மக்கள் எனப்படுவது

தொழிலாளர்கள் போராட்டமோ…
ஆசிரியர்கள் போராட்டமோ…
எழும்போதெல்லாம் எம்.ஜி.ஆர். சொல்வார்:
.
“மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.”
.
அதாவது 1977 ல் ஆட்சிக்கு வந்த பின்பு
.

விவசாயிகள் போராட்டமோ…
மாணவர்கள் போராட்டமோ…
எழும்போதெல்லாம் கருணாநிதி சொல்வார்:
.
“இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்.”
.
அதாவது 1969 ல் ஆட்சிக்கு வந்த பின்பு
.

நெசவாளிகள் போராட்டமோ…
சாலைப் பணியாளர்கள் போராட்டமோ…
எழும்போதெல்லாம் ஜெயலலிதா சொல்வார்:
.
“எதிர்க்கட்சிகளது தூண்டுதலை சந்திப்போம்”
.
அதாவது 1991 ல் ஆட்சிக்கு வந்த பின்பு.
.

அதற்காக ராஜகோபாலாச்சாரியாரோ –
பக்தவச்சலமோ
சவால் விடாதவர்களோ..
விடத் தெரியாதவர்களோ அல்ல.
.
அவர்களும் செய்தார்கள் அதை.
.

ஆக இன்றைய நொடிவரை எனக்குப்
புரியாத புதிர் ஒன்றே ஒன்றுதான்.
.
அது: மக்கள் எனப்படுவது யார்…?
.
மொத்தத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களது
போராட்டமும் முடிவுக்கு வந்து விட்டது.
அவர்களது போராட்டம் மட்டுமில்லை…
நெசவாளிகள்… விவசாயிகள்…
போக்குவரத்துத் தொழிலாளர்கள்… சாலைப் பணியாளர்கள் …
என சகலரது போராட்டமும்தான்.
.
எது ஆளுகிறது…?
எது ஆதரிக்கிறது…? என
எதுவும் புரிபடாத நிலையில் உழைக்கும் உலகம்.
.
அதுசரி…
ஏனிந்தப் போராட்டங்கள் அனைத்துமே
ஏறக்குறைய நீர்த்துப் போயின?
.
விவசாயிகள் போராட்டமா…?
மருத்துவர்களுக்கு கவலையில்லை.
.
நெசவாளிகள் போராட்டமா…?
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குப் பிரச்சனை இல்லை.
.
மாணவர்கள் போராட்டமா…?
அரசு ஊழியர்களுக்கு சம்பந்தமேயில்லை.
.
சற்றே சிந்தித்தால்…
ஒருவருடைய போராட்டம்
மற்றவருக்குத் தேவையற்ற ஒன்று.

ஆனால், தான் போராடும்போது மட்டும்
உலகமே தனக்குப் பின்னால் அணிதிரண்டு
நிற்க வேண்டும் என்கிற பேராசைக்கு
மட்டும் பஞ்சமில்லை.
.
பஞ்சப்படி உயர்வுக்காக தன் பின்னால்
விவசாயிகள்கூட அணி திரள வேண்டும் என
எண்ணுகிற அரசூழியன் விவசாயிகளது இலவச (?)
மின்சார பறிப்பிற்கு எதிராக தான் துணை நிற்க வேண்டும்
என ஒரு நொடிகூட சிந்தித்ததில்லை.
.
மருத்துவக் கல்லூரியின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக
அகிலமே அணிதிரள வேண்டும்
எனக் கனாக்காணுகிற ஒரு மருத்துவ மாணவன்..
அதிகபட்ச கல்விக் கட்டணங்களுக்குப் பலியாகும்
பிற மாணவரது போராட்டங்களில்
தன்னை இணைத்துக் கொள்வதில்லை.
.
எனக்கு ஜார்ஜ் குருஜிப் சொன்ன
ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
.
மலையில் வசித்த மந்திரவாதி ஒருவன்
தான் வைத்திருந்த ஆட்டு மந்தையில்
ஒன்றன் பின் ஒன்றாக சாப்பிட்டு வந்தபோது
சில ஆடுகளுக்கு மட்டும் சந்தேகம் ஏற்பட்டதாம்.
.
தமது கூட்டத்தில் ஒவ்வொரு நாளும்
சில ஆடுகள் காணாமல் போவதாக…
சந்தேகப்பட்ட ஆடுகளில் ஒன்றை அழைத்து
மந்திரவாதி சொன்னது இதுதான்;
.
“உண்மையில் நீ ஒரு ஆடல்ல.
ஒரு சிங்கம்.
நான் சாப்பிடப்போவது ஆடுகளை மட்டும்தான்.
நீ தைரியமாக இரு”
.
அடுத்ததாக மற்றொரு ஆட்டை அழைத்து,
“நீ ஆடே கிடையாது அவர்கள்தான் ஆடுகள்.
சரியாகச் சொன்னால் நீ ஒரு புலி.
நான் கொல்லப் போவது ஆடுகளை மட்டும்…”
என இப்படி ஒவ்வொரு ஆட்டிற்கும்
ஒவ்வொரு விளக்கம் கொடுத்தானாம் அந்த மந்திரவாதி.
.
அந்த அப்பாவி ஆடுகள் ஒவ்வொன்றும்
தன்னை சிங்கமாகவும், புலியாகவும், கரடியாகவும்
கற்பிதம் செய்து கொண்டிருந்த வேளைகளில்
தனது கூட்டத்தில் இருந்தவர்கள்
ஒன்றன் பின் ஒன்றாக காணாமல் போனதை
உணரவேயில்லை.
.
மொத்தத்தில் அவை அனைத்துமே
அந்த மந்திரவாதியின் பசிக்கு இரையானதுதான்
அவர்களது அறியாமைக்குக் கிடைத்த விலை.
.
(விலை கிடக்கட்டும்…
இக்கதையின் மூலமாக தாங்கள் சொல்ல வரும் நீதி…?
என நீங்கள் முழங்கையை மடக்குவது புரிகிறது…

ஆடோ.. நாடோ… நரிகளிடம் நாட்டாமைக்குப் போனால்
கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்
என்பதைப் புரிந்து கொள்வது புத்திசாலித்தனமானது…
போதுமா சாமி!)
.
இதற்கும் இன்றைக்கு நடக்கிற
ஒவ்வொரு பிரிவினரது போராட்டங்களுக்கும்
எந்தவொரு வித்தியாசமும் புலப்படவில்லை எனக்கு.
.
ஏனெனில் உலகில் மக்கள் என்று எவரும் தனியாக இல்லை.
.
ஒரு மூதாட்டி ஒரு விவசாயினுடைய மனைவியாக இருப்பார்.
.
ஒரு முதியவர் ஒரு நெசவாளியினது கணவராக இருப்பார்.
.
இது எதுவும் இல்லாது இருப்பவர்…
பூமிக்குள் “பத்திரமாக” படுத்துறங்குபவராக இருப்பார்.
.
முதுமைக்குக்கூட ஓய்வையும்… நிம்மதியையும்,
நிம்மதியான சாவையும்கூட தந்துவிடாத
“மகத்தான” சமூக அமைப்பு நம்முடையது.
.
ஆக…
‘மக்களுக்குத் துன்பம்…’
‘மக்களுக்குப் பிரச்சனை…’
‘மக்கள் கவனித்துக் கொள்வார்கள்…’
என்றே வருகின்ற ஒவ்வொரு அரசுகளும் முழங்குகின்றனவே…
.
ஆனால்……..
.
தொழிலாளர்கள்…
விவசாயிகள்…
ஆசிரியர்கள்…
மாணவர்கள்…
நெசவாளிகள்…
உதிரிப் பாட்டாளிகள்.. என
இவர்களையும் தாண்டி
வேற்று கிரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
‘மக்கள்’ எனத் தனியாக
வேறு எவரேனும் உளரோ…?
.
நீங்களாவது கொஞ்சம் உளறுங்களேன்..
.
.
(“புலம்பல் பக்கம்” – தீராநதி – 2000.)

புதுப் புது “அர்த்தங்கள்”…

பத்தாம் தேதி இரவு பத்தரை மணிவரைக்கும் எழுத

எண்ணியிருந்த கட்டுரை வேறு.

அதற்கான ‘தயாரிப்புகள்’ வேறு.

ஆனால் எதிரேயிருந்த நண்பன் கேட்ட கேள்வியில்

எழுத இருந்த கட்டுரையே திசைமாறிப் போனது.

தீவிரவாதிகள் – அகிம்சாவாதிகள் – தியாகிகள் – துரோகிகள் –

என்கிறார்களே அது யார் யார்? என்றான் அப்பாவியாக.

கொஞ்சம் யோசித்தால் தலை சுற்றுகிறது நமக்கு.

இந்தக் குழப்பம் குருதிப்புனல் எடுத்த கமலகாசனுக்கே..

மன்னிக்க…கமல் ஹாஸனுக்கே இருந்தால்

இந்தச் சிறுவனுக்கு எப்படி இல்லாது போகும்?

உண்மைதான்…

தீவிரவாதிகள் யார்?

அடிப்படைவாதிகள் யார்?

போராளிகள் யார்?

பயங்கரவாதிகள் யார்?

இவர்களுக்குள் என்ன அடிப்படை வேறுபாடு?

அதைக் காட்டிலும் இவர்கள் எதன் பொருட்டு…?

ஏன் உருவாகிறார்கள் என்பது அடிப்படையிலும் அடிப்படையான கேள்வி.

நமக்கு எப்போதுமே ‘விளைவுகள்’தானே முக்கியம்…

அடிப்படைக் காரணங்கள் ஆயிரம் இருந்தாலென்ன?

வரலாற்று ரீதியாகப் பார்த்தால்

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அந்நியரோடு போர் தொடுத்த

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ‘தீவிரவாதி’.

ஆனால் இந்திய கப்பற்படை எழுச்சியை எதிர்த்த

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி ‘அகிம்சாவாதி’.

பாரத் நவ ஜவான் சபாவை கட்டமைத்து

அப்பாவிகள் யாரும் சாகாது குண்டு வீசிய பகத்சிங் ‘அதி பயங்கரவாதி’.

பகத்சிங்கை தூக்கிலேற்றிய ஆங்கிலேய அரசு ‘மிதவாதி’.

ஆகஸ்டுப் ‘புரட்சி’யில் தந்திக் கம்பங்களைச் சாய்த்து

தபாலாபீசுகளைக் கொளுத்திய காங்கிரஸ்காரர்கள்

பிரிட்டிஷ் கணக்குப்படி பார்த்தால் ‘பயங்கரவாதிகள்’.

சுதந்திர இந்தியாவின் கணக்குப்படி தேசத் தியாகிகள்

இந்தக் குழப்பம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களூக்கு

மட்டும்தான் என்றில்லை,

தத்துவப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கும் நீடிக்கத்தான் செய்தது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம முறையை

ஏற்றுக்கொண்ட எம்.கே.காந்தி அகிம்சாவாதியாகவும்…

சாதீய அமைப்பையே தகர்த்தெறிய வேண்டும் என்று போராடிய

பி.ஆர்.அம்பேத்கர் தீவிரவாதியாகவும் சித்தரிக்கப் பட்டது வரலாற்றுச் சோகம்.

எண்ணக் குதிரையை எண்பதுகளில் நிறுத்தினால்

ஸ்வீடனிலிருந்து ‘அதி நவீன’ ஆயுதங்கள் வாங்கிக் குவித்த

ராஜீவ்காந்தி ‘தேச பக்தர்’.

அந்த பணத்தில் ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகளுக்கு

ஓடாவது போட்டிருக்கலாமே என்றவர்கள் ‘தேசத்துரோகிகள்’.

சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் ‘முற்போக்கு’க் கணக்குப்படி…

திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சொன்னவுடன் வந்தால் போராளிகள்.

பிற்பாடு வந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ‘தீவிரவாதிகள்’.

‘அறவழியில்’ கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினரிடமிருந்து

இந்திராவைக் காப்பாற்றிய நொடிவரையில்

காங்கிரஸ்காரர்களுக்கு நெடுமாறன் ஒரு தேசபக்தர்.

பிற்பாடு ‘தேசத்துரோகி’.

நல்லவேளையாக இவர்கள் ‘இந்திராவைக் காப்பாற்றியதே

மிகப்பெரிய தேசத்துரோகம்’ என்று சொல்லாமல் விட்டார்களே

என்கிற அளவில் மற்றவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.

சர்வதேச அளவிலாகட்டும் – இந்திய அளவிளாகட்டும் –

அவரவர்களுக்கென்று தனித்தனி அகராதிகள்.

அவைகளுக்கே உரித்தான புதுப் புது அர்த்தங்கள்

மத சம்பந்தமான விஷயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாபர் மசூதியை இடிப்பவன் ‘மிதவாதி’.

இடிப்பைக் கண்டிப்பவன் ‘முஸ்லிம் தீவிரவாதி’…

(உலகளாவிய ‘பார்வையில்’

இந்து – கிருஸ்துவ – யூதத் தீவிரவாதிகள் என்று யாருமே கிடையாது

என்பது சுவாரசியமான விஷயம்.)

பாலஸ்தீனியர்களை சொந்த மண்ணை விட்டு

விரட்டியடிப்பது ‘அகிம்சாவாதம்’.

நாடற்றவர்கள் அவலக் குரல் எழுப்புவது ‘பயங்கரவாதம்’.

மான்கடா படைத் தாக்குதலில் விசாரிக்கப்பட்டபோது

பிடல் காஸ்ட்ரோ ஒரு ‘பயங்கரவாதி’.

மக்கள் அலையில் பாடிஸ்டா மூழ்கடிக்கப்பட்டபோது

பிடல் காஸ்ட்ரோ புரட்சியின் நாயகன்.

தங்கத் தமிழ் மண்ணைப் பொறுத்தவரையும் ஒரு அகராதி உண்டு.

அதுதான் தமிழில் கல்வியும் – வழிபாடும் – குடமுழுக்கும் – ஒதுக்கப்பட்டோருக்கு உரிமையும்

வேண்டும் என்பவர்கள் ‘தமிழ்த் தீவிரவாதிகள்’.

“தாழ்த்தப்பட்ட மக்கள் பியூட்டி பார்லருக்குப் போய்

‘பேசியல்’ செய்து கொண்டு…

‘ஹெட்ஸ் அண்ட் ஷோல்டர்ஸ்’ ஷாம்ப்போடு

‘லக்ஸ்’ போட்டுக் குளித்து…

யார்ட்லி செண்ட்டோடுதான் கோயிலுக்குள் வரவேண்டும்” என்கிற

மடச் சாமியார் ‘மிதவாதி’.

(தேசம் தழுவிய பார்வையில்

மலையாள – கன்னட – குஜராத்தி தீவிரவாதிகள்

என்று யாருமே கிடையாது என்பதும் சுவாரசியமான விஷயம்தான்.)

எது எவ்விதமோ…

ஆனால் காலச்சக்கரம் மட்டும் சுழலாமல் நிற்பதில்லை.

வரலாறுகள் மாறும்போது…

இன்றைய “துரோகிகள்”….

நாளைய தியாகிகள்.

ஆனால்….

இன்றைய “தியாகிகள்….?

நான் தேசபக்தன் அல்ல…

“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்…? கொண்டாட மாட்டீர்களா…?” என்றது தொலைபேசிக்குரல்.
அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.

எதற்காகக் கொண்டாட வேண்டும்…? என்றேன்.

“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை…” என்றார்.

ஜெயித்தால் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை.
தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.
இரண்டுமே எனது வேலையில்லை…” என்றேன்

“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது…’ என்று வாழ்த்தி இருக்கிறாரே…?”

அப்படியானால்…
ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’
என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்…? என்றேன்.

“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்…
இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை…”என்று
தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.

இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.

“என்ன பழமொழி…?”

“மகன் செத்தாலும் சரி… மருமக தாலி அறுக்கணும்…”

“ச்சே… தேசபக்தியே கிடையாதா…?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.

நிச்சயமாகக் கிடையாது.
ஆனால்… தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.
எம்மைப் போலவே பசியிலும்… பட்டினியிலும் உயிரை விடுகிற…
தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்… தீப்பெட்டிகளையும்
வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற…
நிலங்களை இழந்து…
வாழ்க்கையை இழந்து…
விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக
வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற…
சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு…
பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு…
இலங்கை மக்கள் மீது காதல் உண்டு…
நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு…
இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற
ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.

ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல்,
இந்தியாதான் ஜெயிக்கணும்… பாகிஸ்தான் தோற்கணும்… என்கிற
ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்…
மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.
அப்படி பார்த்தால் ஜாக்கிசான் ,அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்…என்றேன்.

போனை வைத்து விட்டார் நண்பர்.

இந்த நவீன நீரோக்களை நினைத்தால்
எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது.
அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்
வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற
அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்…?

இந்துஸ்தானோ…
பாகிஸ்தானோ…
இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.
அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.

மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ…
விவசாயக் கூலியோ…
மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.

வரப்பில் நிற்கும் பண்ணையார்…’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க…?’ என்பான்.
கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்….”சாமிக்கு இது எத்தனாவது வருசம்…?” என்பான்.
எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.

ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.
அப்படிதான் கிரிக்கெட்டும்.

மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.

“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க…” என்று
கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.

ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே… 
“…யோளி… அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே…?”
என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி….

அதுவரை டீக்கடை தொடங்கி
பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும்
கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன…?

அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன…?

சூப்பர்தான் போங்கள்.

ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே
இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.

அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள்
பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.

அது உட்சாதிச் சண்டையாக…
சாதிச் சண்டையாக …
மதச் சண்டையாக…
மாநிலச் சண்டையாக…
உருவெடுத்து தற்காலிகமாக
இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.

அப்புறமென்ன…
வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.

இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட
பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்…?
அதுவும் வரும்.

ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.

இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்

நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக்
கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்…

பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்…

உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு
கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்…

ஆனால் தெருக்களிலும்…
தேநீர்க் கடைகளிலும்…
திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.
என்னே தேசபக்தி…?

பாவம்…
இவர்கள் விளையாட்டை
போராகப் பார்க்கிறார்கள்
போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்
தண்டனை நம்மைப் போன்ற
‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது…?
 

திரை – புலம்பல் பக்கம்

thirai1.jpg திரை

Perfection is Death – ஓஷோ.

அப்போது எனக்குத் தெரியாது,இன்னொரு சக உயிரை இழிவுபடுத்துகிறேன் என்பது… என்னைச் சுற்றியிருந்த சகல சூழலும் அதை நியாயமெனவே கூறின. அத்தகைய பாடல்களை அவர்களை நோக்கிப் பாடுவதற்காக அவமானப்பட்டதில்லை நான். அவர்கள் அனைவருமே அவமானப்படுத்துதல்களுக்கும்,இழிவுகளுக்கும் பொருத்தமானவர்கள்தான் என்கிற வகையில் அமைதி காத்தது சுற்றுப்புறம்.

கல்லூரி நாட்களில் அவர்களை போலவே பேசுவது…

‘பொழுதோட கோழி கூவுற வேளை’ என்று பாடுவது…

சில அடிகள் நகர்ந்ததும் ‘ஒம்போது’ என்று குரல் கொடுப்பது…

ஆனால் நாய்களோடு மல்லுக்கு நிற்பதை எப்போதும் விரும்பியதில்லை அந்த மனிதர்கள். உடல் ரீதியாக உருக்குலைந்து போன அந்த மனிதர்களைக் கண்ணியக்குறைவாகவும், மனித நாகரீகமற்றும் நடத்த என்னைத் தூண்டியது எது என எண்ணிப் பார்க்கிறேன். நான் பார்த்த திரைப்படங்கள்… படித்த பத்திரிகைகள்… பழகிய ‘மனிதர்கள்’…என எல்லாவற்றுக்குள்ளும் அந்தக்கேவலம் ஒளிந்து கொண்டிருந்தது.

இவற்றில் முதலாவதாக முன் நிற்பது சினிமாதான் . அது மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை மாறவேயில்லை. பழைய பாலாபிஷேகம்,ஒரு தலை ராகத்திலிருந்து நேற்றைய விவேக் படம் வரைக்கும் இந்த ஜென்மங்கள் திருந்தவேயில்லை. மனிதத் திரளில் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் அடுத்ததாய் மூன்றாவது பாலான அவர்கள் குறித்து அக்கறை இல்லாவிடினும் அவமானப்படுத்தாமலாவது இருக்கலாம் இவர்கள்.

‘மதம் குறித்தோ,சாதி குறித்தோ வசனங்கள் வந்துவிடக் கூடாது… ஆபாசக் காட்சிகள் இடம் பெற்றுவிடக் கூடாது…’ என்பதற்காகக் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கத்தரிக்கோலுடன் சுற்றுவதாக நம்பப்படும் தணிக்கைக் குழு,அலிகள் இடம்பெறும் காட்சிகளின் போது மட்டும் ஒட்டுமொத்தமாய்த் தற்கொலை செய்து கொள்கிறது.

அநேக விஷயங்களில் மாறுபாடுகள் இருப்பினும், அலிகளை மனிதநேயம் மிக்கவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் காட்டியிருந்தார் மணிரத்னம் தனது பம்பாயில்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் நாடெங்கும் நடந்த வேளையில்… ‘ஆசியாவின் அறிவு ஜீவி’யான ஒரு ‘பத்திரிக்கையாளர்’ திருவாய் மலர்ந்தார்… ‘கொஞ்சம் விட்டால் அலிகளுக்கும்கூட இட ஒதுக்கீடு கேட்பீர்கள் போலிருக்கிறதே?’ என்று. மிக புத்திசாலித்தனமாகக் கேட்பதாகக் கருதிக் கொண்டு கேணத்தனமாகக் கேட்ட கேள்வி அது என்பது இருக்கட்டும் ஒரு புறம். ஆனால்,உண்மையிலேயே இந்த அரசு அதிகாரத்தில் அலிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தே தீர வேண்டும் என்பதுதான் சரி. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்கு தள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு இவர்களுக்கும் அளிக்கப்பட்டேயாகவேண்டும் என்பதுதான் நியாயமானது. அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் மூன்றாம் பாலருக்கான ஒதுக்கீடு அளிப்பதுதான் நாமும் மனிதர்கள் என்பதை ஊருக்குச் சொல்லக் கிடைத்த ஒரே வாய்ப்பு.

மனித இனத்தின் மற்றொரு பிரிவினரான இவர்கள் ரேஷன் கார்டு தொடங்கி, எந்த விண்ணப்பப் படிவத்தையும் இட்டு நிரப்ப அனுமதி மறுக்கப்பட்டவர்கள். ஆண்பால்-பெண்பால் இவற்றுக்கு அடுத்தாக மூன்றாம் பால் என இடம் ஒதுக்கப்பட வேண்டும் விண்ணப்பப் படிவங்களில்.

அதிலும் படிவங்களுக்கு முன்னதாக நமது இதயங்களில்.

இந்த விஷயத்தில் தென்னகத்தை விடவும், வடக்கு ஓரளவு இம்மக்களைப் பண்போடு நடத்துவதாகவே தோன்றுகிறது எனக்கு. அவர்களது வீட்டு விருந்துகளில் பங்கேற்கச் செய்வதிலிருந்து, மாநகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுப்பது வரைக்கும் மூன்றாம் பாலரை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

மதத்தால் ஒடுக்கப்பட்டவர்கள்-நாடு கோருகிறார்கள்….

மொழியால் ஒடுக்கப்பட்டவர்கள்-நாடு கோருகிறார்கள்….

சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள்-மாநிலம் கோருகிறார்கள்….

ஆனால் இந்த மனிதர்கள் கோருவது நாடோ…

மாநிலமோ…

மாவட்டமோ அல்ல…

மனிதம்.

அலிகள் என்னும் மனிதர் குறித்து ‘நிறப்பிரிகை’ இதழ் முன்பொரு முறை தனது கவலையையும், அக்கறையையும் பதிவு செய்திருந்தது. அதிலொருவர் இப்படிச் சொல்லியிருந்தார். ‘வாழ்க்கைல நாங்க காண்ற சுகமே ஒண்ணே ஒண்ணுதான். நாங்க ஆடறோம், பாடறோம், எவ்வளவோ பேரு எங்களை ரசிக்கிறாங்க. ஒரு தியேட்டர்ல படம் பார்க்கப் போறாங்க. ஃபிலிம் ஓடற வரைக்கும் படத்தப் பார்க்குறாங்க. படம் ஓடி முடிந்த பிறகு வெறும் திரையை யாராவது பார்க்குறாங்களா? அந்தத் திரைதான் நாங்க.”

திரை.

ஆம்.

‘வெறும் திரை’.

ஆனால் அந்த வெறும் திரையையும் அர்த்தமுள்ளதாக்க முடியும்…

நாம் மனதுவைத்தால்……

தலையைச் சீவினா தப்பா… ?

சின்ன வயதில் சும்மா இருக்காமல் ஒரு பெண்ணுக்கு லெட்டர் கொடுக்கப் போக…அவளது அண்ணன்கள் ‘கவனித்த’ கவனிப்பில் கடுதாசி எழுதுவதையே கை விட வேண்டி வந்தது. அதன் பின்னர் ஒரு நாள் இரவு திடீரென கனவில் தமிழ்த்தாய் தோன்றி “மகனே பர்சனல் கடிதங்கள் கிடக்கட்டும்…நீ ஏன் பகிரங்கக் கடிதங்க எழுதக் கூடாது? உனக்காக இந்தத் தமிழ் சமூகமே ஏங்கித் தவிக்கிறது. வா…வந்து இலக்கியச்’சேவை’யோ…உப்புமாவோ செய்…” என வேண்டிக் கொண்டதன் விளைவுதான் விளைவுதான் நான் பத்திரிகை உல்கையே ‘ரட்சிக்க’ப் பயணப்பட்டது.

ஆனால் உண்மையில்…

‘பகிரங்கக் கடிதங்கள்’ என்றாலேயே உடனே பேனாவைத் திறந்துவிடுகிற நான், பர்சனல் கடிதங்கள் விஷயத்தில் மட்டும் படு சோம்பேறி. இந்தக் கடுதாசி எழுதுகிற ‘நோய்’ எப்பொழுது என்னைத் தொற்றியது என்பதை யோசித்தால் எண்பதுகளின் தொடக்கம் என்றே நினைவு. பிறருக்கு நான் எழுதியவற்றை விடவும் சுவாரசியமானவை மற்றவர்கள் எழுதியவைதான். அதில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய
‘மான்விழிக்குக் கடிதங்கள்’, ‘குந்தவிக்குக் கடிதங்கள்’ மறக்க முடியாதவை. எவ்வளவோ சிக்கலான விஷயங்களைக் கூட எளிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்ட தொகுப்புகள் அவை. ஈழப் போராட்டம் தமிழகத்து வெகுஜன மக்களையும் தட்டி எழுப்பிய வேளையில் வெளிவந்தவை அந்த நூல்கள்.

எனக்குத் தெரிந்து ஒரு கடிதமே ஒரு கட்சியை இரு கட்சியாக்கிய அதிசயமும் இந்தத் தமிழ் மண்ணில் நடந்தேறியிருக்கிறது.
அதுதான் ‘உளவுத் துறை’ தி.மு.க.வின் நிரந்தரத் தலைவர் கலைஞருக்கு அனுப்பிய கடிதம். பாவம் வை.கோ.

எண்பதுகளின் இறுதிப் பகுதியில் ராஜீவ் – ஜெயவர்த்தனே என்கிற இரு சுயநலமிகள் தங்களது சொந்த நலனுக்காக ஈழத் தமிழர் வாழ்வின் மீது ‘ஒப்பந்தம்’ என்கிற பேரிடியை இறக்கிய நேரம். அரசு ‘அள்ளி வழங்கிய’ அவமானமும் வேதனையும் தாங்காது, தங்களது நேசத்துக்குரிய தமிழக மக்களைப் பிரிந்து கப்பலேறும் முன் ‘பாலம்’ இதழுக்கு கி.பி.அரவிந்தன் எழுதிக் கொடுத்துவிட்டுப் போன “எங்கள் நினைவுகளை உங்களிடம் கையளித்துள்ளோம்” என்கிற அக்கடிதம் எம்மை வாய்விட்டு அழவைத்த ஒன்று.
வெள்ளையனுக்கு எதிராகக் கப்பலையே விட்ட வ.உ.சி. தனது வாரிசுக்கு வேலை ஏற்பாடு பண்னச் சொல்லி பெரியாருக்கு எழுதிய கடிதம் இன்னமும் பலர் அறியாதது.

சமீபத்தில் கூட ஒரு சுவரொட்டியைப் பார்த்து தலையே சுற்றிவிட்டது.
“அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…நாங்க சிரிச்சுப் பேசுனா லவ்வூகிறீங்க…தம் அடிச்சா தப்பா? தண்ணி அடிச்சா தப்பா? தலையச் சீவுனா தப்பா?” என்று சட்டமன்ற பாணியில் சரமாரியாய்த் தத்துபித்தென்று கேள்விகள் கேட்டு ஒரு சுவரொட்டி. ‘துள்ளுவதோ இளமை’ படத்துக்காக. சுவரொட்டியில் ஒரு கடிதமே எழுதிவிட்டார்கள் இவர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஒரே நேரத்தில் ‘தணிக்கை செய்யப்பட்டது’ என்கிற முத்திரையோடு ஒரு இந்து தீவிரவாத இயக்க நபரிடமிருந்தும், அவர்களால் தீவிரவாதத்தை நோக்கித் தள்ளப்பட்ட இசுலாமிய நண்பரிடமிருந்தும் வந்த விமர்சனக் கடிதங்கள் என்னை ஆச்சர்யத்தில் அமிழ்த்திய ஒன்று. எத்தனை கடிதங்களை வாசித்தாலும்…எத்தனையோ கடிதங்களை எழுதினாலும்…இன்றைக்கும் என்னால் மறக்க முடியாத கடிதம் ஒன்று உண்டு.

அநேகமாக அது அண்டன் செக்காவ் என்பதாகத்தான் ஞாபகம்.

அந்தக் கதை இதுதான்:

தனது பேரனைப் பாதுகாக்க வழியின்றி நகரத்திலுள்ள ஒரு பணக்கார வீடொன்றில் கொண்டுபோய்ச் சேர்க்கிறார் தாத்தா. அவர் தனது பேரனை விட்டுவிட்டு ஊர் திரும்பிய ஓரிரு நாட்களிலேயே சித்ரவதை செய்ய ஆரம்பிக்கிறது அப்பணக்காரக் குடும்பம். பல நாள் அடி, உதை, பட்டினிகளுக்குப் பிற்பாடு….எப்படியோ அவர்களது கண்களுக்குத் தப்பித்து கடிதம் ஒன்றினை எழுதுகிறான் அப்பேரன்:

“அன்புள்ள தாத்தாவுக்கு,
நீ விட்டுவிட்டுப் போன சில நாட்களிலேயே இங்குள்ளவர்கள் மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.
அவர்கள் தினந்தோறும் அடிப்பதையும், சூடு வைப்பதையும் என்னால் தாங்க முடியவில்லை.

நான் இன்றோடு சாப்பிட்டு மூன்று நாட்களாச்சு. எப்படியாவது உடனே வந்து
என்னை நமது கிராமத்துக்கே கூட்டிக் கொண்டு போய் விடு. மிக அவசரம்.”

என்று எழுதிவிட்டு பின்புறம் திருப்பித் தனது தாத்தாவின் முகவரியை எழுதுகிறான் அப்பேரன். இப்படியாக…..

பெறுநர்:
தாத்தா,
கிராமம்.

அவ்வளவுதான்.

இதுதான் உலகெங்கிலுமுள்ள பேரன்கள் தங்கள் துயரங்களைச் சுமந்தபடி தமது தாத்தாக்களுக்கு எழுதிய கடிதம்.