அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டு எப்படிச் செயல்பட்டார்?
அவரது படைத் தளபதிகளில் எப்படி சகல மதத்தைச் சார்ந்தவர்களும்
இடம் பெற்றிருந்தார்கள்? என்று
அவர் சிவாஜி குறித்து எழுதிய நூல்
ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்பனையானது.
.
தாங்கள் சித்தரித்த சிவாஜிக்கு மாற்றாக மற்றொரு சிவாஜியா?
பொறுக்குமா இந்துத்துவ வெறியர்களுக்கு?
மனைவியோடு வாக்கிங் சென்றவரை
ஆசை தீர சுட்டு தணித்துக் கொண்டனர் தம் தாகத்தை.
மருத்துவ சிகிச்சை பலனளிக்காது மரணத்தைத் தழுவினார் பன்சாரே.
.
மொத்த மகாராஷ்டிராவிலும்
இவ்விதமாக அமைதி நிலைநாட்டப்பட்டது.
.
அது 2015 செப்டெம்பர் மாதத்து இரவு நேரம்
உணவருந்திக் கொண்டிருக்கிறார் முகம்மது அக்லக்.

அவரது குடும்பத்தினர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்
என்று சுற்றி வளைக்கிறது மதவெறி பிடித்த கும்பலொன்று.
குற்றுயிராக்கப்படுகிறான் 22 வயது மகன்.

அக்லக்கோ அங்கேயே பிணமாக்கப்படுகிறார்.
.
யார் எதை உண்பது? என்கிற உரிமையைக்கூட இம்மக்களுக்கு அளிக்காத சுதந்திர மண்ணில் Dadriஇருந்து வெகு சுதந்திரமாகப் பிரிந்து செல்கிறது அக்லக்கின் உயிர்.
எல்லாவற்றையும்விட…..

அதிபத்த நாயனார் சிவனுக்கு உணவாக
மீன் அளித்த கதையையும்…..

தனக்குப் பிடித்த கடவுளுக்கு
தனக்குப் பிடித்த பன்றிக் கறியையே
விருந்தாகப் படைத்த கண்ணப்ப நாயனார் கதையையும்…

கேள்வியாவது பட்டிருந்தால்
சக மனிதனைக் கொல்லத் துணியமாட்டார்கள்,

மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று
ஒரு அப்பாவி இஸ்லாமிய முதியவரைக் கொல்லும்
நகரமிராண்டிக் கூட்டத்திற்கும்…..

மதிய உணவு வேளையில்
ஊழியர்கள் அசைவம் கொண்டு வரக்கூடாது என்று
சுற்றறிக்கை விடும் நூற்றாண்டைக் கடந்த
The Hindu பத்திரிக்கைக்கும் இருப்பது
”நூலளவு” வித்தியாசம்தான்.

ஆக….
யார் எதை எதைச் சாப்பிடுவது….
எதையெதைச் சாப்பிடக்கூடாது என்பதை
அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

அதைப்போலவே
சங்கர மடத்தில் கருவாடு காய்ச்சச் சொல்ல
எப்படி பிறருக்கு உரிமை கிடையாதோ……

அப்படி….

சங்கிலிக் கருப்பராயன் கோயிலில்
சர்க்கரைப் பொங்கல் வைக்கச் சொல்லவும்….
எவனுக்கும் உரிமை கிடையாது.
.
இந்த உண்மை உரைக்காததால் தான்
காவு வாங்கப்பட்டது முகம்மது அக்லக்கின் உயிர்.

ஆக….

உத்தரப்பிரதேசத்திலும் அமைதி
வெகு அற்புதமாக நிலைநாட்டப்பட்டது.
.
.
இப்படித்தான் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
சாதி ரீதியாக இழிவுபடுத்தப்பட்டு
மன உளைச்சல்களுக்கு ஆளான
ஐதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோஹித் வெமுலா சாவை Rohitநோக்கித் தள்ளப்பட்டான்.
அவனது சாவுக்குக் காரணமான சாதி வெறியர்களும்
மத வெறியர்களும் தண்டிக்கப்படும்போது
நமது நாட்காட்டிகளில் எத்தனை ஆண்டுகள் கடந்திருக்கும்
என்பது இந்தப் புண்ணிய பூமிக்கே வெளிச்சம்.
.
நாம் ஐதராபத்திலும் இப்படியோர்
”அற்புதமான” அமைதியை நிலைநாட்டினோம்.
.
தமிழகம் மட்டும் சளைத்ததா என்ன?
.
காதல் என்கிற மாபெரும் ”படுபாதகத்தை”ச் செய்துவிட்ட
காரணத்துக்காகவே ரயில் தண்டவாளத்தில் கிடந்தது
நம் இளவரசனது உயிர்.
.
சாதி வெறி கோரத்தாண்டவமாடிய கொடூரப் பொழுதுகளை
தமிழகம் கண்கூடக் கண்டது.

கள்ளம் கபடமற்ற அவ்விளைஞனது
பச்சைப் படுகொலை நம்மைக் குற்ற உணர்ச்சியில்
தலைகுனிய வைத்து மூன்றாண்டுகூட கடக்காமல்
அடுத்த அயோக்கியத்தனமும் அரங்கேறியது உடுமலையில்.
.
சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர்
கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டார் Shankarபட்டப்பகலில்.
தங்கை கெளசல்யாவோ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சங்கர் என்கிற அந்த பொறியியல் மாணவன்
ஏன் வெட்டிச் சாய்க்கப்பட்டான்? என்ன காரணம்?

”கெளரவ”க் கொலையாம்.
.
தங்களது கேடுகெட்ட சாதி…
மத நம்பிக்கைகளுக்காக பெற்றவர்களே
தங்கள் பிள்ளைகளைக் காவு வாங்குவதை
கெளரவம் என்று எந்த மடையன் சொல்வான்.?
.
ஆக அமைதியை நிலைநாட்டும் அற்புதப் பணியில்
தமிழகமும் தன் பங்கை செவ்வனே செய்து முடித்தது இவ்விதம்தான்.
.
இன்றோ….
.
மராட்டியத்தின் யுனா.
மாட்டின் தோலை உரித்தார்கள் என்று சொல்லி
தலித் இளைஞர்களை மதவெறியர்களும்
சாதி வெறியர்களும் கொடூரமாகத் தாக்கிய
காட்சிகளைக் கண்டு நாடே குமுறத் தொடங்கி இருக்கிறது.
.
ஆனாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து
தலித் மக்கள் தொடங்கியிருக்கிற யுத்தமோ
அளப்பறிய ஆறுதலையும் அளித்திருக்கிறது.
.
”மாடுதான் உனக்குத் தாயென்றால்….
உன் தாயின் பிணத்தை நீயே அகற்று” என்று
நெத்தியடி முடிவை எடுத்திருக்கிறார்கள்
மராட்டிய தலித் மக்கள்.
.
இது மராட்டியத்தோடு மட்டும் நின்றுவிடக் கூடாது
என்பதே நம் ஆசை.

இத்தனை ஆண்டுகளாய்….

ஒவ்வொரு மாநிலத்திலும்….

ஒவ்வொரு மாவட்டத்திலும்
நாள் தவறாது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு
ஒருவழியாகத் தன் திருவாயைத் திறந்திருக்கிறார் மோடி.
.
”தாக்குவதென்றால்
தலித்துகளைத் தாக்காதீர்கள்.
என்னைத் தாக்குங்கள்” என்று.
.
பாவம் அவருக்கு இப்போதுதான்
இது தெரிந்திருக்கிறது.
.
உண்மைதான்
எப்போதாவது இந்தியா வந்து செல்லும்
அவருக்கு இவைகளெல்லாம் தெரிந்திருக்க
நியாயமில்லைதான்.
.
அமைதியை விரும்புகிறார் மோடி.
நம்புங்கள்.
.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும்
அரிய கலை அவர்கள் அறியாத ஒன்றுதான்.
.
நாட்டில் மதத்தின் பெயராலும்
மாட்டின் பேராலும் நிகழ்த்தப்படும்
கொடூரங்களெல்லாம்
அவர்கள் ஒருபோதும் அறியாத ஒன்றுதான்.
.
காந்தி கொலையில் இருந்து
யுனா வெறித்தனம் வரை
எதிலும் சங்பரிவாரங்களுக்கு சம்பந்தமேயில்லை.
நம்புங்கள்.
.
காந்தியார் கொல்லப்பட்டதுகூட
திப்புசுல்தானால் திட்டமிடப்பட்ட
சதியாக இருக்கலாம்.
.
நம்புங்கள் நண்பர்களே….
.
.
எனக்கு ஏனோ இந்த நேரத்தில்
நினைவுக்கு வரக்கூடாத கவிதை ஒன்று
நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
.
ஏறக்குறைய இருபத்தி ஐந்தாண்டுகள் முன்பு
”பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு வெளியிட்ட
“மெளனம் உனது எதிரி” என்கிற கவிதை தொகுப்பு
ஞாபகத்துக்கு வந்து தொலைப்பதை
எப்படித் தவிர்ப்பது என்றே தெரியவில்லை.
.
வேறு வழியில்லை.
நீங்களும்தான் அந்தக் கவிதையின்
வரிகளைக் கேட்டுத் தொலைக்க வேண்டும்.
.
இது அமெரிக்க அங்கிளுக்கு மட்டுமல்ல
சகல அங்கிள்களுக்கும் பொருந்தக்கூடிய வரிகள்தான்.
.
இதுதான் அந்த வரிகள்:
.
.
“நீயும் அமைதி பற்றி பேசுகிறாய்.
ஆனால் எல்லோருக்கும் பொதுவான
தாயகத்தின் வளங்களை நீ மட்டும்
தனியே சுரண்டிக் கொள்கிறாய்.
.
நீயும் அமைதி பற்றி பேசுகிறாய்.
ஆனால் உன் சதிச் செயல்களை
மக்கள் மேடைக்கு ஏற்றிய,
உன்னை நியாயத்திற்காக எதிர்க்கத் துணிந்த
தேசத்தின் ஏராளமான இளங்குருத்துக்களை
நீ அநியாயமாகச் சாகடித்தாய்.
.
ஒரு கொடூரமான கழுகு
பாதுகாப்பற்ற, உதவியற்ற
வெண்புறாவை
குறிவைத்துக் குதறுவதைப் போல.
.
ஆமாம்…. நீயும் அமைதி பற்றி பேசுகிறாய்.
ஆனால் உன் இரத்தக்கறை படிந்த கைகளுக்குள் இருக்கும்
பலிகொடுக்கும் பட்டாக்கத்திகளை
முதுகுக்குப் பின்னால் மறைக்கப் பார்க்கிறாய்.
.
நாங்களும் அமைதியையே விரும்புகிறோம்.
.
.
ஆனால்
நீதியின் மீது நிறுவப்பட்ட அமைதியை,
நியாயத்தின் மீது கட்டப்பட்ட அமைதியை.
அது கிடைக்காவிடில்
உன் மீது
நியாயப்போர் தொடுப்போம் நாங்கள்.
.
.
(நன்றி : ”சமரசம்” இதழ்)

அந்த மனிதன் யாருக்காக உழைத்தான்?

அந்த மனிதன் யாருக்காக உழைத்தான்?

யாருக்காக  எழுத்துக்களை விதைத்தான்?

யாருக்காக சண்டையிட்டான்?

யாருக்காக கோபம் கொண்டான்?

அவன் யார் யாருக்காக சிந்தித்து செயல்பட்டானோ அவர்களிலேயே பலருக்கு அந்த மனிதனைத் தெரியாது. ஏனெனில் அவன் சிந்தித்து செயல்பட்ட தளம் அப்படி.

ஆகவே……

தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்….

தெரியாதவர்கள் அறிந்து கொள்ளவும் வாருங்கள்.

அந்த ஞாயிறு பொழுதை மேலும் பயனுள்ள பொழுதாக ஆக்குவோம்.

mss pandian karutharangam new

நோக்கு என்ன தோன்றது….?

kanchi-seer3

ஏழாவது வயதிலேயே பெண்ணுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். அந்த வயதில் அவளுக்குக் கணவனாக வருகின்றவனிடம் அவள் தன்னை ஒப்படைத்து விடவேண்டும். அவனையே குருவாகவும் தெய்வமாகவும் ஏற்று அவனுக்குத் தன்னை அர்ப்பணித்து விடவேண்டும்.

வயது ஆகிவிட்டால் பெண் எதிர் கேள்வி கேட்பாள். அதனால் இளம்வயதிலேயே அவளை ஒருவனிடம் அர்ப்பணித்துவிட வேண்டும். அதன் பிறகு அவளுக்கென்று எதுவும் இல்லை.”
– ‘பெரியவா” சந்திரசேகேந்திர சங்கராச்சாரி ஸ்வாமிகள் –

தெய்வத்தின்   குரல் – பாகம் இரண்டு.

 

இவா இப்படி சொல்றா…

 

ஆனா மதுரை கோர்ட்….

“18 வயது நிறைவடைந்த பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை வழங்குவதில் எந்த தவறும் இல்லை. அதற்கு உரிய மனநிலை அவர்களிடம் இருக்கும்.

ஆனால், திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க ஒரு பெண்ணுக்கு 18 வயதில் மனம் மற்றும் உளவியல் ரீதியாக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்ணின் திருமண வயது 18 என்று எந்த அடிப்படையில் அரசு நிர்ணயித்துள்ளது என்பது தெரியவில்லை. எனவே, பெண்ணின் திருமண வயது 18 என்பதை உயர்த்த வேண்டும். அரசு இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.”

 

அப்படீன்னு சொல்றது….
நேக்கு என்ன தோன்றதுன்னா…

பேசாம பொம்மனாட்டிக விவாஹ வயஸை 80 ஆக்கீட்டா பாவம் இல்லையோன்னு தோன்றது.

அப்பத்தான் கண்டவாகூட கலப்பில்லாம போறதுக்கும்….

அப்படியே போனாலும் அவா ஸந்ததி பெருகாம போறதுக்கும் ஒரு Chance இருக்கும்.

 

இதை Brahmins மட்டுமில்ல Converted Brahmins ம் உற்சாகமாத்தான் ஏத்துக்குவா…

 

நோக்கு என்ன தோன்றது….?

பெண்களுக்கு எதிரான யுத்தம்…..

படம்

ஆக….

கள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் இரு ஊர்களையே கருக்குவதில் போய் முடிந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பதிவுத் திருமணமும் செய்து கொண்ட திவ்யா – இளவரசன் இணையைப் பிரித்தே தீருவது என்பதில் தொடங்கிய சாதி வெறியாட்டம் நூற்றுகணக்கான தலித் மக்களது வீடுகளைக் கொளுத்தி….. அவர்களது வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி….. சொந்த மண்ணிலேயே அந்நியராக்கி….. கையறு நிலையில் கையேந்தி நிற்க வைத்திருக்கிறது.

காரணம் திவ்யா ”உயர்ந்த” சாதியாம்.

இந்த உயர்ந்தது…. தாழ்ந்தது…. இவர்கள் மேலானோர்…. இவர்கள் கீழானோர்…. என்கிற கருமாந்திரங்களையெல்லாம் காறி உமிழ்ந்துவிட்டு கண்ணியமாகக் கரம் கோர்த்த இவர்களது வாழ்வைப் பிரிக்க இங்கு எவனுக்கு யோக்யதை இருக்கிறது? அல்லது உரிமை இருக்கிறது?

கேட்டால்….. இப்படித்தான் ஒவ்வொரு ஊரிலும் செய்கிறார்களாம்…. தங்கள் சாதிப் பெண்ணை மயக்கி திருமணமும் செய்து கொண்டு பின்பு நட்டாற்றில் கழற்றி விட்டு விடுவார்களாம்….. இது நாடகக் காதலாம்….. தர்மபுரிப் பக்கம் வன்னியர்களில் சிலர் இப்படித் திருவாய்மலர்ந்தால்…. கொங்குநாட்டுப் பகுதியில் உள்ள கவுண்டர்களில் சிலரும் இப்படித் திருவாய் மலர்ந்தருளுகிறார்கள்.

பெண்களை இதைவிட யாரும் இவ்வளவு இழிவாகக் கொச்சைப்படுத்த முடியாது. தங்கள் வீட்டில் பிறந்த…. தங்களோடு வளர்ந்த பெண்களையே சுய அறிவற்றவர்களாக…. பகுத்தறியும் திறன் இல்லாதவர்களாக…. பார்க்கும் இவர்கள் மொத்தமாகப் பெண்ணினத்தையே எப்படிப் பார்ப்பார்கள் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

சரி “தங்கள் சாதிப் பெண்களை” மயக்கி…. திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விடுகிறார்கள் தங்களுக்குக் ”கீழ்” உள்ளவர்கள்” என்று குமுறுகிறார்களே…. அப்படியானால் இவர்களை விட ”உயர்ந்ததாக”ச் சொல்லிக் கொள்ளும் ஆற்காட்டு வெள்ளாளர் வீட்டிலோ அல்லது சைவப் பிள்ளைமார் வீட்டிலோ பிறந்த பெண்களை இவர்களது ஆண்கள்  காதலித்தால் அதை என்னவென்று அழைப்பார்கள்? முன்னது ”நாடகக் காதல்” என்றால் இதை காவியக் காதல் என்றழைக்கலாமோ…..?

ஒவ்வொரு சாதியும் தனக்குக் கீழாக ஒரு சாதி இருப்பதை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் தனக்கு மேலாகவும் ஒரு சாதி ஆதிக்கம் ஒளிந்திருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகின்றன. இப்படிப்  பெருமிதம் கொள்ள இயலாத சாதியாக….. சாதி மூட்டைகளிலேயே அடிமூட்டையாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் சாதி அருந்ததியர் சாதி மட்டும்தான்.

இன்று இறுமாப்போடும் கர்வத்தோடும் நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிற பல பிற்பட்ட சாதிகள் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்னர் தங்கள் சாதி பெயரை சொல்லக்கூட வெட்கப்பட்டுக் கொண்டு கூனிக் குறுகி நின்ற சாதிகள்தான். இன்றைக்கு இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து என்னென்ன இழிவுகளையும், குறைகளையும் சொல்கிறார்களோ….. அதே இழிவுகளை…. அதே குற்றச்சாட்டுகளைச் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இவர்களும் சுமந்து நின்றவர்கள்தான். அன்று ஒடுக்கப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சுமந்து நின்ற சமூக இழிவை கண்டு மனம் குமைந்து…… பொங்கி எழுந்து…… அவர்களுக்கான சமூக நீதியை சகல துறைகளிலும்  பெற்றுத்தந்தவர்கள் சாதியாளர்கள் அல்ல.

சாதி மறுப்பாளர்கள்.

ஆம் ஒவ்வொரு சமூக மாற்றத்திற்குப் பின்னாலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் ஒளிந்திருக்கிறது.

ஆக….. இதில் நாம் யார் என்பதைக் காட்டிலும்…. நாம் யாருக்காக நிற்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.

கலப்பு மணத்திற்கு அரசு ஊக்கம் அளிப்பதை விடவும்…… ”யாரேனும் இனி ”சொந்த” சாதியில்… ”சொந்த” மதத்தில் திருமணம் செய்தால் பத்தாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை” என்றொரு சட்டம் கொண்டு வர வேண்டும்.

பச்சையாகச் சொன்னால் இந்த சாதி… மதம்….. போன்ற கண்றாவிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் உண்மையிலேயே பெண்கள்தான். பெண்களைப் போன்ற ஜனநாயகப் பூர்வமான உயிரினம் உலகில் வேறெதுவும் இல்லை. மதத்தின் பேரால்…..சாதியின் பேரால்…. இனத்தின் பேரால்… என சகலத்தின் பேராலும் நடத்தப்படும் யுத்தங்களால் மூர்க்கமாகப் பாதிக்கப்படுபவள் பெண் மட்டும்தான்.

சாதியும்…. மதமும்…. ஆண்களுக்கானவை. இம் மண்ணில் பிறந்த எந்தப் பெண்ணும் தன் பெயருக்குப் பின்னால் செட்டியார் என்றோ….. முதலியார் என்றோ…. கவுண்டர் என்றோ போட்டுக் கொல்வதில்லை. தன் வீட்டில் தன்னை அடக்கி ஒடுக்கும் ஆண் என்ன நினைத்துக் கொள்வானோ என்கிற சூழலிலேயே  பெண்ணும் சாதியை…. மதத்தை நம்புபவராக நடிக்கிறார். உண்மையில் எவ்விதப் பாகுபாடும் அற்று மனித குலத்தை அணு அணுவாய் நேசிக்கும் உள்ளம் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு சாதிக்காரனும் பெண்ணை தன் வீட்டில் வளரும் ஒரு கால்நடையாகவே கருதிக் கொள்கிறான். சுருக்கமாகச் சொன்னால் அவனுக்கு பெண் ஒரு அஃறிணைப் பொருள் அவ்வளவே.

இந்த வரலாறு மாற்றி எழுதப்பட்டேயாக வேண்டும். தங்களுக்கு எதிராக இந்தச் சகல சாதி ஆண்களும் தொடுக்கும் யுத்தத்தை முறியடித்து வருங்கால வரலாற்றை எழுதப் போவது நமது பெண் இனமாகத்தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் இதுவரை எழுதப்பட்ட வரலாறெல்லாம் ஆண்களால்…. ஆண்களுக்காக…..ஆண்களே எழுதிய வரலாறு.

படம்

நன்றி : “அந்திமழை” மாத இதழ்

கிழக்கிந்தியக் கம்பெனி பார்ட் II

”நீர்தான் கட்டபொம்மன் என்பவரோ?”

”நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ?”

என எங்கேயோ கேட்ட குரல்கள் மீண்டும் இனி பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் ஒலிக்கத் துவங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை யாரும். சினிமாவில்தான் பார்ட் 2 சீசன் வரவேண்டுமா என்ன? இந்திய அரசியலிலும் இது பார்ட் 2 சீசன்தான். என்ன அன்றைக்கு ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி…. இன்றைக்கோ கிழக்கு…மேற்கு….தெற்கு எனச் சகல திசைகளிலும் நம்மை ஆப்படிக்க வரும் வால்மார்ட், டெஸ்கோ எனும் இத்யாதிகள்.

டீசல் விலை ஏற்றம் ஏன்? மண்ணெண்னை விலை ஏற்றம் ஏன்? அத்யாவசியப் பண்டங்களின்  விலை ஏற்றம் ஏன்? என்றெல்லாம் கேட்டால் “எலே கச்சா எண்ணெய்க்கு அவன் வெல ஏத்தீட்டானில்ல….பொறவு என்ன செய்ய?” என்கிறது அது. இதுக்குப் பேசாமல் ஒரு மளிகைக் கடைக்காரரையே பிரதமராக ஆக்கியிருக்கலாம்.(அவர் இவரை விடவும் நிச்சயம் சிறப்பாக இருப்பார் என்பது வேறு விஷயம்) போதாதற்கு ”வளமான எதிர்காலத்திற்காக கசப்பான முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்கிற ”அருள்வாக்கு” வேறு.

வளம் யாருக்கு?

கசப்பு யாருக்கு? என்பதுதான் கேள்வியே.

அமெரிக்காவின் வால்மார்ட் எத்தனை விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கியது….

எத்தனை வணிகர்களை தெருவில் நிறுத்தியது….

எத்தனை சிறு முதலாளிகளை தலையில் துண்டைப் போட வைத்தது….

என்பதெல்லாம் இந்தப் பொருளாதார மேதைக்குத் தெரியாது என்று நினைத்தால் நம்மை விட சுப்ரமண்யன்சாமி வேறு யாரும் இருக்க முடியாது.

தெரியும்.

ஆனால் இதுகளையெல்லாம் முன்னேற்றவா அவர் ஆக்ஸ்போர்டிலும், கேம்பிரிட்ஜிலும் படித்து குப்பை கொட்டிவிட்டு வந்தார்? போங்கப்பு.

வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பறிபோகப் போகிறது என்று அர்த்தம்.

வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் அதைச் சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகப்போகிறது என்று அர்த்தம்.

வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் அதைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் மத்தியதர வர்க்கம் கற்பனை செய்தாலும் வாங்கிவிட முடியாத அளவுக்கு உச்சத்தில் போய் நிற்கப்போகிறது என்று அர்த்தம்.

அவ்வளவு ஏன்….  ’மீதி அஞ்சு ரூபா நாளைக்குத் தர்றேன் அண்ணாச்சி….’ என்கிற உரிமையோடு வீடு திரும்பி மறுநாள் உறவோடு திருப்பித் தரும் வாழ்க்கை முறை மாறி பிளாஸ்டிக் டப்பாக்களில் இரசாயணங்களால் பதப்படுத்தப்பட்ட பண்டங்களை சொன்ன விலைக்கு வாங்கவும் முடியாமல்…. வாங்கினால் உண்ணவும் முடியாமல்…. உண்டது  செரிக்கவும் செய்யாமல்… சீரழியப்போகும் வாழ்க்கை முறை வருவதற்கான அறிகுறிதான் இந்த வால்மார்ட்.

ஆக….

ஏறக்குறைய எல்லாவற்றிலும் அந்நிய முதலீட்டிற்கான அச்சாரம் போட்டாயிற்று. ஒன்றிரண்டைத் தவிர. அதில் ஒன்றுதான் பத்திரிக்கைத் துறை. தமது துறையைத் தவிர பிறவற்றில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் பத்திரிக்கைகள் இதில் மட்டும் ஏன் அந்நியத் தலையீட்டை  எதிர்க்கிறார்கள்? அவர்கள் வந்தால் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அடியோடு சீரழித்து விடுவார்களாம்….. ஒரு முறை நீதியரசர் கிருஷ்ணய்யர் சொன்னதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. ”அவர்கள் சொல்வதும் சரிதான். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அந்நியர்கள் சீரழிப்பதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவே முடியாது. ஏனென்றால் அந்த உரிமை நமக்கு மட்டும்தான் இருக்கிறது.”

இதெப்பிடி இருக்கு?

 

 நன்றி : ”அந்திமழை” மாத இதழ்