எழுதுபவனெல்லாம் எழுத்தாளனல்ல…


முதல் சந்திப்போடு முடிந்து விடுகிறது எங்கள் எழுத்தாள வாசக உறவு.
பிற்பாடு அவர்கள் தோழர்கள்தான் எனக்கு.
.
எனது எழுத்து அடுத்த கட்ட பரிமாணத்தை நோக்கி
நகர்கிறதென்றால் அது அவர்களது தோழமையால்தான் சாத்தியப்படுகிறது.
.
எழுத்தாளன் என்பவன் மலைமேல் அமர்ந்து
பிரசங்கம் செய்கிறவனாகவும்
வாசகர்கள் அதை வாயைப்பிளந்து கொண்டு
கேட்பவர்களாகவும் இருக்கிற “உறவு”முறை எங்களுக்குள் இல்லை.
.
என் நண்பர் ராஜா கடைகடையாக புத்தகம் போடுபவர்.
ஏறத்தாள இருபதாண்டுகால நட்பு.
தொண்ணூறுகளின் மத்தியில்
நான் தொடர் எழுதிக் கொண்டிருந்த இதழை
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி
விற்பனைக்குப் போடும் இளைஞராக எனக்கு அறிமுகம்.
கட்டுரை வந்தவுடன் அவரிடம் இருந்து போன் வரும்.
.
”என்னண்ணா… இந்த வாரம் சொதப்பீட்டிங்க.
தினத்தந்திக்கு எழுதறமாதிரி எழுதுங்க.
தினமணிக்கு எழுதறமாதிரி எழுதாதீங்க.
அப்புறம் நாங்க எல்லாம் எப்படிப் படிக்கிறது?” என்பார்.
.
அப்பொழுதே புரிந்துவிடும் நாம் ஏதோ
மேதாவித்தனத்தைக் காட்டுவதுபோல்
எழுதியிருக்கிறோம் என்று.
மறுவாரம் திருத்திக் கொள்வேன்.
.
அடிப்படையில் எழுத்தாளனில்லை நான்.
சமூகத்திற்காக பங்காற்ற வேண்டிய பணிகளை
செய்துமுடித்தது போக தேவைப்பட்டால் எழுதுபவன்.
எழுதுவது மட்டுமே எனது வேலையுமல்ல.
.
அது ஈழமாகட்டும்…
கூடங்குள அணுமின் நிலையமாகட்டும்…
சமூக நீதிக்கான சமாச்சாரங்களாகட்டும்
முதலில் அதற்கான பணி. பின்னரே எழுத்து.

எம்மைப் பொறுத்தவரை எழுத்தாளர் வாசகர் உறவென்பது
சமூகப்பணிகளைப் பகிர்ந்து கொள்வதில் அடங்கியிருக்கிறது.
வெறும் எழுத்தை சிலாகிப்பதில் அல்ல.
.
எனது எழுத்தை செதுக்குபவர்கள் செப்பனிடுபவர்கள்
எல்லாம் அவர்கள்தான்.
சொதப்புவதில் மட்டும்தான் எனது பங்கிருக்கிறது.
.
ஆக நான் எழுத்தாளனாக அவதாரம் எடுக்கப்போகிறேன்
என்று வானில் எந்த வால் நட்சத்திரமும் உதிக்கவில்லை.
முண்டாசு கட்டிய மூன்றுபேர் வந்து
எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி
”ஒரு அசகாய சூர எழுத்தாளன் பிறந்திருக்கிறான்” என்று சேதி சொல்லிப் போகவுமில்லை.
.
இயக்குநர் பாலச்சந்தருக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்
கோடம்பாக்கத்தின் எரிச்சலுக்கு இரையாயிற்று என்றால்
வைகோவுக்கு எழுதியதோ அவரிடம் இருந்து கடும் கண்டனத்தையும் தொண்டர்களிடம் இருந்து பெருங்கோபத்தையும் கொண்டுவந்து சேர்த்தது.
.
ஒரு திருமண வீட்டில் என்னைக் கண்ட மதிமுக வினர்
“எத்தனைக்கு விலை போனே?” என்றனர்.
.
“நானூறு ரூபாய்க்கு” என்றேன்.
.
ஆம் அதற்கு குமுதம் அனுப்பிய செக்கில் அவ்வளவுதான் குறிப்பிட்டிருந்தது.
.
நடிகர் சங்க கடனுக்காக தமிழக அரசு
தானமாகக் கொடுப்பதாக இருந்த
ஒருகோடி ரூபாயை தராமல் நிறுத்தியதற்கு
நான் எழுதிய “நடுத்தெருவுக்கு வந்துவிட்ட
பாட்டாளி தமிழ் நடிகர்களுக்கு” என்கிற கடிதமும்
ஒரு காரணம் என்றார்கள் எனது வாசிப்பாளர்கள்.
.
”ஒழுங்கா உங்க புத்தகத்தை சிறைக்கு
அனுப்பி வைக்கலேன்னா
அப்புறம் உங்களையும் கடத்த வேண்டி வரும்…” என்று
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில்
சிறையில் இருந்த ஏழுமலை நையாண்டியாக எழுதிய
கடிதத்தை நினைத்தால் இன்றைக்கும் சிரிப்பு வரும்.
.
அப்படிப்பட்ட உரிமை உள்ளவர்களாகத்தான்
என் எழுத்தை செதுக்குபவர்கள் இருக்கிறார்கள் இன்றைக்கும்.
.
அதன் சமீபத்திய உதாரணம்தான் விழுப்புரம் சுப்ரமணியம்.
ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர்.
புத்தகங்களை அனுப்பச் சொல்லி
பல கடிதங்கள் எழுதிச் சலித்த பிறகு
நாஞ்சில் நாடனிடம் எனது அலைபேசி எண்ணை வாங்கி
நேரடியாகவே தொடர்புக்கு வந்துவிட்டார்.
.
எனக்கோ எனது எந்தப் புத்தகத்தையும்
பாதுகாத்து வைக்கும் பொறுப்போ
புத்திசாலித்தனமோ கொஞ்சமும் கிடையாது.

வீட்டில் துணைவியோ அம்மாவோ ஒளித்து வைத்திருக்கிற
புத்தகத்தையும் லவட்டிக் கொண்டுபோய்
யாருக்காவது கொடுத்துவிடுவேன்.
அப்புறம் எங்கிருந்து அவருக்குக் கொடுக்க?
.
கடைசியில் கடுப்பாகிப்போய்
“இனி உன்னோட எந்தக் கர்மமும் எனக்கு வேண்டாம்.
உனக்கொரு கும்பிடு…
உன் புத்தகத்துக்கு ஒரு கும்புடு” கடுதாசி எழுதிவிட்டார் சுப்ரமணியம்.
.
இதை விலாவாரியாகச் சொல்லி
”யாராவது தருமம் பண்ணுங்க துரைகளா…” என
முகநூலில் புத்தகப் பிச்சை எடுக்க….
.
“விடுங்கண்ணே நாமளே எல்லா புக்கையும் ப்ரிண்ட் போட்டர்லாம்…”ன்னு
தம்பி இசாக் வந்து குதிக்க
ஆரம்பமாகியிருக்கிறது அடுத்த அத்தியாயம்.
.
ஆக முதல் வரியிலேயே சொன்னதைப் போல
எழுதுபவனெல்லாம் எழுத்தாளனுமல்ல.
வாசிப்பதனால் மட்டுமே அவர்கள் வெறும் வாசகருமல்ல.
.
எழுத்தாளன் – வாசகன் என்கிறபோது
அதில் ஏதோ ஒரு அந்நியத்தன்மை இருப்பதாகவே உணர்கிறேன்.
.
என்னைப் பொறுத்தவரை அது ஒரு வழிப்பாதை.
.
எம்முடையதோ தோழமை.
.
அது எழுத்தாளனை தேர்ந்த வாசகராகவும்….
வாசகரை நல்ல படைப்பாளியாகவும்
மாற்றும் வல்லமை கொண்டது அத் தோழமை.
.
.
(நன்றி : அந்திமழை ஜனவரி 2018)

Advertisements

ஆதாரம் இங்கே… பாலகுமார் எங்கே?

உச்சகட்ட இன அழிப்புப்போர் நடந்து முடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நீதியின் கண்கள் திறக்குமா? என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் எண்ணற்ற ஈழ மக்கள்.
.
அதிலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில்
முன்னர் ஈழப்புரட்சி அமைப்பின் தலைவராகவும் (ஈரோஸ்)….
பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளது
முக்கிய தலைவர்களில் ஒருவராகவும்
மாபெரும் பங்காற்றிய க.வே.பாலகுமார் கதி என்னவாயிற்று?
.
அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா
என்கிற கேள்விகளுக்கான பதில்
இன்னும் கிடைத்தபாடில்லை.
.
எளிமை என்றால் அதற்கு இன்னொரு பெயர் உண்டு.
அதுதான் க.வே.பாலகுமார்.
.
ஆர்ப்பரிக்காத அரசியல்…..
.
எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பெருந்தன்மை….
.
இந்தியப் பிரதமரையே முதல் நாள் சந்தித்துவிட்டு வந்தாலும்
மறுநாள் ஒரு ஓட்டை சைக்கிளில்
கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றிவரும் எளிமை…..
.
இதுதான் தோழர் பாலா.
.
எனக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பு ஏற்பட்டு ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது
என்பதெல்லாம் பிற்பாடு ஆறுதலாகக் கதைக்க
வேண்டிய சமாச்சாரங்கள்.
.
ஆனால்….
மிகச் சரியாக எட்டு வருடங்கள் முன்பு தனது மகன் சூரியதீபனுடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அவர் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாயின.
.
அவர் எங்கு கொண்டுசெல்லப்பட்டார்?
எந்த முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
.
சிங்கள அரசின் புனர்வாழ்வு அமைச்சரோ
அவர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டார்
என்று அடித்துச் சத்தியம் செய்தார்.
.
ஆனால் ஒரு புகைப்பட ஆதாரத்தினை வெளியிட்டு
பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் பிரிட்டிஷ்
பத்திரிகையாளர் பிரான்சிஸ் ஹாரிசன்.
.
அந்தப் படம்தான் பாலகுமார் தனது மகனுடன்
ராணுவம் சுற்றியிருக்க கையில் கட்டுடன்
முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படம்.
.
அவரோடு யோகி, கவிஞர் புதுவை ரத்தினதுரை ஆகியோர்
சரணடைந்திருந்தாலும் ஆதாரம் சிக்கியிருப்பது
இவர் ஒருவருடையதுதான்.
பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் படத்தோடு
எண்ணற்ற கேள்விகள் எழுப்பினாலும்
வாய் திறக்காமல் மெளனம் சாதிக்கிறது இலங்கை அரசு.
.
அதைவிட அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த
பஷீர் சேக்தாவூத் தனது அரசியல் ஆசான் பாலகுமாரையும்
அவரது மகனையும் கண்டுபிடித்து தருமாறும்
இதில் தனிப்பட்ட கவனத்தை செலுத்துப்படியும்
இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும்
மிக அண்மையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
.
நம்முன் உள்ள ஏக்கமெல்லாம்
மண்ணை மீட்க தம்மைத் தொலைத்துக் கொண்ட
பாலகுமாரும் சரணடைந்த மற்ற போராளிகளும்
எப்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள்?
என்பதுதான்.
.
உலகத்தின் மனசாட்சி தன் மெளனத்தைக் கலைக்குமா?

தினத்தந்தி…


கடைகோடித் தமிழனையும்
தமிழ் படிக்க வெச்சது
தந்திதான்னு சில பேர் சொல்லிக்கிறது உண்டு.
.
தமிழ் படிக்கிறதெல்லாம் இருக்கட்டும் ஒருபக்கம்.
.
ஆனா இங்கிலீஷ் ஒழுங்கா படிச்ச
ஒரு ஆள்கூடவா அங்க இல்ல…?
.
தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டதற்கு
இந்திய அரசு தனது ”ஆழ்ந்த கவலையத்” தெரிவிச்சா…..
.
அதை அப்படியே உல்டா பண்ணி்
“கடும் கண்டனமா” மாத்திப் போடுது.
.
.
ஏம்ப்பா Deeply Concerned க்கும்…..
Strongly Condemned க்கும்…..
கூடவா வித்தியாசம் தெரியாது உங்குளுக்கு?
.
அங்கதான் ஏற்கெனவே ஏகப்பட்ட அகராதிக இருக்குதே…..
.
அதுக மத்தீல இங்கிலீஷ் தெரிஞ்ச அகராதி
ஒன்னு கூடவா இல்ல?
.
ஓ…..
.
இதத்தான் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசம்…ன்னு
சொல்லுவாங்களோ?
.
அட கூமாங்குகளா…..

நேற்றைய வரலாறும்… நாளைய பொழுதும்….

ash-adichuvattilநண்பர்களது வட்டாரத்தில் “சலபதி” என்றழைக்கப்படும்
ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துக்கள்
மிகவும் பிடிக்கும் எனக்கு.

அதிலும் அவரது ஆணித்தரமான எழுத்துக்களுக்கு நடுவே
இழையோடும் அந்தக் குசும்பு.
.
அவரது “ஆஷ் அடிச்சுவட்டில்” என்கிற
நூலைப் பார்த்துக் கொஞ்சம் திகைத்துத்தான் போய்விட்டேன் நான்.
.
இந்நூலில் நாம் அறியாத…..
அல்லது மறந்த…..
அதுவுமல்லது மறைக்கப்பட்ட
மகத்தான மனிதர்களைப்பற்றிய வரலாறு
தேடியெடுக்கப்பட்டிருக்கிறது.
.
ஜி.யு.போப் தனது கல்லறைக் கல்வெட்டு
தமிழர்களால்தான் அமைக்கப்பட வேண்டும் என பேரார்வம் கொண்டதும்….
அதற்காக தமிழ்நாட்டினர் நிதி திரட்டி
அவரது ஆசையை நிறைவேற்றிய செய்தியும்…
நாம் அறியாதது.
.
அத்தோடு “இக்கல்லறைக் கல்வெட்டு தென்னிந்தியாவில் உள்ள
தமிழ் நண்பர்களால் நிறுவப்பட்டது” என்கிற செய்தியும்
அதில் செதுக்கப்பட்டிருக்கிறது
என்பது நம்மை சிந்திக்க வைக்கின்றது.
.
அடுத்து…..
.
தமிழகம் மறந்துபோன டி.வி.சாம்பசிவம் பிள்ளை
4000 பக்கங்களும் 80,000 கலைச் சொற்களும் கொண்ட
சித்த மருத்துவ அகராதியைத் தொகுத்தவர் என்பதும்….

அவருக்கிருந்த ஆங்கில மொழியாற்றலும்….

ஆனால் அவர் பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்தவர் என்பதும்….
நான் அறியாத செய்திகள்.
.
வாரிசின்றி இறந்துபோன அவரது வீடு
சென்னை தாசில்தாரால் பூட்டு போடப்பட்டதாம்.
அப்போது அவர் தொகுத்திருந்த ஆவணங்கள் எல்லாம்
அள்ளிச் செல்லப்பட்டு சென்னை கலெக்டர் அலுவலகத்தில்
கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறது.
.
கரையான்களோடும்….
சிலந்திகளோடும் போர் தொடுத்துக் கொண்டிருந்த
அந்த அரிய ஆவணங்களைக் கண்டெடுத்தவர்
மறைமலையடிகள் நூல் நிலையத்தைத் தோற்றுவித்த
சுப்பையா பிள்ளைதான்.
.
.
t-v-sambasivam
இவை எல்லாவற்றையும்விட இதில்
ஒரு பேரதிர்ச்சியும் உண்டு.
.
அதுதான் :
.
இந்த டி.வி. சாம்பசிவம்பிள்ளை
மருத்துவத் துறையில் பயின்றவரல்ல…..
போலீஸ்காரராக இருந்தவர் என்பதுதான் அது.
சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில்
ரைட்டராகச் சேர்ந்து 1907 இல் எஸ்.ஐ.ஆக ஆனவர்.
.
ஆக இவரை வைத்து
”இதுவும்தாண்டா போலீஸ்” என பெருமிதப்பட்டுக்
கொள்ளலாம் காக்கிச் சட்டைகள்.
.
இவைகளோடு மட்டுமன்றி….
.
சென்னைத் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம்
.
மற்றும் அதன் போராட்டங்கள் பற்றிய வரலாற்றை….
பார்வை இழந்த நிலையிலும் எழுதிய
தே.வீரராகவனின் வாழ்க்கை…
.
வாஞ்சியால் கொல்லப்பட்ட ஆஷ் துரையின் குடும்பத்தினரை
அயர்லாந்தின் தலைநகர் டப்ளினுக்கே சென்று…
கண்டு…. கலந்துரையாடி வந்த சம்பவங்கள்…..
.
என எண்ணற்றவர்களின் மறைக்கப்பட்ட….
மறக்கப்பட்ட வரலாறுகளின் தொகுப்பே
இந்த “ஆஷ் அடிச்சுவட்டில்” என்கிற இந்த நூல்.
.
நாளைய பொழுதைத் தீர்மானிக்க வேண்டுமென்றால்
.
நாம் நேற்றைய வரலாற்றைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
.
ஆம்.
.
வரலாற்றைப் படிப்பவர்களே
.
வரலாற்றை உருவாக்க முடியும்.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” – 25.01.2017 – குமுதம்)
a-r-venkatachalapathy

ஜல்லிக்கட்டு…

jalli1
“ஜல்லிக்கட்டா..? அது வெறும் ஓரிரு மாவட்டங்களுக்கு மட்டும்தான்…”
என்றார்கள் ஏளனமாய்.
.
இறங்கின எண்ணற்ற மாவட்டங்கள்.
.
“தமிழகத்தின் தென் பகுதியில் மட்டும்தான்
இதுக்கு ஆதரவு…” என்றார்கள்.
.
வடக்கு… தெற்கு… கிழக்கு… மேற்கு… என
சகல திசைகளில் இருந்தும் ஆர்ப்பரித்தனர் மக்கள்.
.
“தமிழகம் தாண்டாது
இந்த வெத்து விளையாட்டு…” என்றார்கள்.
.
கேரளத்தில் இருந்தும் ஆதரவாக ஒலித்தது குரல்.
.
“ஓரிரு சாதியைத் தாண்டி
யார் விளையாடுகிறார்கள் இதை….?” என்கிற
முணுமுணுப்புக்கு….
.
கிரிக்கெட்டும் அப்படித்தான்….
ஆனால் அதற்காக அப்படியே விட்டுவிட்டோமா அதை…?
என்றனர் இளைஞர்கள்.
.
“காளையை அடக்குவதா உன் பாரம்பரியம்…?
முடிந்தால் சிங்கத்தோடு போராடிப் பாரேன்…”
என்று கேட்ட மெத்தப்படித்த மேதாவிகளிடம்…
.
அனைத்து சாதியினரும் வேதங்களைக் கரைத்துக் குடித்தாலும்….
” இந்த சாதியினர் மட்டும்தான்
பாரம்பரியத்தின் பிரகாரம் அர்ச்சகர் ஆக வேண்டும்…”
என்று வக்காலத்து வாங்கிய நீயா
எங்களைப் பார்த்து இப்படிக் கேட்பது…? என்று
பதிலடி கொடுத்தது அந்த இளைஞர் கூட்டம்.
.
“பெண்களுக்கு ஏது இடம் இதில்….?” என்றார்கள்.
.
முதலில் தடையை உடைப்போம்.
பிற்பாடு பாருங்கள் பெண்கள் மட்டுமல்ல
திருநங்கையரும் கரம் கோர்த்து
களம் காணும் காட்சியைக் காண்பீர்கள்…. என்று
நியாயக் குரல் கொடுத்தார்கள் கூடி இருந்தவர்கள்.
.
“வழிபாட்டுரிமைச் சட்டப்படி
விலக்கு கோரினால் எளிதாக
வென்றுவிடலாமே வழக்கை…”
என்ற மூடர்களைப் பார்த்து…
.
மதங்களுக்கு அப்பாற்பட்டது எங்கள் பொங்கல்….
பின்பற்றுகிற மார்க்கம் எதுவாக இருந்தாலும்
மொழியால் இணைந்த
இந்து இஸ்லாமிய கிருத்துவ மக்கள்
அனைவருக்குமானது எங்கள் பொங்கல்…
நீ கொஞ்சம் ஒதுங்கி நில்… என்று
நெத்தியடி கொடுத்தனர் மக்கள்.
.
“இந்தியாவைத் தாண்டி
எங்கே கேட்கப் போகிறது இந்தக் குரல்…?” என்றார்கள்.
.
jalli3
இனப்படுகொலையிலேயே
எண்ணற்ற ஜீவன்களை இழந்திருந்தாலும்…
“நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக…” என்றனர்
நம் ஈழத்து மக்கள்.
.
“இம்புட்டுதான்…..
இதுக்கு மேல யாரு?” என்று
முனகிய மூடர்களைப் பார்த்து
.
இலண்டனிலும்…
ஃப்ரான்சிலும்…
சிட்னியிலும் எழுந்த போராட்டங்கள்
ஏளனமாய்ச் சிரித்தன.
.
இந்த எழுச்சி…..
இதற்கான போராட்டம் மட்டுமல்ல.
.
மனித குல விடுதலைக்கான தொடக்கம்.
jalli2

மம்மி ரிட்டர்ன்ஸ்…

mummy-two

வீட்டில் திருவிழா என்று சொன்னால்
அது உறியடித் திருவிழாவோ….
அல்லது உடுக்கையடித் திருவிழாவோ
எல்லாம் அல்ல.
அது எலியடித் திருவிழாதான்.
.
வீட்டுக்குள் ஒரு ஒத்தை எலி தென்பட்டுவிட்டால் போதும் .
அம்மா ஊரைக் கூட்டிவிடும்.
ஏதோ மலைப்பாம்பு வீட்டுக்குள் புகுந்துவிட்ட
ஃப்பீலிங் அதற்கு.
.
எலியை வீட்டுக்குள் வைத்து
வெளியில் தாள் போட்டுவிட்டு
வாசலில் வந்து நின்றுவிடும் அம்மா.
நானோ அப்பாவோ வரும்வரைக்கும்
வாசலில்தான் தவம்.
.
கூண்டு வைத்துப் பிடிக்கலாம் என்று
பிளான் பண்ணி….
கூண்டுக்குள் உள்ள கொக்கியில்
சின்ன தேங்காய்த் துண்டை மாட்டி வைத்து
மேதகு எலியார் வரும்வரை காத்திருப்போம்.
ஏதோ ஒரு அதி அற்புதப் பொழுதில்
“டப்” என்று சத்தம் கேட்கும்.
.
அவ்வளவுதான்.
அது அர்த்த ராத்திரியாய் இருந்தாலும் அலறும்….
“டேய் எலி மாட்டீடுச்சு….
எடுத்துப் போடுங்கடா” என்று.
இந்த “டா” அப்பாவுக்கும் சேர்த்துத்தான் போலும்.
.
ஏதோ சிறுத்தையைப் பிடித்த தெனாவெட்டில்
எலிக்கூண்டை எடுத்துக் கையில் கொடுப்பார் அப்பா.
தூக்கக் கலக்கத்தில் எழுந்து வாங்கிக் கொண்டு போய்
வெளியில் கூண்டைத் திறந்து எலியைத் துறத்திய
கையோடு மூச்சா போய்விட்டு உள்ளே திரும்புகையில்
எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கும் அதே எலி.
.
”இந்தப் படுபாவிய பெத்துத் தொலைச்சதுக்கு…”ன்னு
அதையொட்டித் தொடங்கும் அம்மாவின் ”கச்சேரி”.
அது அடுத்த நாள் மாலை வரைகூட நீள்வதுண்டு.
.
சில வேளைகளில் அம்மாவை வேறொரு அறையில் தள்ளி
கதவைச் சாத்திவிட்டு அப்பாவும் நானும்
ஆளுக்கொரு விளக்குமாற்றை எடுத்து
கட்டலுக்கடியில்…. பீரோ சந்தில் என
எலிவேட்டையில் இறங்குவதும் உண்டு.
.
எலி உலவும் இடம் தவிர
பிற இடங்களில் எல்லாம் ”சொத்” “சொத்”தென்று
விளக்குமாற்றால் வெளுப்போம்.

வெற்றிவீர்ர்களாக வெளியில் வருவோம்
என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் அம்மாவுக்கு
கடைசியில் இருந்த இரண்டு விளக்குமாறும்
அக்கக்காய்ப் பிய்ந்து போன கதை தெரியும்போது….
.
“நான் பெத்ததும் செரியில்ல….
நான் கட்டுனதும் செரியில்ல….
நான் வாங்கீட்டு வந்த வரம் அப்படி…”ன்னு
அடுத்த தலைப்பில் ஆரம்பமாகும்
”சங்கீத சாம்ராட்”டின் அடுத்த ”ஆலாபனை”.
.
இப்போது அப்பாவுக்குப் பிறகு
”முழுப் பொறுப்பும்” என் வசம் வந்துவிட்டது.
.
இப்படித்தான் போனவாரம் “புதிய விருந்தினர்”
ஒருவர் திடீர் வருகை தர….
அம்மாவிடம் இருந்து அழைப்பு….
.
”டேய் நம்மூட்ல எலி பூந்துடுச்சுடா…” என்று.
அலறியடித்துக் கொண்டு போனேன்
அஞ்சாறு நாள் கழித்து.
.
போன மறுகணமே “எங்க அது…? எங்க சுத்துது அது?” என்றேன்.
.
”இதோ…. அந்த பீரோ மேல ஏறுது…
டீ.வீ.மேல குதிக்குது….
அந்தத் துணி காயப் போடற கம்பி மேல உக்காந்துகிட்டு
என்னையவே பாத்துகிட்டு இருக்குது…”
என்கிற ரன்னிங் கமெண்ட்ரி வேறு.
.
ஏதாவது சாப்புட்டுதா என்றேன்…
.
“நான் சாப்புட்டனா இல்லையான்னு கேக்காதே….
அது சாப்புட்டுதா இல்லையான்னு கேளு….
உன்னப் பெத்ததுக்கு….”ன்னு மீண்டும் கச்சேரியைத் தொடங்க….
.
அய்யோ மறுபடியும் ஆரம்பிச்சறாதே….
இரு….. இப்ப கூண்டு வாங்கீட்டு வரட்டா…..?

”அத வாங்கீட்டு வந்து
நீ புடிக்கற லட்சணம் தெரியும் எனக்கு.
வேற ஏதாவது வழியிருக்கா பாரு…..”ன்னது.
.
நண்பர்களிடம் போனைப் போட்டு விசாரித்தேன்.
ஆளுக்கு ஒரு வழியைச் சொன்னார்கள்.
.
”கேக் மாதிரி ஒன்னு விக்குது.
அத வாங்கீட்டு வந்து வெச்சுட்டாப் போதும்….
விஷம் கலந்த அதைச் சாப்பிட்டுட்டு
எலி எங்கியோ போய்ச் செத்துப் போயிரும்”
என்றான் நண்பன்.
.
“அந்தச் சனியன் சாப்புட்டு முடிச்ச கையோட
பீரோவுக்குப் பின்னாடியோ….
உங்கப்பாவோட பழைய பொட்டிகளுக்கு நடுவயோ
போயி செத்துப் போச்சுன்னா….
அந்த நாத்தத்துல நான் போயிருவேன்….
அத எப்புடிக் கண்டுபுடுச்சு தூக்கிப் போடறது?” என்று
எடுத்ததுமே Reject செய்துவிட்டது தாயெனும் ”தெய்வம்”.
.
அதுவும் சரிதான்…..
இப்ப என்ன செய்ய….?
மறுபடியும் ஒரு ஸ்பெசலிஸ்ட்டுக்குப் போனைப் போட….
.
“தலைவா… அம்மா சொல்றது கரெக்ட்டுதான்.
ஆனா இப்ப புதுசா ஒன்னு வந்திருக்கு….
சின்ன கேரம்போர்டு மாதிரி இருக்கும்….
அதுல விஷம் கலந்த உணவு இருக்கும்….
எலி வந்து சாப்பிட்டாச்சுன்னா….
காலுல பசை ஒட்டிக்கும்…
விஷம் வேல செய்யும்….
காலைத் தூக்க முடியாது….
அப்புடியே செத்து நிக்கும்…..
ஆப்பரேஷனும் சக்சஸ்….
பேஷண்ட்டும் அவுட்…. எப்புடீ?”ன்னான்.
.
எனக்குக் குழப்பமாக இருந்தது.
.
அம்மா சொன்ன எலியோட
சாமுத்ரிகா லட்சணங்களைக் கேட்டா….

அதை எலின்னும் சொல்ல முடியாது….
பெருக்கான்னும் கூப்பிட முடியாது.
இரண்டுக்கும் நடுப்பட்ட ரகம்.

ஒருவேளை அது கொஞ்சம் வலுவா இருக்குறதால…..
விஷத்தச் சாப்பிட்ட கையோட….
அடச்சீ… காலோட அம்மா மேல பாஞ்சுடுச்சுன்னா…?
அய்யோ….. நினைக்கவே கிலியாக இருந்தது.
.
யோசித்து யோசித்துப் பார்த்தேன்.
அது சாப்பிட்டு….
உணவில் கலந்த விஷம் உள்ளே போய்….
அது அப்புறம் வேலை செய்ய ஆரம்பித்து….
மயக்கம் வந்து…..
காலுக்குக் கீழ் உள்ள பசை கவ்விப்பிடித்து….
ச்சே…. இதெல்லாம் வீண் ரிஸ்க்.
நடைமுறைக்கு ஒத்தே வராது.
.
.
எலி அதைச் சாப்பிட்ட நொடியே
சொர்க்கலோகம் போயரனும்…..

அந்த மாதிரி ஹெவி டோசேஜ் என்ன இருக்கு…. ?
.
யோசித்தேன்.
.
வேறுவழியே இல்லை.
.
கொடுத்துற வேண்டீதுதான்.
ஜீரணித்துக் கொள்ள கொஞ்சம்
கஷ்டமாகத்தான் இருந்தது….
ஆனால் வேறு வழியேயில்லை.
.
.
.
சாப்பிட்டவுடனேயே பட்டுன்னு உசுரு போகனும்ன்னா….
.
ஒரே வழிதான் :
.
.
அம்மா செஞ்சு வெச்ச சோத்தை
அப்புடியே எதையுமே கலக்காம வெச்சிற வேண்டீதுதான்.
.
.
சக்ஸஸ்.

mummy-returns1a

விபத்தல்ல… அப்பட்டமான அரசியல் படுகொலை.

bezwada-wilson
இந்த முறை…
ஓர் அற்புதமான மனிதருக்கு
மகசேசே விருது சென்று சேர்ந்திருப்பது பற்றியும்…..

அந்த மனிதர் பெசவாடா வில்சன்தான்
என்பது பற்றியும் நாம் ஏற்கெனவே அறிந்ததுதான்.
.
பத்து வருடங்கள் முன்பே இம்மாமனிதரை
கோவைக்கு அழைத்து வந்திருந்தார்
ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான்.
அவரது புண்ணியத்தில்தான் இந்த அற்புதமான மனிதரை
நான் சந்தித்து உரையாட முடிந்தது.
.
ஏறக்குறைய பத்துப்பதினைந்து நண்பர்கள்
மட்டுமே பங்கு கொண்ட கலந்துரையாடல் அது.
.
நாடு முழுவதும் கொடும் துயரத்துக்கு ஆளாகியுள்ள
இம்மக்கள் குறித்து அவர் உரையாற்றியது
இன்னமும் இதயத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
.
கர்நாடகாவின் கோலார் தங்கவயலில் பிறந்த வில்சனது
பால்யபருவம் துயரம்மிக்கது.
பெற்றோர்கள் மனிதக் கழிவுகளைச் சுமக்கும் தோட்டிகள்.
இது தெரியாது வளரும் பெசவாடா வில்சன்
பள்ளியில் கேலிக்குள்ளாகும் போதுதான்
தெரியவருகிறது தனது பெற்றோர் படும் துயர்.
தற்கொலைகூட செய்து கொள்ளலாமா என்கிற எண்ணமும்
அப்பிஞ்சு நெஞ்சில் எழுகிறது.
.
கொஞ்சகாலம் ஆந்திராவில் ஒடுக்கப்பட்டோருக்கான
ஹாஸ்டலில் தங்கி பள்ளிக்கல்வி பெற்றபிறகு
இண்டர்மீடியட் வகுப்புக்காக மீண்டும்
கர்நாடகா வருகிறார் வில்சன்.
பின்னர் கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டம்.
.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கும்போது
”செல்ல விரும்பும் வேலை” என்கிற கேள்விக்கு
அவரைக் கேட்காமலே “தோட்டி” என படிவத்தை
அங்குள்ள அதிகாரி பூர்த்தி செய்ததையும்…..
அதற்கு வில்சன் அந்த விண்ணப்பத்தை
அப்படியே வாங்கி அனைவர் முன்னிலையிலும்
கிழித்து எறிந்து விட்டு வந்ததையும்….
விக்கி பீடியாவில் ”சுட்டு” ஏகப்பட்டபேர் எழுதியாகிவிட்டது.
.
ஆனால்…. அதற்குப் பிறகு பெசவாடா வில்சன் செய்தது
அனைத்தும் அசாத்தியமான வேலைகள்தான்.
.
ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராய்
இருக்கிற அப்பிரிவு மக்களுக்காக தன்னை
அர்ப்பணித்துக் கொண்டதுதான் அவர் செய்த முதற்பணி.
.
மனிதக் கழிவுகளை மனிதரே சுமந்து கொண்டு
மெளனத்தில் ஆழ்ந்திருந்தபோது
அம்மெளனத்தை உடைத்ததுதான்
பெசவாடா வில்சன் செய்த பெரும்பணி.
.
இந்த அவலத்தைக் கண்டுகொள்ளாத
கோலார் தங்கவயலின் அதிகாரிகள்….
கர்நாடக ஆட்சியாளர்கள்….
மத்தியில் ஆள்வோர் என அனைவரது கதவுகளையும்
கடிதங்கள் வாயிலாக உரக்கத் தட்டுகிறது
பெசவாடாவின் கரங்கள்.

1993 இல் இந்த அவலத்திற்கு எதிராக
சட்டம் வந்தாலும் சத்தமின்றி
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன இந்த அவலங்கள்.
.
1994 இல் டெக்கான் கிரானிக்கல் இதழில்
மனித மலத்தை மனிதர்களே சுமக்கும் துயரங்களை
புகைப்பட ஆதாரங்களோடு வில்சன் கட்டுரையாக எழுத
பரபரப்புக்குள்ளாகிறது பாராளுமன்றம்.
.
கர்நாடகாவில் மட்டுமில்லாது
நாடு முழுவதுமே ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்
யாரும் கேட்பாரற்ற இந்த எளிய மனிதர்கள்.

அப்படி உருவானதுதான் சஃபாய் கரம்சாரி இயக்கம்.
(Safai Karamchari Andolan) வில்சனுக்குத் துணையாக
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சங்கரனும் பால் திவாகரனும்
கரம்கோர்க்கிறார்கள்.
.
சட்டங்களை வெறும் ஏட்டில் மட்டும் எழுதி என்ன பயன்?
நடைமுறைக்கு வரவேண்டாமா? எனப் பொங்கி எழுந்து
2003 இல் மீண்டும் பொதுநல வழக்குகள் மூலம்
உச்ச நீதி மன்றத்தின் கதவுகளை உலுக்க…

இந்த அவலம் இன்னும் எங்கெங்கெல்லாம்
தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கிற பட்டியலைக்
கேட்கிறது உச்சநீதி மன்றம்.
பல மாநில அரசுகள் பட்டியலைக்கூட தராமல் இழுத்தடிக்கிறது.

2003ஆம் ஆண்டிலேயே ”உலர் கழிப்பிடங்கள் கூடவே கூடாது”
என்கிற சட்டம் வந்தாலும் 2011 புள்ளிவிவரப்படி
அந்த அவலத்தைச் சுமந்து கொண்டிருப்போர்
ஏறக்குறைய 8,00,000 பேர் என்று அடித்துச் சொல்கிறது
பெசவாடா வில்சனது இயக்கம்.

2014 இல் மீண்டும் இதை முடிவுக்குக் கொண்டு
வந்தே ஆக வேண்டும் என கடுமையாக
எச்சரிக்கிறது உச்ச நீதிமன்றம்.
.
நான்கு மாதம் முன்பு அம்பேத்கரின் 125 பிறந்த தினத்தின் போது
நாட்டின் அனைத்து மாநிலங்களின் வழியாகவும்
”எம்மைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்கிற முழக்கத்தோடு
நடைபெற்ற “பீம் யாத்திரை”யின் முடிவில்
டெல்லியில் அறிவித்தார் பெசவாடா வில்சன்:
.
“கடந்த சில வருடங்களில் மட்டும்
செப்டிக் டேங்க்குகளிலும்….
பாதாள சாக்கடைகளிலும் சுத்தம் செய்ய மூழ்கும் போது
விஷவாயு தாக்கி அநியாயமாக
தம் உயிரை இழந்தவர்களது எண்ணிக்கை மட்டுமே 1300.

இவை விபத்தல்ல
அப்பட்டமான அரசியல் படுகொலை.
தலித்துகளிலும் ஒடுக்கப்பட்டோராய் உள்ள
இவர்களுக்காக குரல் கொடுக்க எவருமில்லை”.
.
ஆம் உண்மைதான்.
.
நாம் அந்த மக்களுக்கு மட்டுமே
100 சதவீதம் ஒதுக்கீடு அளித்திருக்கிறோம்.
.
அடடா… என்னே நமது “பெருந்தன்மை”?
.
மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் அவலம் மிக்க
பணியில் மட்டும் பங்கு கேட்க இங்கு எவருமில்லை.

ஆனால் அவர்களுக்கான கல்வியிலும்,
பிற வேலை வாய்ப்புகளிலும் உள் ஒதுக்கீடு கொடுத்தால்
ஒப்பாரி வைப்பதற்கு மட்டும் அநேகர் உண்டு.
.
ஆக… சாதி மூட்டைகளிலேயே அடிமூட்டையாய்
அமுங்கிக் கிடக்கும் அந்த எளிய மக்களின் குரலை
எதிரொலிக்கும் பெசவாடா வில்சனுக்கு
மகசேசே விருதல்ல எந்த விருதும் தகும்.
.
பொதுவாக விருதுகளால் சிலருக்குப் பெருமை.
.
ஆனால் வில்சனைப் போன்றவர்களின் கரங்களில்
தவழும்போது விருதுக்கே அது பெருமை.
.
.
( ”ஒரு தற்குறியின் நாட்குறிப்புகள்” ஜனனம் வார இதழ். )