வாடிகனுக்குப் போனாலும்…..

சென்னை To கோவை 10.01.2016prayer-warrior
.
போன வேலை முடிந்து ரயில் ஏறினால் கீழ் படுக்கை எனக்கு.
.
பக்கத்தில் இருந்தவர் “எந்த ஊர்?”என்றார்.
கோயமுத்தூருங்க என்றேன்.
.
பல நேரங்களில் கோயம்புத்தூரில் இறங்குவதற்கு பதிலாக கொச்சினில் போய் இறங்கிய சம்பவங்களையெல்லாம் நினைவில் கொண்டு…. ”ஊர் வந்தா கொஞ்சம் எழுப்பிவிடுங்க… நான் மறந்து தூங்கீருவேன்” என்றேன்.
.
”நிச்சயமா பிரதர்” என்றார் அவர்.
.
டிடிஆர் இன்னும் எங்கள் பெட்டிக்கு வரவில்லை.
.
“என்ன பண்ணீட்டு இருக்கீங்க?”
.
எழுத்தாளரா இருக்கேன்…ன்னேன்.
.
எதுல எழுதுவீங்க?
.
குமுதம்…. நக்கீரன்….. விகடன்…. தின செய்தி….. அம்புலிமாமா….ன்னு கெடச்சதுல எல்லாம் எழுதுவேன்….
.
நீங்க படிப்பீங்களா? என்றேன் ஆர்வம் மிகுதியில்.
.
”ஓ படிப்பேன்” என்றார்.
.
எந்த புக்கு? என்றேன்.
.
”வேற என்ன? பைபிள்….தான்” என்றார்.
.
அட சரியாகத்தான் உதவி கேட்டிருக்கிறேன். எழுப்புதல் கூட்டம் நடத்துபவரிடமே என்னை எழுப்பிவிடச் சொல்லி இருக்கிறேன்….
.
வீசிங் இருக்கிறதோ இல்லையோ… ஆனாலும் சும்மானாச்சுக்கும் இந்த இன்ஹேலரை ஒரு அமுக்கு அமுக்கும் பழக்கம் உண்டு. இதைப் பார்த்த பக்கத்து பெர்த் சகோ “உங்க சரீரத்துல பிரச்சனை இருக்கு” என்றார்.
.
இருக்குறதுனாலதான இதை அமுக்குறேன்? என்றேன். காலைல நீங்க எந்திரிக்கறப்போ இந்தப் பிரச்சனை உங்க சரீரத்த விட்டுப் போயிருக்கும் என்றார் கனிவாக.
.
நீங்க எம்.பி.பி.எஸ் எந்தக் காலேஜ்ல முடிச்சீங்க? என்றேன் ஆச்சர்யம் தாளாமல்.
.
நான் டாக்டரில்லை..,… ஆனா உங்குளுக்காக ஜெபிச்சா சரீரம் சரியாகும் என்றது அது.
.
அய்யய்யோ…. மத்தவங்களுக்கு எல்லாம் எதெதுலயோ கண்டம்ன்னா….. நம்முளுக்கு நாக்குல கண்டமாச்சேன்னு பயம் கிளம்பீடுச்சு.
.
”அதுக்கு விசுவாசம் முக்கியம் பிரதர்” என்றார் மீண்டும்.
.
இங்க அவனவன் சுவாசத்துக்கே சிரமப்பட்டுகிட்டு இன்ஹேலர் அடிச்சா இது வேற விசுவாசத்தப் பத்தி வகுப்பெடுக்குதே…. ஒருவேளை அதுக்கும் ஒரு இன்ஹேலர் வந்திருக்கோ என்னவோ….. யார் கண்டது?
.
ஆனாலும் வாயைத் தொறந்தா அப்புறம் நிச்சயமா கொச்சின்தான் என்கிற பயத்தில் தூங்க ஆரம்பித்தேன்.
.
டீ…. காபி…. டீ…. காபி…. சத்தம் கேட்டு எதேச்சையாய் விழித்தால் திருப்பூரில் நிற்கிறது வண்டி. நம்ம “விசுவாசமோ” குறட்டையின் உச்சத்தில்.
.
அய்யா கோயமுத்தூர் வந்திரும் எந்திரிங்க என்று எழுப்பி விட்டேன். அவர் சொன்னது மாதிரியே எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது போல பிரமை.
போய் மூஞ்சி கழுவி விட்டு வந்து அமர்ந்தார்.
.
“பிரதர் சரீரத்துல ஏதாவது மாற்றம் தெரிஞ்சுதா? என்றார் மறக்காமல்.
.
ஆமாங்க…. என்னவோ ஒரு மாற்றம் தெரியற மாதிரி இருக்கு….
.
”நான் சொன்னனில்ல…. ராத்திரி முழுக்க ஜெபிச்சேன். உங்க சரீரம் குணம் ஆகணும்கிறதுக்காக… அதான்…. அதான்…. பலிச்சுடுச்சு….” உற்சாகத்தில் துள்ளினார் அவர்.
.
என்ன மாற்றம் தெரியுது உங்குளுக்குள்ள… கமான்… சீக்கிரம் சொல்லுங்க பிரதர் என்று பரபரத்தார் மனிதர்.
.
எனக்குள்ள இருந்த வீசிங் போன மாதிரி இருக்கு….. ஆனா….
.
”என்ன ஆனா? கமான் தயங்காம சொல்லுங்க….”
.
அதுக்கு பதிலா கேன்சர் வந்தமாதிரி இருக்கு என்றேன்.
.
வாடிகனுக்குப் போனாலும் வயித்தெரிச்சல் தொலையாது….ங்குறது இதுதான் போலிருக்கிறது.
.
.
(தெருவோரக் குறிப்புகள் – தின செய்தி)

சுவாமி பாமரானந்தா வழங்கும் புத்தாண்டு ஜோதிடம்*.

Boss original
மேஷம் :
தொழில் உச்சத்தில் இருக்கும். பில்கேட்ஸ் போனைப் போட்டு ஆலோசகரா வரமுடியுமா?ன்னு கேட்பார். விடிஞ்சு பாத்தா “என் டெபாசிட்டைத் திருப்பிக் குடு”ன்னு… உங்க வீட்டு வாசல்ல fig1முன்னூறு பேர் நிப்பான். பின்பக்கம் வழியா சுவரேறிக் குதிச்சு மொத்த குடும்பமும் எஸ்கேப் ஆகும். குதிக்கும்போது மறுபுறம் சாக்கடை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுக் குதிப்பது அருகில் இருப்பவர்கள் சுகாதாரத்துக்கு நல்லது.

ரிஷபம் :
பஸ் ஏறுனா பாக்கெட் அடிப்பானுக. நடந்து போனா நாப்பது நாய் தொறத்தும். கும்பிடப் போனா சிலையே களவு போயிருக்கும். திருட வந்தவன் உங்க நெலமையப் பாத்து பாக்கெட்டுல பத்து ரூபாய Fig2சொருகி வெச்சுட்டுப் போவான். தேர்தல்ல நின்னு எம்.பி. ஆயிரலாம்ன்னு நெனச்சா நாட்டுல தேர்தலையே ரத்து பண்ணி எமெர்ஜென்சி அறிவிச்சிருப்பாங்க. ஏகத்துக்கும் ஏடாகூடமான வருடம்.

மிதுனம் :
தர்மப்பிரபு…ன்னு சொன்னதுல புல்லரிச்சுப் போயி பத்து ரூபாய அசால்ட்டா தட்டுல போட்டுட்டு மீதி ஒம்பது ரூபாய அதே தட்டுல இருந்து துழாவி எடுக்குற மகாபிரபு நீங்க. பதினெட்டு வருசம் முன்னாடி Fig3உங்க கை தவறி தட்டுல விழுந்த அந்த எட்டணாவை இப்ப நெனச்சாலும் ஹார்ட் அட்டாக் வர்றதுக்கு வாய்ப்பு உண்டு. இடுகாடு இல்லேன்னா கிரிமிட்டோரியம் பக்கத்துலயே குடி போயிர்றது எதிர்கால செலவுகளைக் குறைக்க உதவும்.

கடகம் :
உறவுக்காரர்களின் பாசப்பிணைப்பில் ஓகோன்னு இருக்கும் உங்க குடும்பம். விருந்துக்கு வந்தவங்களால வீட்டுல இருந்த அரிசி மூட்டைல இருந்து பண்டிலா வாங்கின தீப்பெட்டி வரைக்கும் காலியாகி ஓட்டலுக்கு ஓடவேண்டி வரும். ஒவ்வொரு நாளும் நாம வீட்டுலதான் இருக்கமா? இல்லFig4 ஏதாவது மெஸ்ஸுக்குள்ள நுழைஞ்சிட்டமான்னு உங்குளுக்கே சந்தேகம் வரும். இதுக்கான ஒரே பரிகாரம் அமேசானோட அடர்ந்த காடுகள் பக்கமோ…. இல்லன்னா சகாரா பாலைவனம் பக்கமோ வீடு வாடகைக்குப் பாத்துப்போயிடறது உத்தமமான காரியம்.

சிம்மம் :
கவனமாகச் செயல்பட வேண்டிய தருணம். ”ஆறுமாசம் முன்னாடி வாங்குன அந்த முன்னூறு ரூபாயை எப்ப சார் குடுக்கப் போறீங்க?ன்னு மூவாயிரம் பேர் மத்தீல கேட்பார் கடைநிலை ஊழியர். Fig5கோபம் கொந்தளிச்சு வந்தாலும் வாயே திறக்காமல் இருப்பது நல்லது. நாம லோன் வாங்காதது இன்னும் உலக வங்கி கிட்ட மட்டும்தான்னு ஊருக்கே தெரியும். அதுனால அடக்கி வாசிக்கிறது ஒடம்புக்கு நல்லது.

கன்னி :
எழுத்தாளர்களுக்கு இது எக்குத்தப்பான காலகட்டம். விலைவாசி உயர்வு, பொருளாதார சிக்கல் பத்தி எல்லாம் புக்கு போட்ட பதிப்பாளர்க மாத்தி மாத்தி உங்க கட்டுரைகளுக்கு செக்குகளா அனுப்பித் தள்ளுவாங்க. ராயல்டியா வந்த செக்குகள்ல எந்தச் செக்கை முதல்ல டெபாசிட் பண்றதுங்குற குழப்பத்துல தலை லேசா சுத்தற மாதிரி இருக்கும். பயந்து போய் டாக்டர்கிட்ட போனா…”அதிர்ச்சீலFig6 ரத்தம் கிளாட் ஆயிருச்சு ஒரு சின்ன ஆபரேஷன்தான்”ன்னு ஆட்டையப் போடுவாரு டாக்டரு. டிஸ்சார்ஜ் ஆகி வீடு வர்றப்போ பதிமூணுல பன்னெண்டு செக் பவுன்ஸ் ஆகி இருக்கும். ஸ்ட்ராங் டீயோ…. லைட் டீயோ…. தான் குடுப்பினை உங்குளுக்கு. ராயல்டிக்கு எல்லாம் Chance ஏ இல்ல.

துலாம் :
குடும்பத்தில் குதூகலம் கொப்பளிக்கும். மாமனார் வாங்கி வந்த பிஸி பிஸி பேலாவை உற்றுப்பார்த்தால் மைக்ராஸ்கோப் இல்லாமயே புழு நெளிவது தெரியும். பாச மிகுதியில் மச்சினன் Fig7வாங்கி வரும் பூந்தியில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிடில் அது உள்ளே போய் காட்டு காட்டுன்னு காட்டுற வேலையில் ஏழெட்டு நாளைக்கு பாத்ரூமில இருந்து வெளிய வர முடியாது. எதுக்கும் கையிலேயே லொமோட்டில் மாத்திரையை வைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம் :
நேரம் தவறாமை மிக முக்கியம். செவ்வாய் இரவு கிளம்பும் டிரெயினுக்கு ஞாயிறு இரவே ஸ்டேஷன் போய் விடுவது நல்லது. வீட்டில் இருப்பவர்கள் இந்த இரண்டு நாட்களாவது சந்தோஷமாக இருப்பார்கள். சுனாமியே வந்து மக்கள் சுண்ணாம்பாய் போனாலும் ”சம்பளக் கமிஷன் அர்ரியர்ஸ் ஏப்ரலுக்குள்ளயாவது வருமா?”ன்னு நாலு லட்சம் பேர் கிட்டயாவது கேட்கிற ஜாதி நீங்க. வெளிவாசல்Fig8 பூட்டை இருபத்தி ஏழு தடவை இழுத்துப் பாத்துட்டு பின் வாசல் கதவை திருட வசதியா திறந்து வைத்துவிட்டே வந்திருப்பீர்கள். அம்புட்டு பர்பெக்ட்டையும் மொத்தமா வெள்ளம் வந்து அள்ளீட்டுப் போயிரும். காலத்துக்கும் உங்குளுக்கு காலண்டர்லதான் கண்டம்.

தனுசு :
சாதி சங்க கூட்டத்துல வீர உரை ஆற்றீட்டு வீட்டுக்குள்ள நுழையறப்போ உங்க மகனோ மகளோ லெட்டர் எழுதி வெச்சுட்டு யாருடனாவது எஸ்கேப் ஆகியிருப்பாங்க. ஹார்ட் அட்டாக்குக்கு அட்மிட் ஆனாலும் டாக்டர் கிட்டயே ”நீங்க நம்மாளுங்களா டாக்டர்?”ன்னு கேக்குற புத்தி மட்டும் மாறவே drowning-manமாறாது. காப்பாத்தீரலாம்ன்னு நெனைக்குற டாக்டருக்குக் கூட போஸ்ட் மார்ட்டம் ரூமுக்குப் போனைப் போடலாம்ன்னு தோணும். தண்ணீல சிக்கி தாறுமாறா தத்தளிச்சுகிட்டு இருந்தாலும் காப்பாத்த கை நீட்டறவன் கிட்ட “தமிழனா? தெலுங்கனா?”ன்னு விசாரிப்பீங்க. கைதூக்கி விட வந்தவன்கூட கடுப்புல கல்லைத் தூக்கித் தலைல போட்டுட்டுப் போவான். தூங்கறப்போகூட வாயைக் கட்டீட்டுத் தூங்கறது உசுருக்கு உத்தரவாதம் தரும்.

மகரம் :
வாரிசுகளிடம் எச்சரிக்கையாய் இருப்பது மிக முக்கியம். பேங்க்குல இருக்குற பணத்துல ஒத்த ரூபா கூட மிச்சம் வைக்காம எடுத்துட்டு வந்து வீட்டுக்குப் பின் பக்கம் புதைச்சு வைக்கிறது நல்லது. மகனோ மகளோ…..”வாரிசுச் சான்றிதழும், டெத் சர்டிபிகேட்டும் சுமாரா எத்தனை நாளுக்குள்ள Fig10கெடைக்கும்?”ன்னு ஏற்கெனவே கேட்டு வெச்சிருப்பாங்க. So… எதற்கும் தலையணைக்கு அடியில் கத்தியோ, கடப்பாரையோ வைத்துக் கொள்வது நல்லது. அரசியலில் இருப்பவர்கள் தலைகாணி கூட இல்லாமல் அறையைத் தாழ்போட்டுகிட்டு தனியா தூங்கறது மிக நல்லது.

கும்பம் :
மங்குனி மேனேஜர் மொக்கை ஜோக் அடித்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கவும். காய்கறி வாங்குவதில் இருந்து ஜிப்பு போட்டு விடுவது வரைக்கும் கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்வது நல்லது. Bossபதவி உயர்வு பட்டியலில் உங்கள் பெயரும் சேர்க்கப்படுவது அப்போதுதான் சாத்தியமாகும். கொஞ்சம் கவனக்குறைவாய் இருந்தாலும் கதை கந்தல்தான். அப்புறம் உங்களுக்கு முன்னால் லிஸ்டில் இருக்கும் ஏழுபேரும் டூர் போகும்பாது மொத்தமாய் மண்டையைப் போட்டால்தான் உங்குளுக்கு பிரமோஷன். இல்லாட்டி வெறும் மோஷன்தான். மேனேஜர் வழிபாடு கரை சேர்க்கும்.

மீனம் :Family
மகன் பேஸ்புக் பார்க்கிறானா? மகள் டுவிட்டரே கதீன்னு கிடக்கிறாளா? அம்மாவும், மாமியாரும் சீரியல்ல சிக்கி சின்னாபின்னப் பட்டுகிட்டு இருக்காங்களா? வாழ்க்கைத் துணை Chatல கடலையா? எவரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். அப்புறம் பழனி படிக்கட்டோ இல்ல நாகூர் தர்கா வாசலோ…தான் துணை. நாக்கில் நர்த்தனம் ஆடும் சனி. முடிந்தால் 108 க்கு ஒரு போனைப் போட்டுவிட்டு ஒரு சின்ன ஆக்சா பிளேடால் நாக்கை மொத்தமாய் வெட்டி எடுத்து விடுவது வாழ்வை சிறப்பாக்கும்.
.
.
(தெருவோரக் குறிப்புகள் – தின செய்தி நாளிதழ்)

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்….?

”கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான்?” என்கிற எம்.ஜி.ஆரின் படகோட்டி பாடல்
vijaykanthவரிகள் பண்பலையில் ஓடிக்கொண்டிருக்க இருக்க எனக்கு ஏனோ கருப்பு எம்.ஜி.ஆரின் ஞாபகம்
வந்துவிட்டது.
.
சமீபத்தில்தான் கோவையிலுள்ள ஒரு யோகா மையத்திற்கு வந்து போனார் கேப்டன்.
.
ஒரு வார யோகா அவரது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்திருக்கிறது என்று ஆணித்தரமாக அறிவித்து விட்டுத்தான் விமானம் ஏறினார் விஜயகாந்த்.
.
போய் இறங்கிய கையோடு கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் நிவாரண உதவியும் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு சிவக்கொழுந்து ரூபத்தில் வந்திருக்கிறது சிக்கல்.
.
முண்டியடித்த மக்களை ஒழுங்குபடுத்தவில்லை என எம்.எல்.ஏ சிவக்கொழுந்து வேனிலேயே ”ஒழுங்குநடவடிக்கை”க்கு உள்ளானதையும்….
.
இலவச இணைப்பாய் வேன் டிரைவருக்கும் ஓரிரண்டு கிடைத்ததையும்
.
கண்டு களித்தது தமிழ்ச் சமூகம்.
.
அப்புறம் ”வாங்கியவரே” ”அடிக்கலை…… ஆனா அப்புடி அடிச்சாலும் நல்வழிப்படுத்தத்தான் அடிப்பாரு….” என அறிக்கைவிட்டுத் தெறிக்கவிட….
புல்லரித்துவிட்டது.
.
.
ஆனால் நமக்குள்ள கேள்வியெல்லாம் வேறு.
அடித்தார்…. அடிக்கவில்லை….
உரிமை இருக்கு…. உரிமை இல்லை….
என்பதையெல்லாம் தாண்டி ஏன் யாரும் வேறொரு விஷயத்தை இதனோடு தொடர்புபடுத்தியே பார்க்க மாட்டேனென்கிறார்கள் என்பதுதான்.
.
அதுதான் : ஒரு வாரம் யோகா பயிற்சி எடுத்து மனதையும் உடலையும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கிற ஒருவர் எப்படி எண்ணி நாற்பத்தி எட்டே
மணிநேரத்தில் பக்கத்தில் இருப்பவருக்கு இப்படி கும்மாங்குத்து விட முடியும்? என்பதுதான் நம் கேள்வியே.
.
யோகா பயிற்சி கொடுத்த புண்ணியவான்கள் மனதையும் கட்டுப்படுத்த பயிற்சி கொடுத்திருப்பார்கள்தானே?
.
அப்பயிற்சி ஏன் இங்கே பலனளிக்காமல் புட்டுகிச்சு?
.
பிரச்சனை பயிற்சி கொடுத்தவரின் போதாமையா? அல்லது எடுத்தவரின் இயலாமையா?
.
அதுவுமல்லது அந்த யோகா பயிற்சிக்கான சக்தி….
Expiry Date and Time….
எல்லாம் வெறும் நாற்பத்தி எட்டு மணி நேரம் மட்டும்தானா?
.
இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள்.
.
ஆனால் எல்லாவற்றைவிடவும் பெருத்த சந்தேகம் ஒன்று உண்டு…..
.
பயிற்சி முடிந்து சிவக்கொழுந்துவுக்குக் கிடைத்த மாதிரி….
.
பயிற்சியின்போதே ஆசிரமக்காரர்களுக்கும் ”ஏதாவது” கிடைத்ததா என்பதே அது.
.
ஏன்னா….. அடிச்ச அடியப் பாத்து பொறிகலங்கிப்போய்….
”ஒருத்தருக்கா கொடுத்தான்….MGR1
இல்லை ”அவருக்குமா” கொடுத்தான்….?”ன்னு அந்தப் பாட்டே எனக்கு இப்ப….தாறுமாறாத்தான் கேக்குது……
.
.
(தெருவோரக் குறிப்புகள் – தின செய்தி நாளிதழ்)

”முந்திரிக்காட்டு நட்சத்திரம்”….

BOOK-Muthuvel
பேக்கரி.. பெட்டிக்கடை… தியேட்டர் என நகரத்தில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் எனக்கு கிராமங்களைப் பற்றி ஒரு புண்ணாக்கும் தெரியாது.
.
தமிழ் சினிமா புண்ணியத்தில் ஏதோ கொஞ்சம் தெரிந்து கொண்டதோடு சரி. அதுவும் வயசுக்கு வந்ததுக்கு குடிசை கட்டறது… இந்த நவீன யுகத்திலும் அக்கா புள்ளையக் கட்டிக்கிறதுக்கு ரெட்டைக் கால்ல நிற்கிறது… ஒடுங்குன சொம்பு…. ஒத்த ஆலமரம்…. என இப்படித்தான் பரிச்சயம்.
.
.
ஆனால்….
அணில் கடித்த பனங்காய்கள்…
கிச்சிலி மரங்கள்….
குழந்தை பிறந்த மூன்றாவது நாள் ஊற்றும் கொடிக்கள்ளி…
முசு முசுக்கைத் தழைகள்…. என அப்பட்டமான கிராமத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறார் முத்துவேல். சினிமாவில் அல்ல. இவர் எழுதியுள்ள ”முந்திரிக்காட்டு நட்சத்திரம்” என்கிற கவிதை நூலில்.
.
கிராமத்துக்கும் நகரத்துக்குமாய் இழுபட்டுக் கொண்டிருக்கும் அச்சு அசலான எளிய மனிதர்களைப் பற்றி…. எளிய வரிகளில்….. கவிதைகளாக்கித் தந்திருக்கிறார்.
.
மரக்காணம் பக்கத்திலுள்ள ஒரு குக் குக் குக் குக் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் இந்த இளைஞனிடம் பாசாங்குகள் அற்ற எளிய வாழ்க்கை பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இதற்கு மேலே சொல்லிகிட்டே போனா சொதப்புவேன் நான். அதனால்…. நான் மிக நேசிக்கும் எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்தக் கவிதை நூலைப் பற்றி வார்த்துள்ள வார்த்தைகளையே உங்களுக்குத் தந்து விடுகிறேன்.
.
“தான் வாழ்ந்த அடித்தட்டு வாழ்க்கையை, தன்னைச் சுற்றியிருக்கிற அடித்தட்டு மனிதர்களை ஒளிவு மறைவின்றியும், அதிகபட்ச நேர்மையுடனும் எழுதுகிறார் முத்துவேல்.
அப்பாவின் துரோகத்தையும், அம்மாவின் காதலையும், ஆண்களின் திருட்டுத்தனத்தையும், பெண்களின் ஏமாளித்தனத்தையும், வறுமையையும், துன்பத்தையும் சொல்ல மனத்துணிவு வேண்டும். இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற தெளிவிலிருந்து எழுவது அத்துணிவு.”
.
இதைவிடவா நான் ”நச்” ன்னு சொல்லீரப் போறேன்?
”ஆண்டுகள் பல கடந்தாலும் காதலியின் நினைவைச் சுமந்து நிற்கும் பென்சில் மரம்…”

”ஊருக்கே உதவினாலும் தன் குடிசைக்குப் பட்டா வாங்கி வைக்காத தகப்பன்….”

என சிலாகிக்க ஏராளம் இருக்கிறது இக்கவிதை நூலில்.
அதில் இரண்டே இரண்டைச் சொல்லி உங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆகப் போறேன்.
.
தனது கிராமத்துக்குப் போன பொழுதொன்றில் செருப்பு பிய்ந்துவிட அப்பா விட்டுச் சென்ற செருப்பை மாட்டி அனுப்புகிறார்கள் மகளும் மருமகனும்… அதற்கு ஊடாக எழும் தந்தையின் நினைவுகளை….

“நகரம் திரும்பி ஓய்ந்து
புதுச்செருப்பு வாங்கிய நாளில்
அப்பாவின் செருப்பிலிருந்த
முட்களையெல்லாம்
பிடுங்கியெடுத்துப்
போட மனமின்றி
பொட்டலாமாய் மடித்து வைத்தேன்.

அப்பாவின் கால்பட்ட செருப்பையும்
மண்ணில் முளைத்த முள்ளையும்
எப்படி வீசுவேன்
எங்கோ ஓர் இடத்தில்?”

இதைப்படித்த போது எனக்கு ஏனோ என் அப்பா விட்டுச் சென்ற பழைய ஷேவிங் செட்டும்…. கடைசியாய் போட்ட கட்டம் போட்ட சட்டையும் நினைவுக்கு வந்தது.

அம்மாவே நண்பனாயும் வாய்ப்பது வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பேறு. அதையே முத்துவேலின் வரிகளில் சொல்வதானால்…..

“தன் கல்யாணத்தன்று
அவளைக் காதலித்தவன்
புளியமரத்தில்
தூக்குப் போட்டுக்கொண்டதை
சொல்லியவள்
கண்களை
அந்தப் பக்கமாய்த் திருப்பி
துடைத்துக் கொண்டாள்.

நீயும் அவரைக் காதலித்தாயா என்று
கடைசிவரை
நான் கேட்கவே இல்லை.”

இதைப்படித்தபோது…..
நேற்றைய காதலிகள்தான் இன்றைய அம்மாக்கள் என்கிற எதார்த்தம் நம்மில் எத்தனை பேருக்குப் புரிந்திருக்கிறது இங்கு? என்றுதான் எண்ணத் தோன்றியது.
.
சொல்லிக் கொண்டே போக இப்படி ஏராளம் இருக்கிறது… எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் நீங்கள் அப்புறம் புத்தகம் வாங்காமல் அல்வா குடுத்துருவீங்க…
.
அதுனால…..
புத்தகம் வாங்கறதுக்கு போனைப் போடுங்க புண்ணியவான்களா இந்த எண்ணுக்கு : 98411 46993.

(தெருவோரக் குறிப்புகள் 1-3)