தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே….


யாரும் பேசத் துணியாத விஷயத்தை
முதலில் பேசத் துணிந்தவர் மதிவண்ணன்
என்றுதான் சொல்லவேண்டும்.
.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரிலேயே ஒடுக்கப்பட்டோராய்
இருக்கிற அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடு
இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது
என்று சொன்னால் அதில் எழுத்தாளர் மதிவண்ணன் அவர்களது
பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்று.
.
”ஒரு சின்ன நூல் வெளியீடு….
ஈரோடு வரமுடியுமா?” எனக் கேட்டதும்
உடனே சரியென்று தலையாட்டினேன்.
.
ஆனால் அச்சிறு நூலைப் பார்த்ததும்
எனக்கு ஏனோ அடிவயிற்றைப் புரட்டியது.
அதில் மதிவண்ணன் சாடோ சாடென்று சாடியிருந்த
மனிதரோ தமிழகத்தின் ஆகப் பெரிய ஆளுமை.
ஆய்வுத்தளத்தில் அவருக்கென்று ஒரு தனி இடமுண்டு.
.
அவர்தான் : பேராசிரியர் நா. வானமாமலை.
.
அவரது “தமிழர் நாட்டுப் பாடல்கள்” என்கிற நூலில்
அருந்ததிய மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக
எந்தெந்த இடங்களில் எல்லாம் எழுதியிருக்கிறார்
என்று துல்லியமாக கோடிட்டுக் காட்டி
குமுறி இருந்தார் மதிவண்ணன்.
எல்லாமே ஆணித்தரமான தரவுகள்.
.
ஆங்கிலேயருக்கு எதிரான போரில்
கட்டபொம்மனுக்கு துணை நின்றவர்களில்
அருந்ததியர் சமூகத்துக்கும்
மள்ளர் சமூகத்துக்கும் பெரும் பங்கு உண்டு.
.
ஆனால் பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்த
கட்டபொம்மன் கதைப் பாடல்களில்
அவர்களது வீரஞ்செறிந்த போராட்டம் குறித்தும்,
தியாகம் குறித்தும் ஒரு வரிகூட முன்னுரையில்
குறிப்பிடாது தவிர்த்தது எந்த வகையில் நியாயம்?
என ஆதங்கம் மிக்க கேள்விகளையும்
எழுப்பி இருந்தார் மதிவண்ணன்.
.
இக்கேள்விகளையும் குமுறல்களையும் உள்ளடக்கி
மதிவண்ணன் எழுதிய அச்சிறு புத்தகம்தான்
“நா,வா – வின் புரட்டுகளும் அருந்ததியர் வரலாறும்”.
.
போதாக்குறைக்கு
ஏன் இந்த இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு
சில விஷயங்களில் மண்டையில் மசாலாவே
இருப்பதில்லை என்கிற கோபமும் வேறு.
.
நான் அறிஞனுமில்லை.
ஆய்வாளனுமில்லை.
எதிலும் நுனிப்புல் மேயும் ரகம்.
.
ஆனால் ”கூட்டணி தர்மம்” மாதிரி…
கூட்ட ”தர்மம்” என்று ஒன்றிருக்கிறதே….
.
அதற்காக….
ஏற்கெனவே அறிந்தது கொஞ்சம்….
இதற்கென தேடி வாசித்தது கொஞ்சம்…
சித்தானை போன்ற சில ஆய்வாள நண்பர்களிடம்
விவாதித்து தெரிந்து கொண்டது கொஞ்சம்….
என ஒப்பேத்திக் கொண்டு நிகழ்ச்சிக்குக் கிளம்பியபோதுதான்
ஒன்று உறைத்தது……
.
அட….
இந்த இந்திய இடதுசாரிகளுக்கு
சில அல்ல…
பல விஷயங்களிலும் மண்டையில் மசாலா கிடையாதே
என்பதுதான் அது.
.
பேராசிரியர் நா.வா தொடங்கி
அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்கள் வரைக்கும்
இருந்த / இருக்கும் ஒரே பெருவியாதி
திராவிட இயக்க ஒவ்வாமைதான்.
.
பேராசிரியரோ….
அவரை ஒட்டி அடுத்து வந்த ஆய்வாளர்களோ
பெரியார் எனும் அந்த அசாத்திய ஆளுமையைப் புரிந்து
கொள்வதற்குள் அநேகருடைய ஆயுள்காலம்
முடிந்து போயிற்று என்பதுதான் உண்மை.
.
இவ்வறியாமை இந்திய ஆய்வாளர்களோடு மட்டும்
முற்றுப் பெற்று விடவில்லை.
ஈழத்து கைலாசபதி, கா.சிவத்தம்பி வரையிலும் தொடர்ந்தது.
.
ஈழத்தில் ஏறக்குறைய ”பெரியார்” என்கிற வார்த்தையே
இருட்டடிப்பு செய்யப்பட்டது
அங்குள்ள அறிவுசீவிகளாலும் இடதுசாரிகளாலும்..
.
நமது வரலாறே மறக்கப்பட்டதும்
மறைக்கப்பட்டதுமான வரலாறுதானே?
.
ஆனால் நாமே மறந்த தடயங்கள்….
அதன்பொருட்டு இன்றும் நம்மைச் சூழ்ந்திருக்கும்
அவலங்கள் ஏராளம்.
(அதை வேறொரு தருணத்தில் விரிவாகப் பேசுவோம்.)
.
மறைக்கப்பட்ட அந்தத் தடயங்களைத் தேடும்
முயற்சிகளில் ஒன்றுதான் இந்தக் கட்டுரையும்.

சரி…
நாம் மீண்டும் பேராசிரியர் நா. வானமாமலைக்கே
வருவோம்.
.
அவரது எண்ணற்ற நூல்களில் ஒன்றுதான்
“தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்.”
.
சித்தர்கள் காலம் தொடங்கி
சேர சோழ பாண்டியர் காலம் வரை
தமிழகத்தில் சாதியத்துக்கு எதிரான சமர்கள்
எத்தனையெத்தனை நடந்துள்ளன என்பதை
விரிவாகவும் விரைவாகவும் சொல்லுகிறது
1980 வெளியிடப்பட்ட இந்த நூல்.
.
புராண காலங்கள் தொடங்கி
மன்னர் காலம் வரை
படுவேகம் பிடிக்கும் வானமாமலையின் வாகனம்
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்….
சுயமரியாதை இயக்கம்….
தோன்றிய காலம் தொடங்கியதும்
பிரேக் டவுன் ஆகி நின்று விடுகிறது.
.
ஆயோ ஆய் என்று ஆயப்பட்ட
இந்த ஐம்பது பக்க நூலில்
நாலே நாலு எழுத்துதான் மிஸ்ஸிங்.
.
அது:
பெ
ரி
யா
ர்.
.
நூலின் தலைப்பைப் பார்த்தால்
ஆர்.எஸ்.எஸ்.காரனுக்குக்கூட நினைவுக்கு வரக் கூடிய
ஒரே பெயர் பெரியாராகத்தான் இருக்க முடியும்.
.
ஆனால் அதுவெல்லாம்
நம் இடதுசாரி ஆய்வாளர்கள் முன்பு செல்லுபடியாகுமோ.?
ஆகாது.
ஆகவே ஆகாது.
அம்புட்டு ஆச்சாரம்.
.
நம் மரியாதைக்குரிய ஆய்வாளர் பேராசிரியர் வானமாமலையின்
மற்றொரு நூல் : “இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்”
.
1978 இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸால்
வெளியிடப்பட்ட இந்நூலில் உலக அளவிலும்
இந்திய அளவிலும் அன்றைய காலம் தொடங்கி
இன்று வரை நாத்திகக் கருத்துக்கள் உருப்பெற்ற வரலாறுகள்….
.
கடவுள் இன்மைக் கொள்கைதான்
தற்கால நாத்திகமாகக் கருதப்படுகையில்….
வேதங்களை நம்பாதவர்களே நாத்திகர்கள்
என அன்றைக்கு அழைக்கப்பட்டார்கள்…..
என விரிவாகச் சொல்கிறார் நா.வா.
.
அத்தோடு ஆத்திகர்களின் புரட்டு வாதம்,
கடவுள் கருத்தின் துவக்கம்,
நாத்திகம் பற்றிய மார்க்சியவாதிகளின் விமர்சனங்கள்
என அநேக விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது நூல்.
.
நாத்திகம் குறித்து பேராசான் மார்க்ஸ்
சொல்லுவதென்ன?
மார்க்சியத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய
தோழர் லெனின் சொல்லுவதென்ன?
என விரிவாக விளக்கும் பேராசிரியர்
பெரியாருக்கு வரும்போது மட்டும் கொஞ்சம்
ஜர்க் ஆகிறார்.
.
முற்றாக மறுக்கவும் முடியாமல்
முற்றாக நிராகரிக்கவும் முடியாமல்
தடுமாறும் கோலம் எழுத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.
.
இதை அவரது ஆய்வுப்புலத்தின் போதாமை என்று
கொள்ளலாமே தவிர
அவர் ஆச்சாரமான வைணவ குலத்தின் தோன்றல்
என்பதனால்தான் என்று எவரும் கொள்ளக்கூடாது.
.
அவரது வார்த்தைகளிலேயெ சொல்வதானால்…..
.
“ பெரியார் முரணற்ற நாத்திகர்.
பெரியார் கடவுள் எதிர்ப்போடு,
மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார்.
.
அவருடைய நாத்திகம் பொது அறிவைப் பயன்படுத்தி
உருவாக்கப்பட்டது.
அதில் விஞ்ஞானக் கொள்கைகளை அவர் பயன்படுத்தவில்லை.
……………..
…………..
ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் உண்மைகள்,
அவற்றின் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகள்,
இவ்வறிவியல் கொள்கைகளை கிரகித்துக் கொண்டு
வளர்ச்சி பெற்று வரும் மார்க்சீய தத்துவம்,
இவற்றினின்று அவருடைய நாத்திகம்
விலகியே நிற்கிறது.
இதுவே அதனுடைய பலவீனம்.”
.
இதைப் படித்ததும் பேரதிர்ச்சியில் அப்படியே
உறைந்து போனேன் என்று எழுதினால்
அது அப்பட்டமான பொய்.
.
குறிப்பாக இந்திய இடதுசாரிகளிடம்
அதிலும் சிறப்பாக தமிழக இடதுசாரிகளிடம்
அத்தகைய மூடநம்பிக்கைகள் எல்லாம் கிடையாது எனக்கு.
இப்படி ஏதாவது எழுதாவிட்டால்தான் அதிர்ச்சி அடைவேன்.
.
1958 லேயே நான்காவது பதிப்பு கண்ட நூல் :
”இனி வரும் உலகம்”.
.
”அறிவியல் அறிவற்ற”….
”அறிவியல் உண்மைகளை அறியாத”….
”அதன் அடிப்படையில் உருவாகும்
அறிவியல் கொள்கைகளை கிரகிக்கத்
துப்புக் கெட்ட” ஈ.வெ.ரா எழுதியது அது.
.
ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதுகிறார் :
.
”இனிவரும் உலகத்தில் கம்பியில்லா தந்திச் சாதனம்
ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்…
.
உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம்
எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப்
பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்….
.
மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்திலிருந்து கொண்டே
பல இடங்களில் உள்ள மக்களுக்குக்
கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்….”
.
இதுதானய்யா அந்த
”அறிவற்ற” கிழவன் அறுபதாண்டுகளுக்கு
முன்னர் எழுதியது.
.
பூப்பு நன்னீராட்டு விழாவுக்குக்கூட
தங்களது நாளிதழில் விளம்பரம் போடும்
”விஞ்ஞான” ”மார்க்சீயவாதிகள்” மத்தியில்
இப்படியொன்றையும் சொல்லித் தொலைத்தது பெருசு :
.
“பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை
என்பதுகூட நீக்கப்படலாம்.
.
நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும்
உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகளைப் போல்
தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு
அவர்களது வீரியத்தை இன்செக்ஷன் மூலம்
பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி
நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும்.
.
ஆண் பெண் சேர்க்கைக்கும்
குழந்தை பெறுவதற்கும்
சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.”
.
கர்ப்பத்தடையே கண்டனத்துக்கு உள்ளான காலங்களில்
செயற்கை முறை கருத்தரிப்பைப் பற்றிப் பேசியவர்
நிச்சயம் அறிவியல் அறிவற்ற
ஆசாமியாகத்தானே இருக்க முடியும்?
.
அடுத்த ஒரே ஒரு சேதியோடு
நமது கதாகாலட்சேபத்தை நிறுத்திக் கொள்வது
நல்லது என்றே தோன்றுகிறது.
.
அது 1970 ஆம் ஆண்டு.
.
கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரிக்குப் பேசச்
செல்கிறார் பெரியார். (இப்போது அதுதான் அண்ணா பல்கலைக் கழகமாக
பரிணாமம் அடைந்திருக்கிறது)
.
அங்குள்ள மாடி அறை ஒன்றில் கம்ப்யூட்டர் என்கிற
ஒரு புதிய கருவி வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
.
அங்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கம்ப்யூட்டர்
இன்றுள்ளது போல அல்ல.
அதுவே ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கக் கூடியது.
.
அது 1959 ஆண்டு உருவாக்கப்பட்ட
ஐ.பி.எம் 1620 ரகக் கம்ப்யூட்டர்.
.
அதைப் பார்த்தே தீரவேண்டும் என
அடம் பிடித்த பெரியாரை முதல் மாடிக்குத்
தூக்கிச் சென்று காட்டுகிறார்கள்.
.
இது என்னவெல்லாம் செய்யும் என
தன் சந்தேகங்களைக் கேட்கிறார் பெரியார்.
.
இது வினாடிக்கு 333 எழுத்துக்களைப் படிக்கும்
10 எழுத்துக்களை அச்சடிக்கும் என விளக்குகிறார்கள்.
.
வருடத்தையும் நாளையும் சொன்னால்
கிழமையைச் சரியாகக் குறிப்பிடும் என்கிறார்கள்.
.
17.9.1879 என்ன தேதி? என்கிறார் பெரியார்.

”புதன்கிழமை” என்கிறது கம்ப்யூட்டர்.
.
மேலும் பல கேள்விகளைக் கேட்டு
அது அளித்த விடைகளைக் கண்டு
பெருமகிழ்வோடு கிளம்பிச் செல்கிறார் பெரியார்.
.
இதனை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக
இருந்த வா.செ.குழந்தைசாமி தனது நூலில்
பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.
.
அதனைவிடவும் அக்கல்லூரியில் இருந்த
ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களே
பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த
தமிழகத்தின் முதல் கம்ப்யூட்டரை
நேரில் கண்டு அறிந்து தெளிந்து
விடைபெற்ற பெரியாரைத்தான்
விஞ்ஞானம் தெரியாதவர் என்கிறார்
நா.வானமாமலை.
.
இதற்கூடே வறட்டு நாத்திகரான பெரியாருக்கு
வர்க்கபார்வை கிடையாது என்கிற
சலிப்பில் இருந்த ப.ஜீவானந்தம்
பிர்லா மாளிகையில் ஒலித்த
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான
அசரீரி கேட்டு காங்கிரஸில் ஐக்கியமான கதைகளும்….
.
பெரியாரைக் கொச்சைப்படுத்துவதற்கென்றே
மார்க்ஸிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியால்
தப்பும் தவறுமாக எழுதப்பட்ட
”ஆரிய மாயையா? திராவிட மாயையா?”
என்கிற நூலுக்குக் கிடைத்த நெத்தியடிக் கதைகளும்….
.
1924 வைக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக
பெரியார் நடத்திய தெரு நுழைவுப் போராட்டத்தை
கோயில் நுழைவுப் போராட்டமாக
மார்க்சிஸ்ட் ராமமூர்த்தி குழப்பியடித்த கதைகளையும்….
.
எழுதிக் கொண்டே போகலாம்தான்….
.
ஆனால்….
.
அட….
அதெல்லாம் அந்தக் காலம்.
.
ஆய்வாளர் நா.வானமாமலை,
மார்க்ஸிஸ்ட் இராமமூர்த்தி எல்லாம்
மறைந்தே எண்ணற்ற ஆண்டுகள் ஆயிற்று.
.
இன்னும் எதற்கு இந்தப் பழைய கதை?.
.
இப்போதெல்லாம் இடதுசாரிகள் அப்படிக் கிடையாது
என அடித்துச் சத்தியம் செய்பவர்கள்
யாரேனும் இருந்தால்….
.
அவர்கள்…..
.
அங்கிள் டி.கெ.ரங்கராஜன்
பத்து பர்சண்ட் ”பரம ஏழைகளுக்காக”
பாராளுமன்றத்தில் முழங்கிய
சமீபத்திய கதையையும் நினைவில் கொள்வது
மார்க்சீயத்துக்கும் நல்லது.
மக்களுக்கும் நல்லது.
.

பின்குறிப்பு :
.
அதெல்லாம் சரி…..
இந்தத் தலைப்புக்கும் கட்டுரைக்கும்
என்னய்யா சம்பந்தம் என்கிறீர்களா?
.
பாஸ்….!
கட்டுரைதான் இவ்வளவு சீரியஸ்
தொனில இருக்குதே….
தலைப்பாவது கொஞ்சம்
ரொமான்ஸ் மூடுல இருக்கட்டுமேங்கிற
ஒரு அல்ப ஆசைதான்….
.
வேறென்ன?


.
நன்றி :
“காமன் சென்ஸ்” (Common Sense) மாத இதழ்.

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா.
.

2 thoughts on “தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே….

 1. தோழர் இந்த பதிவில் உள்ள நா.வா. வின் புரட்டுகளும், அருந்ததியர் வரலாறும் புத்தகம் எங்கு கிடைக்கும். நன்றி.

  • தோழர் வணக்கம்.
   இந்த நூலை பெறுவதற்கு….

   வெள்ளைக்குதிரை
   19 தாளக்கரை புதூர்
   பெரிய வேட்டுவ பாளையம், பெருந்துறை வட்டம்
   ஈரோடு மாவட்டம் 638 052

   என்கிற முகவரிக்கு எழுதுங்கள் தோழர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s